……………………………………………………………………..

………………………………………………………………………
“அறியாமல் செய்யும் பாவம்
அப்போதே மன்னிக்கப்படுகிறது….ஆனால் தெரிந்தே
செய்யும் தவறும்… குற்றமும்…..???
நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்த பின்னால்தான்
அந்த நிலத்தில் வேறு பயிர்களைப் பயிரிட முடியும்.
கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு,
“குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோவிலுக்குக்
கூட வரமாட்டான்…..இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு.
என்னிடம் படம் வாங்கிய ஒருவர், படத்துக்காக வசூலான பணம்
கணக்குக் காட்டாமல், பொய்க் கணக்கு எழுதி, நான் அவருக்கு
முப்பதினாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கோர்ட்டிலே வழக்குத் தொடர்ந்தார்.
வேறு வழியில்லாமல் வயிற்றெரிச்சலோடு
நானும் கொடுக்க வேண்டி வந்தது.
அவர் ஏற்கெனவே ஒரு பணக்காரச் செட்டியாரையும்,
ஆச்சாள்புரத்துக்காரர் ஒருவரையும் ஏமாற்றியவர்.
அவரது மூலதனமே ஏமாற்றுவதுதான்.
ஏமாற்றி என்ன பயன்?
அத்தனை பணமும் போய், நகை நட்டுகளும் போய்
அன்றாடச் சோற்றுக்கே இன்று அலைமோதுகிறார்.
அவரை அடிக்கடி வடபழனி கோவிலில் காணலாம்.
உடம்புக்குச் சட்டையில்லாமல் இடுப்புக்குத் துண்டு
கட்டிக் கொண்டு, அந்தப் `பாபாத்மா’ தினமும் கோவிலுக்கு
வருகிறது.
நெற்றியில் கட்டுக்கட்டாக விபூதி; இரண்டு காதிலும்
கதம்பப் பூக்கள்; கையில் தேங்காய் பழம் கொண்ட தட்டு.
அந்த மனிதர் தினந்தோறும் முருகனைத் தேடுகிறார்.
முருகனோ அவரைக் கண்டாலே ஓடுகிறான்.
ஒருவன் வந்த வழியைப் பார்த்துத்தான், வரப்போகும்
வழியைத் திறந்து விடுகிறான், கந்தன்.
ராஜாங்கம் கட்டி ஆண்டவனும்கூட,
நேர்மை தவறி நடந்தால் நிம்மதி இல்லாமல் துடிக்கிறான்.
இறைவனின் தராசு வணிகனின் தராசு அல்ல;
அது – எடையைச் சரியாகவே போடுகிறது.
குளத்திலே ஒரு ரூபாயைத் தவறிப் போட்டுவிட்டால்,
குளம் வற்றியதும் அது உன் கைக்கே கிடைக்கிறது,
அது நேர்மையாகச் சம்பாதித்த பணமாக இருந்தால்.
ஒரு நடைபாதையில் நீ கண்ணாடித் துண்டைப் போட்டால்,
நீ திரும்பி வரும்போது, அது உன் காலிலேயே குத்துகிறது.
குளிக்கும் அறையில் நான் எச்சிலைத் துப்பிவிட்டேன்.
ஒரு மணி நேரம் கழித்து நான் உள்ளேபோனபோது,
அது என் காலையே வழுக்கி விட்டது.
விதி என்பது இறைவன் விதித்தது மட்டுமல்ல;
நீயே விதித்ததுமாகும்.
ஊரையெல்லாம் கேலி செய்த ஒரு பணக்காரர்,
ஊர் முழுவதும் கேலி செய்யும் நிலையில் வாழ்ந்து
மடிந்ததை நான் அறிவேன். அவரும் பக்தர்தான்!
பக்தி செய்யும் எல்லோருக்கும் பரமனருள் கிடைப்பதில்லை.
அது – பாவம் செய்யாதவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
உண்மையே தெய்வம்,’
அன்பே தெய்வம்’ என்று
இந்துமதம் சொன்னது அதனால்தான்.
`நம்பினோர் கெடுவதில்லை’. இது நான்கு மறைத் தீர்ப்பு
என்பது உண்மை தான்.
ஆனால் `கெட்டவன்’ நம்பினால் அவனருள் கிட்டுவதில்லை.
அதுவும் உண்மைதான்.
காலங்களை நிர்ணயிக்கின்றவனும், வாழ்க்கையின்
கதியையே உருவாக்குகின்றவனுமான பரம்பொருள்,
உன் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை,
ஆத்மாவுக்கே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
மதத்துறையை `ஆத்மார்த்தத் துறை’ என்பது அதனால்தான்.
நதியின் ஓட்டம் பள்ளத்தை நோக்கியே;
அந்த நாயகனின் ஓட்டமும்
எளிமையான நேர்மையை நோக்கியே.
ஒன்று, அறியாமல் செய்யும் தவறுகள் பாவங்கள் அல்ல;
அவை வெறும் தவறுகளே!
அவற்றுக்கு உடனே மன்னிப்பு உண்டு.
அறிந்து செய்யும் தவறு, தவறல்ல; அது குற்றம்.
அதற்கு மன்னிப்புக் கிடையாது!
நான் பாவம் என்று குறிப்பிடும்போது, நீ அறியாமல் செய்த
பிழைகளை எல்லாம் பாவக்கணக்கில் சேர்க்காதே.
சிறுவயதில் கடன்தொல்லை தாங்காமல் நான்
`திருடியிருக்கிறேன்’, என் தாயின் பணத்தைத்தான்.
ஆனால் திருடிவிட்டு நிம்மதியில்லாமல் இருந்திருக்கிறேன்.
கடவுளை வேண்டியிருக்கிறேன் “இறைவா மன்னி” என்று.
அந்தத் தவற்றைக் கடவுள் மன்னிக்கவில்லை என்றால்
இந்த வாழ்க்கையை எனக்கு அருளியிருப்பாரா?
என்னுடைய நண்பர்களில் என்னிடம் உதவி பெறாதவர்கள் குறைவு.
உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.
என்னுடைய ஊழியர்களில் என்னை ஏமாற்றாதவர்கள் குறைவு.
ஏமாற்றியவர்களில் நன்றாக வாழ்கின்றவர்கள் குறைவு.
எழுத்தின் மூலமே சம்பாதித்தவர்களில் என்னைப்போல்
சம்பாதித்தவர்கள் குறைவு.
சம்பாதித்ததை அள்ளி இறைத்ததில்,
என்னைப்போல் அள்ளி இறைத்தவர்கள் குறைவு.
இவ்வளவு அறியாமைக்கு இடையிலும்,
ஏதோ ஒரு சுடரொளி என்னைக் காப்பாற்றுகிறது.
ஏன் காப்பாற்றுகிறது?…. எதனால் அது என்னைக் காப்பாற்றுகிறது?
என் தாய் தகப்பன் செய்த தருமங்களை நினைக்கிறேன்.
`தர்மம் தலைகாக்கும்’ என்ற இந்துக்களின் பழமொழி
எனக்கு நினைவுக்கு வருகின்றது.
செய்த பாவம் தலையிலடிக்கிறது,
செய்த புண்ணியம் தலையைக் காக்கிறது.
ஆம்; செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.
புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி!
பாவத்தில் முதற்பாவம், நன்றி கொல்லுதல்.
கஷ்டகாலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை
நான் ஞாபகத்தில் வைத்துக் கைம்மாறு செய்திருக்கிறேன்.
அந்த நாயகன் அறிய நான் நன்றி கொன்றதில்லை.
ஆகவே பாவம் செய்யாமல், புண்ணியம் செய்து கொண்டே
இறைவனைத் தியானித்தால் உன் வாழ்நாளிலேயே
உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
நான் தத்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது.
இந்து மதத்தின் ஒவ்வொரு அணுவையும் உணர்வதற்கு
எதையும் நான் படிக்கவில்லை.
சாதாரணப் பழமொழிகளும் அனுபவத்தில் அவற்றின்
எதிரொலிகளுமே, இந்துமதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையை
எனக்கு உண்டாக்கியிருக்கின்றன.
அறியாமல் செய்கின்ற பிழைகள்
அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன
ஆண்டவனின் அவதாரங்களேகூட, அறியாமல்
தவறு செய்திருப்பதாக வழக்குக் கதைகள் உண்டு.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஒருமுறை கங்கைக்குக்
குளிக்கச் சென்றார்.
அவரது அம்பறாத் தூணியில் ஒரே ஒரு அம்பு
மட்டுமே இருந்தது.
அந்த அம்பைப் படுக்கை வசமாக வைக்கக்கூடாதென்ற
மரபுப்படி, அதைப் பூமியிலே குத்தி வைத்தார்.
“ஒற்றை அம்பை ஊன்றி வை” என்பது வழக்கு.
அம்பை ஊன்றிய ராமபிரான், கங்கையில்
குளித்து விட்டுக் கரையேறினார்.
ஊன்றிய அம்பை எடுத்தார்.
அதிலொரு தேரைக் குஞ்சு குத்தப்பட்டிருந்தது.
பூமிக்குள்ளிருந்த தேரைக் குஞ்சை
அவர் அறியாமல் குத்திவிட்டார்.
தேரைக் குஞ்சு சாகும் தருவாயிலிருந்தது.
ராமபிரான் கண்கள் கலங்கிவிட்டன.
“ஐயோ, தேரையே! நான் குத்தும்போது
நீ கத்தியிருந்தால் காப்பாற்றி இருப்பேனே,
ஏன் கத்தவில்லை?” என்றார்.
அதற்குத் தேரை சொன்னது:
“பெருமானே! யாராவது எனக்குத் துன்பம் செய்யும்
போதெல்லாம் நான் `ராமா ராமா’ என்றுதான்
சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார்
என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்…?”
ராமபிரான் கண்ணீரோடு சொன்னார்:
“தேரையே, என்னை மன்னித்துவிடு.
இது நான் அறியாமல் செய்த பிழை.”
தேரை சொன்னது,
“பெருமானே! `அறியாமல் செய்கின்ற பிழைகள்
அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன’ என்று
சொன்னது உன் வாக்குத்தானே!”
தேரையின் ஆவி முடிந்தது.
.
…………………………………………………………………………………………………………………….
புதிய பதிவு வருவதற்கு தாமதமானதை எண்ணி, உங்கள் உடல்நலம் சரியில்லையோ என்று நினைத்தேன். தளத்தில் எழுதிக் கேட்கணும் என்று தோன்றியது.
முன்பே உங்கள் வாழ்க்கையைப் பற்றியும் ஓரளவு சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் பிறருக்குச் செய்த நன்மைகள், உதவுவதில் இருந்த சமூக அக்கறை என்று பலவற்றையும் பகிர்ந்திருக்கிறீர்கள். அறச் சீற்றம் தவிர நீங்கள் தவறாக எழுதி நான் படித்ததில்லை.
கண்ணதாசனின் வாக்கு, உங்கள் மனதிலிருந்து எழுந்ததுபோலவே எனக்குத் தோன்றியது. நீங்கள் சொல்ல நினைத்ததை, அவரின் எழுத்து சொன்னது.
நல்ல உடல் நலத்துடன் மன நிம்மதியோடு நீங்கள் இருக்கவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.
.
புதியவன்,
உங்கள் மடலுக்கு நன்றி..
ஓரளவு நீங்கள் யூகித்ததும் சரி தான்…
ஆனால், சுத்தமாக சரியவில்லை..
உடல் ஒத்துழைக்கவில்லை;
மன உறுதி தான் என்னை இதுவரை
இயக்கிக் கொண்டிருக்கிறது…
நான் இந்தப்பிறவியில் நிச்சயமாக எந்த பாவமும்
செய்ததில்லை.
உதவிகள் – நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும்
முன் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் கூட,
நிறைய செய்திருக்கிறேன். என் அளவிற்கும்
மிஞ்சியே, அவுட் ஆஃப் தி வே – போய்க்கூட …
நான் அறியாத குடும்பங்களைச் சேர்ந்த-
குறைந்தபட்சம் 50-55 பேர்களின் இறுதிச் சடங்குகளுக்கு
என் நண்பர்களின் துணையோடு நான் உதவி இருக்கிறேன்.
குறைந்தது 10 சவக்குழிகளை நானே கடப்பாறை கொண்டு
தோண்டி இருக்கிறேன்…(செலவழிக்க முடியாத குடும்பங்கள்..)
இதெல்லாம் “புண்ணிய” கணக்குகள் தானே….!!!
அவையெல்லாம் தான் இப்போது என்னை
இயக்கிக் கொண்டிருக்கின்றன என்று உறுதியாக
நம்புகிறேன்…..
ஆண்டவனின் அருளால், மனதளவில் நிம்மதியாக,
எந்தவித சஞ்சலமும் இல்லாமல் இருக்கிறேன்..
ஆனால், உடலளவில் – கடும் வலிகள், அவஸ்தை தான்.
இவற்றிற்கு முக்கியமான காரணங்கள் –
இள வயதில், நான் என் உடலைப்பற்றிய
அக்கறை இன்றி இருந்தது தான் என்று தோன்றுகிறது.
நன்றாக சாப்பிட வேண்டிய வயதில் –
கிட்டத்தட்ட 9 ஆண்டுகள், காலைச் சிற்றுண்டியை
கை விட்டேன். நேராக மதிய உணவு பிறகு இரவில்
கொஞ்சம் பலகாரம்… அவ்வளவே…
இதற்கான முக்கியகாரணம் – அவ்வை சொன்ன –
” இளமையில் வறுமை..”
இந்த விமரிசனம் தளத்தில், தொடர்ந்து எழுதிக்
கொண்டிருப்பதும், வாசக நண்பர்களுடன் உரையாடுவதும்
தான் எனக்கு மிகப்பெரிய சத்துணவு- விட்டமின்…
கடைசி நாள் வரை எழுதிக் கொண்டிருக்க ஆசை….
பார்ப்போம் – நமக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறது என்று.
உங்கள் மடலுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.
உங்கள் மூலமாக, நம் வாசக நண்பர்களுடனும்
மனம் திறந்து பேச ஒரு வாய்ப்பு கிடைத்தது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நான் இதனை இங்கு எழுதியிருக்கிறேனா என்று நினைவில்லை. சில மாதங்களுக்கு முன்பு, வெங்கடேசன் என்று ஒருவரை (அவர் டாக்ஸி ஓட்டும் சர்வீஸ் செய்கிறார்) கும்பகோணத்தில் சந்தித்தேன் (எனக்கு சில கோவில்கள் செல்வதற்காக எதேச்சயாக அவரது டாக்சியைக் கூப்பிட்டிருந்தேன்). பயணத்தின்போதுதான் பேச்சுவாக்கில் அவரைப்பற்றிப் பகிர்ந்தார். சாதாரண மனிதர் (Lower Middle class என்பது என் எண்ணம். ஒருவேளை மிடில் க்ளாஸாக இருக்கலாம்). என்னவோ மனதில் தோன்றி, அநாதைப் பிணங்களை அடக்கம் செய்வது என்ற சர்வீஸ ஆரம்பித்தாராம். பிறகு மற்றவர்களின் ஆலோசனையோடு உதவும் கருணைக் கரங்கள் என்ற ட்ரஸ்ட் ஏற்படுத்தி இந்தப் பணியைச் செய்கிறாராம் (அதற்கான அனுமதி மற்ற விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டிருந்தார்). இது தவிர, அவ்வப்போது தனக்குக் கிடைக்கும் பணத்தில் உணவுப் பொட்டலம் வாங்கி அநாதைகளுக்கு விநியோகிப்பது போன்ற நற்செயல்களும் செய்கின்றார். இதுவரை 400-500 அநாதைப் பிணங்களை அடக்கம் செய்திருப்பார். (முடிந்தவரை அவரவர் மதத்திற்கு ஏற்றவகையில் அடக்கம் செய்வதாகச் சொன்னார்) அவருக்கு எஸ்வி சேகர்தான் முன்மாதிரி (அநாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் சர்வீஸை எஸ்வி சேகர் செய்துவருகிறார்) என்று சொன்னார். 150+ கோயில்களுக்கு (சிறிய கோவில்கள்) பூஜைகள் நடத்த தன்னாலான உதவிகளைச் செய்ய இப்போது முனைந்திருக்கிறார்.
இப்படி சமூகத்திற்கான தன் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஆத்மாக்கள் மிக உயர்ந்தவை, அவை எந்த இடத்தில் எந்த மாதிரியான சூழ்நிலையில் பிறந்திருந்தாலும். வாழும் வார்க்கையை இவர்கள் அர்த்தமுள்ளதாகச் செய்கின்றனர்.
பிறருக்காக இரங்கும் மனதில், பாவத்திற்கு பாவச் செயல்களுக்கு இடமேது, நேரமேது?
காவிரி மைந்தன், தங்கள் உடல் நலம் செம்மையுற வேண்டுகிறேன்.
புதியவன், உங்களது ஈற்றடி மிகவும் சிறப்பு!
வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகச் செய்யும் அந்த “புண்ணிய” ஆத்மாக்கள், நீடூழி நலம் பெறட்டும்