“உறவு” – கவிஞர் கண்ணதாசன் …

`மனிதன், சமுக வாழ்க்கையை மேற்கொண்டுவிட்ட
ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்.

காட்டு மிராண்டிகளாகச் சிதறிக் கிடந்த மனிதர்கள்
குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள்.
அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் `ஊர்’ என்று அழைக்கப்பட்டது.

அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் `நகரம்’ என்றழைக்கப்பட்டது.

தனி மனிதர்கள் `சமுக’மாகி விட்டார்கள்.

தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.

அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாகக் கருதப்பட்டுத் தருமங்களாயின.

கணவன் மனைவி உறவு, தாய் தந்தை பிள்ளைகள் உறவு,
தாயாதிகள் பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான
கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.

தந்தைவழித் தோன்றல்களெல்லாம் பங்காளி’களாகவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம்சம்பந்தி’களாகவும், தாய்வழித் தோன்றல்கள் `தாயாதி’களாகவும்
ஒரு மரபு உருவாயிற்று.

வார்த்தைகளைக் கவனியுங்கள்.

தந்தைவழி பங்குடையவன் என்பதாலே பங்காளி’யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம்தாயாதி’ என்றும் கூறப்பட்டது.

சகோதரன்’ என்ற வார்த்தையேசக உதரன்-
ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.

சம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி,
அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகி விட்டன.

இந்த உறவுகளுக்குள்ளும், பொதுவாகச் சமு கத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி,
அவையும் சட்டங்களாகி விட்டன.

இந்தச் சட்டங்களே நமது சமுகத்தின் கவுரவங்கள்;
இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.

இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும், நிம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.

ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்…?

இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.

“பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல்,
பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை”
என்பது இந்துமதத் தத்துவம்.

பிறப்பின் உறவுகளே பேதலிக்கின்றன.

பெற்ற தந்தையைப் பிச்சைக்கு அலையவிடும் மகன்
இருக்கின்றான்.

கட்டிய தாரத்தையும் பட்டினி போடும் கணவன் இருக்கிறான்.

தாயைத் தவிக்கவிட்டுத் தாரத்தின் பிடியில் லயித்துக்
கிடக்கும் பிள்ளை இருக்கிறான்.

கூடப் பிறந்தவனே கோர்ட்டுப் படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.

சமுக மரபுகள் இவற்றை ஒழுக்கக் கேடாகக் கருதவில்லை.

முதலில் நமது சமு கங்களுக்கு, `இவையும் ஒழுக்கக் கேடுகள்’
என்று போதித்தது இந்து மதம்.

கணிகை ஒருத்தியைக் கட்டிலில் போட்டு இரவு முழுவதும் விளையாடுகிறோம். இச்சை தீர்ந்ததும், அவளைத்
தள்ளிப் படு என்றுதான் சொல்லத் தோன்றுகிறதே தவிர,
அங்கு நீக்க முடியாத பிணைப்பு ஏற்படுவதில்லை.

அந்த உறவு அந்த இரவுக்கு மட்டுமே…!

அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம். வேலையிலிருந்து விலகியதும், வேலை பார்த்த இடத்தை மறந்து விடுகிறோம்.
அந்தப் பிணைப்பு கூலிக்காகவே!

ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்குவது போல்
சில உறவுகள், சொந்த வீட்டில் வாழ்வது போல் சில உறவுகள்.

ஆயிரம் வாசல் இதயம்! யாரோ வருகிறார்கள்.
யாரோ போகிறார்கள்!

வாழ்ந்தால் சிரிக்கிறார்கள்; வறண்டால் ஒதுங்குகிறார்கள்;
செத்த பின் ஒப்புக்காக அழுகிறார்கள்.

இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, ஓர் ஆத்மா தாக்கப்படும்
போது இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்குமானால்,
அந்த உறவே புனிதமான உறவு.

பிறப்பில் சொந்தமிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.

அது மனிதனாயினும் சரி, நாய் பூனையானாலும் சரி.

எங்கே பந்தம் ஏற்றத்தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ,
அங்கேதான் உறவிருக்கிறது.

கண்ணீரைத் துடைக்கின்ற கைகள், காயத்துக்குக்
கட்டுப் போடும் கைகள், வறுமையில் பங்கு கொள்ளும்
உள்ளம், சோதனையில் கூடவே வரும் நட்பு உறவு
பூர்த்தியாகி விடுகிறது.

“அற்ற குளத்தி னறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா ருறவல்லர் அக்குளத்திற்
கொட்டியு மாம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவா ருறவு!” – என்றார் அவ்வையார்

இதற்குப் புராணத்திலிருந்து ஒரு பகுதியை உதாரணம் காட்டி விரிவுரை தருகிறார், திருமுருக கிருபானந்த வாரியார்.

அதை அவருடைய வாசகத்திலேயே தருகிறேன்.

`இடர் வந்த காலத்தில்தான் சிநேகிதர், பந்துக்கள் முதலியவர்களுடைய அன்பைத் திட்டமாக அளந்தறியலாம்.
நமக்கு வரும் இடர்தான், சிநேகிதரையும் உறவின்
முறையினரையும் அளக்கும் அளவுகோல். ஆதலால்
அக்கேட்டிலும் ஒரு பயன் உளது’ என்றார் பொய்யில் புலவர்.

கேட்டினும் உண்டோர் உறுதி; கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

இது சம்பந்தமாக, தருமபுத்திரர் வினவ, பீஷ்மர் கூறிய வியாக்கியானத்தை எடுத்துக் காட்டுவோம்.

காசிராஜனுடைய தேசத்தில் ஒரு வேடன், விடமுள்ள
பாணத்தை எடுத்துக்கொண்டு, சேரியிலிருந்து புறப்பட்டு
மானைத் தேடிப் போனான். அங்கு ஒரு பெரிய வனத்தில்
மான்கள் அருகிலிருக்கக் கண்டு, மாமிசத்தில் இச்சையுடைய
அந்த வேடன், ஒரு மானையடிக்கக் குறிவைத்துக் கூரிய
பாணத்தை விடுத்தான்.

தடுக்க முடியாத அந்தப் பாணம் குறி தவறியதால், அக்கானகத்திலுள்ள ஒரு பெரிய தழைத்த மரத்தின் மீது
பாய்ந்தது. கொடிய விடந்தடவிய கணையினால் மிக்க
வேகத்துடன் குத்தப்பட்ட அம்மரம், காய்களும் இலைகளும்
உதிர்ந்து உலர்ந்து போயிற்று. வானளாவி வளர்ந்தோங்கி
யிருந்த அத்தருவானது அவ்வாறு உலர்ந்தபோது, அதன் பொந்துகளில் வெகுநாள்களாக வசித்திருந்த ஒரு கிளி,
அம்மரத்தின் மேலுள்ள பற்றினால் தன்னிருப்பிடத்தை
விடவில்லை.

நன்றியறிவுள்ளதும் தருமத்தில் மனமுள்ளதுமாகிய

அந்தக் கிளி வெளியிற் சஞ்சரியாமலும், இரையெடாமலும், களைப்புற்றும், குரல் தழுதழுத்தும், மரத்துடன் கூடவே
உலர்ந்தது. மரஞ்செழிப்புற்றிருந்த போது அதனிடஞ்
சுகித்திருந்தது போல், அது உலர்ந்து துன்புறும்போதும்
அதனை விட்டுப் பிரியாமல் தானுந்துன்புற்றிருந்தது.
அந்தக் கிளியின் உயர்ந்த குணத்தை நன்கு நோக்குங்கள்.

சிறந்த குணமுள்ளதும், மேலான சுபாவமுள்ளதும் மனிதர்க்கு மேற்பட்ட நல்லொழுக்கமுடையதுமான அக்கிளி, அம்மரத்தைப் போலவே சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்ட தேவேந்திரன் திகைப்படைந்தான்.

திரியக் ஜாதிகளுக்கு இல்லாத கருணையை இந்தப் பட்சி அடைந்திருப்பது எவ்வகை?’ என்று நினைத்தான்; பிறகு,
இதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எல்லாப்
பிராணிகளிலும் குணம், குற்றம் எல்லாம் காணப்படுகின்றன’
என்ற எண்ணமும் இந்திரனுக்கு உண்டாயிற்று.

இங்ஙனமெண்ணிய இந்திரன், மானிட உருவெடுத்து ஓர்
அந்தணன் வடிவமாகப் பூமியில் இறங்கி, அந்தப் பட்சியைப்
பார்த்து, “ஓ பட்சிகளிற் சிறந்த கிளியே! உன் தாயாகிய தாயி உன்னால் நல்ல சந்ததியுள்ளவளாக ஆகிறாள். கிளியாகிய
உன்னை நான் கேட்கிறேன். உலர்ந்துபோன இந்த மரத்தை
ஏன் விடாமலிருக்கிறாய்?” என்று கேட்டான்.

இமையவர் தலைவனாம் இந்திரனால் இவ்வாறு கேட்கப்பட்ட கிளியானது அவனுக்குத் தலைவணங்கி நமஸ்காரம் புரிந்து, “தேவராஜாவே, உனக்கு நல்வரவு, நான் தவத்தினால்
உன்னைத் தெரிந்து கொண்டேன்” என்று சொல்லிற்று.
தேவேந்திரன் “நன்று! நன்று” என்று கூறி `என்ன அறிவு’
என்று மனத்திற்குள் கொண்டாடினான்.

இவ்வாறு சிறந்த செய்கையுள்ளதும், தருமத்தையே
முக்கியமாகக் கொண்டதுமாகிய அந்தக் கிளியைப் பார்த்து இந்திரன், தான் கேட்பது பாபமென்று தெரிந்திருந்தும்
கேட்கத் தொடங்கினான்.

“அறிவிற் சிறந்த பறவையே!
இலைகளும் காய்களும் இன்றி உலர்ந்து, பறவைகளுக்கு
ஆதரவற்ற இம்மரத்தை ஏன் காக்கிறாய்?
இது பெரிய வனமாயிருக்கிறதே! இலைகளினால் முடப்பட்ட பொந்துகளும் சஞ்சரிக்கப் போதுமான இடமுள்ள இன்னும்
அழகான மரங்களும் அநேகம் இப்பெரிய வனத்திலிருக்கையில் முதிர்ச்சி யடைந்து, சக்தியற்று, இரசம் வற்றி ஒளிகுன்றிக்
கெட்டுப் போன இந்நிலையற்ற மரத்தைப் புத்தியினால்
ஆராய்ந்து பார்த்து விட்டு விடு.”

அமேரேசனுடைய இந்த வார்த்தையைக் கேட்டு தர்மாத்மாவான அந்தக்கிளி, மிகவும் நீண்ட பெருமுச்செறிந்து துயரத்துடன் பின்வருமாறு சொல்லத் தொடங்கிற்று:

“மகாபதியே! இந்திராணியின் கணவனே! யாவராலும்
வெல்ல முடியாத தேவர்களிருக்கும் பொன்னுலகத்தில்
வசிக்கும் நீ, நான் கூறுவதைத் தெரிந்து கொள். அநேக
நற்குணங்கள் பொருந்திய இம்மரத்தில் நான் பிறந்தேன்.
இளமைப் பருவத்தில் நன்றாகப் பாதுகாக்கப்பட்டேன். பகைவர்களாலும் பீடிக்கப்படாமல் இருந்தேன். மழை, காற்று,
பனி, வெயில் முதலிய துன்பங்களால் வருந்தாது, இத்தருவில் சுகித்திருந்தேன்.

வலாரியே! தயையும் பக்தியுமுள்ளவனாக வேறு இடம் செல்லாமலிருக்கும் என் விடயத்தில் அனுக்கிரகம் வைத்து
என் பிறவியை ஏன் பயன்படாமற் செய்கின்றாய்?

நான், அன்பும் பக்தியுமுள்ளவன். பாவத்தைப் புரியேன்.
உபகாரிகள் விடயத்தில் தயை செய்வதுதானே தருமத்திற்கு முக்கியமான இலக்கணம். தயை செய்வதே நல்லோர்களுக்கு எப்போதும் மனத்திருப்தியை உண்டாக்குகிறது. எல்லாத்
தேவர்களும் தருமத்திலுள்ள சந்தேகங்களை
உன்னிடத்திலேயே கேட்கின்றனர். அதனாலேயே, நீ தேவசிரேட்டர்களுக்கு அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறாய். இந்திரனே! வெகுகாலமாக இருந்த
மரத்தை நான் விடும்படி நீ சொல்வது தகாது. நல்ல நிலைமையிலிருந்ததை அடுத்துப் பிழைத்தவன், கெட்ட
நிலைமைக்கு வந்தவுடன், அதை எப்படி விடலாம்?”

” எக்காலமு மிப்பாதப மெனதாமென வைகி
முக்காலே முதிருங்கனி முசியாது கர்ந்தேன்

இக்காலமி தற்கிவ்வண மிடைறு கலந்தாற்
சுக்காதகல் வதுவோவுணர் வுடையோர்மதி தூய்மையே..!”

  • மகாபாரதம்

இவ்வாறு கூறிய, பொருளடங்கியதும், அழகுடையதுமாகிய கிளியினது வசனங்களால் மகிழ்வுற்ற இந்திரன், அதன் நன்றியறிவையும் தயையையும் எண்ணித் திருப்தியுற்று,
தருமம் தெரிந்த அக்கிளியைப் பார்த்து, “ஒரு வரம் கேள்!”
என்று சொன்னான்.

அன்பர்காள்! அக்கிளியானது தன் நன்மையைக் குறித்து
வரம் கேட்கவில்லை. அதனுடைய பெருங்குணத்தை உற்று நோக்குங்கள்!

எப்போதும், பிறர் நோவாமையைப் பெரிதாகக் கருதிய
அந்தக் கிளி, “ஏ தேவர் கோமானே! இம்மரமானது நன்றாகச் செழித்துத் தழைத்து ஓங்க வேண்டும்!” என்றது.

அப் பறவையினுடைய உறுதியான பக்தியையும் நிரம்பின நல்லொழுக்கத்தையும் அறிந்து களிப்புற்ற இந்திரன் உடனே அம்மரத்தின் மீது அமிர்தம் பொழிந்தான். அதனால் அத்தரு, கனிகளும், இலைகளும், கிளைகளும் உண்டாகித் தழைத்தது.

கிளியினுடைய உறுதியான பக்தியால் அம்மரம் முன்னைக்
காட்டிலும் மிகவும் நன்றாகச் செழித்தது.

நன்றியறிவு, தயை இந்தக் குணங்களின் பயனாகிய அச்செய்கையினால் கிளியும் அத்தருவில் இனிது
மகிழ்ந்திருந்தது. தன் ஆயுள் முடிந்த பிறகு
இந்திரலோகத்தை அடைந்தது.

.
………………………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s