காட்டில் ஒரு மான் – அம்பை ….

……………………………………..

……………………………………..

காட்டில் ஒரு மான் – அம்பை’யின் அழகிய சிறுகதை ….

……………………………………

அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள்.
தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை
கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள்
போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு,
முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். சில சமயம்,
இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உண்டாக்கி விடுவாள்.
அசுரர்கள், கடவுளர்கள் கூட அவள் கதைகளில் மாறி விடுவார்கள். மந்தரையைப்பற்றி உருக்கமாக சொல்வாள். சூர்ப்பனகை, தாடகை
எல்லோரும் அரக்கிகளாக இல்லாமல் உணர்ச்சிகளும், உத்வேகங்களும் கொண்டவர்களாக உருமாறுவார்கள்.

காப்பியங்களின் பக்கங்களில் ஒட்டிக்கொண்டவர்களை வெளியே கொண்டுவருவாள். சிறகொடிந்த பறவைகளை வருடும் இதத்தோடு
அவர்களை வரைவாள் வார்த்தைகளில். இரவு நேரமா, அந்த பழைய வீட்டுக்கூடமா, கூடப்படுத்த சித்தி மாமா குழந்தைகளின் நெருக்கமா என்னவென்று தெரியவில்லை. அந்த கதைகள் வண்டின் ரீங்காரமாய்
மனதில் ஒரு மூலையில் ஒலியுடன் சுழன்றவாறிருக்கின்றன.

தங்கம் அத்தை அந்த பழைய தூண்களும் நடுக்கூடமும் உள்ள
வீட்டில் பல பிம்பங்களில் தெரிகிறாள். பெரிய மரக்கதவின் மேல்
சாய்ந்தவாறு. அகல் விளக்கை புடவை தலைப்பால் மறைத்தபடி ஏந்தி
வந்து புறையில் வைத்தபடி. தன் கணவன் ஏகாம்பரத்துக்குச்
சோறிட்டவாறு. கிணற்றுச் சுவரில் ஒரு காலை வைத்து கயிற்றை
இழுத்துக் கொண்டு. செடிகளுக்கு உரமிட்டவாறு.

தங்கம் அத்தை அழகுக் கறுப்பு. நீவி விட்டாற்போல் ஒரு சுருக்கமும்
இல்லாத முகம்., முடியில் நிறைய வெள்ளி. அத்தை வீட்டில் காலால்
அழுத்தி இயக்கும் அந்தக் கால ஹார்மோனியம் உண்டு.
அத்தைதான் வாசிப்பாள். தேவாரப்பாடல்களிலிருந்து வதனமே சந்திரபிம்பமோ, வண்ணான் வந்தானே வரை மெல்லப்பாடியவாறு
வாசிப்பாள். கறுப்பு அலகுகள் போல நீள விரல்கள் ஹார்மோனியக்கட்டைகளின் மேல் கறுத்தப்பட்டாம் பூச்சிகள்
மாதிரிப் பறக்கும்.

தங்கம் அத்தையைச்சுற்றி ஒரு மர்ம ஓடு இருந்தது. மற்றவர்கள் அவளைப்பார்க்கும் கனிவிலும், அவளைத் தடவித் தருவதிலும்,
ஈரம் கசியும் கண்களிலும் அனுதாபம் இருந்தது. ஏகாம்பர மாமாவுக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். அத்தையை அவர் பூ மாதிரி
அணுகுவார். அவர் அத்தையை டா போட்டு விளித்து யாரும்
கேட்டதில்லை. தங்கம்மா என்று கூப்பிடுவார். அப்படியும் அத்தை
ஒரு புகைத்திரைக்குப்பின் தூர நிற்பவள் போல் தென்பட்டாள்.
முத்து மாமாவின் பெண் வள்ளிதான் இந்த மர்மத்தை உடைத்தாள்.
அவள் கண்டுபிடித்தது புரிந்தும் புரியாமலும் இருந்தது. வள்ளியின்
அம்மாவின் கூற்றுப்படி அத்தை பூக்கவே இல்லையாம்.

‘அப்படான்னா ? ‘ என்று எங்களில் பலர் கேட்டோம்.

வள்ளி தாவணி போட்டவள். ‘அப்படான்னா அவங்க பெரியவளே
ஆகலை ‘ என்றாள்.

‘முடியெல்லாம் நெறய வெளுத்திருக்கே ? ‘

‘அது வேற ‘

அதன்பின் அத்தையின் உடம்பை உற்றுக் கவனித்தோம். ‘பூக்காத ‘ உடம்பு எப்படி இருக்கும் என்று ஆராய்ந்தோம். அவள் உடம்பு எவ்வகையில் பூரணமடையவில்லை என்று தெரியவில்லை. ஈரத்துணியுடன்
அத்தை குளித்துவிட்டு வரும்போது அவள் எல்லோரையும் போலத்தான் தெரிந்தாள். முடிச்சிட்ட சிவப்பு ரவிக்கையும், பச்சைப் புடவையும்,
முடிந்த தலையுமாய் அவள் நிற்கும்போது அவள் தோற்றம்
வித்தியாசமாய்த் தெரியவில்லை. பறவையின் உடைந்த சிறகு போல,
அது வெளிப்படையாக தெரியாத பொக்கையா என்று புரியவில்லை.

ஒரு மாலை பட்டுபோன பெரிய மரத்தைத் தோட்டத்தில்
வெட்டினார்கள். கோடாலியின் கடைசி வெட்டில் அது சரசரவென்று
இலைகளின் ஒலியோடு மளுக்கென்று சாய்ந்தது. குறுக்கே
வெட்டியபோது உள்ளே வெறும் ஓட்டை. வள்ளி இடுப்பில் இடித்து,
‘அதுதான் பொக்கை ‘ என்றாள். பிளவுபட்டு, தன்னை முழுவதுமாய் வெளிப்படுத்திக்கொண்டு, உள்ளே ஒன்றுமில்லாமல் வான் நோக்கிக்
கிடந்த மரத்துடன் அத்தையின் மினுக்கும் கரிய மேனியை ஒப்பிடமுடியவில்லை.

எந்த ரகசியத்தை அந்த மேனி ஒளித்திருந்தது ? அவள் உடம்பு
எவ்வகையில் வித்தியாசப்பட்டது ? வெய்யில் காலத்தில் அத்தை,
மத்தியான வேளைகளில் ரவிக்கையை கழற்றிவிட்டு, சாமான்கள்
வைக்கும் அறையில் படுப்பாள். அவளருகில் போய்ப்படுத்து,
ரவிக்கையின் இறுக்கத்தினின்றும் விடுபட்ட மார்பில் தலையை
வைத்து ஒண்டிக்கொள்ளும் போது அவள் மென்மையாக அணைத்துக்கொள்வாள். மார்பு, இடை, கரங்களில் பத்திரப்பட்டுப் போகும்போது எது பொக்கை என்று புரியவில்லை.

மிதமான சூட்டுடம்பு அவளுடையது. ரசங்கள் ஊறும் உடம்புடையவளாகப்பட்டாள். சாறு கனியும் பழத்தைப்போல்
ஒரு ஜீவ ஊற்று ஓடியது அவள் உடம்பில். அதன் உயிர்ப்பிக்கும்
துளிகள் எங்கள் மேனியில் பலமுறை சொட்டியது. தொடலில்,
வருடலில், எண்ணை தேய்க்கும் போது படும் அழுத்தத்தில்,
அவள் உடம்பிலிருந்து கரை புரண்டு வரும் ஆற்றைப்போல்
உயிர் வேகம் தாக்கியது. அவள் கைபட்டால் தான் மாட்டுக்குப்
பால் சுரந்தது. அவள் நட்ட விதைகள் முளைவிட்டன. அவளுடைய
கை ராசியானது என்பாள் அம்மா. தங்கச்சி பிறந்தபோது அத்தை
வந்திருந்தாள். ‘அக்கா, என் பக்கத்தில இருக்கா. என்னைத்
தொட்டுக்கிட்டே இரு. அப்பத்தான் எனக்கு வலி தெரியாது ‘
என்று அம்மா முனகினாள், அறையை விட்டு நாங்கள்
வெளியேற்றப்பட்டபோது. கதவருகே வந்து திரும்பிப் பார்த்தபோது
தங்கமத்தை அம்மாவின் உப்பிய வயிற்றை மெல்ல வருடியபடி
இருந்தாள்.

‘ஒன்றும் ஆகாது, பயப்படாதே ‘ என்று மெல்லக் கூறினாள்.

‘அடியக்கா, ஒனக்கொரு… ‘ என்று முடிக்காமல் விம்மினாள் அம்மா.

‘எனக்கென்ன ? ராசாத்தியாட்டம். என் வீடெல்லாம் புள்ளைங்க ‘
என்றாள் அத்தை. ஏகாம்பர மாமாவின் இளைய மனைவிக்கு
ஏழு குழந்தைகள்.

‘இப்படி ஒடம்பு திறக்காம… ‘ என்று மேலும் விசும்பினாள் அம்மா.

‘ஏன், என் ஒடம்புக்கு என்ன ? வேளாவேளைக்குப் பசிக்கலையா ? தூக்கமில்லையா ? எல்லா ஒடம்புக்கும் உள்ள சீரு இதுக்கும் இருக்கு.
அடிபட்டா வலிக்குது. ரத்தம் கட்டுது. புண்ணு பழுத்தா சீ வடியுது.
சோறு திண்ணா செரிக்குது. வேற என்ன வேணும் ? ‘
என்றாள் அத்தை.

அம்மா அவள் கையைப் பற்றி கன்னத்தில் வைத்துக்கொண்டாள்.

‘ஒன் உடம்பைப் போட்டு ரணகளமாக்கி…: என்று அந்த கையை
பற்றியவாறு அரற்றினாள்.

அத்தையின் உடம்பில் ஏறாத மருந்தில்லை என்று வள்ளியின்
அம்மா வள்ளியிடம் சொல்லியிருந்தாள். ஊரில் எந்தப்
புது வைத்தியன் வந்தாலும் அவன் குழைத்த மருந்து அத்தைக்கு
உண்டு. இங்கிலீஸ் வைத்தியமும் அத்தைக்குச் செய்தார்களாம்.
சில சமயம் மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு அத்தை அப்படி ஒரு
தூக்கம் தூங்குவாளாம்.

வேப்பிலையும், உடுக்குமாய் சில மாதங்கள் பூசைகள்
செய்தார்களாம். திடாரென்று பயந்தால் ஏதாவது நேரலாம் என்று
ஒரு முன்னிரவு நேரம் அத்தை பின் பக்கம் போனபோது கரிய
போர்வை போர்த்திய உருவம் ஒன்று அவள் மேல் பாய்ந்ததாம்.
வீரிட்ட அத்தை துணி துவைக்கும் கல்லில் தலை இடிக்க விழுந்து
விட்டாளாம். அவள் நெற்றி முனையில் இன்னமும் அதன் வடு
இருந்தது. அடுத்த வைத்தியன் வந்தபோது, ‘என்னை விட்டுடுங்க.
என்னை விட்டுடுங்க ‘ என்று கதறினாளாம் அத்தை. ஏகாம்பர
மாமாவுக்கு வேறு பெண் பார்த்தபோது அத்தை அன்றிரவு அரளி
விதைகளை அரைத்துக் குடித்துவிட்டாளாம். முறி மருந்து தந்து
எப்படியோ பிழைக்கவைத்தார்களாம். ‘உன் மனசு நோக எனக்கு
எதுவும் வேண்டாம் ‘ என்று மாமா கண் கலங்கினாராம். அதன் பின் அத்தையே அவருக்கு ஒரு பெண்ணைப் பார்த்தாள். அப்படித்தான்
செங்கமலம் அந்த வீட்டுக்கு வந்தாள். எல்லாம் வள்ளி சேகரித்த
தகவல்கள்.

அத்தை தன் கையை அம்மாவின் பிடியிலிருந்து விலக்காமல்
இன்னொரு கையால் அம்மாவின் தலையை வருடினாள். ‘வுடு, வுடு. எல்லாத்தையும் வுடு. புள்ளைபொறக்கற நேரத்தில ஏன் கதையை
எடுக்கிற ? ‘ என்றாள். அன்றிரவுதான் தங்கச்சி பிறந்தாள்.
அதன் பின் ஊருக்கு ஒரு முறை போனபோதுதான் அத்தை
அந்தக் கதையைச் சொன்னாள்.

மழைக்காலம். இரவு நேரம். கூடத்தின் ஒரு பக்கம் ஜமக்காளத்தை
விரித்து, எண்ணைத்தலைப் பட்டு கரைபடிந்த தலையணை
உரைகளோடு இருந்த சில தலையணைகளை போட்டாகி விட்டது.
சில தலையணைகளுக்கு உரையில்லை. அழுத்தமான வண்ணங்கள்
கூடிய கெட்டித்துணியில் பஞ்சு அடைத்திருந்தது. ஆங்காங்கே
பஞ்சு முடிச்சிட்டுக் கொண்டிருந்தது. அவை நிதம்
உபயோகத்திலிருக்கும் தலையணைகள் அல்ல. விருந்தினர் வந்தால், குழந்தைகளுக்குத் தர அவை. நாள் முழுவதும் விளையாடிவிட்டு,
வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு படுத்தவுடன் உறங்கிவிடும்
குழந்தைகளுக்கு முடிச்சுகள் உறைக்கவா போகிறது ?

சமையலறை அலம்பி விடும் ஓசை கேட்டது. சொம்பின் ணங்கென்ற
சத்தமும், கதவின் கிரீச்சும், தென்னந் துடைப்பம் அதன் பின்
வைக்கப்படும் சொத்தென்ற ஒலியும் கேட்டது. தகர டப்பா கிரீச்சிட்டது. கோலப்பொடி டப்பா. அடுப்பில் கோலம் ஏறும். அதன் பின் சமயலறைக்
கதவை அடைத்துவிட்டுக் கூடத்தின் வழியாகத்தான் அத்தை வருவாள்.
யாரும் தூங்கவில்லை. காத்திருந்தனர்.

அத்தை அருகில் வந்ததும், சோமுதான் ஆரம்பித்தான்.

‘அத்தே, கதை சொல்லேன்… அத்தே ‘

‘தூங்கல நீங்க எல்லாம் ? ‘

நின்று பார்த்துவிட்டு, அருகில் வந்து அமர்ந்தாள். காமாட்சியும்
சோமுவும் மெல்ல ஊர்ந்து வந்து அவளின் இரு தொடைகளிலும் தலை வைத்துப்படுத்து அண்ணாந்து அவளைப் பார்த்தனர். மற்றவர்கள் தலையணைகளில் கைகளை ஊன்றிக் கொண்டனர்.

அத்தை களைத்திருந்தாள். நெற்றியில் வேர்வை மின்னியது.
கண்களை மூடிக்கொண்டு யோசித்தாள்.

‘அது ஒரு பெரிய காடு… ‘ என்று ஆரம்பித்தாள்.

‘அந்தக் காட்டில எல்லா மிருகங்களும் சந்தோசமாய் இருந்தது.
காட்டில பழ மரமெல்லாம் நெறய இருந்தது. ஒரு சின்ன ஆறு ஓடிச்சு
ஒரு பக்கம். தாகம் எடுத்துச்சின்னா அங்க போயி எல்லாம் தண்ணி
குடிக்கும். மிருகங்களுக்கு எல்லாம் என்னவெல்லாம் வேணுமோ
எல்லாம் அந்த காட்டில சரியா இருந்தது. அந்தக் காட்டில வேடன்
பயமில்லை. திடார்னுட்டு அம்பு குத்துமோ, உசிரு போகுமோன்னு பயமேயில்லாம திரிஞ்சிச்சுங்க அந்த மிருகங்க எல்லாம்.

எல்லா காடு மாதிரியும் அங்கயும் காட்டுத்தீ, வெளி மனுசங்க வந்து
மரம் வெட்டறது, பழம் பறிக்கிறது, திடார்னு ஒரு ஆளு வந்து
பட்சிங்கள சுடுறது, ஓடுற பன்னியை அடிக்கிறது அதெல்லாம்
இல்லாம இல்ல. இருந்தாலும், அங்க இருந்த மிருகங்களுக்கும்
பட்சிகளுக்கும் பழகிப்போன காடு அது. ஆந்தை எந்த மரத்தில
உக்காரும், ராத்திரி சத்தமே இல்லாம காடு கிடக்கிறபோது எப்படி
அது கத்தும், எந்த கல்லுமேல ஒக்காந்துகிட்டு தவளை திடான்னுட்டு
களகளன்னு தண்ணி குடிக்கிற மாதிரி சத்தம் போடும், எந்த இடத்தில மயிலாடும் என்று எல்லாம் தெரிஞ்சு போன காடு.

இப்படி இருக்கிறப்போ ஒரு மான் கூட்டம் ஒரு நா தண்ணி குடிக்கப்
போச்சுது. அதுல ஒரு மான் தண்ணி வழியா போனப்போ விலகிப்
போயிடிச்சு. திடார்னு அது வேற காட்டில இருந்திச்சி. பாதையெல்லாம்
இல்லாத காடு. மரங்கள்ல எல்லாம் அம்பு பாஞ்ச குறி இருந்தது.
அந்தக் காட்டில ஒரு அருவி ஜோன்னு கொட்டிச்சு. யாருமே இல்லாத
காடு மாதிரி விரிச்சோன்னுட்டு இருந்தது. மானுக்கு ஒடம்பு
வெடவெடன்னு நடுங்கிச்சி. இங்கயும் அங்கயும் அது ஓடிச்சி.
அந்த பழகின காடு மாதிரி இது இல்லயேன்னுட்டு அலறிட்டே
துள்ளித் துள்ளிக் காடெல்லாம் திரிஞ்சிச்சு.

ராத்திரியாச்சு. மானுக்கு பயம் தாங்கல. அருவிச் சத்தம் அதை
பயமுறுத்திச்சு. தூரத்தில ஒரு வேடன் நெருப்பை மூட்டி அவன்
அடிச்ச மிருகத்தை சுட்டுத் தின்னுட்டு இருந்தான். அந்த
நெருப்புப்பொறி மான் கண்ணுக்குப் பட்டது. அது ஒளிஞ்சிக்கிட்டது.
தனியாக் காட்டைச் சுத்திச் சுத்திவந்து களைச்சிப் போய்
அது உக்காந்துகிட்டது.

இப்படி நெறய நாளு அது திரிஞ்சுது. ஒரு நா ராத்திரி பெளர்ணமி.
நெலா வெளிச்சம் காட்டில அடிச்சது. அருவி நெலா வெளிச்சத்தை
பூசிக்கிட்டு வேற மாதிரி ரூபத்தில இருந்திச்சு. பயமுறுத்தாத ரூபம்.
நெலா வெளிச்சம் மெத்து மெத்துன்னுட்டு எல்லாத்தையும் தொட்டுது.
திடார்னு மந்திரக்கோல் பட்டமாதிரி அந்த மானுக்கு பயமெல்லாம்
போயிடிச்சு.

அந்தக் காடு அதுக்கு பிடிச்சுப் போயிடிச்சு. காட்டோட மூலை
முடிக்கெல்லாம் அதுக்கு புரிஞ்சிப் போயிட்டது. வேறு காடாயிருந்தாலும்
இந்தக் காட்டிலேயும் எல்லாம் இருந்துச்சு. அருவி இருந்துச்சு,
மரம், செடி எல்லாம் இருந்தது. மொள்ள மொள்ள மிருகங்க பட்சிக
எல்லாம் அது கண்ணுல பட்டுது. தேன் கூடு மரத்தில தொங்கறது
தெரிஞ்சிது. நல்லா பச்சப்பசேலுன்னு புல்லு தெரிஞ்சிது. அந்த
புதுக்காட்டோட ரகசியமெல்லாம் அந்த மானுக்கு புரிஞ்சிடிச்சு.
அதுக்கப்பறமா, பயமில்லாம, அந்த மானு அந்த காடெல்லாம் சுத்திச்சு. பயமெல்லாம் போயி சாந்தமா போயிடிச்சு ‘

கதையை முடித்தாள் அத்தை. கூடத்தின் மற்ற பகுதிகள் இருண்டிருந்தன.
இந்த பகுதியில் மட்டும்தான் வெளிச்சம். இருண்ட பகுதியை காடாய்
கற்பனை செய்து, கதைக்கேட்ட குழந்தைகள் அந்தமானுடன் தோழமை
பூண்டு முடிவில் சாந்தப்பட்டு போயினர். தலையணைகளை அணைத்து உறங்கிப் போயினர். நீளமும் மஞ்சளும் கறுப்பும் கலந்த
முரட்டுத்துணி தலையணையில் சாய்ந்து, ஒற்றைக்கண்ணைத் திறந்து, உறக்கக் கலக்கத்தில் பார்த்தபோது, எங்கள் நடுவே, இரு கைகளையும்
மார்பின் மேல் குறுக்காகப் போட்டு தன் தோள்களை அணைத்தவாறு, முட்டியின்மேல் சாய்ந்து கொண்டு தங்கமத்தை உட்கார்ந்து
கொண்டிருந்தாள்.

.
………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to காட்டில் ஒரு மான் – அம்பை ….

  1. bandhu சொல்கிறார்:

    அற்புதமான கதை! பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s