ஜூவி சொல்லும் செய்திகள் நிஜமா….?

………………………………………

ஜூனியர் விகடன் இதழில் சில செய்திகள்
சொல்லப்படுகின்றன.

கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பவை
அத்தனையும் சரி என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை.
அடிப்படையில் உண்மையாக இருக்கலாம்… ஆனால்
மிகைப்படுத்தப்பட்டுள்ளன என்றே தோன்றுகிறது.

இவை உண்மையாக இருந்தால்,
திமுக-கட்சியிலும், ஆட்சி அதிகாரங்களிலும் விரைவில், சில
மாற்றங்கள் வரலாமென்று தோன்றுகிறது….

ஜூவி சொல்லும் செய்திகள் –

கோயில் திருவிழாக்கள், விசேஷங்களின்போது கோயிலுக்கு வெளியே உலா வருவதற்கு உற்சவமூர்த்தி தான் செல்வார்.
மூலவர் எப்போதும் கோயிலுக்கு உள்ளேயேதான்
அமர்ந்திருப்பார். அதே பாணியைத்தான் இப்போது
தி.மு.க-வும் கையில் எடுத்திருக்கிறது. சமீபகாலமாக,
முதல்வர் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளிலெல்லாம்,
அவர் மகனும் தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான
உதயநிதி கலந்து கொள்கிறார். முதல்வருக்கு அளிக்கப்படும் வரவேற்பு அவருக்கும் அளிக்கப்படுகிறது.

அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பசும்பொன்னிலுள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்த தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், திடீர் முதுகுவலி காரணமாக தன் பயணத்தையே ரத்து செய்த முதல்வர், சீனியர் அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோரை அரசு மரியாதைச் செலுத்த அனுப்பி வைத்தார்.

அதே தினத்தில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில்
உதயநிதி கலந்து கொள்ளும் சில நிகழ்ச்சிகள் இருந்தன.
முதல்வர் அறிவுறுத்தியதால், அந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, பசும்பொன் சென்று நேரில் மரியாதை செலுத்தினார் உதயநிதி.

தேவர் நினைவிடத்தில் பூசப்பட்ட விபூதியையும் ஏற்றுக்
கொண்டார். அரசியல்ரீதியாக மகனுக்கு முக்கியத்துவம்
கிடைக்க வேண்டுமென்பதற்காகத்தான், முதல்வரின் பயணம் திடீரென ரத்தானதாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது.
ஆனால், முதல்வரின் உடல்நிலையும் இதற்கு முக்கியக்
காரணம் என்கிறது அறிவாலய வட்டாரம்.

நம்மிடம் பேசிய சீனியர் அமைச்சர்கள் சிலர், “முதல்வரின் உடல்நிலை முன்புபோல இல்லை. துபாய் பயணத்தின்போதே முழு உடல் பரிசோதனையை செய்து கொண்டார். சில மருந்துகளையும் தொடர்ச்சியாக எடுத்துவருகிறார். இந்தச் சூழலில்தான், அவருக்கு முதுகுவலி ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அக்டோபர் 28-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை மோசமாக இல்லை என்றாலும், நெடுந்தூர பயணங்களைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். இதனால்தான், நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு, முதல்முறையாக பம்மலில் ஏற்பாடு செய்திருந்த நகர சபைக் கூட்டத்தில்கூட முதல்வர் பங்கேற்கவில்லை.

இந்தித் திணிப்பை எதிர்த்து நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாடு
தழுவிய அளவில் பொதுக்கூட்டங்களை தி.மு.க நடத்தியது. பெரம்பலூரில் முதல்வர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. உடல்நிலை காரணமாக, தனக்குப் பதிலாக அமைச்சர் கே.என்.நேருவை அனுப்பி வைத்தார் முதல்வர். அதேநேரத்தில், மழை
காரணமாக ஆவடியில் உதயநிதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி
ரத்து செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சி வேறொரு தேதியில் நடத்தப்படும்போது, மிகப் பிரமாண்டமாக நடத்துமாறு அமைச்சர் ஆவடி நாசருக்கு உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர்.


இனி, கட்சி நிகழ்ச்சிகளில் முதல்வருக்குப் பதில்
உதயநிதிதான் அதிகம் பங்கேற்கப் போகிறார்.
உற்சவராக இனி உதயநிதிதான் வலம் வருவார். ஒருவகையில்,
இது அதிகார மாற்றம்தான். உதயநிதி தலைமைப் பொறுப்புக்கு வரும்போது, கட்சிக்குள் பெரிய எதிர்ப்பு முணுமுணுப்பு எழுந்துவிடக் கூடாது என்பதற்காக, இப்போதிருந்தே கட்சிக்காரர்களை அந்த மாற்றத்திற்கு தயார் செய்கிறது
தலைமை” என்றனர் விரிவாக.

சென்னையில், மழை நீர் வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்பார்வையிட, முதல்வர் சில பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், உடல்நிலை ஒத்துழைக்காததால், கன்னியாகுமரி செல்லத் திட்டமிட்டிருந்த அமைச்சர் கே.என்.நேருவை சென்னையிலேயே சில நாள்கள் இருக்கச் சொல்லிவிட்டாராம் முதல்வர். கோட்டைக்கும் வீட்டுக்கும் இடையேதான் முதல்வரின் பெரும்பகுதி பயணம் இனி இருக்கப் போகிறது என்கிறது அறிவாலய வட்டாரம்.


இளைஞரணி சார்பில், ‘திராவிட பயிற்சிப் பாசறை’களை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வரும் உதயநிதிக்கு, இனி கூடுதல் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட இருக்கின்றன. கட்சியின் செயல் தலைவர் பதவியை நோக்கி அவர் நகர்த்தப்படுவதாகக் கூறப்படுகிறது. கட்சி விளம்பரங்களில், உதயநிதியின் படம் இடம்பெற வேண்டுமென்பது எழுதப்படாத விதியாக மாறியிருக்கிறது. தி.மு.க-வின் அரியாசனத்தில் மாற்ற ரேகைகள் தென்பட
ஆரம்பித்திருக்கின்றன.

.
……………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to ஜூவி சொல்லும் செய்திகள் நிஜமா….?

  1. புதியவன் சொல்கிறார்:

    காலச்சக்கரம் நரசிம்மா ஒரு நாவல் எழுதியிருந்தார். குந்தவைக்கு ஆட்சி அதிகாரத்தில் ஆசை. ஆனால் அப்போதிருந்த சூழலின்படி ஆதித்தன் பட்டத்து இளவரசன். அவன் மறைந்தாலும் குந்தவைக்குப் பட்டம் கிடைக்காது. அதனால் அவளுடைய குழந்தையைத்தான் அருள்மொழி சிறு குழந்தையாக இருந்தபோது நதியில் தற்செயலாக(?) விழுந்தபோது தன் குழந்தையை அருள்மொழியாக வளர்க்கிறாள், அவனே பிற்காலத்தில் ராஜராஜ சோழனாக வருகிறான் என்று. ஒருவேளை அந்தக் காலத்தில் ஆணென்ன பெண்ணென்ன என்ற நிலைமை இருந்திருந்தால், சுந்தரச்சோழர் மறைந்ததும், பட்டத்து இளவரசன் ஆதித்தன் மறைந்துவிட்டதால், குந்தவையே பட்டத்துக்கு வந்திருக்கமுடியும். அல்லது அருள்மொழியின் காலத்துக்குப் பின், இராஜேந்திர சோழனுக்குப் பதிலாக குந்தவையே சிலகாலம் அரசாண்டிருந்திருக்கமுடியும்.

    காலையில் சோழர்கள் வரலாறு மனதில் ஓடிக்கொண்டிருந்ததால் இதை எங்கு எழுதத் தோன்றியது.

    பதிவைப் பிறகு படித்து என் கருத்தை எழுதுகிறேன்

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    .
    ஓ…..

    மருமகனை, அத்தை
    தத்தெடுத்து கொண்டிருக்க வேண்டும்
    என்று சொல்ல வருகிறீர்களா …?

    – நான் குந்தவையை – சொல்கிறேன்….😊😊😊

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  3. புதியவன் சொல்கிறார்:

    என்னதான் முட்டுக்கொடுத்தாலும், காலம், அதற்குரிய தலைவரைக் காட்டத்தான் செய்யும். மற்றவர்கள் விலகிவிடவேண்டியதுதான். ஸ்டாலின் அவர்கள் மேடையில் புலம்பியபோதே எகத்தாளமாகச் சிரித்தவர்கள், அவர் பையனுக்குக் கட்டுப்படுவார்களா என்ன? அதுவும் தவிர, போலீஸ், உளவுத்துறை மீட்டிங்குகளில் உதயநிதி மாத்திரம் இருக்கும் படங்களும் வாட்சப்பில் பார்த்திருக்கிறேன்.

    இன்றைக்கு ஸ்டாலினுக்காக, மா.சு. நயனதாராவிற்குக் குழந்தை பிறந்ததை விசாரிக்க ஒரு குழு அமைத்திருக்கிறோம் என்று சொல்லலாம், மற்ற தமிழகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல் தவிர்க்கலாம். ஸ்டாலினையே மூத்த தலைவர்கள் மதிப்பதில்லை என்பதைத்தான் நாம் பார்க்கிறோமே

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    .
    ஆக, உங்கள் எதிர்பார்ப்பு …. அத்தை தான்…..??? 😊

    அத்தையை நீங்கள் இன்னும் நேரில் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்.
    குந்தவையின் ஆளுமை எல்லாம் இல்லை….எனக்கு நம்பிக்கை இல்லை…!!!

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

      அந்த அத்தை அரசியல் ராஜதந்திரி….. இந்த அத்தை… வாய்ப்பு வரும்போது…. நாம் பார்க்கத்தானே போகிறோம்… கருணாநிதியிடம் பயின்ற திறமைசாலி என்றே நான் நினைக்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.