
- பாரிஸ் நகரில் 1895-ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால்
கிராண்ட்கபே எனும் ஹோட்டலின் கீழ்தளத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது முதல்….1927-ஆம் வருடம் வரை – உலகம் பேசாத படங்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது ….
ஆனால், 1927-ல் முதல் முதலாக ஒரு படம் பேசுவதைக் கேட்டதும்,
பார்த்ததும் – உலகமே பிரமித்துப் போனது.
Silent film என அழைப்பட்ட பேசாத திரைப்படங்கள்
அதற்கு அப்புறம் Talkies -பேசும்படம் என்று அழைக்கப்படத்
துவங்கியது.
“ஒரு நிமிடம் பொறுங்கள்… ஒரு நிமிடம் பொறுங்கள்…
நீங்கள் இன்னும் எதையும் கேட்கவில்லை…!”
- என்கிறஇந்தச் சொற்கள் மிக எளியமானவையே….ஆனால்,
வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட சொற்கள்.
1927 அக்டோபர் 6-ல் வெளிவந்த உலகின் முதல் முழுநீளப் பேசும் சினிமாவில் முதன்முதலில் பேசப்பட்டு, ஆர்வம் மேலிட
பெருந்திரளாகக் கூடியிருந்த பார்வையாளர்களின் காதுகளில்
தேனாகப் பாய்ந்த சொற்கள்தாம் இவை. இதைச் செவியுற்ற
கூட்டத்தினர் ஆனந்தக்கூத்தாடினார்கள் . அடக்க முடியாத
மகிழ்ச்சி அவர்களை ஆட்கொண்டது. காலகாலத்துக்கும்
மனிதனால் மறக்கவே முடியாத வகையில் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டவை அந்த சொற்கள் …. அசையும் சினிமாப்
படத்தில் மனித நாவிலிருந்து முதன்முதலில் புறப்பட்டு
வெளிவந்த சொற்கள்….
இதைப் பேசியவர்தான் உலகின் முதல் பேசும்படக் கதாநாயகன். லிதுவேனிய அமெரிக்கப் பாடகர், நடிகர் அல் ஜோல்சன்தான் .
வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட அந்தத் திரைப்படம்தான் சாம்சன் ரஃபேல்சன் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு ஆல்ஃபிரட் ஏ.கோன் திரைக்கதை எழுதி, அலென் கிராஸ்லாண்ட் இயக்கத்தில்
வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட
‘தி ஜாஸ் சிங்கர்’ என்கிற உலகின் முதல் பேசும் படம்.
இந்தப் படத்தின் சுவாரஸ்யமான கதைச்சுருக்கம் –
நியூயார்க்கின் தாழ்வான கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மன்ஹாட்டனில் யூதர்கள் குடியிருப்புப் பகுதி உள்ளது. அங்கிருக்கும் தேவாலயத்தில் வழிபாட்டின்போது இறைப்பாடலைப் பாடுகிற சேர்ந்திசைக் குழுவுக்குத் தலைமையேற்று வழிநடத்துபவர்
ராபிநோவிட்ஸ்.
கேன்டர் என்றழைக்கப்படும் அவரது பணி அவர்கள் குடும்ப முன்னோர்களால் வழிவழியாக மேற்கொள்ளப்பட்டுவரும்
இசையோடு கூடிய இறைப்பணி. அந்தப் பணியில் தனக்குப் பின்னே
தனது மகன் ஜாக்கி ராபிநோவிட்சும் ஈடுபட வேண்டும் என
விரும்புகிறார் கேன்டர் ராபிநோவிட்ஸ்.
ஆனால், ஜாக்கிக்கு அதில் விருப்பமில்லை. அவனது 13 வயதிலேயே
அந்தப் பகுதியிலிருக்கும் இரவு மதுவிடுதியான பீர் கார்டனில்
ஜாஸ் எனும் இசை வடிவின் மெட்டுக்களைப் பாடுகிறான்.
இதைப் பார்த்துக் கோபம் கொண்ட ராபிநோவிட்ஸ் தன் மகனை
வீட்டிற்கு இழுத்து வருகிறார். சவுக்கால் அடிக்கிறார். தாயார்
சாராவிடம் அவன் பதுங்கிக்கொள்கிறான். ஆண்டவர் கொடுத்த
அவனது இனிமையான குரலை நான் சிதைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவேன் என்று கர்ஜிக்கிறார் அப்பா. தேவாலயத்தில் பாரம்பரியமாகக் கொண்டிருக்கும் ஈடுபாட்டை இவன் உதாசீனம் செய்கிறானே என்கிற ஆத்திரம் அவருக்கு.
அப்போது ஜாக்கி இப்படி அப்பாவை எச்சரிக்கிறான்:
“இனியும் நீங்கள் கசையடி கொடுத்தால் நான் இந்த வீட்டைவிட்டே ஓடிவிடுவேன். திரும்பி வரவே மாட்டேன்.”
இப்படிச் சொன்னவன் அம்மாவைப் பார்க்கிறான். அவளை முத்தமிடுகிறான். சொன்ன மாதிரியே வீட்டை விட்டு
வெளியேறுகிறான்.
யோம் கிப்பூர் என்றழைக்கப்படும் யூத மதத்தின் ஆண்டுதோறும்
வரும் புனிதநாளின் வழிபாட்டின்போது ராபிநோவிட்ஸ் தனது சக ஊழியர்களிடம் முணுமுணுக்கிறார்:
“இந்தப் புனிதநாளில் என்னருகில் என் மகன் எனக்குத்
துணையாகப் பாடிக்கொண்டிருக்க வேண்டும். ஆனால்,
என்ன செய்வேன்? எனக்குத்தான் மகனில்லையே…”
பத்து ஆண்டுகள் கழிகின்றன. ஜாக்கி தன் பெயரை தன்
குடும்பப் பெயருடன் இணைத்து ஜாக் ராபின் என்று வைத்துக்கொண்டிருக்கிறான். மிகப் பிரபலமான பாடகனாகி
விட்டான். மேரி டேல் எனும் இசையரங்கின் நடன யுவதியின்
அறிமுகம் அவனுக்குக் கிடைக்கிறது. அவனிடத்தில்
அவள் சொல்கிறாள்:
“எத்தனையோ ஜாஸ் பாடகர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால்,
உனது தேன் குரலில்தான் கண்ணீரின் இழை வழிந்தோடுகிறது!”
வளர்ந்துவரும் அந்த நடன தேவதை தனது கலைப்பணிகளினூடே
ஜாக் ராபினுக்குத் தொழில் ரீதியிலான உதவிகளைச் செய்ய முன்வருகிறாள். அதனால் அவனுக்கு வாய்ப்புகள் குவிகின்றன.
பல ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பும் அவனிடம் பாரம்பரியமாக அவர்கள் செய்துவரும் இசை ரீதியிலான இறைப்பணியின்
நுட்பத்தைப் பற்றி சிலாகிக்கிறார் அவனது தந்தை. ஆனால்,
அவனோ நவீன இசை குறித்த தனது விருப்பத்தை பதிலாகச்
சொல்கிறான். தந்தைக்கு மறுபடியும் கோபம் வருகிறது. மகனை வீட்டைவிட்டே துரத்துகிறார்.
“ஏய் ஜாஸ் பாடகா… இன்னொரு முறை உன்னை நான் பார்க்கவே
கூடாது!” என்கிறார்.
“நான் மனம் நிரம்ப அன்போடு வீட்டுக்குத் திரும்பிவந்தேன்.
நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் என்றாவது
ஒருநாள் உங்களுக்கு என்னைப் புரியும் அப்பா… என்னை அம்மா புரிந்துகொண்டதைப்போல…” – என்று தனக்குத் தானே சொல்லிக்
கொண்டு, மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறுகிறான் ஜாக்.
ஜாக்குக்கு மிகப் பெரிய இசை நிகழ்ச்சியொன்றுக்கு வாய்ப்பு
வருகிறது. அதற்கு 24 மணி நேரத்திற்குமுன் அவனது தந்தை நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் விழுகிறார்.
தர்மசங்கடமான சூழலில் தவிக்கிறான் ஜாக். பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதா அல்லது உடல்நலமில்லாமல் போய்விட்ட அப்பாவுக்குப் பதிலாக அவர்களின் தேவாலயத்தில் ஆண்டுதோறும் புனிதநாளின் வழிபாட்டின்போது யோம் கிப்பூருக்கான கானத்தைப் பாடி வழிநடத்துவதா என்கிற குழப்பம்.
இந்த ஆண்டு கேன்டர் இல்லாமலேயே புனிதநாள் கழியப்போகிறதோ என்று பதைக்கிறார்கள் திருச்சபையினர். மரணப்படுக்கையில்
நோயோடு போராடிக்கொண்டிருக்கிற அப்பாவோ தன் கனவில் மகன் வந்து பாடியதாகவும், அது மிகவும் நேர்த்தியாக இருந்ததாகவும் தன் மனைவியிடம் சொல்கிறார். தான் கனவு கண்டதுபோல அவன் தேவாலயத்தில் வந்து பாடினால் மன்னிக்கப்படுவான் என்கிறார்.
அவனது தாய் அவனைச் சமாதானப்படுத்தி தேவாலயத்தில்
அப்பாவுக்காக அழைத்துப்போக அவனைத் தேடி வருகிறாள்.
அப்போது அவன் மேடையில் தன்னை மறந்து ஜாஸ் இசை பாடிக்கொண்டிருக்கிறான். முதல் முறையாகத் தன் மகனின் மேடை நிகழ்ச்சியைப் பார்க்கிற சாராவுக்கு மெய் சிலிர்க்கிறது.
அவள் எண்ணிக்கொள்கிறாள்: ‘ஆண்டவர் விருப்பமிருந்தால்
அவனைத் தன் ஆலயத்திற்கு அழைத்துப் பாடச்செய்யட்டும்.
இனி அவன் எனக்குச் சொந்தமான என் மகனல்லன்.
இந்த உலகத்துக்கே சொந்தமான பெருங்கலைஞன்!’
ஜாக் வீடு திரும்புகிறான். தந்தையின் கட்டிலின் முன்னே
மண்டியிட்டு நிற்கிறான். “ஜாக்… ஐ லவ் யூ!” என்கிறார் அப்பா.
அவன் தேவாலயத்தில் பாடினால் அவனது தந்தை குணமாகக்கூடும் என்கிறாள் தாய். அப்போது மேரியும் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் அவனைத் தேடி வருகிறார்கள். அவன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லையென்றால் இனியொரு வாய்ப்பு அவனுக்குத் தரப்படமாட்டாது என்கிறார் தயாரிப்பாளர்.
“நான் இதுவரையில் தேவாலயத்தில் பாடியதே இல்லையே…”
என்கிறான் ஜாக்.
“உன் மனதிலிருப்பதைப் பாடு ஜாக். உன் குரலில் ஆண்டவர் இல்லையென்றால் அதை அப்பாவும் உணர்ந்துகொள்வாரே…”
என்கிறாள் தாய். ஜாக் தன் தந்தைக்காகப் பாடுகிறான்.
தொலைவிலிருந்து கேட்கும் அப்பா மகிழ்ச்சியோடு சொல்கிறார்:
“நம் மகன் நமக்கு மறுபடியும் கிடைத்துவிட்டான்..!”

அவனது பாடலை அவன் தோழி மேரியும் மெய் மறந்து கேட்கிறாள்.
ஜாஸ் பாடகன் ஆத்மார்த்தமாகத் தன் கடவுளைப் பாடுகிறான்…
காட்சி மாறுகிறது. அனைத்தையும் சரிசெய்கிறது காலம்.
வின்டர் கார்டன் தியேட்டரின் அரங்கு நிறைந்து கிடக்கிறது.
கருப்பு முகப்பூச்சுடன் மேடையில் ஜாஸ் பாடகனாகத்
தோன்றுகிறான் ஜாக். முன்வரிசையில் ஆர்வத்தோடு
அமர்ந்திருக்கும் தன் தாயைப் பார்த்துப் பாடத் தொடங்குகிறான்.
கதை இத்துடன் முடிகிறது…..!!!
முதல் பேசும்படத்திலேயே ஒரு கவித்துவமான கதையை
மிகவும் நேர்த்தியாக வழங்கியிருக்கிறது ஹாலிவுட். மரபார்ந்த பழைமைக்கும் புதுமைக்குமிடையே முரண் மோதலைப் பதிவு செய்திருக்கிறது இந்தப் படம். எடுத்த எடுப்பிலேயே சமூகத்தின்
நடப்பைச் சொல்லிய கதையாடல்.
‘தி ஜாஸ் சிங்கர்’ படத்தின் நாயகனாக அல் ஜோல்சனுடன்
வார்னர் ஓலண்ட், யூஜின் பெஸ்ஸாரர், மே மெக்அவாய்,
ஓட்டோ லிடரெர், ரிச்சர்டு டக்கர், யோசல் ரோசன்பிளாட்,
பாபி கோர்டன் போன்றோர் நடித்தார்கள். பாடகனைப் பற்றிய படமென்பதால் படத்தில் 12 பாடல்கள். லூயிஸ் சில்வர்ஸ்
இசையமைத்தார்.
உலகின் முதல் பேசும் சினிமாவை உருவாக்க வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு முக்கியமான தூண்டுதலாக இருந்தது –
அந்த நிறுவனத்தின் கடுமையான நிதி நெருக்கடி.
எதையாவது புதிதாகச் செய்யா விட்டால், நிறுவனமே
பிழைத்திருக்காது என்கிற நிலை.
அந்த நெருக்கடியிலிருந்து விடுபட சதாசர்வகாலமும்
செய்த விடா முயற்சிகளின் பலனாகவே, சினிமாவைப்
பேசவைக்கிற இந்த அறிவியல் அற்புதத்தை
அந்நிறுவனம் நிகழ்த்தியது.
நெருக்கடி தானே கண்டுபிடிப்புகளின் தாய் ….!!!
.
…………………………………………………………………………………………………………………