சட்டத்தின் முன் எல்லாரும் நிஜமாகவே சமம் தானா …???

……………………………….

……………………………………………..

(நன்றி – நீதியரசி பிரபா ஸ்ரீதேவன் )

சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்கிறோம். ஆனால், யதார்த்தம் அப்படித் தான் இருக்கிறதா? அப்படி யோசிக்க வைத்த ஒரு வழக்கு அனுபவத்தைதான் இந்த இடத்தில் பகிர விரும்புகிறேன்.

அப்பா தன் மகனைக் கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற வழக்கு அது. அமர்வு நீதிமன்றம் அந்தத் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறது. அதற்காக அந்தத் தந்தை, மேல் முறையீடு செய்த வழக்கை நானும், நீதிபதி நாகமுத்துவும் இணைந்து விசாரித்தோம்.

கிரிமினல் அப்பீல்களை பொதுவாக ஜெயில் அப்பீல்',பெயில் அப்பீல்’ என இரண்டாகப் பிரிப்போம். ஒருவர், தனக்கு தண்டனை வழங்கப்பட்ட வழக்கில் அப்பீல் (மேல்முறையீடு) மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு பெயில் (ஜாமீன்) கிடைக்காமல் ஜெயிலி லேயே இருக்கிறார் என்றால், இதுதான் ஜெயில் அப்பீல்'.

அதேசமயம், குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பெயில் கொடுக்கப் பட்டிருந்து, அவர் அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தால், அதுபெயில் அப்பீல்’. ஆக, ஜாமீன் கிடைக்காமல் இருக்கும் ஜெயில் அப்பீல் வழக்குகளைத்தான் முதலில் விசா ரணைக்கு எடுத்துக்கொள்வோம். பெயில் அப்பீல் வழக்குகளை அதற்கு அடுத்ததாகத் தான் விசாரிப்போம். எங்களிடம் வந்த இந்த அப்பா – மகன் கொலை வழக்கு பெயில் அப்பீல்.


‘சதக்… சதக்’ என்று குத்தினான் என்றெல்லாம் செய்தித்தாள்களில் வாசித்திருப்போம்… இந்தக் கொலையில் அப்படியில்லாமல் ஒரே குத்துதான் கொலையில் முடிந்திருக்கிறது. என்ன காரணத்துக்காகவோ அந்தத் தந்தை பெயிலில் வெளியே இருந்தார். கொலையானவரின் மனைவி தற்கொலை செய்து கொண்டுவிட்டார். அந்த தம்பதியருக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு குழந் தைகள். அவர்களை தாத்தாதான் (மகனின் அப்பா) பார்த்துக்கொள்கிறார்.

அந்தத் தாத்தா ஒரு தோட்டத்தின் காவலாளி. பாட்டி யும் இருக்கிறார் என்றாலும் தாத்தாவின் வளர்ப்புதான் பிரதானம் அந்தக் குழந்தைகளுக்கு. கொலை செய்த தந்தையின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், இதைக் காரணம் காட்டி, ‘தாத்தாவையும் நீங்கள் சிறையில் அடைத்துவிட்டால், அந்தக் குழந்தைகளின் நிலை ரொம்பவே மோசமாகிவிடும்’ என்றார்.

‘கொலை தொடர்பான நியாயமான விஷயங்கள் குறித்து நீங்கள் வாதாடினால் பரவாயில்லை. பேரன், பேத்தி இருப்பதை யெல்லாம் காரணமாகச் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்’ என்பது எங்கள் தரப்புக் கேள்வி.

மறுநாள் தாத்தாவின் பேத்தியை நீதிமன்றத்துக்கு அழைத்துவந்தார் வழக்கறிஞர். பெஞ்ச் உயரத்துக்குக்கூட இல்லாத அந்தக் குழந்தை, துளியும் பயமின்றி, ‘மேடம், எங்கத் தாத்தாதான் எங்களைப் படிக்கவைக்கிறார், அவரை ஜெயில்ல போட்ராதீங்க’ என்றாள். தாத்தா தன் பேரன் மற்றும் பேத்தி பெயர்களில் போட்டிருந்த வைப்புநிதிக்கான ஆதாரங்களையும் எங்களிடம் காட்டினார்கள்.

குற்றம்சாட்டப்பட்டவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவது காவல்துறையினரின் வழக்கம். அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து, ‘சம்பந்தப்பட்டவர்தான் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டாரே, அவர் சிறைக்குப் போகட்டும்’ என்று சொல்ல முடியாது. ஆனால், அந்த வாக்குமூலத்தில், அவர் குற்றம் செய்யவில்லை என்று சந்தேகிக்கும்படியான ஒரு வார்த்தையோ, வாக்கியமோ இருக்கிறதா என்று நீதிமன்றம் பார்க்கலாம்.


அப்படிப் பார்த்தபோது ஒரு விஷயம் தெரியவந்தது. கொலையான மகன், தன் தந்தையைப் பார்க்க கிராமத்து வீட்டுக்கு வந்திருக்கிறார். குடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்த மகன், தூங்கிக்கொண்டிருந்த அப்பா விடம், சொத்து குறித்து விவாதம் செய்திருக் கிறார். வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறி யிருக்கிறது. கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் கோல் அல்லது கழி இருக்கும். அதைவைத்து அந்தத் தந்தை சண்டை போட் டிருக்கிறார். அப்போது அந்தக் கோலின் கூரியமுனை எதேச்சையாக மகனின் வயிற்றைக் குத்தியதில், ஆபத்தான இடத்தில் பட்டதால் அந்த மகன் இறந்துவிட்டார் என்பது புரிந்தது.

சினிமாக்களில் பார்த் திருப்பீர்களே… இபிகோ 302… கொலையாளிக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படுகிற பிரிவு இது. அதைவிட தண்டனை குறைவான பிரிவில் இந்த வழக்கைக் கொண்டுவர முடியுமா என யோசித்தோம். பெயில் வாங்குவதற்கு முன்பே அவர் சில காலம் சிறையில் இருந்ததையும் குறிப்பிட்டு, அந்த தண்டனைக் காலமே போதுமானது என்று சொல்லி, தாத்தாவுக்கு சாதகமான தீர்ப்பைக் கொடுத்தோம்.

‘என்னைக் காப்பாற்றிக்கொள்ள நான் ஆயுதம் ஏந்தினேன்’ என்ற நிலையில் நடக்கும் கொலை, கொலையாகாது. ஆனால், இந்த வழக்கில் இதை தற்காப்பு என்று குறிப்பிடும் படியான விஷயங்கள் ஏதும் இல்லாததால், குறைவான தண்டனை கொடுக்கும்படியான தீர்ப்பு கொடுத்தோம்.

தோட்டக் காவலாளி யான அந்தத் தாத்தாவுக்கு வருமானம் பெரிதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. தன் சார்பாக வாதாட பெரிய வழக்கறிஞரை வைத்துக்கொள்ள வசதியும் இல்லை. இலவச சட்ட உதவியைத்தான் நாடியிருக்கிறார். இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் வாதாடும் வழக்கறிஞர்கள், பெரும்பாலும் புதிதாகப் பணிக்கு வந்தவர்களாக இருப்பார்கள்.

நம்மூர் நீதி அமைப்புக்கு ‘அட்வெர்சரியல் சிஸ்டம்’ (Adversarial system) என்று பெயர். அட்வெர்சரியல் சிஸ்டம்படி, எந்தத் தரப் புக்கு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரை நியமித்துக் கொள்ள முடியுமோ, அந்தத் தரப்பு வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம்.

அதாவது இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதங்களை முன்வைப்பார்கள். வாதம், எதிர்வாதம் ஆராய்ந்து தீர்ப்பளிக்கப் படும். இதில் திறமையான வாதத்தால் உண்மைக் குற்றவாளி விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அதற்கான வசதி இல்லை. ஏழைகள் செய்யும் குற்றங்கள் மட்டுமே பெரும்பாலும் வெளியில் வருவதேன்…? பணக்காரர்களின் குற்றங்கள் வெளியே தெரியாமலிருக்க, அவர்களால் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர் களை நியமித்துக்கொள்ள முடிவதுதான் முக்கிய காரணம்.


திறமையான, அனுபவம் வாய்ந்த, நிறைய கட்டணம் வாங்குகிற வழக்கறிஞர்கள் எல்லோருமே, ஓராண்டுக்கு குறைந்தது 52 மணி நேரத்தையாவது இலவச சட்ட உதவிக்கு ஒதுக்க வேண்டும் என நினைக் கிறேன். ஒருவேளை இந்த வழக்கில் இன்னும் நுணுக்கங்களை ஆராய்ந்து, அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர் வாதாடியிருந்தால், அந்த முதியவர், தேவையில்லாமல் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ளே போயிருக்க வேண்டாம். சரியான சட்ட உதவி கிடைக்காமல் இவரைப் போல எத்தனையோ நபர்கள் உள்ளே இருக்கிறார்கள்…

தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞர்கள், மக்களின் நலனுக்காக இதையும் சற்று யோசித்தால் நன்றாக இருக்கும்.

.

……………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s