” ஜாதிகள் இல்லையடி பாப்பா -“…நிஜமாகவா … ???

…………………………….

…………………………….

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஒருபொதுக்கூட்டத்தில் எனக்கு நன்கு அறிமுகமான, என்னினும் வயதில் மிகவும் மூத்த பேச்சாளர் ஒருவர்
சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். எப்பொழுதும்
முதல் வரிசையில் அமர்வதைத் தவிர்க்கும் நான், எப்படியோ அன்று
முதல் வரிசையில் அமர்த்தப் பட்டேன். இலக்கியம் பேசிக் கொண்டிருந்த
அவர், ஜாதி சர்ச்சை பற்றிப் பேசத் தொடங்கினார்.

பார்ப்பனர்கள் எல்லாரும் திமிர் பிடித்தவர்கள், அயோக்கியர்கள்
என்று சொல்லி விட்டு, சட்டென்று என்னைப் பார்த்து, அதிலும் ரவி
போன்ற நல்லவர்கள் சிலர் உண்டு என்று சமாளித்தார்.

கூட்டம் முடிந்ததும் அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன். என்னைப் பார்ப்பபனர் என்று அவர் எப்படி முடிவு செய்தார் என்பதே என் கேள்வி.

நான் பூணூல் அணிவதில்லை; பிராமணன் என்பதற்கான புறச்
சின்னங்கள் எதுவும் அணிவதில்லை. பிறகு எப்படி
நான் பிராமணன் என்று அவர் முடிவு
செய்தார் என்று கேட்டு விட்டேன்.

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டுச் சொன்னார், “அதான்
முகத்துலியே எழுதி ஒட்டி வச்சிருக்கே”. எப்படிச் சொல்கிறீர்கள்
என்று நானும் மறித்துக் கேட்டேன். “நீசெவத்த பையன் தம்பி;
தெரியுதே” என்றார்.

பார்ப்பான் என்பதற்கான அடையாளச் சின்னம் முகத்தில் இருந்து
தோல் நிறத்துக்கு மாறியது. நான் விடவில்லை. “ஏன் சாமி,
பிராமணர்களில் கருப்புத் தோல் உடையவர்களே கிடையாதா
அல்லது பிராமணர் அல்லாதவர்களில் சிவப்புத் தோலுடையவர்களே கிடையாதா?” என்று கேட்டதும் –

அவருக்கு மேற்கொண்டு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மழுப்பலாகச் சிரித்துக் கொண்டே, சரி விடு தம்பி, பிராமணன் என்று
தன்னைச் சொல்லிக் கொள்பவன் எல்லாம் திமிர் பிடித்த அயோக்கியன்,
நீ அப்படிச் சொல்லிக் கொள்ளாதவன். அவ்வளவுதான்!” என்று
முற்றுப் புள்ளி வைக்க முயற்சி செய்தார்.

அவருடைய முயற்சியை முறியடித்து, நான் உடனே சொன்னேன்: “நான் என்னைப் பார்ப்பான் என்று சொல்லிக் கொள்கிறேனே”. அதை
அவர் எதிர்பார்க்கவில்லை. நான் அப்படிச் சொன்னதும் –

சற்றே அதிர்ந்து போய், “நீ அப்படியெல்லாம் சொல்லிக்கிற டைப் இல்லை; சும்மா எங்கிட்டே வம்பு பண்றே” என்றார்.

நான் சொன்னேன்:
“அந்தணர் என்போர் அறவோர் மற்று
எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்”.

“மறந்தும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”

“கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”.

“இந்த வேத வாக்குகளின் படி நடக்க முயல்வதால்
நான் அந்தணன், பிராமணன்” என்றேன்.

இப்படி நான்சொன்னதும் அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்: “இதுக்குத்தான் வக்கீல் கிட்டே போயி வாதாடக் கூடாதுன்னு
சொல்லுவாங்க!”

அத்துடன் எங்கள் உரையாடல் சுமுகமாக முடிந்தது. அவருடைய
ஒப்புதல் இன்றி அவருடைய பெயரை வெளியிடும் உரிமை எனக்கில்லை.
பிறப்பை வைத்து, இன்ன தாய் தந்தையருக்குப் பிறந்தவர் இன்ன ஜாதி
என்று கணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ‘பிறப்பொக்கும்’
என்ற பிரகடனத்துக்குப் புறம்பானது அந்த வழக்கம். இந்த ஒரு கருத்தை
உள் வாங்கிக் கொண்டவர்கள் ஜாதிகளை இழிவாகப் பேசும்
வழக்கத்தில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள்.

ஜாதி எதிர்ப்பின் முதல்நிலை வீரன் பாரதி. அவன் ஜாதிகளை எதிர்த்தான். ஆனால் அவனுடைய ஜாதி எதிர்ப்பு ஒரு ஜாதி எதிர்ப்பாக இருக்கவில்லை. எந்தக் குறிப்பிட்ட ஜாதியையும் அவன் எதிர்க்கவில்லை.

“பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே”

ஜாதிகள் இல்லையடி பாப்பா!-

என்று பாடியவன், “தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி” என்று கொந்தளித்தவன், அவனேதான் இப்படியும் எழுதினான்:

“‘பறையர்’ என்பது மரியாதை உள்ளபதம் இல்லை என்று கருதி இக்காலத்தில் சிலர்பஞ்சமர் என்ற சொல்லை அதிகமாக வழங்குவது
உண்டு. ஆனால் பறையர் என்பதே மேற்படி ஜாதியாருக்குத்
தமிழ்நாட்டில் இயற்கையாக ஏற்பட்ட பெயர்.

பறை என்பது பேரிகை. பூர்வ காலத்தில் நமது ராஜாக்கள்
போர் செய்யப் போகும் போது ஜயபேரிகை கொட்டிச்
செல்லும் உத்தமமான தொழில் இந்த ஜாதியார் செய்து வந்த
படியால் இவ்ர்களுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று.
‘இது குற்றமுள்ள பதமில்லை’ என்பதற்கு ருஜு வேண்டுமானால்,
மேற்படி கூட்டத்தாரால்சென்னையில் நடத்தப்படும் சபைக்கு
‘பறையர் மஹாசபை’ என்று பெயர் வைத்திருப்பதைக் காண்க.

அவர்களை மிருகங்களைப்போல் நடத்துவது குற்றமேயொழிய
பறையர் என்று சொல்வது குற்றமில்லை. என்னடா இது!
ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையறைக் கொண்டு
பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து
ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அடே! பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகிறார்கள். எல்லாரையும் அடிக்கப்
பறையனால் முடியுமா? ….

நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா? பறையருக்கு நியாயம்
செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை…..அவர்களை
எல்லாம் ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச்
செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதீர்கள்…….”

(பாரதியார் கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம், 4-ஆம் பதிப்பு,
1997, பக்கம் 257)

ஜாதி பேதங்களைக் கடுமையாக எதிர்த்த போதும், அப்படி
பேதம் சொல்பவன் எந்த ஜாதியாக இருந்தாலும்
அதை எதிர்க்க அவன் தயங்கவில்லை. அதனால்தான்,
அவனால்தான் இப்படி எழுத முடிந்தது:

“ … … … … யானையை எடுத்தால், அதில் ப்ரம்ம,
க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்! குதிரையிலும் அப்படியே! வானத்திலுள்ள
கிரகங்களிலும் அதே மாதிரி பிரம்ம, க்ஷத்திரிய முதலிய ஜாதி
பேதங்கள். இரத்தினங்களிலும் அப்படியே!”

(பாரதியார் கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம், 4-ஆம் பதிப்பு, 1997, பக்கம்
261-262)

இப்படி எழுதிவிட்டு அத்துடன் அவன் நின்றுவிடவில்லை. அடுத்த
பத்தியில் அவன் எழுதியதை எழுதுவதற்கு இன்று கூட யாருக்கும் துணிவிருக்குமா, தெரியவில்லை. தொடர்ந்து எழுதுகிறான்:

“… … கொஞ்ச ஜாதியா? அவற்றில் உட்பிரிவுகள்
கொஞ்சமா? பறை பதினெட்டாம் ! நுளை நூற்றெட்டாம்!
அதாவது பறையர்களுக்குள்ளே 18 பகுதிகளும்,
நுளையர்களில் 108 பகுதிகளும் இருக்கின்றனவாம்.
மேலும், பறையன், பள்ளன், சக்கிலியன் எல்லோரும் வெவ்வேறு ஜாதிகள், ஒன்றுக்கொன்று பந்திபோஜனம் கிடையாது. பெண் கொடுக்கல்,
வாங்கல் கிடையாது. கேலி, கேலி பெருங்கேலி.
… … சீர்திருத்தம் வேண்டும் என்ற நல்ல நோக்கம் உடையவர்களிலே சிலர் செய்கை நெறியுணராமல் புதிய வகுப்புகள் ஏற்படுத்திக் கொள்ளுகிறார்கள்.
கடையத்து வேளாளரில் இங்கிலீஷ் படித்த சிலர் தாங்கள்
திராவிடப் பிராமணர் என்று பெயர்வைத்துக் கொண்டு பரம்பரையாக
வந்த பிள்ளைப் பட்டத்தை நீக்கி ராயர் பட்டம் சூட்டிக்
கொண்டிருக்கிறார்கள்.”
(பாரதியார் கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம், 4-ஆம்
பதிப்பு, 1997, பக்கம் 261-262)

என்னிடம் தொழில் பயின்ற பிறகு நீதிபதி ஆகிவிட்ட ஒரு நண்பரோடும், அவருடைய இன்னொரு வக்கீல் நண்பரோடும், முப்பது ஆண்டுகளுக்கு
முன் ஒருநாள் மதுரையில் பயணம் செய்து கொண்டிருந்த போது,
எங்களுக்குள் நடந்த உரையாடலை இங்கே நினைவு படுத்திக்
கொள்கிறேன்:

என்னிடம் தொழில் பயின்று, பிறகு நீதிபதி ஆகிவிட்டவரிடம் கேட்டேன்:

“உங்கள் வக்கீல் நண்பருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா?”
“இல்லை. பெண்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சரியாக வரன்
அமையவில்லை.” இவ்வாறு அவர்பதில்சொன்னார்.
“ஓ! அப்படியானால் நான் பார்த்துச் சொல்கிறேன்” என்று
யதார்த்தமாகச் சொன்னேன்.

நான் அப்படிச் சொன்னதும், அவருடைய நண்பர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனேன். அவர் சொன்னதன் சாரம் இதுதான். அவர் பட்டியல்
இனத்தில் ஏதோ ஒரு ஜாதியைச் சேர்ந்தவராம்.

அந்த ஜாதியிலோ, அல்லது அதைவிட மேம்பட்ட ஜாதியிலோ பெண்
பார்க்க வேண்டுமாம். அவருடைய ஜாதிக்குக் கீழ்ப்பட்ட ஜாதியில்
பெண்ணெடுக்க மாட்டாராம்.

நான் வாயடைத்துப் போனேன். மேலே பாரதி எழுதியதற்கு
70 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நிலையா?

“இருட்டறையில் உள்ளதடா உலகம் – சாதி
இருக்கின்ற தென்போனும் இருக்கின்றானே!”

 • என்று பாவேந்தர் பாரதிதாசன் அங்கலாய்த்துக்
  கொண்டு எத்தனையோ ஆண்டுகளாகியும் மனிதன்
  மாறவில்லையே!

இன்று ஜாதிப் பெயர் சொல்லி எள்ளி நகையாடும் வழக்கம் பரவி
வருகிறது. பட்டியல் இனத்து மக்களை ஜாதிப் பெயர் சொல்லிக்
கேலி செய்தால், திட்டினால் உடனே சிறைவாசம் என்று சட்டம்
இருந்தாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக அந்தக் கொடுமை
நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. குற்றம் செய்பவர்கள்
தப்பித்துக் கொள்கிறார்கள்; குற்றம் செய்யாதவர்கள்
தண்டிக்கப் படுகிறார்கள்.

யார் மிக உயர்ந்த ஜாதி என்று தங்களை எண்ணிக்
கொண்டிருந்தார்களோ அவர்களில்பலர் அந்த ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் அருகதையை இழந்து விட்டார்கள். பார்ப்பன ஜாதியாருள்ளே
புலால் உண்ணுதலும், கள் அருந்துதலும் பரவி விட்டன.
இன்னும் எப்படி இவர்கள் பார்ப்பனர்கள்?

ஆனால், ஓரளவு அந்த ஜாதி வழக்கங்களைக் கடைப்பிடித்துக் கொண்டு இன்னும் கோயில் பூஜை செய்தல், வீட்டு விஷேசங்களைச் செய்து
வைத்தல் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் சில ஏழைகள்
இருக்கத்தான் செய்கிறார்கள். ஜாதி த்வேஷத்தை வளர்ப்பவர்கள்
அவர்களைத் தான் குறிவைத்துத் தாக்குகிறார்கள். புலால் உண்ணும் மேல்தட்டுப் பார்ப்பனர் தப்பித்துக் கொள்கிறார்கள்.

அப்பாவி ஏழை குருக்களும், சாஸ்திரிகளும் ஏளனத்துக்கும்,
வன்முறைக்கும் பலியாகிறார்கள். அவர்களை மிகவும் கீழ்த்தரமாகப் பேசி எள்ளி நகையாடும் வழக்கம் மிகவும் அதிகரித்து வருகிறது. உடைத்துச் சொன்னால், பார்ப்பன ஜாதியை இழிவாகப் பேசுவது இப்பொழுது
மேடைகளிலும், கூட்டங்களிலும் கைதட்டல் வாங்கும் உத்தியாகி விட்டது.
கூட்டத்தில் தான் இந்தக் கூச்சலெல்லாம். தனியே, வீட்டில் பூஜைக்கு
இன்னும் ஐயரைத்தான் அழைப்பார்கள்.
“கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கோளாரடி”

 • என்று பாரதி நொந்து கொண்டது இன்னும் நடக்கிறது. வேறு எந்த
  ஜாதியைப் பற்றியும் பகிரங்கமாக எள்ளி நகையாட யாருக்கும்
  துணிவில்லை.

மொத்தத்தில் எந்த ஜாதியையும், அல்லது எந்த ஜாதியைச் சேர்ந்தவரையும் ஜாதிப் பெயர் சொல்லி எள்ளி நகையாடலும், ஏசலும் சிறைத்தண்டனை பெற்றுத்தரும் குற்றங்கள் என்ற சிறப்புச் சட்டம் தேவையோ
என்றெண்ணத் தோன்றுகிறது.

இந்தக் கருத்துச் சூழலில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் பிரதிநிதிகள் சிலரே ஒரு ஜாதியை
இழித்தும், பழித்தும் பேசுகிறார்கள்.

அவர்களில் அமைச்சர்களும் அடக்கம்.
அவர்கள் தங்கள் தொகுதி மக்கள் அனைவருக்கும் தாம் பிரதிநிதி
என்பதை மறந்து விடுகிறார்கள். தம் தொகுதியில் உள்ளவர்கள்
அத்தனைப் பேருக்கும், அவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், கடவுளை நம்புகிறவர்களுக்கும், நம்பாதவர்களுக்கும்
அவர்கள் பிரதிநிதி என்பதை அவர்கள் நினைவில் கொள்வதில்லை.

நம்முடைய அரசியல் அடிப்படைச் சட்டத்தின்படி, அதன் மூன்றாவது
தபசில் உள்ளவாறு உறுதிமொழி எடுத்துக் கொண்ட பிறகே
அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள். அந்த உறுதி மொழியில்
இப்படியுள்ளது:

“I will do right to all manner of people in
accordance with the Constitution…”

 • எல்லா விதமான மக்களுக்கும் சரியானதைச் செய்வேன் என்று
  இதைப் புரிந்து கொள்ளலாம். ஓர் அமைச்சர் இந்த உறுதி மொழியை
  மீறிப் பேசினால் கூடப் பதவி இழக்க வேண்டியவர் ஆகிறார்.

ஒரு ஜாதியைச் சேர்ந்த சிலர் தம்மை இழிவாகப் பேசிவிட்டதால் கோபம் கொண்டு, அவர் சார்ந்த ஜாதியையே பழிக்கும் பக்குவமின்மை
கல்வியிற் சிறந்தவர்களிடமும் காணப் படுகிறது.

ஒரு பேருந்து நடத்துனருக்கும், ஒரு மாணவருக்கும் சண்டை
ஏற்பட்டால், உடனே எல்லா பேருந்துகளும் நிறுத்தப்படும், எல்லாக் கல்லூரிகளும் அடைக்கப்படும், கலவரம் வெடிக்கும் என்ற
சிறுபிள்ளைத் தனத்தில் இருந்து நாம் மீளவே இல்லையே!
கண்ணியம் என்பதைக் காற்றில் பறக்க விட்டுவிட்டோமே!

பாரதி ஜாதி எதிர்ப்பை முன்னெடுத்தான். ஆனால்
‘ஒருஜாதி’ எதிர்ப்பாக அது மாறி விட்டதே!

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, யாரையும் அவருடைய பிறப்பை வைத்து
இன்ன ஜாதி என்று அடையாளம் காணும் வழக்கத்தை ஒழிப்பதே.

ஜாதிகள் ஓட்டு வங்கிகளாக இருக்கும் வரை எந்த அரசியல் கட்சியும்
இதற்கு உடன்படப் போவதில்லை. நம் அடுத்த தலைமுறை,
அதற்கும் அடுத்த தலைமுறை என்ன செய்யப் போகிறார்களோ!
பார்க்க நாம் இருக்கப் போவதில்லை.
தமிழ்நாடு சமத்துவ பூமி, சாமி

( நன்றி -வானவில் க.ரவி )

………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to ” ஜாதிகள் இல்லையடி பாப்பா -“…நிஜமாகவா … ???

 1. புதியவன் சொல்கிறார்:

  //அந்த ஜாதியிலோ, அல்லது அதைவிட மேம்பட்ட ஜாதியிலோ பெண்
  பார்க்க வேண்டுமாம். அவருடைய ஜாதிக்குக் கீழ்ப்பட்ட ஜாதியில்
  பெண்ணெடுக்க மாட்டாராம்// – இதைப்பற்றி எழுதுவது சுலபம். ஆனால் சமூகக் கட்டமைப்பில், உறவினர்களுடனான உறவில் இது சுலபமாக இருக்காது. இதுதான் பலருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. (நான் உள்பட)

  //பார்ப்பன ஜாதியாருள்ளே புலால் உண்ணுதலும், கள் அருந்துதலும் பரவி விட்டன.// – என்ன இதனை நாகரீகமாக எழுதத் தெரியவில்லையே உங்களுக்கு. இப்போல்லாம் eggetarian, social drinking என்று பீத்தலாகத்தான் சொல்லிக்கணும். நான் ஒரு குஜராத்தியுடன் (அவன் ஸ்வாமி நாராயணன் க்ரூப். அவங்க ஆசார வைணவர்கள்) பஹ்ரைனில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு வெஜ்/நான் வெஜ் உணவகத்துக்குச் செல்லவேண்டியிருந்தது (ஒரு கும்பலாக). நான் எதுவும் சாப்பிடவில்லை. அங்கிருக்கும் ஜூஸ் முதல்கொண்டு சாப்பிடமாட்டேன். அவனோ, சப்பாத்தியும், சிக்கன் குருமாவும் ஆர்டர் செய்து, அந்தச் சிக்கனையெல்லாம் வெளியில் வைத்துவிட்டான், அப்போ இது வெஜிடேரியந்தானே என்று என்னிடம் சொன்னான். சாராயம் குடிப்பது, சிகரெட், நான் வெஜ் என்பதெல்லாம் மேல் தட்டு நாகரீக வழக்கம் என்றாகி பலப் பல வருடங்களாகிவிட்டன. இதில் பிராமணர், அப்பிராமணர் என்ற வித்தியாசம் பார்ப்பதில் அர்த்தம் இருக்கிறதா?

  //மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் பிரதிநிதிகள் சிலரே ஒரு ஜாதியை
  இழித்தும், பழித்தும் பேசுகிறார்கள்.// – இப்படிப் பேசும் கழுதைகளை சட்டம் தண்டிப்பதில்லை. ஆனால் தவறுதலாக, தலைமைப் பண்பு என்பதும் அனுபவம் என்பதும் இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாக, லலித் மோடி, நரேந்திரமோடி என்று பலரையும் சிறுமைப்படுத்துவதாக நினைத்து, ‘மோடி’ என்ற பெயர் உள்ளவர்களைப் பற்றித் தவறாகப் பேசி, 2 ஆண்டு தண்டனை வாங்கி அவமானப்பட்டிருக்கிறார் ராகுல் ராஜீவ் ஃபெரோஸ்.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன்,

  // 2 ஆண்டு தண்டனை வாங்கி அவமானப்பட்டிருக்கிறார் ராகுல் ராஜீவ் ஃபெரோஸ். //

  உங்கள் கோணம் தவறானது. ராகுல் மீதான வெறுப்பு உங்களை
  இப்படி பேச வைக்கிறது. நடுநிலையாக பார்ப்பவர்கள் இப்படி
  பார்க்க மாட்டார்கள். அவர் அடானி குறித்து கடுமையாகப் பேசியதால்,
  அநியாயமாக தண்டிக்கப்படுகிறார் என்று தான் பொதுவாக
  இருப்பவர்கள் நினைப்பார்கள்.

  இதை அடுத்து வரும் நாட்களில், மாதங்களில்
  பாஜக-வினர் புரிந்து கொள்வர்.

  வெகு அவசரமாக ராகுலை தண்டித்து, அதன் மூலம்
  அவரை நாடு முழுவதும் பேசப்படும் ஒரு ஹீரோ-வாக்கி
  விட்டது எவ்வளவு பெரிய தவறு என்பது விரைவில்
  பாஜக-வுக்கு புரிய வரும்.

  “ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு..” என்பதற்கான
  மிகச்சிறந்த உதாரணம் இது.

  இது பிரிந்து கிடந்த, விலகியிருந்த பலரை ஒன்றுபடுத்தும்…

  பொறுத்திருந்து பாருங்கள்….
  ஆனால் நீங்கள் உட்பட, பாஜக-வினர் யாரும் இந்த தவறை
  ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

  எடப்பாடியாரைப்பற்றி நான் சொன்னதை நீங்கள் இப்போது
  ஒப்புக்கொள்வீர்கள் (மனதுக்குள்)…. !!!

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   /அதன் மூலம் அவரை நாடு முழுவதும் பேசப்படும் ஒரு ஹீரோ-வாக்கி விட்டது எவ்வளவு பெரிய தவறு என்பது// – நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்குத் தோன்றுகிறது. ராகுல் வெளியில் இருப்பதுதான் பாஜகவிற்கு நல்லது. பாஜகவின் திட்டம் எதிர்கட்சிகள் ஒன்று சேராமல் மூன்று பிரிவாக இருக்கவேண்டும் என்பது. அப்போது சிறுபான்மையினர் வாக்கு ஒரு கூட்டணிக்குப் போகும், பாஜகவின் வெற்றி நிச்சயமாகும். அதனால் ஒருவேளை பாஜக, ராகுலின் நிலையை ஸ்டெரெந்தென் பண்ணப் பார்க்கிறதோ என்னவோ. (ராகுலின் மீதான வெறுப்புக்கு ஒரு காரணம், தேசத்தின் மீதான அபிமானம் இல்லாமல், இந்திய தேசத்தை இழிவுபடுத்தும் போக்கு. இதற்குக் காரணம் அவர் பாதி இத்தாலியர் என்பதால். இதைப்பற்றி ஒரு காணொளி உண்டு..ராகுலின் அந்த மீட்டிங்கிலேயே சீனியர் பத்திரிகையாளர், இந்திரா எப்படி தேசத்தைப் பற்றி வெளியில் பேசுவார், ராகுல் எப்படி நடந்துகொள்கிறார் என்று வகுப்பெடுத்தது பற்றி)

   ராகுல், பாஜக பற்றி விழுந்து விழுந்து கவலைப்படும் நாம், திமுக, அதிமுக கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்குடன் ஓபிஎஸ்ஸுக்கு இன்னும் சட்டமன்றத்தில் முக்கியத்துவம், அதிமுக சார்பில் அவரைப் பேசச்சொல்வது என்று தொடர்ந்து எடப்பாடியை டென்ஷனில் வைத்திருக்கிறதே.

   //எடப்பாடியைப்பற்றி நான் சொன்னதை// – இதை இரண்டு நிலைகளில் இருந்து பார்க்கலாம். நான் எப்போதும் பார்ப்பது அதிமுக மற்றும் எடப்பாடியின் நிலையில் இருந்துதான். பாஜக பக்கம் இருந்து பார்த்தால், எடப்பாடியுடன் கூட்டணி சரிப்பட்டு வரும் என்று தோன்றவில்லை, அதிமுக ஒன்றுபட்டாலொழிய. 2-3 உருப்படியான தொகுதிகள், 4 வெற்றுத் தொகுதிகள், அதனால் அதிமுகவிற்கு 5-8 சதம் கூடுதல் வாக்குகள், ஓபிஎஸ்/தினகரன் வாக்குகள் போகும் என்ற நிலை, திமுக கூட்டணிக்கே மிகவும் சாதகம்.

 3. ஆதிரையன் சொல்கிறார்:

  ராகுல் ஹீரோவாகி வருகிறார் என்பது நகைப்புக்குரியது.
  youtube channel பேட்டிகளில் வரும் பின்னூட்ட்டங்களை நீங்கள் பாருங்கள்….
  அவரை ஹீரோ வாக கொண்டாடுபவர்கள் பேர்களின் பின்புலம் உள்ள மத அரசியல் தான் வெளிப்படுகிறது.
  மேலும் எல்லோருக்கும் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து விழிப்புணர்வு உள்ளது.நிச்சயம் அவர் வழக்கம் போல நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்காமலா இருக்க போகிறார். மேலும் சாவர்க்கர் குறித்து மறுபடியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.நமது மாநிலத்தில் வேண்டுமானால் , நமது தரமான உள்ளூர் மீடியாக்கள் செய்தியை திரிக்கலாம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s