………………………………………….

…………………
வெகு சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றை படித்தேன்.
அவசியம் நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்
என்று தோன்றியது….
இதனை எழுதிய சூ.ம.ஜெயசீலன் (காமதேனு) அவர்களுக்கு
மிகுந்த நன்றி கூறிக்கொண்டு, இங்கே பதிவு செய்கிறேன்.
………………….
2-ஆம் உலகப்போர் சம்பந்தப்பட்ட ஒரு பகிர்தல்….
…………..
வின்சென்ட் சர்ச்சில் போர்கூடத்தில் இடைவிடாத வியப்புகளுடன்,
நடந்தேன். ஓரிடத்தில், தரையில் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது.
அருகில் சென்றேன். கீழ் தளத்துக்கு படிகள் சென்றன.
நாம் கீழிறங்குவதற்கு அனுமதி இல்லை.
போரின் போது, மூத்த அதிகாரிகள் கீழ் தளத்தில் தூங்கினார்கள்.
உயரம் குறைவான படுக்கைகள், சுற்றித் திரியும் எலிகள், பூச்சிகள்,
காற்று உள்ளே வருவதற்காக எந்திரம் எழுப்பிய சத்தம், எப்போதும்
எரியும் விளக்கு, கழிவறை பற்றாக்குறையால் உருவான நாற்றம் போன்றவற்றால் அதிகாரிகள் கீழ்தளத்தை விரும்பவில்லை. எனவே,
இரவில் மட்டும் கீழே சென்றார்கள். குண்டடி பட்டாலும் பரவாயில்லை
என்று பகலில் சிலர் வெளியே சென்றார்கள்.
சுவரில் ஆங்காங்கே துப்பாக்கிகள் தொங்கின. ‘அமைச்சரவை கூட்டம் நடந்தபோது, அறைக்கு உள்ளேயும் வெளியேயும் காவலர்கள்
பாதுகாப்புக்காக நின்றுள்ளார்கள். ஆனாலும், ஜெர்மன் வீரர்கள்
பாராசூட் வழியாக வந்து திடீர் தாக்குதல் நிகழ்த்தலாம் என்கிற
அச்சம் அனைவரிடமும் நிலவியது. ஒருவேளை அத்தகு சூழல் ஏற்பட்டால்
யார் வேண்டுமானாலும் துப்பாக்கி எடுத்து போரிடலாம்’.
முதன்மை தனிச் செயலர் அறை
வின்சென்ட் சர்ச்சில் அறை

ஓர் அறையின் நிலையில், பிரதம அமைச்சர் என்று எழுதியிருந்தது.
அது, சர்ச்சிலின் முதன்மை தனிச் செயலர் அறை. இந்த அறை
வழியாகத்தான், இடது பக்கம் உள்ள பிரதமரின் அறைக்குள் யாரும்
செல்ல முடியும். வேறு வாசல் இல்லை. சர்ச்சில் பயன்படுத்திய கட்டில்,
மெத்தை உள்ளிட்ட பொருட்களும், சுவர் முழுவதும் உலக நாடுகளின் வரைபடங்களும் உள்ளன.

பிரதமரின் அறை
ட்ரான்ஸ்அட்லாண்டிக்
ரகசிய அவசர தொலைபேசி அறையைக் கண்டேன். அது,
ட்ரான்ஸ்அட்லாண்டிக் தொலைபேசி அறை எனப்படுகிறது
(Transatlantic Telephone Room). இவ்வகை, தொலைபேசி கேபிள்கள் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் கிடக்கின்றன.
முதல் தகவல் பரிமாற்றம், 1858, ஆகஸ்ட் 16-ஆம் நாள் இங்கிலாந்து
அரசி விக்டோரியா மற்றும் அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் புகேனன்
இருவருக்கும் இடையே நிகழ்ந்தது. அரசியின் வாழ்த்து, 3,200 கிலோமீட்டர்
நீள கேபிளை, 16 மணி நேரம் கடந்து, அமெரிக்கா சென்று சேர்ந்தது.
கடிதங்கள் அட்லாண்டிக் கடலைக் கடக்க 10 நாட்கள் ஆன
காலகட்டத்தில், ட்ரான்ஸ்அட்லாண்டிக் கேபிளின் வெற்றி, தகவல்
தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது
கூடுதல் தகவல்.
போர் கூடத்தில் இருந்த ட்ரான்ஸ்அட்லாண்டிக் கேபிள் வழியாக,
அமெரிக்க அதிபரிடம் சர்ச்சில் நேரடியாக பேசினார். இடைமறித்து
யாராலும் ஒட்டு கேட்க முடியாது. ஆனால், சக அதிகாரிகளே
மறைந்திருந்து கேட்கலாம்தானே! அதனால், அது பிரதமரின் கழிவறை
என்று மற்றவர்களை நம்ப வைத்திருந்தார்கள்.
பிபிசி அறை

அசல் சாவிகள்
போர்ச் செயலகம்

போர் கூடத்தில் உள்ள அறைகளைத் திறக்கவும் பூட்டவும் பயன்படுத்திய
அசல் சாவிகள் அங்குள்ள பலகையில் தொங்குவதைப் பார்த்தேன்.
பிறகு, பிரதமரின் இராணுவ ஆலோசகர் அறை, துப்பறிவாளர்களின்
அறை, சமையல்கூடம், பிபிசி ஒலிபரப்பு அறை, தட்டச்சு அறை
ஆகியவற்றைப் பார்த்தேன். போர் கூட அறைகளுக்குத் தேவையான
மின்சாரம் தகுந்த முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதற்காக,
பெரிய அறை ஒன்றில் தனியாக மின் ஆலை (Plant Room ) செயல்பட்டுள்ளதைக் கண்டேன். பணியாளர்கள் எந்நேரமும்
அதைக் கண்காணித்தார்கள். இருப்பினும், பாதாள அறைகளில்
எதிர்பாராத மின் தடை ஏற்பட்டுவிட்டால் ஆபத்து அதிகம் அல்லவா!
எனவே, எல்லா அறைகளிலும் மெழுகுதிரி தண்டுகளும் இருந்தன.
மின் ஆலை

போரை வழிநடத்திய வரைபட அறை
வரைபடங்களுக்கென்றே (Map) பெரிய அறை இருந்தது.
நேச நாடுகளது பாதுகாப்பு தளவாடங்கள் எங்கே எந்த வழியில்
செல்ல வேண்டும் என்பதை இந்த அறையிலிருந்து திட்டமிட்டு
அரசருக்கு, பிரதமருக்கு, இராணுவ அமைச்சகத்துக்கு சொல்லி
யுள்ளார்கள். அப்போது பயன்படுத்திய அசல் வரைபடங்கள்
அறை முழுவதும் உள்ளன. போர் நடந்த நாடுகள் மீது குறிப்பு தாள்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதன் முன்னால் ஒருவர் நின்று ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார். மற்றொருவர் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கிறார். அருகில் வேறொரு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த அதிகாரி, ரிசீவரை இறக்கி நெஞ்சுக்கு அருகில் வைத்துக்கொண்டு, மற்றவரிடம் ஏதோ கேட்கிறார். இதேபோல
எல்லா அறைகளிலும், ஆட்கள் அமர்ந்து வேலை செய்வதுபோல, கலந்துரையாடுவதுபோல, மிகவும் தத்ரூபமாக
செய்து வைத்திருக்கிறார்கள்.
தட்டச்சு அறை

முக்கியமான அறைகள் அனைத்திலும் வரைபடங்கள் இருப்பதை பார்த்துக்கொண்டே நடந்தபோது, வெளிச்சுவரில் இருந்த
படங்களையும் பார்த்தேன். குறிப்புகளை வாசித்தேன். வடக்கு
அட்லாண்டிக் கடலில் நேச படைக்கும், ஜெர்மன் நீர் மூழ்கி கப்பல்
படைக்கும் (U-Boat) நடந்த சண்டை பல நாட்களுக்கு நீடித்துள்ளது.
14 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சரக்குகளை ஜெர்மன் படையினர் மூழ்கடித்துள்ளனர். சரக்கு கப்பல் மூழ்கும் படமும், தங்கள் தொழில்
நுட்பத் திறனை வளர்த்துக்கொண்டு, ஜெர்மன் படையின் நீர் மூழ்கி
கப்பலை நேச படைகள் வெற்றிகொள்ளும் படமும் அங்கே உள்ளன.
சர்ச்சிலின் பொருட்கள்
சர்ச்சில் பயன்படுத்தியவை

சர்ச்சிலின் வாழ்க்கையை விவரிப்பதற்காகவே தனி அரங்கம் உள்ளது.
உள்ளே நுழைந்தபோது, அவரின் பதில் என்னை வரவேற்றது.
“எங்களது இலக்கு என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள்? ஒரே
வார்த்தையில் என்னால் சொல்ல முடியும். அது, வெற்றி”.
பிரதமர் ஆவதற்கு முன்பாகவே, 1907-ஆம் ஆண்டு, உயராட்சிக் குழு உறுப்பினராக (Privy Councilor) சர்ச்சில் நியமிக்கப்பட்டிருந்தார்.
அரசருக்கு அறிவுரை கூறும் இக்குழுவின் உறுப்பினர் பதவி, வாழ்நாள் முழுமைக்குமான நிரந்தர பதவியாகும். அமைச்சராக இல்லாத அரசியல்வாதிக்கு இப்பதவி எளிதில் கிடைக்காது. ஆனால், சர்ச்சிலுக்கு வழங்கப்பட்டது. உயராட்சிக் குழு உறுப்பினராக பணியாற்றியபோது
சர்ச்சில் அணிந்த சீருடை, மேலாடை, மற்றும் தொப்பி, 1908-இல்
திருமண பரிசாக அரசர் ஏழாம் எட்வர்டு வழங்கிய பிரம்பு
ஆகியவற்றைப் பார்த்தேன். அருகிலேயே, நண்பர்கள் கொடுத்த
வெள்ளித்தட்டு இருந்தது. அதன் பின்புறம், நண்பர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
குடும்பத்தின் ஆதரவு
‘சர்ச்சிலுக்காக பணி செய்தல்’ என்கிற தலைப்பில் நிறைய
குறிப்புகள் உள்ளன. பீல்ட் மார்சல் சர் ஆலன் ப்ரூக், “சர்ச்சிலுடன்
சேர்ந்து வேலை செய்வது மிகவும் கஷ்டம். ஆனாலும், வேறு
எதற்காகவும், இவருடன் பணியாற்றும் வாய்ப்பை நான் தவறவிட
மாட்டேன்” என்கிறார்.
போரின்போது இரவு பகல் பாராது வேலை செய்ய மற்றவர்களை
சர்ச்சில் ஊக்கப்படுத்தினார். தானும் ஒரு நாளைக்கு 18 மணி நேரம்
உழைத்தார். உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் உறுதியுடன
இருந்தார். அவரது குடும்பத்தின் ஆதரவு எப்போதும் அவருக்கு
இருந்தது.
1908-இல், விருந்து கொண்டாட்டம் ஒன்றில்தான் தன்னை விட
10 வயது குறைவான கிளமென்டைனை (Clementine Hozier)
சர்ச்சில் முதன் முதலில் சந்தித்தார். காதல் மலர்ந்தது. திருமணம்
செய்தார்கள். 56 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தார்கள். “எனக்கு
திருமணம் நடந்தது. அதன் பிறகு, எப்போதும் மகிழ்ச்சியாக
வாழ்ந்தேன்” என்றார் சர்ச்சில். கிளமென்டைன், தனது
4 குழந்தைகளுடன் பலமுறை போர் முனைக்கு கணவருடன்
சென்றிருக்கிறார்.
கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட கடிதங்கள், மனைவியின் கருத்துக்கு எவ்வளவு தூரம் சர்ச்சில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதைச் சொல்கின்றன. மனைவியின் துணையும் அறிவுரையுமின்றி சர்ச்சில், இத்தனை வெற்றிகளை அடைந்திருக்க
இயலாது என்கிறது குறிப்பு. அருகிலேயே, “குடும்பத்தைச் சுற்றிதான்,
மிகச் சிறந்த விழுமியங்கள் உருவாக்கப்படுகின்றன, வலுவூட்டப்
படுகின்றன, காப்பாற்றப்படுகின்றன” என்கிறது
சர்ச்சிலின் பொன்மொழி.
வின்சென்ட் சர்ச்சில்
வெற்றி மட்டுமே வாழ்க்கையில்லை

ஐரோப்பாவில் 1945, மே மாதம் போர் முடிவுற்றது.
தேர்தல் நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நிர்ப்பந்தித்தன.
ஜுலை 05-இல் தேர்தலைச் சந்தித்தார் சர்ச்சில். படுதோல்வி அடைந்தார். இக்குறிப்புக்கு மேலே, “யாரால், போரில் வெற்றி பெற முடிகிறதோ
அவர்களால், அரிதாகவே அமைதியை கொண்டுவர முடியும்.
யாரால், அமைதியை கொண்டுவர முடிகிறதோ அவர்களால்
ஒருபோதும் போரில் வெற்றி பெற இயலாது” என்கிற சர்ச்சிலின் வார்த்தைகளை வாசித்தேன்.
அதிகாரம் இல்லாதபோதும், சர்ச்சில் துவண்டுவிடவில்லை.
சார்ட்வெல்லில் (Chartwell) இருந்த தன் வீட்டில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார். நண்பர்களையும் உறவினர்களையும் வரவேற்றார்.
நிறைய எழுதினார். படங்கள் வரைந்தார். “சார்ட்ல்வெல்லை விட்டு
வெளியில் இருக்கிற நாள் என்பது, நான் வீணாக்கிய நாளுக்குச் சமம்”
என்றும், “என்னுடைய எழுத்தாலும், பேச்சாலும் எப்போதுமே
என் அன்றாட வாழ்வுக்கானதை நான் சம்பாதித்தேன்” என்றும்
குறிப்பிட்டார்.
.
……………………………………………………………………….……………………..
மக்கள் இறப்பு 15 முதல் 30 லட்சம் வரை என்று எஸ்டிமேட் செய்யப்படும் Bengal Famine -க்கு முழு காரணமான சர்ச்சிலை ஒரு போர் குற்றவாளியாகத்தான் பார்க்க முடிகிறது. வேறு என்ன குணங்கள் இருந்தால் என்ன இல்லையானால்தான் என்ன?
இப்படிப் பார்க்க ஆரம்பித்தால், உலகின் அனேகமாக எல்லாத் தலைவர்களும் (காந்தி உட்பட. இந்த காந்தி கரம்சந்த் காந்தி) போர்க்குற்றவாளிகள்தாம். சர்ச்சிலின் கடமை அவர் நாட்டிற்கு விசுவாசமாக இருப்பது. நோபல் கமிட்டியின் கடமை, அமெரிக்காவிற்கு விசுவாசமாக இருப்பது. அப்படித்தான் அவர்கள் செய்கைகளைப் பார்க்கவேண்டும்.
இதையெல்லாம் கடந்து, உலக மக்கள் அனைவர் மீதும் அன்பு செலுத்தும் தன்மை ஒரு சிலருக்கே உண்டு. அரசியல் மற்றும் அரசுத் தலைவர்களிடம் அதனை எதிர்பார்க்கக்கூடாது. காரணம் அவர்கள் கடமைகளே வேறு