அர்விந்த் கெஜ்ரிவாலை இயக்குவது RSS -ஆ …??? கெஜ்ரிவால் – பா.ஜ.க-வின் -பி’ டீமா….???

இந்துத்துவ ரூட்டைப் பிடிக்கும் ஆம் ஆத்மி… கெஜ்ரிவாலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்-ஸா……?
-என்று தலைப்பு போட்டு கேட்கிறது விகடன் …..!!!

கெஜ்ரிவாலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்-ஸா……?

தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்று நாங்கள்தான்’ என்று முழங்கிவருகிறார் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். மறுபுறமோ,பா.ஜ.க-வின் `பி’ டீம்தான் ஆம் ஆத்மி. ஆர்.எஸ்.எஸ்
வழியைப் பின்பற்றி இந்தியாவில், இந்துத்துவாவை
நிலைநிறுத்த நினைக்கிறார் கெஜ்ரிவால்’ என்று
எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். அதற்கு வலு சேர்ப்பதுபோல, சில சர்ச்சைக் கருத்துகளைக் கூறிவருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஆம் ஆத்மி கட்சியின் இலக்குதான் என்ன… எதை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்…?

11 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தனித்துத் தெரிந்த நபராக இருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அன்றைக்கு அன்னா ஹசாரேவின்
ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு, ‘நாம் ஏன் தேர்தல் அரசியலில் ஈடுபடக் கூடாது…’ என்ற
எண்ணம் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டது. இதை அன்னா ஹசாரே மறுத்ததால், அவரிடமிருந்து விலகி வந்து, 2012 நவம்பரில்
ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கினார் கெஜ்ரிவால்.

2013-ல் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில்,
பா.ஜ.க-வுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது ஆம் ஆத்மி. பா.ஜ.க-வை வீழ்த்த, ஆம் ஆத்மிக்கு வெளியிலிருந்து காங்கிரஸ் ஆதரவு தர, டெல்லி முதலமைச்சரானார் கெஜ்ரிவால்.

ஆனால், அடுத்த 49 நாள்களில் காங்கிரஸுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும்
2015 -ல்சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில், 67 இடங்களை வென்று மீண்டும்
முதல்வரானார் கெஜ்ரிவால்.

அதன் பிறகு, 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும்,
2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலிலும் அமோக வெற்றிபெற்றது
ஆம் ஆத்மி கட்சி. தற்போது, குஜராத், ஹரியானா, சத்தீஸ்கர், கோவா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் கட்சியை விரிவுபடுத்துவதற்கான
வேலைகளில் இறங்கியிருக்கிறது ஆம் ஆத்மி.
( இமாசல பிரதேசத்தில், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள்,
தேர்தலுக்கு முன்னர் பாஜக-விற்கு தாவி விட்டதால்,
கெஜ்ரிவால் அந்தப்பக்கமே தலைகாட்ட தயங்குகிறார்…)

`ஊழல் ஒழிப்பே’ ஆம் ஆத்மியின் அறிவிக்கப்பட்ட பிரதான கொள்கை. அதோடு மக்களின் அடிப்படைத் தேவையான கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் ஆகிய விஷயங்களில், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, தேர்தல்
வெற்றியைச் சாத்தியப்படுத்திவருகிறார் கெஜ்ரிவால்.
ஆனால், சி.ஏ.ஏ பிரச்னை, அதையொட்டி டெல்லியில் நடந்த
மதக் கலவரம் ஆகியவை குறித்து கெஜ்ரிவால் வாய் திறந்ததேயில்லை. ‘இந்தியாவின் பிரதான பிரச்னைகளான
ஏற்றத் தாழ்வுகள், வேறுபாடுகள் குறித்த எந்தவொரு தெளிவும்
ஆம் ஆத்மி கட்சியிடம் இருப்பதாகத் தெரியவில்லை’ என விமர்சிக்கப்படுகிறது.

`ஆம் ஆத்மியின் கொள்கையற்ற அரசியல் ஆபத்தானது’
எனப் பல விமர்சனங்கள் எழுந்தாலும், அந்தந்த மாநில
மக்களின் முக்கியப் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் பேசி, சாதித்துவருகிறார் கெஜ்ரிவால்.

2020-ம் ஆண்டே, ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லஷ்மி
படங்களை அச்சடிக்கலாம் என்ற யோசனையை முன்வைத்தார் பா.ஜ.க-வின் சுப்பிரமணியன் சுவாமி. அப்போது, இஸ்லாமிய நாடான இந்தோனேசிய ரூபாய் நோட்டுகளில் விநாயகர் படமிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

இதே விஷயத்தை இப்போது குஜராத், ஹிமாசல் பிரதேச
தேர்தல்களை முன்னிட்டு, தன் சொந்த கண்டுபிடிப்பு போல் பேசியிருக்கிறார் ஐஐடி-யில் படித்த அரவிந்த் கெஜ்ரிவால்.

மேலும், `நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேறு வழிகளில் முயன்றாலும், சில சமயங்களில் கடவுள்களின் ஆசீர்வாதமும் வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்தியா முழுவதும் இது -ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் கெஜ்ரிவாலை இயக்குகிறது; ஆம் ஆத்மி பா.ஜ.க-வின் `பி’ டீம்’ என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

முன்னதாக, குஜராத் தேர்தல் வாக்குறுதியில், `ஆம் ஆத்மி வெற்றிபெற்றால் இலவசமாக அயோத்திக்கு அழைத்துச் செல்வோம்’ என்று வேறு கெஜ்ரிவால் பேசியிருந்தார்.

இது தவிர, பஞ்சாப்பில் வென்ற பிறகு அனுமன் கோயிலுக்குச் சென்றது, மதமாற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டெல்லி அமைச்சர் ராஜேந்திர பால் கெளதமை ராஜினாமா செய்ய
வைத்தது உள்ளிட்ட விஷயங்கள் ஆம் ஆத்மி மீதான விமர்சனத்துக்கு மேலும் வலுசேர்த்தன.

இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறிய
பிரபல லாயர் பிரசாந்த் பூஷண் சில ஆண்டுகளுக்கு முன்னர், `காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து இறக்கும் நோக்கில், பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் இணைந்து நடத்தியதுதான் (அன்னா ஹசாரேவின்)ஊழல் எதிர்ப்பு இயக்கம்.’
இது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்கு தெரியும்’’ என்று
ஒரு கதையைச் சொன்னார்…

இது குறித்து ராகுல் காந்தி, “எங்களுக்குத் தெரிந்த விஷயத்தை, இன்று ஆம் ஆத்மியின் நிறுவன உறுப்பினர் உறுதிப்படுத்தியிருக்கிறார்’’ என்றார்.

“ஆம் ஆத்மியின் முக்கிய இலக்கு தேர்தல் வெற்றி மட்டுமே.
எங்கே, எதைச் சொன்னால் வெற்றிபெறலாம் என்பதே
கெஜ்ரிவாலின் கணக்கு.

பஞ்சாப்பில், பகத் சிங்கையும் அம்பேத்கரையும் தூக்கிப்பிடித்த கெஜ்ரிவால்,

பா.ஜ.க ஆளும் குஜராத்தில் இந்துக் கடவுள்களை முன்னிறுத்துகிறார். இதைவைத்து, ஆர்.எஸ்.எஸ்-தான்
அவரை இயக்குகிறது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.

ஆனால், அதேநேரம், காங்கிரஸுக்குச் பாதிப்புகளை ஏற்படுத்துவதே ஆம் ஆத்மியின் முக்கிய வேலையாக
இதுவரை இருந்திருக்கிறது.

முக்கியத்துவம் வாய்ந்த சில விஷயங்களில் ஆம் ஆத்மி, பா.ஜ.க-வுக்கு எதிரான நிலைப்பாடுகளை மேற்கொள்ளவில்லை
என்பதை ஊன்றி கவனித்தால் புரியும்.

நம் கருத்து –

கெஜ்ரிவாலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்- அல்ல….

அவர் பாஜக-வின் “பி” டீமும் அல்ல….

அர்விந்த் கெஜ்ரிவால் என்கிற அரசியல்வாதி, எந்தவித கொள்கைகளும் இல்லாத –
என்ன விலை கொடுத்தாவது வெற்றிபெற வேண்டும்,
அதிகாரத்தை கைப்பிடிக்க வேண்டுமென்று நினைக்கும் –

ஒரு கடைந்தெடுத்த சுயநலவாதி மட்டுமே….

.
…………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to அர்விந்த் கெஜ்ரிவாலை இயக்குவது RSS -ஆ …??? கெஜ்ரிவால் – பா.ஜ.க-வின் -பி’ டீமா….???

  1. புதியவன் சொல்கிறார்:

    என்னுடைய அனுமானமும் அப்படித்தான் இருக்கிறது. மனதில் வஞ்சகம் கொண்ட சுயநலவாதி அரவிந்த கெஜ்ரிவால். அதனால்தான் முஸ்லீம் பகுதிகளில் ஒரு முகம், இந்துக்கள் பகுதியில் வேறு முகம் என்று வைத்திருக்கிறார். (இதனையே ராகுல் காந்தி செய்ய ஆரம்பித்திருக்கிறார், ஆனால் அவர் பப்பு வேகாது என்றே தோன்றுகிறது. தமிழகத்தில் கிறித்துவ நிலையங்களில் தங்கினார், சர்ச்சுகளுக்குச் சென்றார். கர்நாடகத்தில் முழுவதும் குங்குமத்தைத் தீற்றிக்கொண்டு இந்து கோவில்கள்/மடங்கள் என்று சென்றார். கேரளத்தில் முஸ்லீம்களுடன் பயணித்தார்)

    அப்போது ஊழலின் உச்சமாகத் திகழ்ந்த காங்கிரஸை விரட்ட ஏதாவது ஒரு இயக்கம் தேவைப்பட்டது. அன்னா ஹசாரே ஆரம்பித்தார். அது பாஜக தூண்டுதலினால் நடந்தது என்பதை நம்புவதற்கில்லை.

    ஆம் ஆத்மியின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் சிறுபான்மையினரின் ஆதரவுதான். அரவிந்த் கெஜ்ரிவால் கிறித்துவர். முஸ்லீம் வாக்குகள் தில்லியில் நிறைய உண்டு. அவர்கள் பொதுவாக பாஜகவிற்கு எதிராக காங்கிரஸுக்கு வாக்களிப்பது உண்டு (அவர்கள் வெற்றிபெறும் கட்சியாக இருந்ததால்). ஆம் ஆத்மி வந்தபிறகு, அந்த வாக்குகள் ஆம் ஆத்மிக்குச் செல்கின்றன. அதனால்தான் காங்கிரஸ் தேய்ந்துவிட்டது. ஹிந்துத்துவ வாக்குகள் என்று 30-35 சதம் உருவாகிவிட்டது. அது பாஜகவிற்கு மட்டுமே செல்லும். அதனால்தான் தில்லியில் எத்தனை சீட்டுகள் பெற்று ஆம் ஆத்மி வெற்றிபெற்றாலும், பாஜகவின் 30+ சதத்தைக் குறைக்க முடியாது.

    Surprisingly என்னுடய உறவினர்களில் படித்தவர்கள் ஆம் ஆத்மியை நம்புகின்றனர். பெங்களூரில் ஆம் ஆத்மி இந்த முறை கொஞ்சம் வெளியில் தெரிய ஆரம்பிக்கும், போகப்போக வளர்ச்சியடையலாம். அப்போது காங்கிரஸ் தேயும். (இன்றுள்ள நிலைமையில் அடுத்தமுறை காங்கிரஸ்தான் வரும் என்று நான் நினைக்கிறேன்)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.