
பானுமதியின் தந்தையின் கோரிக்கையை ஏற்க மறுத்தது மட்டுமின்றி எந்த தந்தையாக இருந்தாலும் ஆத்திரம் அடையக்
கூடிய தனது இன்னொரு நிபந்தனையையும் அழுத்தம்
திருத்தமாக தெரிவித்தார் ராமகிருஷ்ணா.
“எனக்கு மனைவியாக வருகின்றவர் எனக்கு ஒரு குடிசை
இருந்தால் அதில் தங்கி என்னுடன் குடித்தனம் நடத்துகிறவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த குடிசையும் எனக்கு
இல்லாத நிலை ஏற்பட்டால் ஒரு மரத்தடியில்கூட என்னுடன்
தங்க அவர் தயாராக இருக்க வேண்டும். உங்கள் மகளுக்கும், உங்களுக்கும் இதெல்லாம் உடன்பாடு என்றால் எனக்கு சொல்லியனுப்புங்கள். அதற்குப் பிறகு திருமணம் பற்றி பேசலாம்” என்று சொல்லிவிட்டு பானுமதியின் வீட்டைவிட்டு வெளியேறினார் அவர்.
அவர் அப்படி சொல்லிவிட்டுப் போனவுடன் “இவன் போனா போகட்டும் விடும்மா. இவனைவிட நல்லா படிச்ச லட்சணமான மாப்பிள்ளைங்க நூறு பேரை நாளைக்கே நம்ம வீட்டு வாசல்ல கியூவிலே நிற்க வைக்கிறேன்” என்றார் பானுமதியின் தந்தை.
ராமகிருஷ்ணா அப்படி சொல்லிவிட்டுச் சென்றதில் அவருக்கு உள்ளூர மிகுந்த மகிழ்ச்சி. ஆனால், அவர் சொன்னது எதையும் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை பானுமதி.
ராமகிருஷ்ணா போன திசையையே ஒருவித பரவசத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ராமகிருஷ்ணா சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவரது காதில் தேனாகப்
பாய்ந்தது. அவர் பேசப் பேச அவர் மீது பானுமதிக்கு இருந்த
காதல் இன்னும் அதிகமானது. தனக்கு ஏற்ற கணவர் இவர்தான் என்றும் தனது வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று நடந்தால்
அது அவரோடுதான் என்றும் மனதுக்குள் தீர்மானம் செய்து கொண்டார் அவர். அதை காதலின் சக்தி என்றுதான் சொல்லவேண்டும்
தனது திருமணத்திற்கு, தந்தையின் ஒப்புதல் கிடைக்க
வாய்ப்பே இல்லை என்கிற நிலை ஏற்பட்ட பிறகு,.
தந்தைக்கும், உறவினர்களுக்கும் தெரிவிக்காமலே ரகசியமாக
தங்கள் திருமணத்தை நடத்திக் கொள்ள முடிவெடுத்தார்
பானுமதி.
பானுமதி நடித்த ‘கிருஷ்ண பிரேமா” படத்தின் தயாரிப்பாளர்
ஏ. ராமைய்யா மற்றும் அவரது மனைவி கண்ணாமணி மற்றும்
சில நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்..
ஆகஸ்டு 8-ந்தேதி, 1943ல் சென்னையில், வெங்கடேஸ்வரா
கல்யாண மண்டபத்தில் அவர்கள் கல்யாணம் நடந்தது.
பானுமதியின் தந்தையோ, அவரது உறவினர்கள் யாருமோ
அந்தத் திருமணத்திற்கு வரவில்லை.
“எனது கணவர் சொன்னது மாதிரி குடிசை இல்லை
என்றாலும் ஒரு கொட்டகையில்தான் எங்களது இல்லற
வாழ்க்கை ஆரம்பித்தது. அவர் ஏழையாக இருந்தபோதிலும்
அந்த வாழ்க்கையை நான் ரசித்து வாழ்ந்தேன். இயல்பாகவே திரைப்படங்களில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் அவ்வளவாக
இல்லை என்பதால் நடிக்க முடியாமல் போனது குறித்து எனக்கு
எந்த வருத்தமும் இல்லை. தினமும் என் கணவர் விரும்பும் சாப்பாட்டை சமைப்பேன். பின்னர் வீட்டை அழகாக சுத்தப்படுத்திவிட்டு அவரது வருகைக்காகக் காத்திருப்பேன்.
சில நேரங்களில் நானும் அவரும் சேர்ந்து சினிமாவுக்கு
போவோம்…” என்று தனது காதல் திருமண வாழ்க்கையைப்
பற்றி குறிப்பிட்டிருக்கிறார் பானுமதி.
இப்படி தனது வாழ்க்கையை பானுமதி ஆனந்தமாக
அனுபவித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் சினிமாவில்
அவர் நடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் பிரபல
ஸ்டுடியோ அதிபரான நாகிரெட்டி அவர்களின் மூத்த
சகோதரரான பி.என்.ரெட்டி.
எந்தவிதமான சபலத்துக்கும் இடம் கொடுக்காமல்
திரைப்படங்களில் நடிக்க தனக்கு ஆர்வமில்லை என்று திட்டவட்டமாக அவருக்குப் பதில் சொன்னார் பானுமதி. அவர் அப்படிச் சொன்னபோதும் பி.என்.ரெட்டி அவரை விடுவதாக
இல்லை. தொடர்ந்து மூன்று மாதங்கள் தினமும் பானுமதிக்கு
போன் செய்தார் அவர்.
அவருடைய தொல்லையைப் பொறுத்துக் கொள்ள முடியாத
பானுமதி, “தயவு செய்து எங்களது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை சிதைத்து விடாதீர்கள்” என்று அவரிடம்
வேண்டிக் கேட்டுக் கொண்டார்.
அவர் அப்படி கேட்டுக் கொண்ட பிறகும் பி.என்.ரெட்டி
தொடர்ந்து பானுமதியை விரட்டினார் என்றால் அதற்குக்
காரணம் இருக்கிறது.
பி.என்.ரெட்டி அப்போது படமாக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்த படத்தின் பெயர் சொர்க்க சீமா. அந்தப் படத்தின் முக்கியமான பாத்திரம் ஒரு நாடக நடிகையின் பாத்திரம். தெரு நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சுப்புலட்சுமி என்ற அந்த நாடக
நடிகையின் அழகையும், நடிப்புத் திறனையும் பார்த்து வியந்து போகும் மூர்த்தி என்னும் பதிப்பாளர் நல்ல நாடகக் குழு
ஒன்றில் சேர்ந்தால் அவர் மிகப் பெரிய நடிகையாக வருவார்
என்று கூறுவது மட்டுமின்றி ஒரு நாடகக் குழுவையும் அவருக்கு பரிந்துரைக்கிறார்.
அவர் சொற்படி சென்னைக்கு செல்லும் சுப்புலட்சுமி மிகப்
பெரிய நடிகையாக உருவெடுக்க அவளது அழகில் மயங்கும்
மூர்த்தி தனது குடும்பத்தைத் துறந்துவிட்டு அவளே கதி என்று விழுந்து கிடக்கத் தொடங்குகிறார்.
அந்த நாடக நடிகை சுப்புலட்சுமியின் பாத்திரத்தில் நடிக்கக்
கூடிய சரியான நடிகைகள் யாருமே அப்போது இல்லை. ஆகவே பானுமதி நடித்தால் மட்டுமே அந்தப் பாத்திரம் உயிர் பெறும்
என்று முடிவெடுத்த பி.என்.ரெட்டி… பானுமதி அந்தப் படத்தில்
நடிக்க தொடர்ந்து மறுத்ததால் அவரை நடிக்க வைக்க
இன்னொரு குறுக்கு வழியைக் கையாண்டார்.
பானுமதியின் கணவரான ராமகிருஷ்ணனுக்கு போன் செய்த
அவர் எடுத்த எடுப்பில் “நீ ஏதாவது தாழ்வு மனப்பான்மையில் தடுமாறிக் கொண்டிருக்கிறாயா…?” என்று அவரிடம்
கேட்டதும் அடுத்த முனையில் இருப்பவர் எதைப் பற்றி
பேசுகிறார் என்று புரிந்து கொள்ள முடியாமல் ராமகிருஷ்ணா தடுமாறினார்.
அவர் தடுமாறுகிறார் என்பது தெரிந்ததும், “நான் பி.என்.ரெட்டி பேசுகிறேன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட
அவர், “ஒரு நல்ல நடிகையின் அற்புதமான நடிப்புத் திறனை
நீ ஏன் இப்படி நாசப்படுத்திக் கொண்டிருக்கிறாய்…?” என்று ராமகிருஷ்ணாவிடம் சற்றுக் கோபமாகவே கேட்டார்.
“உன்னுடைய மனைவி பிரபலமான ஒரு நடிகையாவதை
உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான்
நீ அவரை நடிக்க அனுமதிக்க மாட்டேன் என்கிறாய்.
இப்போது சொல்கிறேன் கேட்டுக் கொள். பானுமதியின்
அற்புதமான நடிப்ப்புத் திறனை இப்படி வீணடிப்பதற்கு உனக்கு
எந்த உரிமையும் கிடையாது…” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் பி.என் ரெட்டி.
அவர் அப்படிப் பேசியவுடன் மிகப் பெரிய மனக் குழப்பத்துக்கு ஆளானார் ராமகிருஷ்ணா. தாழ்வு மனப்பான்மை
காரணமாகத்தான் பானுமதி நடிக்கக் கூடாது என்று
சொல்கிறேனா என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்ட அவர் வீட்டுக்கு போனவுடன், “சினிமாவில் திரும்பவும்
நடிக்கணும்னு நீ ஆசைப்படுகிறாயா..?” என்று பானுமதியைப் பார்த்து கேட்டார்.
“எனக்கு அப்படி எந்த விருப்பமும் இல்லை.
ஆனால், நீங்கள் நடிக்கச் சொன்னால் நடிப்பேன்.
நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்வதில்தான்
எனக்கு மகிழ்ச்சி…” என்றார் பானுமதி.
அவர் அப்படி சொன்னவுடன் மீண்டும் படங்களில் நடிப்பது
பற்றி கலந்து பேசிய ராமகிருஷ்ணாவும், பானுமதியும் பி.என்.ரெட்டியின் ‘சொர்க்க சீமா’ படத்தில் மட்டும் பானுமதி நடிப்பது என்று முடிவு செய்தார்கள்.
”நான் நடித்த முதல் படம் ‘சொர்க்க சீமா’என்று தான்
சொல்ல வேண்டும். அந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான்
நான் நடிக்கக் கற்றுக் கொண்டேன்” என்று ‘சொர்க்க சீமா’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி குறிப்பட்டுள்ளார் பானுமதி.
‘சொர்க்க சீமா’படத்தில் மிகப்பெரிய ஹிட்டானது பானுமதி
பாடிய “பாவுறமா” என்கிற பாடல்.
பானுமதியின் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் அளவில்லாத வாய்ப்புகள் பானுமதியைத் தேடி வந்தன. அது மட்டுமின்றி அவர் என்ன சம்பளம் கேட்டாலும் தரத் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தார்கள்.
தனது மகன் பரணியின் எதிர்காலத்துக்காக தொடர்ந்து
படங்களில் நடிப்பது என்ற முடிவை பானுமதியும்,
ராமகிருஷ்ணாவும் எடுத்ததின் காரணமாக பல பட
வாய்ப்புகளை ஒப்புக் கொண்டார் பானுமதி.
தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி மட்டும் விடாமல் தொடர்ந்து முயன்றிருக்கா விட்டால் – பானுமதி என்ற இணையில்லாத
நடிகையை தமிழ்த் திரையுலகம் அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் போய் இருந்திருக்கும்.
( நன்றி – தினமணி மற்றும் டூரிங்க் டாக்கீஸ்…)
.
……………………………………………