மாயவரத்தில் வங்காள விரிகுடா கடற்கரை ….15,000 வருடத்து சுவாரஸ்யங்கள் ….!!!

…………………………………………

……………………

நம்பவும் முடியவில்லை – நம்பாமல் இருக்கவும் முடியவில்லை….!!!

பண்டைத் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக, பூம்புகார்
துறைமுக நகரத்தை பெருமையோடு குறிப்பிடும் நமது இலக்கியங்கள்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை போன்ற சங்க
இலக்கியங்களில் குறிப்பிடப்படும் தொன்மையான வணிக நகரம்
பூம்புகார். “சோழ மன்னர்களால் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்தத் துறைமுக நகரம், இன்றிலிருந்து சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கிறது. இதற்குக்
கடல் சீற்றமோ, சுனாமியோ காரணமாக இருக்கலாம்” என
தொல்லியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். 1980 மற்றும் 90களில்
பூம்புகார் பகுதி கடலுக்கு அடியில் சிலர் செய்த ஆய்வுகளில்,
அங்கு மனிதக் கட்டுமானங்கள் இருப்பதை உறுதி செய்தன.

பூம்புகார்ப் பகுதியில் அகழாய்வுகள் செய்வதற்கு திட்டமிடல்கள்
நடக்கின்ற இந்த நேரத்தில், `பூம்புகார் துறைமுக நகரம்
15,000 ஆண்டுகள் பழைமையானது’ என்று புதிதாக ஒரு அறிவிப்பு
வருகிறது….

“தற்போதைய காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து கடலுக்குள்
சுமார் 30 முதல் 40 கி.மீ தூரத்தில் பூம்புகார் நகரம் புதையுண்டு
கிடக்கிறது. இந்தத் துறைமுகம் சுமார் 11 கி.மீ நீளத்துக்கு
இருந்திருக்கிறது. ஒரே நேரத்தில் 70, 80 கப்பல்கள் வந்து நிற்கும்
வசதிகள் இருந்துள்ளன. கப்பல்கள் எளிதாகத் திரும்புவதற்கு ஏற்றபடி கால்வாய்களும் இருந்தன” என்று சொல்கிறார் –

  • இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வுத் துறை பேராசிரியரும்
    பூம்புகார் ஆய்வுத்திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளருமான
    சோம.இராமசாமி அவர்கள்.

“பூம்புகாரைப் பற்றி புதிர்கள் நிறைய இருக்கின்றன. பூம்புகார்
நகரம் முதன்முதலாக நிர்மாணிக்கப்பட்ட இடம் மற்றும் காலம் எது? பின்னாளில் அது இடம் மாறியதா? மாறியிருந்தால் அதற்கான
இடங்கள் மற்றும் கால வரையறைகள் என்ன?
பூம்புகார் எதனால் அழிந்தது? இப்படி இன்னமும் பல கேள்விகளுக்கு
இதுவரை விடை காணப்படாமலே இருக்கிறது.

இதனால் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
எங்களிடம் பூம்புகார் நகரைப் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளச் சொன்னார்கள். மூன்று பேராசிரியர்கள் தலைமையில்,
ஆராய்ச்சி மாணவர்கள், கடல் கீழ் ஒலி சர்வே செய்வதற்கு
சென்னையைச் சேர்ந்த நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓஷன்
டெக்னாலஜியைச் சேர்ந்த குழுவினருடன் இணைந்து இரண்டரை
வருடங் களுக்கு மேலாக ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

செயற்கைக்கோள் படங்கள் மூலமாகவும், கடல் கீழ் பகுதிகளை ‘GEBCO’ எனப்படும் பல்துறை சார் கடல் கீழ் தரைமட்ட அளவு மற்றும் ‘MBES’ எனப்படும் ஒலிசார் கடல் கீழ் தரை மட்ட அளவீடு மூலமாகவும்
ஆராய்ந்தோம். இதில் தற்காலப் பூம்புகாரில் இருந்து கடலுக்குள்
சுமார் 30-40 கி.மீ தூரத்தில், 50-100 மீட்டர் ஆழத்தில், சுமார்
250 சதுர கி.மீபரப்பில் (தற்போதைய கோவை மாநகருக்கு
இணையான அளவுடைய நகரம்) ஒரு துறைமுகம் தென்பட்டது.

அந்தத் துறைமுகத்திற்குப் பக்கத்திலே 60-70 கப்பல்கள் நிறுத்தக்கூடிய
கப்பல் துறை காணப்பட்டது. துறைமுகத்திற்கும் கப்பல் துறைக்கும்
வடக்கே 10 கி.மீ தூரத்தில் ஒரு மணல்மேடு தென்பட்டது.
அதாவது நதிகள், கழிமுகங்கள் என கடந்த கால கடற்கரை தென்பட்டது.
மணல் மேடுகளின் மேலே கிட்டத்தட்ட 7-8 கி.மீ நீளத்திற்கு
காம்பவுண்ட் சுவர் போல உள்ள கட்டுமானங்கள், குடியிருப்புகள்
தென்பட்டன. மண்மூடிய குடியிருப்புகள் தென்பட்டன. இவை
எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் துறைமுகத்திற்கு வடக்கே
5-6 கி.மீ தூரத்தில் ஒரு கலங்கரை விளக்கமும், அந்தக் கலங்கரை விளக்கத்திற்குச் செல்லக்கூடிய பாலம், தூண்கள், இவையெல்லாமும் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றை ஐ.பி.சி.சி என்று சொல்லக்கூடிய உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கான அமைப்பினுடைய (Intergovernmental
Panel On Climate Change), உலக கடல் மட்ட அளவீடுகளை
வைத்து இணைத்துப் பார்க்கும்போது இந்தத் துறைமுகமும்,
குடியிருப்புகளும், கலங்கரை விளக்கமும் சுமார் 15,000 வருடம் ஆகியிருக்கக்கூடும் என்ற கணிப்பைக் கொடுத்தது.

அதையடுத்து, எவ்வாறு பூம்புகார் நகரம் அழிந்தது, எவ்வாறு
கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி வந்தது எனக் கணிக்க
முயலும்போது கடலுக்குக் கீழே மூன்று மிகப்பெரிய டெல்டாக்கள்
தென்பட்டன.

தற்கால பூம்புகாருக்கும் கடலுக்குள் பூம்புகார்த் துறைமுகம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கும் இடையே காவிரி கரைபுரண்டு ஓடியிருக்கிறது. அது கடலுக்குக் கீழே மிகப்பெரிய பள்ளத் தாக்குகளை உருவாக்கியிருக்கிறது. நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. வெள்ளப் படுகைகள் தென்படுகின்றன.

இது முதற்கட்ட ஆராய்ச்சிதான். அடுத்தகட்டமாக இங்கு 100-க்கும்
மேற்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகள் போட்டு, அதிலிருந்து மாதிரிகள்
எடுத்து கடந்த 20,000 ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளை வைத்து,
பூம்புகார் நகரம் எதனால் அழிந்திருக்கும் என்பதைக் கண்டு
பிடிப்பதுதான்” என்றார் அவர்.

இந்த 15,000 ஆண்டுக் காலக்கெடுவையே பலர் இப்போது கேள்வி
எழுப்பிப் புறந்தள்ளுகிறார்கள். வரலாற்றுக்கு முந்தைய
காலகட்டமான இன்றைக்கு பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசியா முழுக்க வேட்டையாடி வாழ்க்கை நடத்தும் மனிதர்களே இருந்தார்கள். அவர்கள் கற்களால் செய்த ஆயுதங்களைப் பயன்படுத்தி வேட்டையாடியதைத் தவிர, வேறு எந்த நாகரிக முன்னேற்றமும்
அவர்களிடம் அப்போது கிடையாது. அப்போது மனிதர்கள்
கால்நடைகளை வீடுகளில் வைத்து வளர்க்கவே பழகியிருக்கவில்லை. அப்படிப்பட்ட மனிதர்களுக்குக் கப்பல்கள் கட்டவோ, துறைமுகங்கள் உருவாக்கவோ தேவை என்ன இருந்திருக்க முடியும்? அதற்கான
கருவிகள் அவர்களிடம் இருந்திருக்காதே? இப்படியெல்லாம்
தொல்லியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பு கின்றனர்.

இதுபற்றி சோம.இராமசாமி கூறுகிறார்….

“நாகரிகத்தைப் பற்றியோ, மனிதன் வாழ்ந்தது பற்றியோ
எந்தவிதமான தடயங்களும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
கடலுக்குள் 40 கி.மீ தூரத்தில் 50 – 100 மீட்டர் ஆழத்தில் ஒரு துறைமுகம்,
கப்பல் துறைகள், கலங்கரை விளக்கம், குடியிருப்புகள் தெரிவதே
மிகப்பெரிய கண்டுபிடிப்பு. இதோடுதான் எங்களுடைய ஆய்வு
நிற்கிறது. நாகரிகத்தைப் பற்றிப் பேசக்கூடிய அளவுக்கு இன்னும்
நாங்கள் பயணிக்கவில்லை. கற்காலத்தைப் பற்றிப் பேசும்போதும்,
பூம்புகாரில் கட்டுமானத்திற்கான மணற்பாறைகளைக் கல் உளிகளை
வைத்து வெட்டியிருப்பார்களா அல்லது எந்த மாதிரியான சாதனங்களை அவர்கள் உபயோகப்படுத்தியிருப்பார்கள் என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விகளாக எங்கள் முன்னும் நிற்கின்றன.

பதினைந்தாயிரம் வருடங்களுக்கு முன்பு இங்கு ஒரு துறைமுகம் இருந்திருந்தால், இதற்கு இணையான துறைமுகங்கள் இருந்திருந்தால்
தான் வாணிபம் செய்திருக்க முடியும். ஆனால், பூம்புகார் ஒரு பெரிய
மீன்பிடி துறைமுகமாகக் கூட இருந்திருக்கலாம். ஒன்று மட்டும்
நிச்சயமாகச் சொல்ல முடிகிறது, பிற்காலத்திலே உலகத்திலே
காணப்படுகின்ற எட்டாயிரம் பழைமையான துறைமுகங்கள் எல்லாம் செங்கல், காரை வைத்து செவ்வகமாகவும், சர்க்குலர், செமி சர்க்குலர் வடிவத்திலும் கட்டப்பட்டவை.

ஆனால், தற்போது கண்டறியப்பட்ட பூம்புகார் துறைமுகத்தில்
ஆதிமனிதன் காலத்தில் எப்படிப்பட்ட உபகரணங்கள் இருந்திருக்குமோ,
அப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் இதற்கு சம வயதுடைய துறைமுகங்கள் எங்கிருக்கிறது என்பதை இனிமேல்தான் பார்க்க
வேண்டும். எங்களுடைய ஆய்வில் கிடைத்தவற்றை மையக்கருத்தாக
வைத்து, மற்ற துறைகளைச் சார்ந்தவர்கள் ஆராய்ச்சிகளைத்
தொடங்கு வார்கள். அப்போது இந்த கேள்விக்கு பதில் கிடைக்கலாம்”
என்கிறார் அவர்.

பூம்புகார் என்றாலே கண்ணகியும் கோவலனும், சிலப்பதிகாரமும் தான்
நமக்கு நினைவுக்கு வரும். காப்பியமும், வரலாறும் கலந்ததாகத்தான் பூம்புகாரை நாம் அறிவோம். இவை உண்மை என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைத்துள்ளனவா?

“15,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பூம்புகார் துறைமுக நகரத்தில்
இருந்து, தற்கால காவிரிப் பூம்பட்டினத்தை நோக்கிப் பயணிக்கையில் அப்படியான சில தடயங்கள் எங்களுக்குக் கிடைக்கலாம்.
குறிப்பாக 6,000 ஆண்டுகளுக்கு முன்பு மாயவரத்தில் கடல்
இருந்ததையும், பின்னர் பின்வாங்கி 5,000 ஆண்டுகளுக்கு முன்பு
சீர்காழியிலும், 3,000 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கூரிலும் கடற்கரை மணல் மேடுகளை உருவாக்கியிருக்கிறது இயற்கை. இறுதியாகத்தான்
தற்காலக் காவிரிப்பூம்பட்டினத்தை 2,500 ஆண்டுக்கு முந்தைய
காலகட்டத்தில் அடைந்திருக்கிறது. சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, மாயவரத்தில் இருந்து வேதாரண்யம் வரை 7 கடற்கரைகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். இதெல்லாம் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள். இவற்றை இன்னும் துல்லியமாக அடுத்த கட்டத்தில் ஆய்வு செய்யவிருக்கிறோம்” என்கிறார் அவர்.

கடலுக்குள்ளேயே இறங்காமல் ஒலி அலைகளை வைத்தே இந்த
ஆய்வுகளைச் செய்திருக்கிறீர்கள்; இந்த ஆய்வின் உண்மைத்தன்மையும் துல்லியமும் எந்த அளவிற்கு சரியாக இருக்கும்..? என்கிற கேள்விக்கும்
பதில் வைத்திருக்கிறார் சோம.இராமசாமி.

“ஒலி சார் கடல் கீழ் தரைமட்ட அளவீடு என்பது நிரூபிக்கப்பட்ட
அறிவியல் உண்மை. இதன்மூலம் செ.மீ உயர அளவுகளில்கூட
துல்லியமாக நீங்கள் கடல் மட்டத்தை அளக்க முடியும். உலகளவில்
ஒலி சார் கடல் மட்ட அளவீடு மிக அதிகமாக நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. ஆனால், நாங்கள் இதில் புதுவிதமாக,
ஒலி அலைகளில் கிடைத்த சிக்னல்களை வைத்து அதைப் படமாக மாற்றியிருக்கிறோம்” என்றார்.

பொதுவாகவே தென்னிந்திய வரலாறு பழங்காலத்தியது என்று
நிரூபிக்க முற்படும் போதெல்லாம் வடக்கே இருந்து தடைகள்தான்
வரும். கீழடிக்கும், ஆதிச்சநல்லூருக்குமே இது நிகழ்ந்தது.
அதேபோலத்தான் பூம்புகார், மாமல்லபுரம், கொற்கை போன்ற கடலாய்வுகளுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

அப்படியிருக்க தங்களின் ஆய்வுகளுக்கு உரிய மரியாதை
கிடைக்குமா? 15,000 ஆண்டுகள் பழைமையானது என்று முதலில்
இந்திய அரசாங்கமே ஏற்றுக்கொள்ளுமா? என்றால், “அறிவியல்
ரீதியாக ஒரு விஷயத்தை உறுதியிட்டுக் கூறிவிட்டால், அதை
நம்பத்தான் வேண்டும். நாங்கள் பார்த்தவற்றை, ஆராய்ச்சி செய்து
கண்டதை எல்லோருக்கும் சொல்கின்றோம். அதற்குப் பாராட்டுகளும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கேள்விகளும் என அனைத்தும்
வரும். அடுத்த கட்ட ஆய்வுகளும் காலமும் அதற்கான பதிலைக்
கொடுக்கும்” என்கிறார் அவர்.

ஒலி சார் கடல் மட்ட அளவீட்டு மூலம் இவரது குழுவினர் எடுத்த
படங்களில் காணப்படும் துறைமுகம் போன்ற தோற்றம், இயற்கையாக உருவான ஏதோ ஒரு அமைப்பாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பூம்புகார் குறித்த முடிவில்லாத சர்ச்சைகளில்
இன்னும் ஒரு திரியைக் கிள்ளிப் போட்டிருக்கிறது இந்த ஆய்வு.
( நன்றி- விகடன் மற்றும் இதர செய்தித் தளங்கள்…)

பூம்புகார் நகரம் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது:
பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு –
……………

.
……………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s