துன்பம் – ஒரு சோதனை

( ஏவிஎம்’மின் வாழ்க்கை – வைஜயந்திமாலா ….)

…………………………

துன்பம் – ஒரு சோதனை – கவிஞர் கண்ணதாசன் ….

வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.
குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன.
நிலங்கள் வறண்ட பின்தான் பசுமையடைகின்றன. மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.

இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது
மலை ஒன்றுதான். அதுவும் வளர்வதாகவும், அழிவதாகவும்
விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான்.
நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை.
நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

முதற்கட்டம் வரவு என்றால், அடுத்த கட்டம் செலவு.

முதற்கட்டம் வறுமை என்றால், அடுத்த கட்டம் செல்வம்.

முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்த கட்டம் துன்பம்.

முதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம்.
இறைவனது தராசில் இரண்டு தட்டுகளும் ஏறி ஏறி
இறங்குகின்றன.

`இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்’ என்றான் வள்ளுவன்.

எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும்
இறைவன் வழங்கியதில்லை.

அந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது;
உணவு கிடைக்கவில்லை.

பின் பசியுமிருந்தது; உணவும் கிடைத்தது.

இப்போது உணவு கிடைக்கிறது; பசியில்லை.

அடுக்கடுக்காகப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு
மிராசுதாரர் ஆனார் ஒருவர். ஆன மறுநாளே, அவரை `அரிசி
சாப்பிடக் கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார்
டாக்டர்.

சீனாவில் மாசேதுங் புரட்சி நடந்தபோது பல ஆண்டுகள்
காடுமேடுகளில் ஏறி இறங்கினார். மனைவியைத் தோளில்
தூக்கிக் கொண்டு அலையக்கூட வல்லமை பெற்றிருந்தார்.

புரட்சி முடிந்து, பதவிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில்
நோயில் படுத்தார்.

ரஷ்யாவில் லெனின் கதையும் அதுதான். புரட்சி நடக்கும்வரை
லெனின் ஆரோக்கியமாகவே இருந்தார். பதவிக்கு வந்த
சில மாதங்களிலேயே படுக்கையில் விழுந்தார்;
சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார்.

எனது தி.மு.க. நண்பர்கள் ஒவ்வொருவரும் கடுமையான
உழைப்பாளிகள். ரயிலிலும் கட்டை வண்டிகளிலும்,
கால்நடையாகவும் சென்று கூட்டத்தில் பேசுவார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைச் சாலைக்குப் போவார்கள்.

அப்பொழுதெல்லாம் அவர்கள் உடல்நிலை நன்றாகவே இருந்தது.

அவர்கள் பதவிக்கு வந்து நிம்மதியாக இருக்க வேண்டிய
நேரத்தில் அவர்களில் பலருடைய ஆரோக்கியம் கெட்டுவிட்டது.

எனது நண்பர் ஒருவர் படமெடுத்தார். முதற்படமே அபார வெற்றி.
அளவு கடந்த லாபம்.

அடுத்த படத்திலிருந்து விழத் தொடங்கியது அடி.
இன்னும் அவர் எழ முடியவில்லை.

இன்னொரு பட அதிபர்…

ஊமைப்படக் காலத்திலிருந்து தொழிலில் இருக்கிறார்.
ஆரம்பக் கட்டத்தில் பல படங்கள் அவருக்குக்
கை கொடுக்கவில்லை. மிகுந்த சிரமப்பட்டு சென்னைக்கு
வந்து ஒரு படம் எடுத்தார்.

அவரது `வாழ்க்கை’யையே அந்தப் படம்தான் தீர்மானிக்க
வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.

அந்தப் படம் அமோகமாக ஓடியது.

ஒரு புது நடிகையை நட்சத்திர நடிகையாக்கிற்று.

அது தெலுங்கிலும் வெற்றி; இந்தியிலும் வெற்றி.
அது முதல் அவர் தொட்டதெல்லாம் வெற்றி.

பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இல்லாமல்
வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்? கண்களை மூடிக்கொண்டு
எண்ணிப் பாருங்கள்.

ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி!

ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு.

இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை.

நீ நினைப்பது எல்லாமே நடந்துவிட்டால்,
தெய்வத்தை நம்ப வேண்டாம்.

எப்போது நீ போடும் திட்டம் தோல்வியுறுகிறதோ அப்போது
உனக்கு மேலானவன் அதை நடத்துகிறான் என்று பொருள்.

எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ,
அப்போது இறைவன் உனக்கும் அனுமதியளித்து விட்டான்
என்று பொருள்.

`ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்
ஒன்றைநினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்’

என்பது முன்னோர் பழமொழி.

`கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக்
காஞ்சிரங்காய் ஈந்தேன்
முற்பவத்தில் செய்தவினை’

இதுவும் அவர்கள் சொன்னதே.

உனது வாழ்க்கை பூஜ்ஜியத்திலே ஆரம்பமாகிறது. அதற்கு
முன்பக்கம் நம்பர் விழுந்தால் இறைவனின் பரிசு;
பின்பக்கம் விழுந்தால் அவனது சோதனை.

மேடும் பள்ளமுமாக வாழ்க்கை மாறி மாறி வந்தால் உனக்குப்
பெரிய வீழ்ச்சியில்லை. ஒரேயடியாக உச்சிக்கு நீ போய்விட்டால்
அடுத்து பயங்கரமான சரிவு காத்திருக்கிறது.

என் வாழ்க்கை மேடும் பள்ளமுமாகவே போவதால்,
என் எழுத்து வண்டி இருபத்தைந்தாண்டு காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதைத்தான் `சகட யோகம்’ என்பார்கள்.

வீழ்ச்சியில் கலக்கமோ எழுச்சியில் மயக்கமோ கொள்ளாதே!

அடுத்த பாதை என்ன, பயணம் என்ன’ என்பது, உனக்குத் தெரியாது;எல்லாம் தெய்வத்தின் செயல்’ என்றார்கள் நம் முன்னோர்கள்.

`ஆண்டவனின் அவதாரங்களே ஆண்டவன் சோதனைக்குத் தப்பவில்லை’ என்று நமது இதிகாசங்கள் கூறுகின்றன.

தெய்வ புருஷன் ஸ்ரீராமனுக்கே பொய் மான் எது,
உண்மை மான் எது என்று தெரியவில்லையே!

அதனால் வந்த வினை தானே, சீதை சிறையெடுக்கப்பட்டதும், ராமனுக்குத் தொடர்ச்சியாக வந்த துன்பங்களும்!

சத்தியதெய்வம் தருமனுக்கே சூதாடக்கூடாது என்ற புத்தி உதயமாகவில்லையே!

அதன் விளைவுதானே பாண்டவர் வனவாசமும் பாரத யுத்தமும்!

முக்காலமும் உணர்ந்த கவுதமனுக்கே, பொய்க் கோழி எது,
உண்மைக் கோழி எது என்று தெரியவில்லையே!

அதனால்தானே அகலிகை கெடுக்கப்பட்டதும், சாபம் பெற்றதும்.

ஆம், இறைவனின் சோதனை எவனையும் விடாது என்பதற்கு,
இந்தக் கதைகளை நமது இந்துமத ஞானிகள் எழுதி வைத்தார்கள்.

துன்பங்கள் வந்தே தீருமென்றும், அவை இறைவனின்
சோதனைகள் என்றும், அவற்றுக்காகக் கலங்குவதும் கண்ணீர் சிந்துவதும் முட்டாள்தனமென்றும் உன்னை உணர வைத்து,
துன்பத்திலும் ஒரு நிம்மதியைக் கொடுக்கவே அவர்கள்
இதை எழுதி வைத்தார்கள்.

இந்தக் கதைகளை `முட்டாள் தனமானவை’ என்று
சொல்லும் அறிவாளிகள் உண்டு.

ஆனால், முட்டாள்தனமான இந்தக் கதைகளின் தத்துவங்கள்
அந்த அறிவாளிகளின் வாழ்க்கையையும் விட்டதில்லை.

நான் சொல்ல வருவது, `இந்து மதத்தின் சாரமே உனது
லவுகிக வாழ்க்கையை நிம்மதியாக்கித் தருவது’
என்பதையே.

துன்பத்தைச் சோதனை என்று ஏற்றுக்கொண்டுவிட்டால்,
உனக்கேன் வேதனை வரப்போகிறது?

அந்தச் சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும்படி
நீ இறைவனை வேண்டிக்கொள்; காலம் கடந்தாவது
அது நடந்துவிடும்.

தர்மம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும்,
நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள் முட்டாள்களல்ல.

கஷ்டத்திலும் நேர்மையாக இரு.

நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே.

உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய்.

தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s