……………………………..

………………………………..
சிறு நகரங்கள், ஊராட்சிப் பகுதிகளிலெல்லாம் இந்த மனமகிழ்
மன்றங்கள் நடத்த அனுமதி தந்துவிட்டார்கள். உறுப்பினர்களுக்கு
மட்டுமன்றி யார் போய்க் கேட்டாலும் மது விற்பனை செய்கிறார்கள்.
இப்போதெல்லாம் – கல்யாணம், காதுகுத்து தொடங்கி கோயில் திருவிழா வரைக்கும் கொண்டாட்டமே குடிதான். கிராமம், நகரம் வேறுபாடெல்லாம் இல்லை. சின்னப் பையன்கள்கூட குடித்துவிட்டுச் சலம்புகிறார்கள்.
குடிப்பது வீரத்தின் அடையாளமாகிவிட்டது.
அமைதியின் அடையாளமாக இருந்த கிராமங்களிலெல்லாம்
மதுக்கடைகளைத் திறந்து நரகமாக்கி விட்டார்கள். பல குற்றச்
செயல்களுக்குப் பின்னணியாக மதுதான் இருக்கிறது.
Crisil நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, மது குடிக்கும்
100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள். தமிழகத்தில் சில தொண்டு
நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வின்படி உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களில் 75% பேர் ஆண்கள்; 25% பேர் பெண்கள்.
5,426 மதுக்கடைகள் தமிழகத்தில் இயங்குகின்றன.
நாளொன்றுக்கு சராசரியாக 125 கோடி ரூபாய்க்குத்
தமிழகத்தில் மது விற்கிறது.
2020-21-ல் 33,811 கோடி,
2021-22-ல் 36,013 கோடி,
2022-23-ல் 45,000 கோடி – என ஆண்டுக்காண்டு மது வருவாய் அதிகரித்துக்கொண்டே போகிறது. 6,715 சூப்பர்வைசர்கள், 15,000 விற்பனையாளர்கள், 3,090 துணை விற்பனையாளர்கள்,
நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மது விற்பனையில்
ஈடுபடுகிறார்கள்.
2021-ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகியுள்ளன.
இதில் 10 சதவிகித்துக்கும் மேற்பட்ட விபத்துகள் மது அருந்திவிட்டு
வாகனம் ஓட்டியவர்களால் ஏற்பட்டவை. குடிகாரர்கள் உயிரிழப்பது, காயம்படுவது தாண்டி சாலையில் செல்லும் அப்பாவிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.
பெரும்பாலான குடும்ப வன்முறை வழக்குகள், ‘கணவர் குடித்து
விட்டு அடிப்பதாக’வே பதிவாகின்றன. விவாகரத்து வழக்குகள்
அதிகரிக்கவும் குடி முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வுகள்
சொல்கின்றன.
இன்னொரு பக்கம், மது மற்றும் போதையால் சமூகக் குற்றங்களும் அதிகரித்துவருகின்றன. 2019-ல் AIIMS செய்த ஆய்வின்படி 18-24 வயதுக்குட்பட்ட சிறைக்குச் செல்லும் 74% பேர் மது அல்லது ஏதோவொரு போதைப்பொருள் பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
உலக சுகாதார நிறுவனம், ‘மது விற்பனையை அரசு
தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் அதனால் ஏற்படும் தீங்குகளைப் பெருமளவு குறைக்கலாம்’ என்கிறது.
‘மது விற்பனை தனியார் கையில் இருந்தால் அவர்கள் முழுக்க முழுக்க லாபத்தை மட்டுமே கவனத்தில் கொள்வார்கள். அரசு மது விற்பனை செய்யும்பட்சத்தில் குறைந்தபட்சப் பாதுகாப்பாவது இருக்கும்.
பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைக்கு அருகில் மது விற்க
மாட்டார்கள். வணிகத்தைவிட மக்கள் நலனே அரசுக்குப் பிரதானமாக இருக்கும். விற்பனை அதிகரிக்கும் காலங்களில் மக்கள் நலன் கருதி
கடைகளை மூடி வைப்பார்கள். மாதச் சம்பள நாள்களில்
மதுக்கடைகளை மூடி, குடும்பங்களைக் காப்பாற்றுவார்கள்.
தரமான, பெரிதும் கேடில்லாத மது வகைகளை விற்பார்கள்…’
இப்படி அரசு மது விற்பனை செய்வதில் இருக்கும் சாதகங்களைப் பட்டியலிடுகிறது உலக சுகாதார நிறுவனம்.
ஆனால் – இதெல்லாமே தலைகீழ் இங்கே –
தமிழகத்தில் அரசுதான் மது விற்பனை செய்கிறது.
ஆனால், டாஸ்மாக் நிறுவனம் தனியாரைக் காட்டிலும் அதிக
லாபவெறியோடு இயங்குகிறது என்பதுதான் பிரச்னை.
குடியிருப்புகளுக்குள்ளும் கிராமப்புறங்களிலும் கடை திறப்பது,
மக்கள் எதிர்த்தால் போலீஸை வைத்து அடித்து விரட்டுவது என
டாஸ்மாக் சர்வ வல்லமையோடு இயங்குகிறது.
குடும்ப வன்முறை அதிகரிக்கிறது, குற்றச்செயல்கள் பெருகுகின்றன, சிறுவர்கள் சீரழிகிறார்கள், கிராமப்புறங்களில் அமைதி கெடுகிறது
என இவ்வளவு கேடுகள் நடக்கும்போதும் அரசு மது விற்பனையை அதிகரிக்கத்தான் வழிபார்க்கிறதே ஒழிய மதுக்கடைகளைக் குறைக்க, அதிகரித்து வரும் குடிநோயாளிகளைத் திருத்த, படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவர சின்ன நகர்வைக்கூட முன்னெடுக்கவில்லை.
ஒவ்வொரு பண்டிகைக்கு மறுநாளும் ‘இவ்வளவு மது விற்பனை’ என்று அறிக்கை வெளிவரும்போது ஒரு நல்லரசு, ‘இந்த விற்பனையைக்
குறைக்க என்ன செய்யலாம்’ என்றல்லவா யோசிக்க வேண்டும்?
ஒரு மாநிலம் மூன்றில் ஒரு பங்கு வருவாயை தம் மக்களைக்
குடிக்கவைத்துப் பெறுகிறது என்பது –
- எவ்வளவு பெரிய அவமானம்….?
புள்ளிவிவரங்கள்படி, கடந்த பத்தாண்டுகளில் பெண்கள்
மது அருந்துவது அதிகமாகியிருக்கிறது. குறிப்பாக இளவயதுப்
பெண்கள். பிரச்னை என்னவென்றால், ஆண்களை விட
பெண்களை மது அதிகம் பாதிக்கும்.
குற்றச்செயல்களில் அரசு லைசென்சோடு- மனமகிழ் மன்றங்கள் –
தமிழகத்தில் டாஸ்மாக் மட்டுமே மது விற்பனையில் ஈடுபடுகிறது
என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் செயல்படும் கிளப்கள்
டாஸ்மாக்குக்கு இணையாக மது விற்பனை செய்வதாகச்
சொல்கிறார்கள். FL-2 என்ற லைசென்ஸ் பெற்று நடத்தப்படும்
இந்த மனமகிழ் மன்றங்கள் முன்பெல்லாம் பெரு நகரங்களில் மட்டும்
இயங்கும். இதுமாதிரியான கிளப்கள் நடத்த பல விதிமுறைகள் கண்காணிப்புகளெல்லாம் உண்டு.
நேரடியாக மொத்த விற்பனை நிறுவனங்களிடம் இருந்து இந்த
மனமகிழ் மன்றங்கள் ‘ஃபுல்’ மட்டுமே வாங்கி தங்கள்
உறுப்பினர்களுக்குத் தரலாம்.
சமீபத்தில் இந்த விதியைத் தளர்த்தி, ‘குவார்ட்டர், பீர், ஆஃப் எல்லாம் கொள்முதல் செய்யலாம்’ என்று அனுமதித்துவிட்டார்கள். அதனால்,
மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் மதுக்கடைகளைப் போல இயங்க ஆரம்பித்துவிட்டன. சுமார் 1,000 மனமகிழ் மன்றங்களுக்குத்
தமிழகத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
‘‘சிறு நகரங்கள், ஊராட்சிப் பகுதிகளிலெல்லாம் இந்த மனமகிழ்
மன்றங்கள் நடத்த அனுமதி தந்துவிட்டார்கள். உறுப்பினர்களுக்கு
மட்டுமன்றி யார் போய்க் கேட்டாலும் மது விற்பனை செய்கிறார்கள்.
மக்கள் எதிர்ப்பால் மதுக்கடைகள் மூடப்படும் இடங்களிலெல்லாம் இந்த மனமகிழ் மன்றங்களைத் திறந்துகொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார், டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர்.
ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன.
ஆனால் எதுவும் நடைமுறையில் இல்லை.
சிறுவர்கள் கையில் எளிதாக மது கிடைக்கிறது.
நேரக் கட்டுப்பாடு இருந்தாலும் கடைக்குப் பின்னால்
கள்ளத்தனமாக மது விற்கிறார்கள்.
நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களுக்குத் தெரிந்தே இது நடக்கிறது.
படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று தேர்தல்
அறிக்கையில் சொன்ன தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் முடியப்போகிறது.
அதற்கான சிறுமுனைப்பைக்கூட எடுக்கவில்லை.
(தகவல்கள் – நன்றி- விகடன் தளம்…)
மனமகிழ் மன்றங்கள் குறித்த ஒரு காணொளி சாட்சி கீழே –
(ஆனால், இதில் பேசுபவரின் குறையெல்லாம், அரசுக்கு
போக வேண்டிய வருமானம், தனியாருக்கு(திமுகவுக்கு….???)
போகிறதே என்பது மட்டும் தான்… !!!)
………………….
.
…………………….
.
……………………………………………..
எப்போதுமே தமிழக (அரசு) நலனுக்கு எதிராகவே சிந்தித்தால் இப்படித்தான் கட்டுரை எழுதத் தோன்றும். ‘ஊரோடு ஒத்துவாழ்’ என்று ஔவைப் பாட்டி அறிவுரை சொன்னது கா.மை சார் போன்றவர்களுக்குத்தான் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.
பதிவு எதைப்பற்றி இருக்கவேண்டும்?
1. சென்ற வருடம் நீட் தேர்வினால் 20 பேர் தற்கொலை, அதனால் நீட் என்பது தமிழர்களுக்கு எதிரானது, இத்தனை பேர் தற்கொலை செய்துகொள்ளச் செய்யும் ஒரு நீட் தேர்வு தமிழகத்துக்குத் தேவையா? அது உடனே ஒரே கையெழுத்தில் ஒழிக்கப்படவேண்டும்.
2. ஆன்லைன் ரம்மியால் 25 பேர் இதுவரை மரணித்திருக்கிறார்கள். இது மிகப் பெரும் அச்சுறுத்தல். ஆன்லைன் ரம்மிச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காததால் கொத்துக்கொத்தாக தமிழர்கள் இறக்கிறார்கள். தமிழராக இருந்திருந்தால் ஆளுநர் இப்படி அலட்சியமாக இருந்திருப்பாரா? தமிழக மக்கள் உயிரைக் காக்க உடனே ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படவேண்டும்.
இப்படியெல்லாம் எத்தனை எத்தனை பதிவுகள் எழுதலாம். இப்படி தமிழக நலனைப் பற்றிச் சிந்திக்காமல்,
ஏதோ 6000 பேர் மதுவினால் மாத்திரம் ஒரு வருடத்தில் இறக்கிறார்கள், குடும்பங்கள் மட்டுமன்றி, சிறுவர்கள்/சிறுமிகள் குடிக்கு அடிமையாவது பெருமளவில் ஆரம்பித்திருக்கிறது, 1000க்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்கள் திமுக அரசால் தொடங்கப்பட்டுள்ளன (அவங்க அனுமதி கொடுத்தால் அது அவங்களால் தொடங்கப்பட்டதுதானே. ஒரு மனமகிழ் மன்றம் ஆரம்பிக்க 2 கோடி கப்பம் என்றெல்லாம் முன்பே காணொளிகளில் வந்ததே), மூன்றிலொரு பங்கு வருமானம் தமிழகத்துக்கு மது விற்பனையால் கிடைக்கிறது, வரும் பட்ஜெட் வருடத்திற்கு 50,000 கோடி வருவாய் என்பது இலக்கு என்றெல்லாம் புலம்புகிறீர்களே. இது நியாயமா? கஞ்சா விற்பனை கடந்த 1 1/2 ஆண்டுகளாக மிகப் பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது என்று பலர் சொல்லும் காணொளிகளை, செய்திகளை நீங்கள் படிக்க ஆரம்பித்தால் இன்னும் என்ன என்ன பதிவுகள் எழுதுவீர்களோ?
1. குடிப்பவன் இல்லை என்றால், அரசு ஏன் மது விற்பனையில் இறங்கப்போகிறது?
2. சூடு சுரணை மானம் எதுவுமின்றி தேர்தல் நேரத்தில் பிச்சைக்காரர்களாக மாறி, பணத்தைப் பல்லிளித்துப் பெற்றுக்கொண்டு தங்கள் வாக்கை விற்காவிட்டால் ஏன் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்போகிறது?
அதனால் மக்கள்தான் திருந்தவேண்டும். அதைவிட்டுவிட்டு, அரசைக் குறை சொல்லுதல் நியாயமா? பொழுது போகாத பொக்கிகளான கோவாலசாமி, கனிமொழி, திருமுருகன் காந்தி, கோவன் என்று பெரிய லிஸ்ட், ஏதோ தமிழகத்தில் மதுவினால் மக்கள் அவதிப்படுகிறார்கள் , திமுக அரசு ஒன்றே மதுவிலக்கைக் கொண்டுவந்து தமிழகம் மது இல்லா மாநிலமாக ஆக்கும் என்று நடித்த நாடகங்களைப் பார்த்துவிட்டு/கேட்டுவிட்டு, திமுக அரசு அமைந்தவுடன் மதுக் கடைகள் முழுவதுமாக ஒழிந்துவிடும், தமிழகமும் தமிழர்களும் உருப்பட்டுவிடுவார்கள் என்று நீங்கள் கனவு கண்டிருந்தால் அதற்கு திமுக அரசு எப்படிப் பொறுப்பாகும்?
அது இருக்கட்டும்…… ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கிறார்கள் பெண்கள் (முதல் இரண்டு வார்த்தைகளைப் படிக்க மறந்துவிட்டார்கள் அல்லது ஒருவேளை குடித்துவிட்டு மனமகிழ்ச்சி அடைவதையும் ‘எட்டும் அறிவு’ என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ). அதைக் குறை சொல்லலாமா?
தமிழ்நாடு ,இந்தியாவின் மிக மோசமான, உதாரண மாநிலமாக மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.உழைக்க தயாராக இல்லாத , வெறும் மது போதையில் திளைக்கும் இளைஞர் கூட்டம் இங்கு மெள்ள உருவெடுத்து கொண்டிருக்கிறது .கடைசியில் வேலை நடைபெற நாம் வடக்கு மாநிலத்திலிருந்து தான் ஆட்களை வரவழைத்து , தொழில் நடத்தி வருகிறோம்.கூடிய சீக்கிரமே , இந்த உழைக்க தயாராக இல்லாத, சோம்பேறி,போதை இளைஞர்கள் பணத்திற்காக , செயின் பறிப்பு,செல் போன் பறிப்பு ,கொள்ளை என சோமாலியா போன்று தினம்தோறும் அரங்கேற்றும் நிலை நிச்சயம் நமக்கு ஏற்படும் . அரசாங்கம் இந்த இலவசங்களை கொடுக்க, மேலும் வருமானத்திற்காக , மதுவையே, முன்னிறுத்தி நம் மக்களை குட்டி சுவராக்குகிறது .இலவசங்களை எதிர்பார்க்கும் மக்கள் ஒழிந்தால் தான், அரசாங்கத்தினால் வேறு வகையில் சிந்திக்க முடியும்
.
ஆதிரையன்,
தமிழகத்தில் வேறு எவரும், எந்த கட்சியும்,
இப்போதைக்கு முன் வர மாட்டார்கள்…
எல்லாரும் தேர்தலுக்கு பணம் வாங்கிக்கொண்டு,
திமுகவோடு கூட்டணியில் சங்கமமாகி விட்டார்கள்.
அடுத்த தேர்தல் வரும் வரை – தமிழக அரசுக்கு எதிராக
எதையும் பேசும் திராணி அவர்களுக்கு கிடையாது…
பாஜகவில் இப்போது உங்களைப்போன்ற
இளைஞர்கள் பெருமளவில் இருக்கிறார்கள்….
டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி,
தமிழக பாஜக ஒரு மாபெரும் போராட்டத்தை
முன்னெடுத்தால் என்ன ….?
தமிழக பெண்களின் ஆதரவை பெரிய அளவில்
இந்த போராட்டம் பெற்றுத்தரும்….
என் போன்ற நிலையில் இருக்கும் இன்னும் பலரின்
ஆதரவும் கிடைக்கும்.
சீரியசாகத் தான் இதைச் சொல்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஜெ இதனைப் பற்றி யோசித்தாராம். அப்போது, 50 பெண்கள் மதுவிலக்குக்கு ஆதரவாகத் தனக்கு வாக்களித்தால், 50 குடிகாரர்கள் தனக்கு வாக்களிக்க மறுப்பார்கள் என்ற அனாலிசிஸ் பார்த்து அதைப் பிரதானமான வாக்குறுதியாக தேர்தலின்போது மாற்றவில்லையாம். அப்போது அவர் வாக்குறுதி கொடுத்திருந்தாலும் பெரிய இம்பாக்ட் இருந்திருக்காது.
தற்போது Social Drinking என்று இந்தக் குடிப் பழக்கம் பல இடங்களிலும் பரவியாயிற்று. அதனால் ‘மதுவிலக்கு’ என்பது தமிழகத்திற்கு சாத்தியப்படாது.
1. புதுக்கடைகள் திறப்பதில்லை. பொதுமக்கள் 10,000 பேர் கையெழுத்திட்டு விரும்பினால், அந்தப் பகுதியைச் சேர்ந்த (ஒரு வரையறை வைத்து) வாக்காளர்கள் 50 சதத்திற்கு மேல் வாக்களித்தால் புதுக் கடை வரும் (அதற்காக ஒரு தேர்தல் அந்தப் பகுதியில் நடத்தலாம்). அடுத்த ‘கடை வேண்டும்’ என்ற தேர்தல் அடுத்த 5 வருடங்களுக்குப் பிறகுதான்.
2. இதே போல், கடை வேண்டாம் என்று 10,000 பேர் மனு கொடுத்தால் தேர்தல் வைத்து 50 சதத்திற்கு மேல் ஆதரவு இருந்தால், கடையை மூடவேண்டும்.
3. தனியார் பார்கள், கடைகளை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும்.
4. Based on Sales and likings, மது purchase நடைபெறவேண்டும். Purchaseம் Salesம் billஉடன் வெளிப்படையாக நடக்கவேண்டும்.
இதனைச் செய்தாலே போதும். மது குடிப்பது, சிகரெட், புலால் உணவு என்பதெல்லாம் தனிப்பட்ட விருப்பம் என்பது என் அபிப்ராயம். ‘மது வியாபாரத்தில்’ அரசு இறங்கியிருக்கக்கூடாது. அதனைக் குறைப்பதுதான் நாம் செய்யக்கூடியது.
கர்நாடகாவிலும் பார்கள் கடைகள் நிறைய இருக்கின்றன. கோவிட் சமயத்தில் தெரு முழுக்க கியூ நின்றது நினைவிலிருக்கிறது.
இதைவிட முக்கியம், குட்கா விற்பனையைத் தடை செய்யவேண்டும். ஒன்று இதனை உபயோகிப்பவர்களுக்கு கேன்சர் வரும் ஆபத்து மிக மிக அதிகம். இரண்டாவது தெருவெங்கும் வடவர் மாதிரித் துப்பி, ஊரை நாறடிக்கும் பழக்கம் வெகு விரைவில் மிக அதிகமாகிவிடும்.