

மம்மிகள் என்றால் எகிப்தின் மம்மிகள்தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். சிலர் மம்மிகளின் பிறப்பிடமும் எகிப்துதான் என்றும் நினைப்பது உண்டு. ஆனால், எகிப்தின் மம்மிகளைவிட சின்சோரோ மம்மிகள்தான் உலகின் பழமையாக மம்மிகள் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆம், எகிப்தின் மம்மிகள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் சேர்ந்தவை என்றால், சின்சோரோ மம்மிகள் 5,000 ஆண்டுகள் பழமையானவை என்று ஆதாரங்களுடன் கூறப்படுகிறது.
யார் இந்த சின்சோரோ மக்கள்…? –
தென் அமெரிக்க நாடான சிலியின் வடக்குப் பகுதிகளிலும், பெருவின் தென் பகுதிகளிலும் வாழ்ந்தவர்கள்தான் இந்த சின்சோரோ மக்கள். இம்மக்கள்தான் இந்த பிராந்தியத்தில் முதன்முதலில் இறந்த உடல்களைப் பதப்படுத்தும் முறையை கொண்டு வந்தவர்கள் என்கிறார் மானுடவியலாளர் பெர்னார்டோ அர்ரியாசா.
மம்மிகள் எப்படி பக்குவப்படுத்தப்பட்டன…?
உடலின் உட்புறத்தில் இருக்கும் பகுதிகளை (இதயம், நுரையீரல்,
கிட்னி, கொழுப்பு, சதை போன்ற அழுகக்கூடிய பகுதிகளை )
நீக்கி விட்டு, உள்ளே உலர்ந்த கிழங்குகள், விலங்குகளின் முடி
போன்றவற்றை கொண்டு நிரப்பினார்கள். இதுவரை
கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகப்பழமையான மம்மி,
சுமார் கி.மு.5050 வருடத்தையது – அதாவது சுமார் 7050 வருட
பழமையானது என்று Radiocarbon dating மூலம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ….!!!
இதுவரை 282 மம்மிகள் தென் அமெரிக்க நாடான சிலியில் அரிகோ’வில்( Morro de Arica) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பசுபிக் கடற்பகுதிகளில் கடல் வேட்டைக்காரர்களாக இருந்த இம்மக்களின் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவை அரிகா மற்றும் பரினிகோடா ஆகிய பிராந்தியங்களில் இன்று காணப்படுகிறது. மேலும், அப்பகுதிகளில் உள்ள பாலைவனங்களில் சின்சோரோ மக்களின் மம்மிகளும் காணப்படுகின்றன.
இவர்களும் எகிப்தியர்களைப் போன்ற இறுதிச் சடங்கு கலாசாரத்தை பின்பற்றி இருக்கிறார்கள். சொல்லபோனால், இறுதிச் சடங்கு கலாசாரத்தை கொண்டு வந்தவர்களே இவர்கள்தான் என்றும் கூறப்படுகிறது. இவை மட்டுமல்ல, சின்சோரோ மக்கள் மக்கள் கலை செயல்பாட்டிலும் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். அதற்கான சான்றுகளில் அவர்களின் மம்மிகளிலும் காணலாம். இதுவரை சின்சோரோ மக்களின் நூற்றுக்கணக்கான மம்மிகள் கண்டறியப்பட்டுள்ளன.
சின்சோரோ மக்களின் காலக்கட்டத்தில் அதிகப்படியான கருச்சிதைவுகள் நடந்துள்ளன. மேலும், சின்சோரோ மக்கள் மெக்னீசியத்தை தங்களது உடலில் பூசிக்கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளனர். மெக்னீசியம் நச்சுத்தன்மை கொண்டது. இதன் காரணமாகவும் சின்சோரோ மக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரிகா பகுதிகளில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் கூறும்போது, “நாங்கள் சின்சோரோ மக்களின் தொடர்ச்சி என்றுதான் நினைக்கிறோம். நாங்கள் இந்தப் பகுதியிலிருந்து வெளியேற மாட்டோம். முன்னோர்களாகிய அவர்களை நாங்கள் அடிக்கடி பார்வையிட இருக்கிறோம்” என்கின்றனர்.
உள்ளூர் மீனவர், “அவர்களும் எங்களைப் போல மீனவர்கள்தான். அவர்களும் இந்த இடத்தில்தான் இருந்தார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகுதான், நாங்கள் இந்த இடத்தில் குடியேறி இருக்கிறோம். ஆனால், நாங்கள் அவர்களை ஏற்றுக் கொண்டோம். அவர்களின் வாரிசுகளாக, அவர்கள் விட்டுச்சென்ற எச்சங்களை தற்போதைய சமூகத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம்” என்கிறார்.
.
………………………………………………………………………..…
பாரிஸ் லூவர் மியூசியத்தில்தான் எகிப்துப் பகுதியில் மம்மிகளை வைக்கும் பெட்டிகள் (அழகிய கூடுகள்) நிறையப் பார்த்தேன். அந்தப் பகுதியில் நடந்தபோதுதான் எனக்கு முதன் முதலில் அலர்ஜி வந்தது (இரவு 8 மணி). உடனேயே மியூசியத்தைவிட்டு வெளியில் சென்று நான் தங்கிய இடம் அடைந்தேன் (அரை மணி பிரயாணம்). மெதுவாக அலர்ஜி என்னை விட்டகன்றது. இல்லையென்றால், அந்த இரவில் என்ன செய்திருப்பேன், யாரை உதவிக்கு அழைத்திருப்பேன் என்பதே எனக்குத் தெரிந்திருக்காது 2004 என்று நினைவு.
பிறகு நிதானமாக இன்னொரு தடவை அங்கிருந்த மம்மிகளைப் பார்த்தேன். புகைப்படங்கள் கூட எடுத்துக்கொண்டேன். பிறகு வாய்ப்பு கிடைக்கும்போது பகிர்கிறேன்.
காலங்களையெல்லாம் பார்க்கும்போது, நாம் சொல்லும் மஹாபாரதம் இராமாயணம் காலங்களெல்லாம் ஏதோ கற்பனையில் உதித்ததல்ல என்பதும் புரிகிறது. மானுடர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே நாகரீகம் அடைந்திருக்கவேண்டும்.