இதில் நமக்கேதும் பொறுப்பு இல்லையென்று விட்டு விட முடியுமா … ???

( தென்னை மரத்தை விட உயரமான மணல் குவியல்….!!! )

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைமை தான்….

எதிர்க்கட்சியாக இருக்கும்போது எம்பி எம்பி குதிப்பார்கள்… ” கொள்ளையோ கொள்ளை … மணல் கொள்ளை” ” இயற்கை வளத்தை அழிக்கிறார்கள் ” என்று கூப்பாடு போடுவார்கள். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்று எல்லா நாடகங்களும் நடக்கும்.

ஆனால், அவர்களே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டால், ஆறே மாதங்களுக்குள்ளாக அவர்களும் அதே கொள்ளையை துவங்கி விடுவார்கள்…. என்ன வித்தியாசம்…? கொள்ளைக்காரர்கள் மாறுவார்கள் – அவ்வளவே….

காசு வாங்கிக்கொண்டு ஓட்டை விற்கும் மக்கள் இருக்கும்வரை இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏது…. விமோசனம் தான் ஏது…? எந்த நீதிமன்றம் உத்திரவு போட்டாலும் எல்லாம் காகிதத்தோடு சரி …. நிறைவேற்ற யார் இருக்கிறார்கள்…?

கீழே -நீதியரசி பிரபா ஸ்ரீதேவன் கூறியுள்ள ஒரு அனுபவம் –

………………………..

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சின்னாறு அணைக்கும்,
மாரண்டப்பள்ளி கிராமத்துக்கும் இடையில் உள்ள விவசாயிகள்
தாக்கல் செய்த பொதுநல வழக்கு அது. அங்கே நடைபெறும்
மணல் குவாரி வேலைகளால் தங்களுடைய விவசாயமும்
குடிநீர் நிலைகளும் பாதிக்கப்படுவதாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் என்னுடன் அமர்வில் இருந்தவர் நீதிபதி
ஜனார்த்தன ராஜா.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பரம கல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் முனைவர் எம். அருணாசலத்திடம்
மணல் குவாரி பற்றி, அதன் பாதிப்புகள் பற்றிய ரிப்போர்ட் கொடுக்கும்படி கேட்டோம். அதன்படி அவர் தயாரித்தளித்த அறிக்கை, மணல் குவாரி
குறித்த எந்த வழக்குக்கும் ரெஃபரென்ஸாக அமையும்படி அத்தனை விவரங்களைத் தாங்கியிருந்தது.

வழக்கு நடந்த அந்தக் காலகட்டத்தில், மணல் குவாரி நடவடிக்கைகளை நிறுத்தினால், அந்த மணல் மீண்டும் தன் பழைய வளத்தைப் பெற
குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் முனை வர் அருணாசலம். மணல் குவாரி
முறைகேட்டுக்கு அப்படியொரு நீள் பின் விளைவு இருப்பது தெரிந்தது.
இந்த ரிப்போர்ட்டை நாங்கள் இன்னும் சில வழக்குகளுக்கும்
தொடர்புபடுத்திப் பார்த்தோம்.

தமிழ்நாடு நீர் நிலைகள் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை
அகற்றுதல் சட்டம் 2007 (Tamil Nadu Protection of Tanks and Eviction of Encroachment Act, 2007) என்றொரு சட்டம்
நம் நாட்டுக்கு வந்தது. ஆனால், அது அரசமைப்பு சட்டத்துக்குப்
புறம்பானது என்றொரு வழக்கு தொடரப்பட்டது. அதில் வாதாடிய அரசு வழக்கறிஞர், நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டியது ஏன் அவ்வளவு
முக் கியம் என தன் தரப்பை முன்வைத்தார். இந்த வழக்கிலும் எங்களுக்கு முனைவர் அருணாசலத்தின் அறிக்கையே ரெஃபரென்ஸாக இருந்தது.

முனைவர் அருணாசலத்தின் அறிக்கையில் ‘வெட் லேண்டு’
(Wet Land) எனப்படும் நீர்த்தடங்கள் பற்றி குறிப்பிட்டிருப்பார்.
அப்படி அவர் குறிப்பிட்டது வெறும் ஏரி, குளங்களை மட்டுமல்ல… நீர் ஊறியிருக்கிற, அதாவது ஆறடியிலேயே நீர் வரும் இடங்கள் கூட நீர்த்தடத்தில்தான் அடங்கும். 1987-ல் ப்ருன்ட்லேண்ட் என்பவர்
பருவநிலை மாற்றம், சூழலியல் குறித்தெல்லாம் Brundtland
Report என்ற பெயரில் ஓர் அறிக்கை சமர்ப்பித் திருந்தார். அதில்
அவர் நிலையான அபி விருத்தி (Sustainable Development)
குறித்தும் பேசியிருக்கிறார்.

அதென்ன நிலையான அபிவிருத்தி?

நான், இன்றைய எனது தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வளர்ச்சி
என்ற பெயரில் சில செயல்களைச் செய்கிறேன்… அந்தச் செயல்கள், எதிர்காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் செய்யும் படி இருக்கக்கூடாது.

அதாவது என்னுடைய இன்றைய செயல்கள் வருங்கால சந்ததியினரின் கைகளைக் கட்டிப் போட்டதுபோல இருக்கக் கூடாது. இன்று இந்த
நிலத்தில், இங்கிருக்கும் நீரை நான் பயன்படுத்துவதால் வருங்கால
சந்ததியினர் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது, வளர்ச்சி
என்ற பெயரில் என்ன வேண்டு மானாலும் செய்யக்கூடாது.
நிகழ்காலத்தில் இருக்கும் நாம் எல்லோரும் அறங்காவலர்கள் போன்றவர்கள்தான். எல்லாவற்றையும் வீணடித்துவிட்டுப்
போய்விட முடியாது.

நீர்த்தடங்கள் குறித்து `ராம்சர் ஒப்பந்தம்’ (The Ramsar Convention)
என ஒன்று நடந்தது. ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்கு
நிலைப் பயன்பாடு தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தம் இது.
1971-ம் வருடம் இந்த ஒப்பந்தம் இரானில் உள்ள ராம்சர் என்னும் நகரில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. நீர்த் தடங்களின் பாதுகாப்பு
குறித்து பல வருடங்களாகவே உலகம் முழுவதும் பேசப்பட்டு
வந்திருக்கிறது. அது தொடர்பான மாநாடு களில் இந்தியா
பங்கேற்கிறது, கையெழுத் திடுகிறது. நீர்நிலைகளைப் பாதுகாப்பது
என்பது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகவும் பார்க்கப்பட வேண்டும்.

நீர்த்தடங்கள் என்பவை நம் சிறு நீரகங்கள் போன்றவை.
சிறு நீரகங்கள் நம் ரத்தத்தைச் சுத்திகரிக்கின்றன. கழிவுகளை
வெளியே தள்ளி விட்டு, சுத்திகரிக்கப் பட்ட ரத்தத்தை மீண்டும்
நம் உடலுக்குள் அனுப்புகின்றன. இன்றைய சூழலில்
இளவயதினருக்குக்கூட சிறுநீரகங்கள் செயலிழந்து போவதைப்
பார்க்கிறோம். சிறுநீரகங்கள் செயலிழந்தோருக்கு டயாலிசிஸ்
அல்லது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைதான் தீர்வுகள். அவைதான் சம்பந்தப்பட்ட நபரின் வாழ்நாளை ஓரளவுக்கு நீட்டிக்கும்.

நீர்த்தடங்கள் என்பவை நம் உலகின் சிறு நீரகங்கள் போன்றவை.
அவற்றை முறையாகப் பராமரிக்காமல் செயலிழக்கச்
செய்துவிட்டோ மானால், அவற்றுக்கு டயாலிசிஸோ, கிட்னி டிரான்ஸ்பிளான்ட்டேஷனோ செய்ய முடி யாது.

இந்த உண்மையைத்தான் மேற்குறிப்பிட்ட இரு வழக்குகளும்
எங்களுக்கு உணர்த்தின. முதல் வழக்கில், அடுத்த ஐந்து ஆண்டு களுக்கு அங்கிருந்து மணல் எடுக்கக்கூடாது என தீர்ப்பளித்தோம். தமிழ்நாடு
நீர் நிலைகள் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்
சட்டம் 2007, அரசமைப்புக்கு எதிரானது என தொடரப்பட்ட வழக்கில்,
அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை சரியாகப் பின்பற்ற
வேண்டும் என வழிகாட்டி னோம். சென்னை உயர் நீதிமன்றத்தில்
நீர்த்தடங்கள் குறித்து பேசப்பட்ட முதல் வழக்கு இது என்பது
குறிப்பிடத்தக்கது.

சென்னையைச் சுற்றி ஏரி என முடியும் பகுதிகளின் பட்டியலை
யோசியுங்கள்… அவையெல்லாம் ஒரு காலத்தில் ஏரிகளாக இருந்தவை.
இன்று அங்கெல்லாம் 15, 20 அடுக்குமாடிக் குடியிருப்புகள்
பெருகிவிட்டன. நீச்சல் குள வசதியோடு வீடு கட்டித் தருகிறோம்
என விளம்பரப்படுத்துகிறார்கள். நாமும் ஆர்வத்துடன் வாங்குகிறோம். ஏரிகளைப் பாழாக்கி, புல்டோசர் கொண்டு சமன்படுத்தி, கட்டடங்கள் எழுப்பப்படுகின்றன. அங்கு வசித்தபடியே மழை பெய்யும்போது
இடங்கள் மூழ்குவதாகவும் குறை சொல்கிறோம். இதை எப்படிப்
பார்ப்பது… பேராசையாகவா?

இயற்கையைச் சீண்டினால் அது சும்மா இருக்குமா? நில நடுக்கம்,
சுனாமி என்றெல்லாம் அது தன் சீற்றத்தை வெளிப்படுத்தவே செய்யும். இயற்கையை அந்த அளவுக்கு களங்கப்படுத்துகிறோம். நீர்நிலைகளை கட்டடங்களாக்குகிறோம். புகையால் சுற்றுச் சூழலை மாசு
படுத்துகிறோம். தொழிற்சாலைக் கழிவுகளை நீர்நிலைகளில்
கலக்கிறோம். இவற்றை எல்லாம் இன்றே நிறுத்தினால்கூட மண்,
தன் வளத்தைத் திரும்பப் பெற ஐந்து வருடங்களாகும் என்பதுதான்
முனைவர் கொடுத்த ரிப்போர்ட்.

மண் சுரண்டலும் நின்றபாடாக இல்லை… இயற்கையைச்
சீரழிப்பதையும் நாம் நிறுத்தவில்லை. உங்களில் யாருக்காவது
இது குறித்து யோசிக்கத் தோன்றினால் அதுவே எங்கள் தீர்ப்புக்கான வெற்றியாக இருக்கும்….
… ‘இயற்கை வளங்களுக்கு நாம் அறங்காவலர்களே,
உரிமையாளர்கள் அல்லர்!’

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s