(இறுதிப் பகுதி-3 ) எத்தனையெத்தனை ….!!!

இந்து மதம் என ஒன்று உண்டா….? -( பகுதி-3 )

இதுவரைச் சொன்னவற்றில் இருந்து இவ்வாறு தொகுத்துக்கொள்வோம். மதம் (Religion) என நாம் இன்று சொல்வது ஒரு மேலைநாட்டுக் கருதுகோள். அதன் அடிப்படையில் நாம் இன்று இந்து மதம் என ஒன்றை உருவகிக்கிறோம். இது முன்பு வேறுவேறு பெயர்களில் அறியப்பட்டது.

இந்த மரபின் வேர்கள் வரலாற்றுக்கு முந்தைய பழங்குடி வாழ்க்கையில் உள்ளன. அன்று அவை பலநூறு தனித்தனி குலவழிபாடுகளாக இருந்திருக்கலாம். அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து இணைந்து குறுமதங்களாயின. அவை பின்னர் இணைந்து பெருமதங்களாயின. அவை மேலும் இணைந்து இந்துமதம் என இன்று அறியப்படுகின்றன.

இந்த மரபில் மேலும் மேலும் துணைமதங்கள், புதிய வழிபாட்டு முறைகள் இணைந்துகொண்டே இருக்கின்றன. புதிய வழிபாட்டு முறைகளும், துணைமதங்களும் பிரிந்து உருவாகிக்கொண்டும் இருக்கின்றன. இரு உதாரணங்கள். ஷிர்டி சாய்பாபா வழிபாடு தனித்தன்மை கொண்ட ஒன்று. இஸ்லாமிய ஞானி ஒருவரை இந்து முறைப்படி வழிபடுவது அது. இன்று அது இந்து மரபுக்குள் வந்துவிட்டது. பல இந்து ஆலயங்களில் ஷிர்டி சாய்பாபா வந்துவிட்டார். வள்ளலாரின் ஜோதிவழிபாடு இந்து மரபில் இருந்து தனித்து பிரிந்து அவர் உருவாக்கியது. அது இந்து மரபுக்குள் தனி வழிபாட்டுமுறையாக நீடிக்கின்றது.

அமெரிக்கா சென்றால் சமண தெய்வங்கள் இந்து ஆலயங்களுக்குள் இருப்பதைக் காணலாம். ஏனென்றால் சமணர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பார்கள். அவர்களால் தனி ஆலயம் அமைக்க முடியாது. ஆகவே இந்து ஆலய வளாகத்திற்குள் அவர்கள் தங்கள் தெய்வங்களை நிறுவிக்கொள்கிறார்கள். இந்துக்களுக்கு அதில் எந்த சிக்கலும் இல்லை. சமணர்களுக்கும் பிரச்சினை இல்லை. இருநூறாண்டுகளுக்குப்பின் அவை இந்து மரபுக்குள் அமைந்திருக்கலாம்.

இந்த மகத்தான இணைவுச்செயல்பாடை, தத்துவார்த்தமான உள்விரிவை, அனைத்தையும் மறுக்காமல் இணைத்துக்கொள்ளும் நெகிழும் தன்மையை ‘ஆக்ரமிப்பு’ என்றும் ‘அடிமைப்படுத்தல்’ என்றும் நமக்கு விளக்குகிறார்கள் சிலர். எதிர்த்தரப்பாக இருந்த எல்லா மதங்களையும் ஒரு சொல் கூட மிச்சமில்லாமல் அழித்த வரலாறுகள் கொண்ட மதங்களின் மேடைகளில் நின்று அதை நம்மிடம் சொல்கிறார்கள். அந்த மதங்கள் உருவாக்கும் கல்விநிறுவனங்களின் அரங்குகளில் சென்று அப்படி முழக்கமிடுகிறார்கள். அதைக்கேட்டு நாமும் ‘உண்மையா சார்?’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். அறியாமைக்காக நாம் கூச்சப்படவேண்டாம், அலட்சியம் மற்றும் பொறுப்பின்மைக்காக கூச்சப்பட்டே ஆகவேண்டும்.

இந்துமதத்தின் பரிணாம வரலாற்றை நமக்குக் கிடைக்கும் நூல்கள் மற்றும் தரவுகளில் இருந்து இப்படி தொகுத்துக்கொள்ளலாம்.

இந்து மதம் என நாம் இன்று சொல்லும் இந்த மரபு முதன்மையாக ஆறுமதங்கள் (சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம்) ஆறுதரிசனங்கள் (சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம்) அடங்கியது. ஆறுதரிசனங்களும் ஆறு மதங்களும் ஒன்றுடன் ஒன்று விவாதித்து அது வளர்ந்தது.

அந்த விவாதத்தின் சித்திரம் மிகச்சிக்கலானது. அதை தத்துவப்பயிற்சியும் ஆர்வமும் கொண்டவர்களிடமே விவாதிக்கமுடியும். பிறவி மடையர்களான யுடியூப்வாயர்களுடனும் அரசியலியக்கங்களின் அல்லக்கைகளுடனும் அவற்றை விவாதிக்கப்புகுவது நம் மீதும், நமது முன்னோர் மீதும் சேற்றை அள்ளிப்பூசிக்கொள்வது போல.

ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சிறு உதாரணம். வைணவம் என பின்னாளில் பெயர்பெற்ற வழிபாட்டுமுறை பொயு ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில்தான் ஒற்றை இயக்கமாக ஆகியது. வைணவத்தின் அடிப்படைப் புராணங்கள் உருவாயின. வழிபாட்டுமுறைக்கான ஆகமநூல்கள் உருவாயின. அவற்றின் அடிப்படையில் அனிருத்தன், பலராமன் போன்ற வெவ்வேறு தெய்வங்களும், துணைத்தெய்வங்களும் வைணவத்திற்குள் ஒருங்கிணைந்தன.

வைணவ வழிபாட்டு மரபின் தத்துவ அடிப்படை பொயு 7 ஆம் நூற்றாண்டில் சங்கரருக்கு பின்னர் தெளிவடைய ஆரம்பித்தது. ஆறு தரிசனங்களில் ஆறாவதான உத்தர மீமாம்சம் அல்லது வேதாந்தம் வைணவத்தை தத்துவார்த்தமாக வலுப்படுத்தியது. ராமானுஜர் (விஷ்டாத்வைதம்), மத்வர் (துவைதம்), நிம்பார்க்கர் (துவைதாத்வைதம்) வல்லபர் (சுத்தாத்வைதம்) என வைணவம் வளர்ந்தது. பதினாறாம் நூற்றாண்டில் வல்லபருக்குப் பின்னரே இன்றைய வடிவை அது அடைந்தது.

அதேபோல சைவத்திலும் சாங்கியம், யோகம், வேதாந்தம் முதலிய ஆறுதரிசனங்கள் ஊடுருவி தத்துவார்த்தமாக அதை வளர்த்தபடியே இருந்தன. சைவம் என எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு நூறாண்டிலும் அது வளர்ந்து உருமாறியபடி இருப்பதைக் காணலாம். இன்று நாம் பார்க்கும் சைவம் என்பது பொயு பதினான்காம் நூற்றாண்டில் மெய்கண்டாருக்குப் பின்னர்தான் இவ்வடிவத்தை அடைந்தது.

அதாவது இந்த வழிபாட்டுமுறைகள் எல்லாம் முற்றிலும் வெவ்வேறு ‘மதங்கள்’ (Religions) ஆக இருந்து திடீரென்று ஏதோ ஒரு சதிவேலையால் ஒன்றாக ஆனவை அல்ல. அப்படி எல்லாம் மதங்களை இணைக்கவும் பிரிக்கவும் எவராலும் முடியாது. அணுவளவு வரலாறு அறிந்த எவரும் அதைச் சொல்ல மாட்டார்கள். இந்த வழிபாட்டு முறைகள் தனித்தனித் ‘தரப்புகள்’ ஆக இருந்தபோதிலும் ஒரே அமைப்பின் பகுதிகளாகவே இருந்தன.

ஆறுமதங்கள் பற்றி நமக்குக் கிடைக்கும் தொன்மையான நூல்கள் விஷ்ணுபுராணம், அக்னிபுராணம், பிரம்மாண்ட புராணம் போன்ற முதன்மையான புராணங்கள். அவை பொயு 3 முதல் பொயு 6 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை. அவற்றில் மிகமிகத் தெளிவாகவே ஆறுமதங்களும் ஒரே அமைப்பின் பகுதிகளாக இருந்தமை காணக்கிடைக்கின்றது. ஆறு மதங்களின் தெய்வங்களும் உறவினர்களாகவே காட்டப்படுகின்றனர். ஆறுமதக்கொள்கைகளும் ஒன்றுடன் ஒன்று உரையாடுகின்றன.

பொயு 7 ஆம் நூற்றாண்டில் சங்கரர் ஆறுமதங்களையும் தத்துவார்த்தமாக ஒருங்கிணைத்து ஒரே அமைப்பாக ஆக்கி, அதைப் பின்பற்றும் துறவியர் மரபை உருவாக்கினார். ‘ஷன்மத சங்கிரகம்’ என அது அழைக்கப்படுகிறது. கவனியுங்கள் ஆறு religion களை அவர் ஒன்றாக்கவில்லை. ஆறு தரப்புகளை ஒன்றாக்கினார். அதாவது ஆறு வழிபாட்டுமுறைகளை இணைத்தார். அதன்பின் பொயு 14 ஆம் நூற்றாண்டில் ஆறுமதத்திற்கும் பொதுவான பூசகர் மரபை சிருங்கேரி மடாதிபதியான வித்யாரண்யர் உருவாக்கினார்.

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் இன்று நாம் இந்துமதம் என்று சொல்லும் இந்த அமைப்பு இன்றிருக்கும் வடிவில் ஒன்றாகவே இருந்துள்ளது. ஒருவர் அதற்குள் சைவத்தையோ வைணவத்தையோ பின்பற்றலாம். ஆனால் பிற வழிபாட்டு மரபுகளுடன் இணைந்தே இருந்தாகவேண்டும். ஆலயங்கள் விஷ்ணுவுக்கோ சிவனுக்கோ உரியதாக இருக்கலாம். ஆனால் அங்கே மற்ற வழிபாட்டு மரபுகளின் தெய்வங்களும் இருக்கும்.

இந்தியாவில் தீவிர வைணவர்கள், தீவிர சைவர்கள் என சொல்லத்தக்கவர்கள் மிகமிகக் குறைவானவர்கள். அவர்கள் ஏதேனும் குறிப்பிட்ட சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள். உதாரணமாக நான்கு வைணவ சம்பிரதாயங்களில் ராமானுஜரின் ஶ்ரீசம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விஷ்ணுவை அன்றி பிறரை வணங்காதவர்கள். ருத்ர சம்பிரதாயம் மற்றும் குமார சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த தடைகள் இல்லை. மாத்வர்கள் வேறு ஆலயங்களில் அர்ச்சகர்களாகவே இருக்கிறார்கள். கர்நாடகத்தில் பல சமண ஆலயங்களிலேயே மாத்வபிராமணர்களே அர்ச்சகர்கள்.

சைவர்களில் வீரசைவ மரபினரே சிவனை மட்டுமே வழிபடுபவர்கள். மற்றமரபினரில் தீட்சை எடுத்துக்கொண்ட சிலர் மட்டுமே சிவனை மட்டுமே வழிபடுபவர்கள். எஞ்சியோருக்கு அந்த தடைகள் இல்லை. சாக்தர்களுக்கும் சிவ, விஷ்ணு என்னும் வேறுபாடு இல்லை. அதாவது இந்திய மக்கள் தொகையில் இந்துக்கள் ஏறத்தாழ அறுபது கோடி என்றால் அதில் மொத்தமாக ஐம்பதுலட்சம் பேர் சைவர்கள் அல்லது வைணவர்கள் என தனியாக அடையாளம் கொண்டவர்கள். எஞ்சியோர் இன்று நாம் இந்து மதம் என்று சொல்லும் பொதுவான வழிபாட்டு முறையிலேயே இருந்துகொண்டிருக்கிறார்கள். எல்லா தெய்வங்களையும் வழிபடுகிறார்கள்.

ஏறத்தாழ ஆயிரத்தைநூறு ஆண்டுகளாக இது இவ்வாறுதான் இருந்தது என்பதற்கான மாபெரும் சான்று தமிழில் சிலப்பதிகாரமே. ஆய்ச்சியர் குரவையும், வேட்டுவவரியும் ஒரே நூலில் இடம்பெறுகின்றன அதில். குமாரசம்பவம், ரகுவம்சம் இரண்டையும் எழுதிய காளிதாசன் சைவனா, வைணவனா? காளியை வழிபடும் உவச்சர் குடியில் பிறந்து ராமாயணம் எழுதிய கம்பன் சாக்தனா வைணவனா?

இந்த மாபெரும் ஒற்றைப்பேரமைப்பின் மீதுதான் இன்று திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த முறையில், அத்தனை ஊடகங்களையும் பயன்படுத்தி அதை பிளவுபடுத்தும் பிரச்சாரம் நிகழ்கிறது. கவனியுங்கள், அதற்கு எதிராக ஒரு குரலேனும் உண்மையைச் சொல்லும்படி ஒலிக்கிறதா? ஒரு முணுமுணுப்பாவது கேட்கிறதா? ஏன் இல்லை?

விஷயமறிந்தோர் பலர் உள்ளனர். பேசமுடியாது, பேசினால் கீழ்த்தர வசை, அரசியல் முத்திரை, ஏளனம் மற்றும் அரசியல்ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாகவேண்டியிருக்கும். ஆகவே அஞ்சுகிறார்கள். அதுவே இங்குள்ள சூழல். நான் பேசுகிறேன், அதன்பொருட்டு ஒவ்வொருநாளும் வசைபாடப்பட்டு அவமதிக்கப்படுகிறேன். அதை கொண்டாடி கும்மியடிப்பவர்களில் என் மேல் தனிப்பட்ட பொறாமை கொண்ட இந்துக்களும் பலநூறுபேர் இருப்பதைக் காண்கிறேன்.

இந்தியாவிற்கு ஐரோப்பிய சிந்தனைகள் வந்தபோது ஐரோப்பிய சிந்தனைமரபின்படி ஒரு மதம் (Religion) என இந்து மெய்ஞான மரபு அடையாளம் காணப்பட்டது. அவர்களுக்கு முன்னால் இருந்த நிர்வாக முறை என்பது முகலாயர்களுடையது. அவர்கள் இந்த மரபை ஒட்டுமொத்தமாக ஹிந்து என்னும் பாரசீகச் சொல்லால் குறிப்பிட்டனர். ஆகவே அதையே பிரிட்டிஷ் நிர்வாகமும் குறிப்பிட்டது. ஆரம்பகால ஆய்வாளர்களும் அச்சொல்லையே கையாண்டனர். அச்சொல்லே இந்த மதத்திற்கு உரியதாகியது. சீனா நம்மை கைப்பற்றியிருந்தால் லின்-டுக் என இந்த மரபு அழைக்கப்பட்டிருக்கும். லின் -டுக் என்று ஒரு மதமே இல்லை, அது சீனர்கள் உருவாக்கியது என ஒரு சாரார் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

இந்துமதம் என்னும் இச்சொல் பல குழப்பங்களை மரபான அறிஞர்கள் நடுவே உருவாக்கியது. இங்கே மதம் என்றால் உறுதியான தரப்பு என்று ஏற்கனவே பொருள் இருந்தது. Religion என்ற கருத்தே இருக்கவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த மரபு தர்மம் என்று அழைக்கப்பட்டது. ஆகவே இந்து மதம் என்ற சொல் முன்வைக்கப்பட்டபோது மரபான அறிஞர்கள் அதை நிராகரித்தனர். அப்படி ஒன்று இல்லை என்றும், சைவமும் வைணவமும் இன்னும் பிறவுமே மதங்கள் என்றும் சொன்னார்கள். காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி முதல் வெவ்வேறு மடாதிபதிகள் அதைச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வது, இந்து என ஓர் உறுதியான ஒற்றைத்தரப்பும் ஒற்றைவழிபாட்டு முறையும் இல்லை என்பதைத்தான். சைவமும் வைணவமுமே மதங்கள் என சொல்லத்தக்கவை என்றுதான். இவையனைத்தையும் ஒன்றாக்கி தன்னுள் அடக்கி இங்கே நிலைத்துள்ள ஒட்டுமொத்த மரபையே நவீனகால அறிஞர்கள் இந்துமதம் என்கிறார்கள் என அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

மேலும் இந்துமதம் என்று சொல்லி, இன்றுவரை பல்வேறு வழிபாட்டுமுறைகளின் தொகுப்பாக இருக்கும் இந்த மரபை எதிர்காலத்தில் ஒற்றைத்தரப்பாக ஆக்கினால் காலப்போக்கில் சைவமும் வைணவமும் பிற வழிபாட்டு முறைகளும் தங்கள் தனித்தன்மையை இழக்கக்கூடும் என்றும், ஒற்றை நிர்வாகமும் ஒற்றை கருத்தியலாதிக்கமும் உருவாகிவிடக்கூடும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.

அந்த அச்சம் நியாயமே என்றும், அவ்வாறு இந்து மதம் என்னும் ஒற்றை அமைப்பு உருவாகக்கூடாது என்றும், இந்து வழிபாட்டுமுறைகளின் தனித்தன்மையை அழித்து அதை ஒற்றைப்போக்காக ஆக்கும் எல்லா முயற்சிகளும் தடுக்கப்படவேண்டும் என்றும் நான் திரும்பத்திரும்ப இருபதாண்டுகளாக எழுதி வருகிறேன்.

ஆனால் அதற்கும் இன்று சைவம் வேறு இந்துமதம் வேறு என்றெல்லாம் பேசுபவர்களுக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது. இந்து மரபு சென்ற ஆயிரம் ஆண்டுகளாக மெல்லமெல்ல ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுப்பை நிகழ்த்தியவர்கள் சங்கரர் முதல் சித்பவானந்தர் வரை நாம் வழிபடும் மாபெரும் ஞானிகள். தொடர்ச்சியான தத்துவ உரையாடல்கள் வழியாக, மெய்ஞானப் பரிமாற்றம் வழியாக இந்த இணைப்பும் தொகுப்பும் நடைபெற்றுள்ளது.

இன்று இந்து மதம் என அழைக்கப்படும் மொத்தமான ஞானமரபின் ஒவ்வொரு அணுவிலும் அந்த உரையாடலின் அம்சம் உள்ளது. நம் ஆலயங்கள் அனைத்திலும் அந்த இணைப்பின் வெளிப்பாடுகள் உள்ளன. அந்த இணைப்பின் விளைவான தெய்வங்கள் உள்ளன. 2010ல் தமிழ் சைவமரபின் தலைமை ஆளுமையான சீர்வளர்சீர் தருமை ஆதீனம் மிகமிக தெளிவாக அதை விளக்கினார். அந்த மேடையில் நானுமிருந்தேன். மேலும் பலமுறை அவர் அறுதியாக அதைச் சொல்லியிருக்கிறார்.

இன்று சைவம் வேறு இந்துமதம் வேறு என்று கூச்சலிடுபவர்கள் எவரும் நேற்றுவரை சைவத்தில் ஆர்வம் கொண்டவர்கள் அல்ல. சைவத்தை அறிந்தவர்கள் அல்ல. பலர் இந்துமதம் அழியவேண்டும் என அறைகூவியவர்கள். அதன் ஒரு பகுதியாகவே அவர்கள் சைவம் இந்துமதம் அல்ல என கூவுகிறார்கள்.

இறுதியாக, நீங்கள் இந்து மரபின் உள்ளே அமைந்த எப்பிரிவை ஏற்றவர் என்றாலும் இந்துவே. சைவத்தின் ஆறு அகச்சமயம், ஆறு புறச்சமயம் ஆகியவற்றில் எதைச் சேர்ந்தவர் என்றாலும். வைணவத்தின் நான்கு சம்பிரதாயங்களில் எதில் நம்பிக்கை கொண்டவர் என்றாலும்.

இந்து மதமே மூன்று அடுக்குகளால் ஆனது. நடைமுறை தெய்வங்கள் அல்லது நாட்டார் தெய்வங்கள் (குலதெய்வங்கள், குடும்பதெய்வங்கள், காவல்தெய்வங்கள், ஊர்த்தெய்வங்கள்) அதன் முதல் அடுக்கு. இன்று எந்த வேள்வியிலும் எந்த பூஜையிலும் குடும்பதேவதா, கிராமதேவதா என சொல்லி இரண்டுக்கும் பூஜை செய்துவிட்டே அடுத்த கட்ட தெய்வங்களுக்கு வழிபாடு செலுத்துகிறோம்.

இரண்டாவது அடுக்கு பெருந்தெய்வங்களால் ஆனது. ஆறு சமயங்களுக்கும் உரிய மையத்தெய்வங்கள் அவை. சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், கணபதி, சூரியன். அதற்கு அடுத்த அடுக்கு தூய தத்துவத்தெய்வம். பிரம்மம். உருவற்றது, எந்தவகையான அறிதலுக்கும், வரையறைக்கும் அப்பாற்பட்டது. உணரப்படுவது, ஆனால் அறியவே முடியாதது. இம்மூன்றில் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் நீங்கள் இந்துவே.

இந்து மரபை இன்றைய பொருளில் நாம் இந்து மதம் என்று சொல்கிறோம். சொல்லும்போதே அச்சொல்லில் உள்ள மதம் என்பது மேலைநாட்டு பொருளில்தான் அமைந்துள்ளது, இன்றைய விவாதங்களுக்காகச் சொல்லப்படுகிறது என அறிந்திருக்கிறோம். இன்னொரு தருணத்தில் தர்மம் என்றோ, நெறி என்றோ, வழி என்றோ, மரபு என்றோ சொல்வோம். இந்து மதம் என நாம் இன்று சொல்லும் இது தொல்குடிக்காலம் முதல் இங்கே இருப்பது. ஒவ்வொரு நாளும் புதியவை இணைந்து வளர்வது. உட்பிரிவுகள் வழியாக விரிவது.

இந்து மதம் இன்னும் மாறுதல் அடையும். இன்னும் விரிவாகும். அதில் எது அடங்கும் அல்லது அடங்காது என நம் ஞானியர் முடிவுசெய்யட்டும். நம் அறிஞர்கள் விளக்கட்டும். மேடைப்பேச்சாளர்களும் அரசியல்வாதிகளும் நம் மதத்தை வரையறுக்க வேண்டியதில்லை.

இதைச் சொல்லும்போது ஒவ்வொரு முறையும் தெளிவுபடுத்த வேண்டியது ஒன்று உண்டு. அரசியல்வாதிகள் மதத்தை வரையறுக்க வேண்டியதில்லை என்று சொல்லும்போது எல்லா அரசியல்வாதிகளையுமே உத்தேசிக்கிறோம். இந்து மதத்தை, அதன் பண்பாட்டுக்கூறுகளை அரசியலாக்கும் இந்துத்துவர்கள் அதை ஒற்றை அமைப்பாக ஆக்கி, அதன் உள்விரிவுகளை மறுத்து, ஒரே மேலாதிக்கத்தின்கீழ் கொண்டுவர முயன்றால் அதை வன்மையாகவே கண்டிப்போம். அது இந்து மதத்தை அழிப்பது. கூடவே இந்து மதத்தை உடைத்தும், திரித்தும் விளக்குபவர்களை கண்டிப்போம்.

நேற்றுவரை தர்மம் என அழைக்கப்பட்டு இன்று மதம் என வரையறை செய்யப்பட்டுள்ள இந்த மெய்ஞான மரபு அதற்குள் உள்ள பல வழிபாட்டு மரபுகளும், தத்துவ மரபுகளும் தங்கள் தனித்தன்மையுடன் செயல்படுவதன் வழியாகவே உயிர்த்துடிப்புடன் இதுவரை இயங்கியது.

அந்த பன்மைத்தன்மையே நம் ஞானியர், முன்னோர் நமக்குக் காட்டிய வழி. அதை இழக்காமலிருப்போம். ஆனால் அந்த உட்கூறுகள் அனைத்தும் ஒற்றைப்பெரும்பெருக்காக காலப்போக்கில் நம் ஞானியர் வழியாக ஆகியுள்ளன என்றும் உணர்ந்திருப்போம். அந்த உட்கூறுகள் ஒன்றுடனொன்று கொள்ளும் கொள்ளல் கொடுத்தல் வழியாகவே ஒவ்வொன்றும் இதுவரை வளர்ந்தது என்பதையும் மறக்காமலிருப்போம்

( நிறைவு பெறுகிறது ….)

.
……………………………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to (இறுதிப் பகுதி-3 ) எத்தனையெத்தனை ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  மிகுந்த சிந்தனையின் வாயிலாக ஜெயமோகன் எழுதியது மிகவும் நன்றாக இருந்தது. இவற்றைப் புரிந்துகொள்ள ‘தீவிர’ என்ற அடைமொழியோடு மதத்தில் இருப்பவர்களால் முடியாது. திறந்த மனத்தோடு இருப்பவர்கள்தாம் இதனைப் புரிந்துகொள்ள இயலும். ஜெமோ சொன்ன ஆண்டுக் கணக்கு சரி என்று எனக்குத் தோன்றவில்லை. உதாரணம் //வைணவ வழிபாட்டு மரபின் தத்துவ அடிப்படை பொயு 7 ஆம் நூற்றாண்டில் சங்கரருக்கு பின்னர் தெளிவடைய ஆரம்பித்தது.//. 9ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட க்ரந்தங்கள் (ஆளவந்தார், திருவரங்கம்) கிடைத்திருந்தாலும், திவ்யப்ப்ரபந்தங்கள் என்ற வைணவத்திற்கான தமிழ் கிரந்தம் 5ம் நூற்றாண்டிற்கு முன்பே எழுதப்பட்டிருந்தது (7-8ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பகுதிகளும் உண்டு). அதுபோல, வடமொழி வேதங்கள் இதற்கும் முந்தைய காலத்தவை.

  //பிறவி மடையர்களான யுடியூப்வாயர்களுடனும் அரசியலியக்கங்களின் அல்லக்கைகளுடனும் அவற்றை விவாதிக்கப்புகுவது// – ஹா ஹா ஹா… நிறைய வரளாற்று அரிஞர்கலும், பொருளாதாரப் புளிகளும், ஆறாய்ச்சியாலர்களுமாக யூடியூப் நிரம்பி வழிகிறது. கிடைத்தவரை சம்பாதி என்ற ஒற்றை நோக்குதான் இவற்றிர்க்குக் காரணம்.

  //ஆலயங்கள் விஷ்ணுவுக்கோ சிவனுக்கோ உரியதாக இருக்கலாம். ஆனால் அங்கே மற்ற வழிபாட்டு மரபுகளின் தெய்வங்களும் இருக்கும்.// – இது எத்தனைபேருக்குப் புரியும் என்று தெரியவில்லை. நாம் 100-200 வருடத்துக்கு முந்தைய ஆலயத்தை மனதில் கொண்டு இதனைப் புரிந்துகொள்ளக்கூடாது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆலயங்களைப் பார்த்துத்தான் புரிந்துகொள்ளவேண்டும். உதாரணம்..திருக்கோயிலூர் (உலகளந்த பெருமாள் கோவில்/திரிவிக்ரம பெருமாள் கோவில். இதில்தான் முதலாழ்வார்கள் சந்தித்தனர் என்று சொல்வர்), மதுரை திருமாலிருஞ்சோலை கோவில். திருக்கோவிலூர் கோயிலின் உள்ளே, மூலவர் சன்னிதி அருகில் துர்க்கை சன்னிதி உண்டு. ப்ரபந்தத்தில் இந்த துர்க்கை பற்றி வருகிறது. திருமாலிருஞ்சோலையின் கோவிலைக் காக்கும் தெய்வம் 18ம்படி கருப்பன் ஸ்வாமி.

  முக்கியமாக அறிந்துகொள்ளவேண்டியது….. இராமானுஜர் பிறந்தது தற்போது ‘ஐயங்கார்கள்’ என்று அறியப்படுகிற வைணவ சமூகத்தில் கிடையாது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஜாதி இருந்ததா என்பதும் சந்தேகம்தான். (“ஐயங்கார்/ஐயர்” போன்றவை. ஆனால் ஆயிரம் ஆண்டுகளில் பிராமணர்களிடையே பலப்பல ஜாதிகள் வந்துவிட்டன. இதுபோன்றே பல்வேறு சமூகங்களிலும். In my opinion அப்போது-ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வர்ணங்கள் ஐந்தும் இருந்திருக்கலாம். பிறகு அதிகமாகியிருந்திருக்கலாம். Again this can be researched)

  நன்றாக எழுதியிருக்கும் ஜெமோவைப் பாராட்டுகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s