ஜூனியர் பதில்கள் – அரசியல்வாதிகள்நேர்மையாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்படி சரி…?

…………………………………….

…………………………………….

வாசக நண்பர் – bandhu …கேள்வி –

கேள்வி பதில் பகுதியை வரவேற்கிறேன்.
என் மனதில் நெடுநாளாய் துருத்திக்கொண்டிருக்கும் கேள்வி.

நாமெல்லாம் ஒரு வேலைக்கு சென்றோ
பிசினெஸ் செய்தோ வருமானம் ஈட்டி பிழைக்கிறோம்.
அதே சமயம் அரசியல்வாதி என்பவருக்கு பதவிக்கு
வந்ததும் தான் சம்பளம் என்று ஒன்று கிடைக்கிறது.
அதுவரை கட்சி சம்பளமாக கொடுப்பது எதுவும்
கிடையாது. அப்படி இருக்கும்போது, அரசியல்வாதிகள்
நேர்மையாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்படி சரி?
By Design, அவர்கள் ஊழல் செய்துதான்
பிழைக்கவேண்டியிருக்கிறது! இந்த predicament-ஐ
சரி செய்வது எப்படி?
…………………………

ஜூனியர் பதில் –

தொழில், வருமானம், பிழைப்பு- ஆகியவற்றோடு அரசியலை சம்பந்தப்படுத்துவதால் உங்களுக்கு இந்த கேள்வி வருகிறது….
அரசியல் எப்படி பிழைப்பு என்று ஆகும்….?

வருமானத்திற்காக அரசியலை தேர்ந்தெடுப்பது சரி
என்கிற இந்த மாதிரி எண்ணம் ஏன், எப்படி – உருவானது….?

இந்த கேள்வி உங்களிடம் உருவாக அடிப்படை காரணம்,
இந்த நடைமுறையை நீங்களும், உங்களைப்போல் மக்களில்
பெரும்பாலோரும் ஏற்றுக்கொண்டு விட்டது தானே…?

1967-க்கு முன்னால், அரசியலுக்கு வந்தவர்கள்,
பிழைப்புக்காகவா வந்தார்கள்…?

1947-ல் சுதந்திரம் பெறும் முன்னர் அரசியலில் இருந்தவர்கள்
பிழைப்பிற்காகவா அரசியலுக்கு வந்தார்கள்…?

நடைமுறையை மாற்ற நம்மைப் போன்றவர்கள் முயற்சிக்க
வேண்டும்…நியாயமானவர்கள், நேர்மையானவர்கள்
அரசியலில் ஈடுபடத் தூண்ட வேண்டும்… ஆதரிக்க வேண்டும்.

” இது இப்படித்தான் இருக்கும் –
By Design, அவர்கள் ஊழல் செய்துதான்
பிழைக்கவேண்டியிருக்கிறது “
என்று நினைத்து போய்விடக் கூடாது….

……………………………………………

வாசக நண்பர் புதியவன் கேள்வி –

கா.மை. சார் என்ன சொல்கிறார் என்று பார்க்க
எனக்கும் ஆசைதான். இதற்கு ஒரு துணைக்கேள்வி
எனக்கு உண்டு.

நாமெல்லாம் நல்ல வேலை கிடைக்கும் என்று எல்.கே.ஜி
முதல் முதலீடு செய்து (நம்ம பெற்றோர் செய்கிறார்கள்)
படிக்கிறோம். பல்வேறு தேர்வுகள் எழுதி அரசு
வேலையைக் கைப்பற்றுகிறோம் (நான் சொல்வது லஞ்சம்
கொடுக்காமல் வாங்கும் வேலை). அப்புறம் நாம் எப்படி
நேர்மையாக இருப்போம்? அதாவது வேலை கிடைக்கும்
வரை நாம் பணம் செலவழித்திருக்கிறோம், நல்ல வேலை
கிடைக்கும் என்ற நம்பிக்கையில். அப்புறம் எப்படி
நேர்மையாக இருப்போம்? அதிலும் லஞ்சம் கொடுத்து
வேலை பெற்றால், சுத்தமாகவே ஊழல் செய்துதான்
சம்பளத்துக்கு அதிகமாக கிம்பளம் பெறவேண்டும்.

ஜூனியர் பதில்-

உங்களுக்கும் அதே வியாதிதான்…
ஒரு நல்ல அரசு வேலை கிடைக்கும் வரை, அதற்காக செலவு செய்த
பணத்தை லஞ்சம் வாங்காமல் வேறு எப்படி சம்பாதிப்பது என்று கேட்கிறீர்கள்…!!!

ஏன் – அரசு வேலை ஒன்று தான் பிழைக்க வழியா…?
வேறு தொழில்கள், வியாபாரம், விவசாயம், உடலுழைப்பு,
கணிணி, பொறி இயல், மருத்துவம் என்றெல்லாம் இல்லையா…?

படிப்பு – என்பது ஒரு மனிதனை, சமுதாயத்தில், ஒரு விதத்தில், தகுதியுள்ளவனாக ஆக்க உதவும் ஆரம்ப படிக்கட்டுகள்..
அதன் பின்பு, தன் படிப்பை, தன் அறிவை, தன் உழைப்பை –
மூலதனமாக்கி -நேர்மையான வழியில் பணம் ஈட்டிப் பிழைப்பது
தான் சரியான வழி அல்லவா…?

அது சரி …. அரசு வேலை என்றாலே லஞ்ச வரும்படி என்று நீங்கள்
முடிவுக்கு வருவது சரியா..? நான் 39 ஆண்டுகள் அரசுப் பணியில்
இருந்தவன்…. என் 19-வது வயதிலிருந்து 59-வயதில் வி.ஆர்.எஸ்.
வாங்கும் வரை கடனில் தான் இருந்தேன்…. நான் ரிடையர் ஆன அன்று
கூட, எனக்கு 1.30 லட்சம் ரூபாய் கடன் இருந்தது… ரிடையர்மெண்ட் பணம்
வந்த மறுநாள் தான் நான் 40 ஆண்டுக்கால கடன் வாழ்விலிருந்து
விடுதலை பெற்றேன்….
ஆனாலும் நான் – 5 காசு கூட லஞ்சம் வாங்கியதில்லையே….?
லஞ்சம் வாங்காமல் நேர்மையாக உழைக்கும் நிறைய பேரை நான் அறிவேன்.
அப்படிப்பட்ட பல ஆயிரக்கணக்கான மனிதர்களோடு நான் பணியாற்றி இருக்கிறேன்.


நல்லவர் – கெட்டவர் எந்த துறையில் தான் இல்லை…?
ஏன் நீங்கள் பணிபுரிந்த துறையில் இல்லையா….?

மாற்றப் பாருங்கள்…. சமுதாயத்தை…
நாமெல்லாம் சேர்ந்தது தான் இந்த சமுதாயம்….
ஆளுக்கு 5 பேரையாவது மாற்றுவோமே…
( என் பங்குக்கு நிறைய செய்திருக்கிறேன்…)

……………………………………………….

வாசக நண்பர் bandhu -கேள்வி –

இன்றைய தேதியில் கொள்கைகளுக்காகவோ,
கரிஸ்மாவுக்காகவோ, திறமையான பேச்சுக்காகவோ
யாரும் எந்த கட்சி கூட்டங்களுக்கும் யாரும் போவதில்லை.
இருநூறிலிருந்து ஐநூறு ரூபாயும், பிரியாணியையும்,
க்வார்ட்டரையும் கொடுத்து தான் எல்லோருமே.
மக்களை கட்சி கூட்டங்களுக்கு கூட்டி வருகிறார்கள்.
இந்த வாரம் மட்டும் திமுக 70 பொதுக்கூட்டங்களை
நடத்தியதாக சொல்கிறது. பேச்சாளர்கள் எல்லோருக்கும்
பணம் கொடுக்கப்படுகிறது. குறைந்த பட்சம் ஒரு
கூட்டத்துக்கு ஐந்து முதல் பத்து லட்சங்கள் செலவாகும்.
அப்படி பார்த்தால் ஒரு வருடத்துக்கு ஏகப்பட்ட பணம்
செலவாகும். இவ்வளவு பணத்தை கொட்டி நடத்தப்படும்
கட்சி நேர்மையாக இருப்பதற்கு சாத்தியம் இருக்கிறதா?

ஜூனியர் பதில் –

புதன் கிழமை, ஸ்ரீரங்கத்தில் பாஜக அலுவலகம் புதிதாக திறக்கப்பட்டது.
அதையொட்டி 3-4 கி.மீட்டர் ஊர்வலம் ஒன்று நடந்தது. அதில், தான்
போய் கலந்து கொண்டு வந்ததாகவும், அதற்காக 100 ரூபாய் பணமும்,
ஒரு பிரியானி பொட்டலமும் கிடைத்ததாக எங்கள் வீட்டில் பணி புரியும்
பெண்மணி சொன்னார்…
இதை எப்படி எடுத்துக் கொள்வது…..?
பணம் பண்ணாத அரசியல் கட்சி இன்றைய தினம் இந்தியாவில்
எதுவுமே இல்லை… யாருமே தூயவர்கள் இல்லை…
யாருமே முழு யோக்கியர் இல்லை. பர்செண்டேஜ் மாறலாம்…அவ்வளவே.

அது மாநில …………..தி-யாக இருந்தாலும் சரி.
மத்திய …………….ஜி- யாக இருந்தாலும் சரி…

தேர்தல் சட்டங்களில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தால்,
இதை கொஞ்சம் திருத்த முடியும்….
எனக்கே நிறைய யோசனைகள்உண்டு…. ஆனால், யார் கேட்பார்கள்…?
மற்றொரு டி.என்.சேஷன் எப்போது வருவார்….?

…………………………………………..

ஒரு வாசக நண்பர் –

வள்ளுவர், மற்றும் இந்து மத சம்பந்தமான எவரையும்
‘மதச்சார்பற்றவர்கள்’ என்ற ஜாடியில் ஏன் அடக்க
நினைக்கிறார்கள்? கிறித்துவரான வைரமுத்துவுக்கு
திருவள்ளுவர் இந்துமதம் என்று ஒத்துக்கொள்வதில்
என்ன பிரச்சனை இருக்கமுடியும்? இதிலெல்லாம்
வெளிநாட்டுச் சதி இருப்பதாக நீங்கள் நினைக்கவில்லையா
(உங்கள் பதில் வந்த பிறகு ஆதாரம் தருகிறேன்)

‘மதச்சார்பற்ற’ என்றால் என்ன அர்த்தம்? இந்திய அரசியலில்
இதைப் போன்று, அர்த்தமற்ற வார்த்தைகளை வைத்து
அரசியல் செய்வதை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?

ஜூனியர் பதில் –

கிறித்துவரான(???) வைரமுத்துவுக்கு திருவள்ளுவர் இந்துமதம் என்று ஒத்துக்கொள்வதில் என்ன பிரச்சனை இருக்க முடியும்?
திருவள்ளுவர் வாழ்ந்தது நிச்சயம் கிறிஸ்தவம் தோன்றுவதற்கு
முன்னர் தான். இந்த மாதிரி நபர்கள் இப்படி பேசும்போது,
செய்தியாளராக இல்லாமல், பொதுஜனங்களில் ஒருவராக
அங்கே இருந்தாலும் கூட- பொட்டில் அடித்தாற்போல் எதிர்க் கேள்வி
கேட்க வேண்டும்…. அன்று பொதுமக்கள் வாய்மூடி மவுனம்
சாதித்ததால் தான் கோவில் எதிரிலேயே-
” கடவுளை நம்புபவன் முட்டாள் ” என்று எழுதி,
போலீஸ் காவலுடன் சிலையும் வைக்க முடிந்தது.
உடனுக்குடன் ரீ-ஆக்ட் செய்ய வேண்டும்….
யாராக இருந்தாலும் சரி. முதலில் 4 பேர் ஆரம்பித்தால், பிறகு
அது 40 ஆகவும், 4000 ஆகவும் மாற அதிக காலம் பிடிக்காது.

(பின் குறிப்பு – இதிலெல்லாம் வெளிநாட்டுச் சதி இருப்பதாக நீங்கள் நினைக்கவில்லையா..? (உங்கள் பதில் வந்த பிறகு ஆதாரம் தருகிறேன் – )

 • பதில் வந்துவிட்டது… உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை எனக்கு அனுப்பலாம்…!!!)

‘மதச்சார்பற்ற’ என்றால் என்ன அர்த்தம்?

எனது புரிதலின்படி,
இந்திய அரசியல் சட்டத்தின்படி,
மதச்சார்பற்ற என்றால் –
“அனைத்து மதங்களையும் ஒரே நிலையில் பார்ப்பது”
என்பது தான் சரியான நிலையாகும்.

அதாவது, அரசாங்கம் எந்தவொரு தனிப்பட்ட மதத்திற்கும்
ஆதரவாகவோ – அல்லது எதிராகவோ,
பாரபட்சத்துடன் இயங்கக்கூடாது.

இந்தியாவில், சில( மாநில/மத்திய) அரசுகள் – இதை,
அரசு நாத்திக அரசாக இருக்க வேண்டுமாக்கும் என்று அபத்தமாக
புரிந்துகொண்டு இயங்கின. உண்மை அர்த்தம் அதுவல்ல.
( அதன் விளைவே பாஜக ஆட்சிக்கு வந்தது…!!! )

 • உண்மை அர்த்தம் அனைவரும் அவரவர் விரும்பும் மதத்தை
  அடுத்தவருக்கு தொல்லையாக இல்லாத விதத்தில்
  பின்பற்றி வாழலாம்…
 • அரசு இயந்திரம், அனைத்து மதங்களுக்கும் ஆதரவாக,
  அனைத்து மதத்தினரும் நல்லுறவுடன் வாழ
  உதவியாக, ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே.

( நண்பர்கள் கேள்விகளை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி –
kavirimainthan@gmail.com ) (இன்னமும் பதில் வராத நண்பர்களுக்கு – தயவுசெய்து கொஞ்சம் காத்திருங்களேன்…….)

.
………………………………………………………………………………………………………………….…..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to ஜூனியர் பதில்கள் – அரசியல்வாதிகள்நேர்மையாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்படி சரி…?

 1. bandhu சொல்கிறார்:

  என் கேள்விகளுக்கு பதிலளித்ததற்கு நன்றி சார்! எனக்கும் 1967 -க்கு முன் இருந்தவர்கள் போல் அரசியலுக்கு தகுதியானவர்கள் வருவதை வரவேற்க ஆசையாக உள்ளது. கடந்த 50 வருடங்களில், அரசியலை நன்றாக கெடுத்து வைத்திருக்கிறார்கள்!

  அதே போல், காசு கொடுத்து ஆள் சேர்ப்பதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கில்லை!

  தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நமக்கு நன்மை செய்பதற்க்கே என்ற மனப்பான்மை வரவேண்டும். ‘சும்மாவா குடுக்கறான்? அடிச்ச காசுல குடுக்கறான். வாங்கினா என்ன தப்பு’ என்று காசை கட்சிகளிடம் வாங்கும் மக்கள் மனப்பான்மை மாறவேண்டும்.

  நல்லதே நடக்கும். நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை!

 2. புதியவன் சொல்கிறார்:

  //இதை, அரசு நாத்திக அரசாக இருக்க வேண்டுமாக்கும் என்று அபத்தமாக புரிந்துகொண்டு இயங்கின. // எந்த அரசு இப்படி இயங்கியது? இந்தியாவில், ‘மதச்சார்பின்மை’ என்று சொல்லி, சிறுபான்மையினருக்குச் சார்பாகத்தான் எந்த அரசாங்கங்களும் இயங்கின. இதனால் மட்டுமல்ல, காங்கிரஸ் அரசின் தாளமுடியாத ஊழலாலும், பாஜக ஆட்சிக்கு வந்தது.

  //அவரவர் விரும்பும் மதத்தை அடுத்தவருக்கு தொல்லையாக இல்லாத விதத்தில் பின்பற்றி வாழலாம்…// – இதை இரண்டு வகையாக நடைமுறைப்படுத்தலாம். (1) அரசின் சட்டம் அனைவருக்கும் ஒன்றே. அரசு, பல மதங்களின் முக்கியமான தினங்களை அரசு விடுமுறையாக, அரசு கொண்டாடுவதாக நடைமுறைப்படுத்துவது (உ) சிங்கப்பூர் (2) எமிரேட்ஸ், பஹ்ரைன் போன்ற கல்ஃப் தேசங்கள். அரசின் மதம் இஸ்லாம். ஆனால் மற்ற வழிபாடுகளுக்குள் அரசு குறுக்கிடாது. ஆனால் அரசின் மதமான இஸ்லாம் அதன் வழிமுறைகள் மதிக்கப்படவேண்டும். அதற்கான சட்டங்களும் இயற்றப்பட்டிருக்கின்றன.

  வைரமுத்து மாத்திரமல்ல, பலரும் கிறித்துவர்கள்தாம், ஆனால் இந்துப் பெயர் வைத்துக்கொண்டு ஊரை, சட்டத்தை ஏமாற்றுகின்றனர். (டேனியல்-திருமுருகன் காந்தி-மே 17 இயக்கம், செபாஸ்டியன் சைமன் – சீமான் – நாம் தமிழர், ஸ்டீபன் – உதயகுமார்-கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு, ஆரோக்யராஜ்-இயக்குநர் கௌதமன், டேனியல் ராஜா-டி.ராஜா-கம்யூனிஸ்ட், சாகுல் ஹமீது-மனுஷ்யபுத்திரன் – திமுக, ஸ்டெல்லா-வீரலட்சுமி-தமிழர் முன்னேற்றப் படை, விக்டர் ஜேம்ஸ்-வைரமுத்து-திமுக, அரோக்கிய மேரி-வளர்மதி-அதிமுக என்று வெகு சிலரை இங்குக் கொடுத்திருக்கிறேன். இது தவிர ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின் என்று லிஸ்ட் வெகு நீளமானது)

  வாடிகனின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழகத்திலிருந்த ஆயர், திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் கிறித்துவர் என்று ஸ்தாபிக்க பண உதவி செய்ததும், அப்படி ஸ்தாபிப்பது முடியாத காரியமாகிவிட்டது என்றும் தமிழறிஞர் ஒருவர் எழுதியிருந்தார் (இதனைப் பற்றி விளக்கமாகப் படித்திருக்கிறேன். இப்போ சட்னு நினைவுக்கு வரவில்லை. வந்ததும் பகிர்கிறேன்). இதனால்தான் கருணாநிதி மூலமாக, திருவள்ளுவருக்கும் இந்து மத அடையாளங்கள் இல்லாமல் படம் வரைய அழுத்தம் தரப்பட்டு அதனை கருணாநிதி நிறைவேற்றினார். திருமயிலையில்தான் திருவள்ளுவரின் (பிறந்த அல்லது இறந்த) இடத்தில் அவருக்கு கோயில் உள்ளது, இப்போதும் வழிபாடு நடக்கிறது. இதைப்போன்றுதான் வள்ளலாருக்கும்.

  //இவ்வளவு பணத்தை கொட்டி நடத்தப்படும் கட்சி நேர்மையாக இருப்பதற்கு சாத்தியம் இருக்கிறதா?// – உலகத்தில் எந்தக் கட்சியுமே நேர்மையாக இருக்க சாத்தியக்கூறு இல்லை. தங்கள் எதிர்பார்ப்புகளுக்காக தாங்கள் நினைக்கும் கட்சி வெற்றிபெற வேண்டும் என்று பேரம் பேசி, கட்சி நிதி/தேர்தல் நிதி தருபவர்கள், அந்தச் சட்டங்களை நிறைவேற்றவில்லை, அதற்கு எதிராக நடந்துகொள்கிறது என்பதற்காக கென்னடி போன்றவர்களைச் சுட்டுக்கொன்ற சம்பவங்களே இவற்றிர்க்கு சாட்சி. இதற்கு லேடஸ்ட் உதாரணம், திமுகவிடமிருந்து லஞ்சம் பெற்ற இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்.

  //அரசு வேலை என்றாலே லஞ்ச வரும்படி என்று நீங்கள்
  முடிவுக்கு வருவது சரியா..? நான் 39 ஆண்டுகள் அரசுப் பணியில்
  இருந்தவன்// – சில துறைகளில் இருப்பவர்கள், தங்களையே நொந்துகொண்டு லஞ்சம் வாங்க முடியாமல் போய்விட்டதே என்று வருந்துகிறார்கள். உங்களைப் போன்ற நேர்மையானவர்களும் இருக்கிறார்கள் என்பது உண்மைதான், ஆனால் அதன் சதவிகிதம் மிக மிகக் குறைவு. அரசுத் துறையில் (போலீஸ், EB, பட்டா/சாதி சான்றிதழ் என்று பல துறைகள் உட்பட) ஏதாவது நியாயமான காரியங்களுக்குச் சென்றாலும் பணம் இல்லாமல் ஒன்றும் நடக்காது.

  //ரிடையர்மெண்ட் பணம் வந்த மறுநாள் தான் நான் 40 ஆண்டுக்கால கடன் வாழ்விலிருந்து விடுதலை பெற்றேன்// – உங்களைப் போன்றவர்களும் இருப்பதனால்தான் ‘பெரும்பாலான’ என்ற பதத்தை உபயோகிக்கவேண்டி வருகிறது. ஆனால் ஒன்று, லஞ்சப் பணத்தில் வாழ்க்கை நடத்தியவர்கள் நன்றாக இருந்ததுபோல எனக்குத் தெரிந்து இல்லை, மணற்கொள்ளையை ஆரம்பித்த ஆறுமுகசாமி, மக்களுக்கு லஞ்சப்பணம் கொடுத்து திருமங்கலம் ஃபார்முலாவை ஆரம்பித்த…. உட்பட

 3. சேந்தன் அமுதன் சொல்கிறார்:

  //நான் 39 ஆண்டுகள் அரசுப் பணியில்
  இருந்தவன்…. என் 19-வது வயதிலிருந்து 59-வயதில் வி.ஆர்.எஸ்.
  வாங்கும் வரை கடனில் தான் இருந்தேன்…. நான் ரிடையர் ஆன அன்று
  கூட, எனக்கு 1.30 லட்சம் ரூபாய் கடன் இருந்தது//

  ஐயா, இது லஞ்சம் வாங்காமல், அரசு துறையில் இருப்பவர், கடனாளியாக வேண்டும் என்பது போல தொனிக்கிறது. என் தந்தை உயர்த்த பொறுப்பில்(கழகங்கள் ஆட்சியில் அல்ல), தமிழக அரசு துறையில், லஞ்சம் வாங்காமல், கடனும் இல்லாமல், மிகவும் எளிமையாக, சிக்கனமாக இருந்தார். நாங்களும் கிடைத்ததை கொண்டு கடன் இல்லாமல் இருந்தோம்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   .

   சேந்தன் அமுதன்,

   உங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

   உங்கள் 2-வது பின்னூட்டத்தைப் பார்த்த பின் தான்
   முதல் பின்னூட்டத்திற்கு பதில் எழுத நினைத்து,
   ஆனால் எங்கோ டைவர்ட் ஆகி, எழுதத் தவறி விட்டேன்
   என்பதை உணர்ந்தேன்….

   நீங்கள் சொன்னது உங்கள் குடும்பத்திற்கு, உங்கள்
   அப்பாவிற்கு பொருந்தும்…. ஆனால், உலகில் ஒவ்வொரு
   தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையும், பொறுப்புகளும்
   வித்தியாசமானவை ஆயிற்றே….

   சிலருக்கு குடும்பம் என்றால்- கணவன், மனைவி மற்றும்
   குழந்தைகளோடு சரி.

   ஆனால், பலருக்கு, அவர்களது வாழ்க்கையில் –
   வயதான, நோயாளிகளான தாய், தந்தை, மற்றும்
   அவர்களைவிட சிறியவர்களான வளரும் தங்கைகள்,
   தம்பிகள் – அவர்களின் படிப்பு, வேலை, திருமணம் என்று
   பல பொறுப்புகளும் –

   தங்கள் மனைவி, குழந்தைகளைத் தவிரவும் சேர்ந்து
   கொள்கின்றனவே. குறிப்பிட்ட மாத வருமானத்தில்
   அத்தனையையும் சமாளிப்பது சிரமமே…. கூடவே,
   ரிடையர் ஆவதற்குள் ஒரு வீட்டையும்
   கட்டத் துவங்கினால்…?

   மேலும், நான் – உயர் பதவியில் இருந்தவன் அல்ல.

   – இப்போது புரிந்து கொள்வீர்களென்று நம்புகிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. bandhu சொல்கிறார்:

  என் தந்தை மிக நேர்மையாக 35+ வருடங்கள் அரசு பணியில் இருந்தார். அவரும் சொந்த வீடு கட்டிய கடனை ஒய்வு பெரும் வரை அடைக்க முடியாமலே இருந்தார்! கடன் தொகை மிக சொற்பம்.. ஒய்வு பெருமுன் வந்த கேன்சர், கடன் உட்பட எல்லாவற்றையும் அப்படியே ஸ்தம்பிக்க வைக்க வைத்துவிட்டது!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.