
வசனங்கள் எல்லாம் நீள, நீளமாக இருந்தால் தான்
படம் ஓடும் என்று கருதப்பட்ட காலமும் இருந்தது உண்மை.
ஆனால் இப்போதோ வசனம் குறைவாக இருப்பதே ஸ்டைல்
என்று ஆகி விட்டது.படத்தில் வசனம் குறைவாகவே
இருக்க வேண்டும் என்று சொல்லும் இயக்குனர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது.
இது பற்றி சுஜாதா அவர்கள் சொன்னது ……
“இன்றைய சினிமா ரசிகர்களின் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்திக்கொள்கிறது என்கிற ரீதியிலேயே இதை
நான் பார்க்கிறேன். வசனம் குறைவாக இருந்தாலும்
இன்றைய ரசிகன் புரிந்துகொள்கிறான். அப்போதெல்லாம் ரசிகனுக்குப் புரியாமல் போய்விடும் என்று கூறியே
நீள நீளமான வசனங்களைப் படத்தில் வைத்தார்கள்.
இப்போதோ ‘அதெல்லாம் ரசிகன் புரிஞ்சுக்குவான்’
என்ற நம்பிக்கையோடு வசனத்தைக் குறைத்து
விடுகிறார்கள்.”
ஒரு சிறுகதை அல்லது ரேடியோ நாடகம் எழுதினால்,
ஒரு காட்சியை வாசகர் அல்லது நேயரின் மனதில்
விரிய வைக்க, விலாவாரியான வசனம் அல்லது வர்ணனை தேவைப்படும். ஆனால் சினிமா என்ற மீடியம்
அப்படிப்பட்டதல்ல. அதிகாலை பீச்சில் வாக்கிங் போகிற
நபருக்கு எதிரே, ஒருவன் கையில் மாட்டைப் பிடித்தபடி
வருவதாக வைத்துக்கொள்வோம். அதற்கு ‘என்னப்பா
ஆச்சரியமா இருக்கு ? காலங்காத்தாலே மாட்டை
வலது கையில் பிடிச்சுக்கிட்டு கடற்கரை பக்கமா
வந்திருக்கே ?’ என்று வசனம் எழுதியது அந்தக் காலம்.
“இப்போது ….. அது காலை நேரம் என்பதும்,
அது கடற்கரை என்பதும் காட்சிகளின் மூலம் தெரிந்தால்
போதும் என்று நினைக்கிறார்கள். அவன் மாட்டைப்
பிடித்துக் கொண்டு வருவதும் படம் பார்க்கும் ரசிகனுக்குத்
தெரியும். முகத்தில் ஆச்சரிய பாவனையையும்
காட்டி விடலாம். அப்புறம் எதற்கு வார்த்தை விரயம் ?
அந்த நபர் முகத்தில் ஆச்சரிய உணர்ச்சியை மட்டும் காட்டி, ‘என்னப்பா இது’ என்று கேட்டாலே போதுமானது.
இன்றைய ரசிகனுக்கு இதுவே அதிகம்.
“சிவாஜி படத்தில் ரஜினிகாந்த், அமெரிக்காவிலிருந்து
சென்னை வந்ததும், காரில் பயணம் செய்யும்போது
இருபுறமும் பார்த்தபடியே ‘அட, சென்னையில் இது
வந்திருச்சா ? அட, இது கூட வந்திருச்சா…’ என்று வியந்து
கொண்டே வருவார். திடீரென்று சிக்னலில் கார் நிற்கவும்,
ஒரு பொண்ணு காருக்கு அருகில் வந்து பிச்சை கேட்பாள்.
ரஜினி முகம் மாறியபடி, ‘இது இன்னும் போகலையா’
என்று கேட்பார்.
இதுவே அந்தக் காலமாக இருந்தால், ‘சீரும் சிறப்புமாக
மாறியுள்ள இந்த பாரதத் திருநாட்டில், மனிதனிடம் மனிதன் கையேந்தும் இந்த அவலம் இன்னும் போகவில்லையா’
என்று வசனம் எழுத வேண்டும். ஆனால், இன்று உள்ள
ரசிகனுக்கு அது தேவையில்லை. ‘இது இன்னும் போகலையா’ என்று கேட்டாலே அவன் புரிந்து கொள்கிறான்.
“என்னைப் பொறுத்த வரை இப்போது என்றில்லை.
ஆரம்பம் முதலே குறைவான வசனங்களையே எழுதி
வருகிறேன். நான் கதை-வசனம் எழுதி, கே.பாலசந்தர்
இயக்கிய ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தைப் பாருங்கள்…
மிக மிகக் குறைவான வசனங்களே அதில் இருக்கும்.”
அப்போது ‘ABBA ‘ என்றொரு ஆங்கிலப் படம் சூப்பர்
ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த நேரம். அதுபோல நாமும்
ஒரு படம் பண்ணலாம் என்று பாலசந்தர் விரும்பியதால்,
அதே போன்ற ஒரு சுப்ஜெக்ட்டை ரெடி செய்தோம்.
‘ABBA ‘ போலவே ஒரு இசைக் குழுவை வைத்துக் கதை பண்ணினோம். காட்சிகளும், பாட்டும்தான் அதிகம்
வைத்தோம். வசனம் மிகக் குறைவாகவே இருந்தது.
அது மாபெரும் வெற்றி பெற்றது.”என்னைப் பொறுத்த வரை,
ஒரு சினிமாவில் வசனகர்த்தாவின் பங்கு அதிகம்தான்…
ஆனால் அது பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததில்லை
என்றே நினைக்கிறேன். ஒரு நாவல் எழுதினால், அதை
முழுக்க முழுக்க வாசகர் மனதில் விரித்துக் காட்ட வேண்டிய
கடமை எழுத்தாளருக்கு உள்ளது. ஆனால், சினிமாவில்
இயக்குனரும், கேமராமேனும் ஒரு எழுத்தாளர் எழுதியதை
விட அழகான காட்சிகளைப் படம் பிடித்து ரசிகன் முன்
நிறுத்தி விட முடியும்.
“பொதுவாக, நான் வசனம் எழுதி முடித்துவிட்டு, மறுபடி
அதில் எதை எதைச் சுருக்கலாம் என்று பார்த்து, அதன்படி
கொஞ்சம் சுருக்குவேன். பிறகு அதை இயக்குனருக்குக்
கொடுத்து அனுப்புவேன். அவர் அதைப் படித்து இன்னும்
கொஞ்சம் சுருக்கித் தருவார். நான் அதை எல்லாம்
கழித்து விட்டு, மேலும் ஒரு முறை சுருக்க முடியுமா என்று
பார்ப்பேன். அப்புறம்தான் அது முடிவுக்கு வரும்.
ஆக, வசனத்தைச் சுருக்கச் சுருக்கத் தான் சினிமாவிற்குச்
சுவை என்பது இன்றைய சூழல். ஹாலிவுட்டில் ‘காண்பி; சொல்லாதே’ (Show Don ‘t tell ) என்பதுதான்
தாரக மந்திரம். அந்த நிலை இப்போது தமிழ்ச் சினிமாவிற்கும் பொருந்தி விட்டது.
“இன்றையக் காலகட்டத்தில் வசனம் எழுதுவது என்பது
கத்தி மேல் நடப்பது போல் ஆகிவிட்டது. அந்தப் படத்தில்…
அந்தக் கேரக்டருக்கு…. என்று நாம் ஒரு வசனம் எழுதினாலும்,
அது ஓர் இனத்திற்கோ, ஒரு மதத்திற்கோ அல்லது ஒரு
தொழிலுக்கோ எதிராக எழுதப்பட்ட ஒரு வசனமாகப்
பார்க்கப்பட்டு, சர்ச்சை கிளம்பி விடுகிறது.
“சிவாஜி படத்தில் ஹீரோயின், ரஜினியைப் பார்த்து ‘கறுப்பு’
என்று சொல்லி விடுவார். உடனே ரஜினியுடன் இருக்கும் விவேக், ‘யாரைப் பார்த்து கறுப்புன்னு சொன்னே ? திராவிடத்தின் அடையாளம் ‘கறுப்பு’ என்று துவங்கி, அது கறுப்பு,
இது கறுப்பு என்று கறுப்பின் பெருமைகளைப் பட்டியல்
போடுவார். வசனம் எல்லாம் எழுதி, கொடுத்தனுப்பி விட்டேன். திடீரென்று இரவில் ஒரு சிந்தனை. ‘திராவிடத்தின் நிறம்
கறுப்பு’ – என்று எழுதி விட்டோம். நாமோ பிராமின்;
ஆரியன் என்று வர்ணிக்கப்படுகிறவன். நாம் திராவிடத்தின்
நிறம் கறுப்பு என்று எழுதினால், யாரேனும் சிலர் இதைச்
சாதிப் பிரச்சனையாக… துவேஷமாகப் பார்ப்பார்களோ ?
ஒரு ஆரியன் நம்மை கறுப்பு என்று நக்கல் பண்ணுகிறான்’
என்று பிரச்சனை கிளப்புவார்களோ?’ என்ற அச்சம் வந்துவிட்டது.
“உடனே இயக்குனர் ஷங்கருக்கும், ரஜினிக்கும் போன்
போட்டேன்’ என்றார் சுஜாதா.
“சிவாஜி திரைப்படத்தில், ‘திராவிடத்தின் நிறம் கறுப்பு’
என்று நான் எழுதிய டயலாக்கை, ‘ஒரு பிராமணர் எழுதியுள்ள டயலாக்’ என்கிற ரீதியில் யாராவது எடுத்துக் கொண்டால்
என்ன செய்வது என்ற எனது சந்தேகத்தை ரஜினிக்கும்,
ஷங்கருக்கும் போன் பண்ணி தெரிவித்தேன். ஆனால்
அவர்கள், ‘அப்படியெல்லாம் எதுவும் வராது. கறுப்பு
என்பதை பெருமையாகத் தானே சொல்கிறோம் ? அதுக்கு
மேல வந்தா நாங்க பார்த்துக்கறோம்’ என்று என்னைச்
சமாதானம் செய்தார்கள்.
சினிமாவை, சினிமாவாகப் பார்க்கும் வழக்கம் இப்போது குறைந்து விட்டது.
ஒரு வக்கீலைக் கிண்டல் செய்து வசனம் எழுதினால்
வக்கீல்கள் ஸ்ட்ரைக் அறிவிக்கிறார்கள். ஒரு டாக்டர்,
ஒரு ஸ்டுடன்ட், ஒரு ஆட்டோ டிரைவர்…என்று யாரையும்
கிண்டல் செய்து எழுத முடிவதில்லை. ஒரு வசனகர்த்தா
சினிமாவில் வரும் ஒரு கேரக்டரைத்தான் கிண்டல்
செய்கிறார் என்று எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம்
மற்றும் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது…
.
…………………………………………….
//வசனம் குறைவாக இருந்தாலும் இன்றைய ரசிகன் புரிந்துகொள்கிறான். // – இந்திய ரசிகர்கள் A,B,C என்று வகைப்படுத்தப் படுகிறார்கள். நீள வசனங்கள் வைப்பது B மற்றும் C ரசிகர்களுக்காக. மணிரத்னம் போன்றவர்களின் படங்கள், விஜயகாந்த் படங்களிடம் பல நேரங்களில் தோல்வியுற்றிருக்கிறது. அதன் காரணம், இந்த ஸ்டைல்தான்.