
இந்து மதத்தை பொறுத்தவரையில் இறைவன் உருவமற்றவன்.
பிரபஞ்ச சக்தி. பிரபஞ்ச மர்மம்.ஆனால் அவனை விக்கிரகவடிவில் வழிபட முடியும். மாணிக்கவாசகர் சொல்வது போல் –
“ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றுமில்லார்காயிரம் திருநாமம்
பாடி தெள்ளேணம் கொட்டாமோ” என்பதுபோல் முற்றிலும்
அருவமான இறைவனை பேசுகின்றது.
இங்கே இந்துக்களிடம் மதக்கல்வி என்பது அறவே இல்லை.
மரபான ஞானமென எதுவுமே இங்கே இளமையிலிருந்து போதிக்கப்படுவதில்லை.
முற்காலத்தில் குடும்பத்திலேயே எவராவது மூத்தவர்கள்
மதம் சார்ந்த சில அடிப்படைகளை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதுண்டு. கதைகள், பாடல்கள்,
சடங்காசாரங்கள் போன்றவற்றை. சென்ற கால்நூற்றாண்டில்
அந்த வழக்கம் முழுமையாக அழிந்துவிட்டது.
மதம் சார்ந்த கல்வியை அளிப்பதற்கான பொதுவான
ஊடகங்களாக விளங்கியவை கோயில்கலைகள் மற்றும்
நாட்டார் கலைகள். அவையும் முழுமையாகவே அழிந்துவிட்டன.
இச்சூழலில் இங்கே பிள்ளைகளுக்கு அவர்கள் மரபுசார் ஞானமாக கிடைப்பது எதுவுமே இல்லை. அவர்களுக்குக் கிடைக்கும் கல்வி இரண்டுதான்.
ஒன்று – பள்ளியின் கொடுக்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சி.
இரண்டு -ஊடகங்கள் வழியாக வரும் கேளிக்கைப்பயிற்சி.
சராசரி இந்துவைப்பொறுத்தவரை இந்துமதத்தின் அடிப்படையான விஷயங்களில் அறிமுகம் உடையவர்கள் மிகமிகக் குறைவு.
ராமாயணம் அல்லது மகாபாரத கதையை ஒரு பதினைந்து
நிமிடம் சொல்லக்கூடிய இளைஞர்கள் மிக அபூர்வம். இந்நிலையில்
மத தத்துவங்களைப்பற்றி கேட்கவே வேண்டாம்
ஆனால் மதம் இல்லாமலும் ஆகவில்லை. மதத்தை சோதிடமும் ஆசாரங்களும் தாங்கி நிற்கின்றன. சராசரி இந்துவின் மத
நம்பிக்கை என்பது பிரச்சினைகள் என வரும்போது
சோதிடர்களின் பேச்சைக்கேட்டு கோயில்களுக்குச் செல்வது
மட்டுமே.
இதற்கு எதிர்வினையாக ஒரு அசட்டுப்பகுத்தறிவுவாதம்.
பகுத்தறிவு என்பது அடிப்படையில் ஓர் அறிவு என்பதே
இவர்களுக்குத் தெரிவதில்லை. எதையும் அறிய ஆர்வமும்
முயற்சியும் இல்லாமல் எல்லாவற்றைப்பற்றியும் முரட்டு அபிப்பிராயங்களை மட்டுமே சொல்வதே இங்கே பகுத்தறிவென எண்ணப்படுகிறது.
‘கடவுள் தன்னுடைய உருவில் மனிதனைப்படைத்தார்’
என்ற வரையறையே இதுவரை கடவுளின் உருவம் பற்றி எந்த
மதமும் அளித்த விளக்கங்களில் மிகமிக திட்டவட்டமானது.
இந்திய மதங்களின் சாராம்சமாக இருக்கும் கடவுள் உருவகம்
முற்றிலும் அருவமானது. வேதங்கள் முன்வைக்கும் பிரம்மம்
என்பது எந்தவகையிலும் விளக்கவோ, காட்டவோ,
வரையறுக்கவோ முடியாதது. பிரம்மத்தின் குணங்கள் என்று சொல்லப்படுவன எல்லாமே இந்த கடந்த தன்மையைச்
சுட்டிக்காட்டும் எதிர்மறைப்பண்புகள்தான். சொல்லமுடியாதது, காணமுடியாதது, விளக்கமுடியாதது என்றே கூறப்பட்டுள்ளது.
பிரம்மம் ‘அது’ என்றே குறிப்பிடப்படுகிறது. ஆண்பாலாகவோ பெண்பாலாகவோ அல்ல. அதற்கு மானுடம் சார்ந்த எந்தப்பண்பும் ஏற்றப்படவில்லை. அது ஓர் ஆளுமை அல்ல [Personality].
அது ஓர் இருப்போ [entity] இருத்தலோ [ existence] அல்ல.
அது ஓர் நுண்ணுணர்வாக நம்மை அடையும் ஒரு பிரம்மாண்டம் மட்டுமே.
வேதங்கள் அடைந்த பிரம்மம் என்ற தரிசனத்தை உபநிடதங்கள் தர்க்கமொழியிலும் கவித்துவமொழியிலும் சொல்லமுயல்கின்றன. அவை எந்த வகையான உருவத்தையும் அடையாளத்தையும் அளிக்காமல் அதை விவரிக்க முயல்கின்றன.
பிரம்மம் என நாமறிவது ஒரு நுண்ணிய தன்னுணர்வு.
[ பிரக்ஞானம் பிரம்மம்] பிரம்மாண்டமான சூழல் உணர்வு [ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்] எல்லையற்ற பிரபஞ்ச உணர்வு
[அஹம் பிரம்மாஸ்மி]
இந்த அதுநுண்ணிய இறையுருவகத்தை நாம் பௌத்த
மரபிலும் காணலாம். அவர்களின் கடவுள் இந்த பிரபஞ்ச
முடிவிலியின் அடிப்படையான நெறியே. அதை அவர்கள்
மகாதர்மம் என்கிறார்கள்.
இவ்வாறு முற்றிலும் அருவமாக இறைவனை உணர்ந்த
அதே மெய்ஞானம்தான் எல்லா உருவத்திலும் இறைவனைக்
காணலாம் என வகுத்தது…..
உருவங்களெல்லாமே உருவமற்ற அதன் உருவங்களே. பெயர்களெல்லாமே பெயரற்ற அதன் பெயர்களே.
இந்து மெய்ஞானத்தை உருவ வழிபாடு என்று சொல்வதைப்
போல அறியாமை ஏதும் இல்லை. உருவ வழிபாடு என்பது
ஒரு சில உருவங்களை அல்லது அடையாளங்களை மட்டும் புனிதமானதாக அல்லது கடவுள் வடிவமாக வழிபடுவதாகும்.
இந்து மெய்ஞானம் எல்லா உருவங்களையும் எல்லா அடையாளங்களையும் இறைவடிவமாக எண்ணுகிறது. எதை வழிபட்டாலும் இறைவழிபாடே என எண்ணுகிறது. இது
உருவ வழிபாடு அல்ல, முழுமை வழிபாடு. வேண்டுமென்றால்
பிரபஞ்ச வழிபாடு எனலாம்
எந்த ஒரு இந்து தோத்திரத்தை எடுத்துக்கொண்டாலும் ஒருவரி அருவமான முடிவிலியாக, அறியவே முடியாத கடந்தநிலையாக இறையை உருவகம் செய்யும்.
அடுத்த வரி உருவமாக, அறியக்கூடியதாக உருவகம் செய்யும். அப்படிப்பட்ட அதை நான் இப்படி வணங்குகிறேன் என்பதே
அதன் பொருள்.
அதாவது இந்து மெய்ஞான மரபு இறைக்கு அளிக்கும்
அடையாளங்கள் இறையின் எல்லைகளில் இருந்து
உருவாகவில்லை,நம் அறிதலின் எல்லைகளில் இருந்து
உருவாகின்றன.
மானும் மழுவும் அரவும் சடையும் நீறும் புலித்தோலும் அல்ல
சிவம் என எந்த சைவ சித்தாந்திக்கும் தெரியும். அவன்
‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரிய’ ஒன்றாகவே
அதை அறிவான். அலகிலா ஆற்றலின் லீலைவடிவமாகிய
இப்புடவியின் சாரமாக நிகழும் நித்தியமான ஒரு நடனம் அது
என்று அவன் சொல்வான்
ஆனால் தன் வீட்டு பூசையறையில் தன் ஊர் நடுவே கற்கோயில் கருவறையில் அது தன் கண்ணையும் கருத்தையும் நிறைத்து ஆட்கொள்ளும் பொன்னார்மேனியுடன் இடதுபாதம் தூக்கி ஆடவேண்டும் என அவன் நினைக்கிறான். அருவத்தைக்கூட
உருவம் வழியாகவே எண்ணவும் தியானிக்கவும் கூடியது மனிதப்பிரக்ஞை என்பதனால்தான் அது தேவையாகிறது.
ஆம், அந்த உருவம் அவனுடைய கண்ணாலும் கருத்தாலும் உருவாக்கப்பட்டதுதான். ஆனால், அப்படி உருவாக்கும் பிரக்ஞையும் அதுவே என்பதனால் அவனைப்பொறுத்தவரை அந்த உருவமும் அருவத்தின் ஆடல்தான்.
( நன்றி -ஜெயமோகன் )
.
………………………………………………
இறைவன் எங்கும் பரந்துள்ளவன், ஒரு உருவத்தில், குணத்தில் அடக்க இயலாதவன் என்றே வைணவம் சொல்கிறது. தமிழ் வேதத்தில்,
உளனெனில் உளன்* அவன் உருவம் இவ்வுருவுகள்*
உளனலன் எனில்,* அவன் அருவம் இவ்வருவுகள்*
உளனென இலனென* இவை குணம் உடைமையில்*
உளன்இரு தகைமையொடு* ஒழிவிலன் பரந்தே.
அவன் இருக்கிறான் என்றால், உருவத்துடன் இருக்கும் பொருட்கள் எல்லாவற்றிலும் அவன் வியாபித்து இருக்கிறான். (ஸ்தூல சரீரம்) அவன் இல்லை என்றாலும் அவன் உள்ளவனே. உருவமற்று அருவமாக (ஸூக்ஷ்ம சரீரம்) இருக்கும் பொருட்களிலெல்லாம் இருக்கிறான். இந்த இரண்டை குணமாகக் கொண்டிருப்பவன் என்பதால் அவன் எல்லா இடங்களிலும் காலங்களிலும் வ்யாபித்து இருக்கிறான்.
அவரவர் தமதமது* அறிவறி வகைவகை*
அவரவர் இறையவர்* எனஅடி அடைவர்கள்*
அவரவர் இறையவர்* குறைவிலர்; இறையவர்*
அவரவர் விதிவழி* அடைய நின்றனரே
ஒவ்வொருவரும், அவரவர் அறிந்த ஞானத்தின் விளைவாக, அவரவருடைய ஆசைக்கேற்றவாறு, அதற்கேற்ற தேவதைகளை, இறைவர் என்று நினைத்து அவருடைய பாதங்களையே புகலிடமாகக் கொள்ளுவர்கள். அப்படி அவரவர்களால் பூசிக்கப்படும் தெய்வங்களும் அவர்கள் விரும்பிய பலன்களை அளிப்பதில் குறைவில்லாதவர்களாக இருக்கின்றனர். இதன் காரணம் என்னவெனின். அந்த ஒரு இறைவன், அவரவர் தங்கள் கர்மப்படி வணங்குவதால், அந்த அந்தப் பலன்களைப் பெறுமாறு அருள் புரிகிறான். (இங்கு ‘அந்த ஒரு இறைவன்’ என்பது வைணவத் தத்துவம் என்பதால் ஸ்ரீமந் நாராயணனைக் குறிக்கிறது. அவனே தெய்வங்களுக்கெல்லாம் தலைவன் என்பது கருத்து)
ஆணல்லன் பெண்ணல்லன்* அல்லா அலியுமல்லன்,*
காணலுமாகான்* உளனல்லன் இல்லையல்லன்,*
பேணுங்கால்பேணும்* உருவாகும் அல்லனுமாம்,*
கோணை பெரிதுடைத்து* எம்பெம்மானைக்கூறுதலே
அந்த இறைவன், ஆணும் அல்லன், பெண்ணும் அல்லன், அலியுமல்லன். கண்களால் காண்பதற்கு இயலாதவன். உள்ளவன் என்றும் சொல்லமுடியாது, இல்லாதவன் என்றும் சொல்லமுடியாது. அடியார்கள் விரும்புகின்ற காலத்தில் விரும்பின வடிவை உடையவனாக இருக்கிறான். அல்லது அப்படிப்பட்ட வடிவு இல்லாதவனுமாகவும் இருப்பான். அதனால் அந்த இறைவன் இப்படிப்பட்டவன் என்று கூறுவது மிகவும் கடினம்.
இப்படி எத்தனையோ பாசுரங்கள் (வைணவ பக்தி பாடல்கள், திவ்யப் ப்ரபந்தத்தில்) உள்ளன.
அதனால், இவன் மட்டுமே கடவுள் என்று நாம் எண்ணாமல், இரண்டாவது பாசுரத்தில் சொல்லியிருக்கிறபடி, ‘அவரவர் விதி வழி அடைய நின்றனரே’ என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.
இதுபோன்றே, இன்னொரு வேத வாக்கியம், ‘ஆஹாசாத் பதிதம் தோயம்’ என்று துவங்கும். அதில் என்ன சொல்கின்றது என்றால், ஆகாயத்திலிருந்து விழும் மழைத் தண்ணீரானது எந்த நிலத்தில் விழுந்தாலும் இறுதியில் கடலை வந்து அடைவதுபோல, எந்தத் தேவதையை ஒருவன் வழிபட்டாலும் அது கடைசியில் கேசவனையே வந்து அடைகிறது (ஸ்ரீமந் நாராயணனை). இதுவும் ஒரே இறைவன் என்ற கருத்தையே சொல்கிறது.
இஸ்லாம், ஒருவனே இறைவன், அவன் உருவமற்றவன், அவனுக்கு இணை யாருமில்லை என்கிறது. அவனுக்கு நிறைய இறை தூதர்கள் இருந்திருந்தாலும், அவர்கள் வழிபடத்தக்கவர்கள் அல்லர் (போற்றத் தக்கவர்கள், ஆனால் வழிபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது). இறைவன் ஒருவனே வழிபடத் தக்கவன் என்கிறது.
கிறித்துவம், இறைவன் ஒருவனே என்று சொன்னாலும், அவர்களுக்கு ‘பிதா’ என்று சொல்லப்படுகிற இறைவன், அவன் குமாரனாகிய இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூன்றையும் நம்புகின்றனர். ஆயினும் அவர்கள் இயேசு கிறிஸ்துவை வழிபட்டாலும், இயேசுவும் பரமபிதாவைத்தான் வழிபட்டார் என்பதையும் கவனிக்கவேண்டும்.
இந்து புனித நூல்களிலும், நீ எதை, ‘நான்’ என நினைத்து வழிபட்டாலும், அதில் நான் வந்து புகுந்துகொள்கிறேன் என்று இறைவன் சொல்லுவதாகச் சொல்கிறது. அதனால்தாம் நம்மால் இறை உரு எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனை வணங்கும் மரபு வந்தது. இறைவன் கையில் இருப்பதாகச் சொல்லப்படும் எந்தவித ஆயுதங்கள் பொருட்களையும் நாம் இறை அம்சமாகவே பார்க்கும் பார்வையும் அந்த மரபால்தான் வந்தது. வேல், சக்கரம், சங்கு, மயில்…என்று எல்லையில்லாத பொருட்களுக்கும் அந்தப் புனிதம் வந்து சேர்கிறது.
நம் இந்து மரபு, ஜெமோ சொல்வதைப் போல, எல்லாவற்றையும் இறை வடிவமாக உருவகப்படுத்தி நம் மூளைக்குள் புகுத்தியது. பெரியவர்கள் மீது கால்படுவது, புத்தகத்தின் மீது கால்படுவது, பணத்தின் மீது கால் படுவது என்று எதையும் அது தன்னிச்சையாக நம்மைத் தவறு என்று எண்ணவைக்கிறது.
எழுத எழுத நீண்டுகொண்டு செல்லும் அளவு சிந்திக்க வைக்கிறது இந்தப் பதிவு.