ஒரு தூக்கு தண்டனை அனுபவம்….நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்

“வழக்கறிஞராக பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தபோது நான்
என் கணவரின் அலுவலகத்தில்தான் சேர்ந்தேன். அவரது
அலுவலகத்தில் சிவில் வழக்குகளும் அரசமைப்பு வழக்குகளும்
தான் அதிகம் வரும். கிரிமினல் வழக்குகள் பெரும் பாலும் வராது.
அதனால் எனக்கும் அத்தகைய வழக்குகளில் வாதாடிய அனுபவம்
இல்லை. நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகுதான் நான்
முதல் கிரிமினல் வழக்கையே எதிர் கொண்டேன். தூக்குத்
தண்டனையின் மீதான தீர்ப்பு குறித்த வழக்கு அது. நீதிமன்றத்தில்
அதை ‘ரெஃபர்டு ட்ரையல்’ (Referred trial) என்று
குறிப்பிடுவோம். அந்த வழக்கில் டிவிஷன் பெஞ்ச்சில் என்னைவிட
சீனியர் நீதிபதி சிர்புர்கரும் நானும் இருந்தோம். நாக்பூரிலிருந்து மாற்றலாகி வந்திருந்த அவருக்கு கிரிமினல் வழக்குகளைக் கையாண்டதில் நீண்ட அனுபவம் உண்டு.

உலகையே உலுக்கிய டெல்லி, நிர்பயா வழக்கை யாரும் மறக்க
முடியாது. நான் குறிப்பிடப் போகும் இந்த வழக்குக்கும் நிர்பயா வழக்குக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. அருப்புக்
கோட்டையைச் சேர்ந்த அந்தப் பெண், படிக்கச் சென்றபோது,
வழியில் மூன்று பேரால் வன்புணர்வுக்கு ஆளாகி, கொலையும் செய்யப்பட்டார். அந்த வழக்கு அப்போது மிகப்பெரிய
அதிர்வலைகளை உருவாக்கியது. வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மூவருக்கும் நீதிமன்றம் தூக்குத்தண்டனை அறிவித்தது.
அதற்கு, மேல் முறையீடும் செய்யப்பட்டது.

நம்முடைய சட்டப்படி, ஒருவருக்கு தூக்குத் தண்டனை கொடுப்பதற்கு
முன் செஷன்ஸ் நீதிபதி, `நாங்கள் தூக்குத்தண்டனை கொடுக்க நினைக்கிறோம். அதை ஏன் கொடுக்கக்கூடாது என்பதற்கு நீங்கள்
உங்கள் தரப்பு காரணங் களைச் சொல்லலாம்’ என்று கேட்பார்.
அந்தக் கேள்வியை மாவட்ட நீதிபதி கேட்டே ஆக வேண்டும் என்பது
விதி. குறிப்பிட்ட இந்த வழக்கில் மாவட்ட நீதிபதி, அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை.

நீதிபதி சிர்புர்கர், ‘கேள்வி கேட்கப்படாத அந்தக் குறையை நாம்
நிவர்த்தி செய்து விடலாம். ஏனென்றால் அப்பீல் என்பது அந்த
வழக்கின் தொடர்ச்சிதான்’ என்றார். விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட வழக்கில் பிரேதப் பரிசோதனை (Inquest)
செய்யப்பட்டதைப் பார்க்க வேண்டும் என்றார். பிரேதப்
பரிசோதனை வீடியோவாக பதிவு செய்யப்பட் டிருந்தது.
புழுவெல்லாம் நெளிந்த நிலையில் அந்தப் பெண்ணின் உடலைக்
காட்டிய அந்த வீடியோவை பார்க்கவே கடினமாக இருந்தது.
பிறகு வழக்கு குறித்து விவாதிக்கப்பட்டது.

கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனையை நாங்கள் உறுதி
செய்யப் போகிறோமா அல்லது அதை ஆயுள் தண்டனையாக
மாற்றப் போகிறோமா என்று விவா திக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மூவரும் வந்தார்கள். அவர்களில் ஒருவர் இந்து, ஒருவர் கிறிஸ்தவர்,
ஒருவர் இஸ்லாமியர் என்பது குறிப் பிடத்தக்கது.

நண்பர்களான அவர்கள் மூவரும், ‘வயதான பெற்றோரைப் பார்த்துக்கொள்ள வேண்டும்’, ‘இப்போதுதான் திருமணம்
முடிந் திருக்கிறது’ என ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி அழுதார்கள். அந்த நிலையில் எனக்குள் ஒரு பயம்… குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை உறுதிசெய்வதாக நீதிபதி
சிர்புர்கர் எழுதிவிட்டால், ‘ஆமாம், நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சொல்ல வேண்டுமா என்ற பயம்… ஒருவரது உயிரைப் பறிக்கும் தீர்ப்பை நான் எப்படிக் கொடுக்க முடியும் என்ற பயம். ஆனாலும் நம் குற்றவியல் சட்டத்தில் அதற்கு இடம் இருக்கிறதே… நீதிபதியாகப் பதவியேற்கும்போது ‘சட்டத்தை நிலைநாட்டுவேன்’ என்றுதானே உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். அப்படி யிருக்க, நான்
இப்படிப்பட்ட தண்டனையைக் கொடுக்க மாட்டேன், எனக்குப் பிடிக்கவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாதே… நானும் நீதிபதியும் கலந்து பேசினோம்.

இதுபோன்ற வழக்குகளில் கண்களால் பார்த்த சாட்சியங்கள்
பெரும்பாலும் இருக்காது. சம்பந்தப்பட்ட நபர்கள் போவதும் வருவதும், கடைசியாக பிரேதம் ஓரிடத்தில் கிடப்பதுமாக சில காட்சிகள்தான் சாட்சியங் களாகக் கிடைக்கும். அவற்றை ‘சூழ்நிலை சாட்சியங்கள்’ (Circumstantial evidences) என்று சொல்வோம். நம்மூரைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை உயர் நீதி மன்றம் பின்பற்றலாம். அதற்கு ‘முன்தீர்ப்பு’ (Precedent) என்று பெயர்.
இந்த வழக்கிலும் அப்படி சில முன்தீர்ப்புகளை வழக்கறிஞர்கள்
எங்கள் முன் வைத்தார்கள்.

இந்த வழக்கில் மூவரும் வன்புணர்வு செய்ததை ஒப்புக்கொண்டாலும்,
யார் கொலை செய்தார்கள் என்பது தெரியவில்லை. அது நிரூபிக்கப் படாதபட்சத்தில் ஆயுள் தண்டனை தான் வழங்க வேண்டும் என்று
உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் குறிப்பிட்டிருந்தது. குற்றவாளிகள்
இதற்கு முன் வேறெந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் இல்லை. மூவரும் கொடுங்குற்றவாளிகளாகவும் அறியப்படவில்லை. இந்த மூன்று காரணங்களுக்கும் முன் தீர்ப்புகள் இருந்ததால் நாங்கள் இந்த வழக் கிலும் தூக்குத்தண்டனையை,
ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பு கொடுத்தோம்.

தீர்ப்பு வழங்கிய பிறகு அடுத் தடுத்த நாள்களில் ‘நீயெல்லாம் ஒரு பெண்ணா… பேய்… தூக்குத் தண்டனையை நீ எப்படி ஆயுள்
தண்டனையாக மாற்றலாம்…’ என்றெல்லாம் வசைபாடி எனக்கு
ஏகப்பட்ட கடிதங்கள் வந்தன. நீதிபதி சிர்புர்கரிடம், ‘இந்த வழக்கு தொடர்பாக உங்களுக்கு ஏதாவது கடிதங்கள் வந்தனவா’ என்று
கேட்டேன். ‘அப்படி எதுவும் வரவில்லை’ என்று சிரித்தார்.

இது நடந்து பல வருடங்கள் கழித்து, ஒரு கூட்டத் துக்குச்
சென்றிருந்தேன். பேசி முடித்ததும் ஒரு பெண் எழுந்து, ‘இந்த நிகழ்ச்சிக்குத் தொடர்பில்லாத ஒரு கேள்வியைக் கேட்டால் பதில் சொல்வீர்களா?’ என்றார். ‘பதில் தெரிந்தால் நிச்சயம் சொல்வேன்’ என்றேன். ‘அருப்புக்கோட்டை வழக்கில் தீர்ப்பை மாற்றியது ஏன்’ என்றார்.

‘நீதிபதியாக தீர்ப்பை சொன்னதோடு எங்கள் கடமை முடிந்துவிட்டது. அதில் உடன்பாடில்லாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.
சம்பந்தப்பட்ட நபர்கள் குற்றமே செய்யவில்லை என்று எங்கள்
தீர்ப்பில் நாங்கள் சொல்லவில்லை. அவர்கள் குற்றவாளிகள் தான்.
அதில் சந்தேகமில்லை. ஆனால், அவர்களுக்கான தூக்குத்தண்டனையைத்தான் ஆயுள் தண்டனையாக மாற்றினோம். ஆனால், பலரும் அதைவைத்து நாங்கள் அவர்களை குற்றமற்றவர்கள்
என அறிவித்த தாக நினைத்துக்கொண்டார்கள்’ என்றேன்.

அமெரிக்காவில் தூக்குத்தண்டனை கிடையாது. எலெக்ட்ரிக்
நாற்காலியில் குற்றவாளியை அமர வைத்து உயிர் பறிக்கப்படும்.
அங்கே ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு இப்படி தண்டனை கொடுக்கப்பட்டு கொன்றுவிடுகிறார்கள். பிறகுதான் தெரிந்ததாம்,
அதே பெயரில் உள்ள வேறொரு நபர் தான் உண்மையான குற்றவாளி என்பது. எடுத்த உயிரைத் திரும்ப கொண்டு வர முடியுமா?

தூக்குத்தண்டனையில் எனக்கு உடன்பாடில்லை என ஒரு பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரைக்கு, ‘இதுவே உன் மகளாக இருந்தால் இப்படிச் சொல்வாயா?’ என்று ஒருவர் கேட்டிருந்தார். என் மகளா, பேத்தியா என்பதெல்லாம் முக்கியமல்ல. ஓர் உயிரைப் பறிக்க நான் யார்….
என் பெயரில் அரசு அதைப் பறிப்பது சரியா..? வழக்கில் தண்டனை கொடுப்பதன் நோக்கம், சம்பந்தப்பட்ட குற்றவாளியைத் திருத்தி, சமூகத்தில் அவரை ஆக்கபூர்வமான மனிதராக வாழவைப்பதா
அல்லது தண்டித்து ஒழிப்பதா… இந்த உரையாடல் இன்னமும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தியை அறிந்தேன். அருப்புக்கோட்டை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவர், சிறையிலிருந்தபடியே படித்து, தேர்வெழுதி, தங்கப்பதக்கம் வாங்கியிருக்கிறார். இது அந்த வழக்கின் தொடர்ச்சியா, முடிவா..?

.
………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to ஒரு தூக்கு தண்டனை அனுபவம்….நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்

 1. புதியவன் சொல்கிறார்:

  இதில் உண்மையாகவே நீதி வழங்கப்பட்டிருக்கிறதா? பெண்ணைப் பறிகொடுத்த பெற்றோருக்கு என்ன நீதி வழங்கப்பட்டிருக்கிறது? பெண்ணின் பெற்றோர் சட்டத்தின் கதவுகளைத் தட்டவேண்டுமா? பெண்ணின் பெற்றோரின் சூழல்களெல்லாம் கவனத்தில் கொள்ளப்பட்டதா?

  சரியான நீதி என்பது, இந்த மூவருக்கும் சொந்தமான சொத்துக்களை முழுமையாகப் பறித்து அந்தப் பெண்ணின் பெற்றோருக்குக் கொடுத்துவிட்டு, இவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிப்பதுதான்.

  நாம் நேரடியாகச் சம்பந்தப்படாதபோது, கருணை காட்டுவது மிகவும் சுலபம். இதனால்தான் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு இந்திய அரசு இடம் கொடுக்கவேண்டும் என்று சுலபமாகச் சொல்லிவிடுகிறோம். அப்படியாப்பா..அவர்களில் ஒருவனை உங்கள் குடும்பத்தில் ஒருவனாகத் தத்தெடுத்துக்கொள்ளுங்கள், இதனை ஆதரிக்கும் ஒவ்வொரு மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொருவனைத் தத்தெடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னால், பின்னங்கால் பிடறியில் படும்படி ஓடிவிடுவோம். பிறருக்கு தாராளமாக அட்வைஸும் கருணையும் வழங்கும் நம் குணம் இப்படித்தான் பல்லிளிக்கும்.

 2. புதியவன் சொல்கிறார்:

  நாவுக்கரசு என்ற மாணவனை முழுமையாகக் கொலை செய்தவன் சட்டத்தின் பிடியில் தப்பி, ஆஸ்திரேலியாவில் பாதிரியாராக இருக்கிறான். இதுபோல பலப் பல உதாரணங்கள். எந்தக் குற்றவாளியும், என் மதத்தைச் சார்ந்தவன், என் இனத்தைச் சார்ந்தவன் என்று ஏதோ ஒரு லேபிளில், தேசவிரோதிகள், சட்டத்தின் பிடியிலிருந்து நழுவவிட்டுவிடுகின்றனர்.

  நம் நீதியரசர்களும், குற்றவாளிகள் திருந்தவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், அவர்களுக்குத் தண்டனை தராமல், தங்கள் இரக்க குணத்தைக் காண்பிக்கின்றனர். அப்படியென்றால், குற்றவாளிகளின் கொடுஞ்செயலால் இறந்தவர்களுக்கு என்ன நீதியை இந்தச் சமூகம் தந்திருக்கிறது?

  சமீபத்தில் அப்படி ஒரு பையனுக்குக் கருணை காட்டியபோது, அவன் வீட்டிற்கு வந்து அவன் அம்மாவையும் கொன்றுவிட்டான் என்று செய்திகளில் படித்தோம்.

  ஷரியத் சட்டங்களின்படி, குற்றவாளியை மன்னிக்கும் அதிகாரம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மாத்திரமே உண்டு. கண்ணுக்குக் கண், தலைக்குத் தலை, கொலைக்குக் கொலை என்பதுதான் ஷரியத் சட்டம். அது மிகச் சரியானது என்பது என் எண்ணம். நாம், ஏதோ ஒரு சில அபூர்வமான நிகழ்வுகளிலோ இல்லை, விதிவிலக்குகளிலோ ஏற்படும் தவறுகளைக் கருத்தில்கொண்டு, எல்லோருக்கும் கருணை காட்டி, பிறகு திருந்திவிடுவான் என்று தீர்ப்பு வழங்குவது எவ்வாறு சரியாக இருக்கமுடியும்?

  சில வருடங்களுக்கு முன்பு சௌதியில் நடந்தது இது. பெட்ரோல் பங்குக்கு வந்த ஒரு அரபியினுடனான சண்டையில், கையை வீசியபோது அந்த அரபிக்கு கண் பாதிப்படைந்துவிட்டது. உடனே பங்கில் வேலைபார்த்த இந்தியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சட்டப்படி அவரது கண்ணைப் பறிப்பதுதான் தீர்ப்பு. அரபியோ தனக்குப் பாதிப்பு ஏற்படுத்தியவரை மன்னிக்கத் தயாராக இல்லை. பிறகு சௌதி இளவரசர் இந்தியாவிற்கு அரசுப் பயணமாக வருவதற்கு முன்பு, ஒரு நல்லெண்ணத்திற்காக, அந்த அரபியிடம் பேசி, அவனை மன்னிக்குமாறும், அதற்கு ஈடாக என்ன வேண்டுமோ அதனைத் தான் கொடுத்துவிடுவதாகவும் சொல்ல, அந்த சௌதிக்காரரோ, அரசரே தன்னிடம் பேசியதைப் பாக்கியமாகக் கருதுவதாகவும், அவனை மன்னித்துவிடுவதாகவும் சொன்னார். துபாயில் (ஐக்கிய அரபு நாடு), அரச குடும்பமோ யாரோ… ரோடில் டிராஃபிக் ரூல் மீறல் அல்லது விபத்தை ஏற்படுத்திவிட்டால், அவர்களாகவே நிறுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்வர். சட்டம் எல்லோருக்கும் சமம் என்று நிரூபிக்கும் சம்பவங்கள் பல உண்டு.

 3. புதியவன் சொல்கிறார்:

  இதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த நிலைப்பாடு சரிதானா என்று. நாம் மறுபிறப்பு, பூர்வஜென்மம் இவற்றில் நம்பிக்கை உடையவர்கள். எத்தனையோ வரலாறுகள் (உதாரணம் சோழன் கோச்செங்கணான்) நமக்கு இதனை உணர்த்தியுள்ளன. 12 வருடங்கள் கிளியைக் கூண்டில் அடைத்து வளர்த்ததற்காக, பக்த ராமதாசர் 12 வருடங்கள் சிறைத்தண்டனை அடைந்தது (கோல்கொண்டா கோட்டை), பிறகு ராம லக்ஷ்மணர்கள் அவரை மீட்டார்கள் என்று படித்திருக்கிறோம்.

  சட்டம் என்பது என்ன? நாம் மனிதர்கள் நமக்குள்ளேயே போட்டுக்கொண்ட ஒரு ஒழுங்கு. ஒருவன் ஒரு கொலை அல்லது சதிச்செயல் செய்து அதனால் ஒருவர் இறந்தால், வெறும் ஆயுள் தண்டனையோ இல்லை தூக்குத்தண்டனையோ அதற்கான தீர்வு ஆகிவிடுமா?

  ஒருவனுக்கு சட்டம் சொல்லும் (உயிர் பறிக்காத) தண்டனை கொடுத்துவிட்டு, அவன் அனுபவித்துப் பிறகு வெளியில் வந்தாலும், செய்த குற்றம் அவனது மனத்தை இறக்கும்வரை அரிக்காதா? எப்படியோ அந்தத் தண்டனை குறைவு என்றால், அவனுக்கு/அவளுக்கு இறைவனின் தண்டனை நிச்சயம் என்று ஏன் எண்ணக்கூடாது? என்ன இருந்தாலும் ஒருவன் செய்த தவறைக் கண்டுபிடித்துத் தீர்மானிப்பது மற்ற மனிதர்கள்தானே. அவர்கள் அதில் தவறு செய்திருந்தால்? ஒருவேளை அவன் தவறே செய்யாமல் இருந்திருந்தால்? சந்தர்ப்பவசமாகவோ இல்லை போலீஸின் தவறினாலோ அவன் குற்றம் சாட்டப்பட்டிருந்தால்? இல்லை….அப்போதைய வயது, உணர்ச்சி காரணமாகத் தவறில்/குற்றத்தில் ஈடுபட்டு, பிறகு அதை உணர்ந்திருந்தால்?

  நீதிபதி கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிப்பவர். அவருக்கே தரவுகளின் மீது அல்லது குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் மீது சந்தேகங்கள் இருந்தால்? இது, அவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை எந்த எண்ணத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதைப் பொறுத்தது. இதில் நாம் ஏன் ஜட்ஜ் செய்யவேண்டும்?

  எதற்கு இன்னொருவனின் தண்டனையைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டும்? அது பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றமிழைத்தவர் பிரச்சனையல்லவா? குற்றமிழைத்தவரே ஆனாலும் நெடிய தண்டனைக்காலம் அவரைத் தவறை உணர வைத்துத் திருந்த வைத்திருக்காதா? நாம் நேரடியாக எதையும் பார்த்திராதபோது எதற்கு இத்தகைய தண்டனைகளை/விடுவிப்புகளை judge செய்யவேண்டும்? (அதாவது வருத்தப்படுவதோ இல்லை கோபம் கொள்வதோ அல்லது சந்தோஷப்படுவதோ)

  என்னடா இது? இரண்டு வகையாகச் சிந்திக்கிறானே என்று தோன்றுகிறதா? எனக்குத் தோன்றியதைப் பதியணும் என்று மனதில் நினைத்தேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   இப்போது தான் நீங்கள் இயல்புக்கு வந்திருக்கிறீர்கள்….

   சம்பந்தப்பட்ட வழக்கைப்பற்றிய, எந்த பொறுப்பிலும் இல்லாத உங்களுக்கே இவ்வளவு குழப்பங்கள் இருந்தால் –

   தீர்ப்பு சொல்ல வேண்டிய பொறுப்பில் இருந்த ஒரு நீதிபதிக்கு,
   அதுவும் ஒரு பெண்மணிக்கு – எத்தனை யோசனைகள்,
   தயக்கங்கள் இருந்திருக்கும்….?

   இந்த பதிவை நான் இங்கே போட்டதற்கான முக்கியமான
   காரணமே, படிப்பவர்களை இதுகுறித்து தீவிரமாக யோசிக்க வைக்கத்தான்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.