ஜெ. முடிவு முன்கூட்டியே சசிகலாவுக்குத் தெரியுமா….?

ஒரு கேள்விக்கான விடையைத் தேடும்போது, புதிதாகப் பல கேள்விக்குறிகள் நம் முன்பாக அணிவகுத்து வந்து நிற்கும். ஆறுமுகசாமி ஆணையமும் இதையே செய்திருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம், ஜெயலலிதா மரணமடைந்த தேதியையே சந்தேகத்துக்குரியதாக ஆக்கியிருக்கிறது.

உடல்நலம் குன்றி, சுயநினைவே இல்லாமல் 22.09.2016 அன்று அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா, 05.12.2016 அன்று மரணமடைந்ததாக அறிவித்தார்கள். பல்வேறு சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் துணையுடன் இந்த நாள்களில் நிகழ்ந்தவற்றை விசாரித்திருக்கும் ஆணையம், ‘சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது. சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் சிவகுமார், முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் குற்றம் செய்தவர்கள்’ என்று முடிவு செய்திருக்கிறது.

ஜெயலலிதா அரசியலுக்கு வந்த காலம்தொட்டு அவரின் நிழலாகவே இருந்தவர் சசிகலா. `உடன்பிறவா சகோதரி’ என்று ஜெயலலிதாவால் அழைக்கப்பட்டவர். ஜெயலலிதாவின் நலனை முழுமையாகக் கவனித்துக்கொண்ட சசிகலாவை, தேர்தல் தோல்விக்குப் பிறகு சில காலம் ஒதுக்கி வைத்தார். அதைத் தவிர இருவரும் பிரிந்திருந்தது கிடையாது. ஆறுமுகசாமி ஆணையமோ, ‘தனிப்பட்ட ஒருவரின் கட்டாயத்தினால் ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் சட்டவிரோதமாக இலக்கை அடைவதற்காகச் செயல்பட்டார்கள்’ என்று சசிகலாவைக் குற்றம் சாட்டுகிறது.

ஜெ. முடிவு முன்கூட்டியே சசிகலாவுக்குத் தெரியுமா?
இதுபற்றி இரண்டுவிதமாக விவாதங்கள் எழுந்தாலும், ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரமும், விசாரணையில் வெளிவந்த தகவல்களும் ‘ஜெயலலிதாவின் முடிவு சசிகலாவுக்கு முன்கூட்டியே தெரியுமோ’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

பெங்களூரு சிறையில் இருந்ததால் ஆணையத்தில் நேரில் ஆஜராக முடியாத சசிகலா, தன் வழக்கறிஞர் மூலம் 12.03.2018 அன்று ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். ஜெயலலிதாவின் உடல்நலப் பிரச்னைகளை விரிவாக விவரிக்கிறது அது.

  • வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று 27.09.2014 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து 22 நாள்கள் சிறைவாசம் அனுபவித்தார் ஜெயலலிதா. ‘இதனால் அவருக்கு ஏற்கெனவே இருந்துவந்த உயர் ரத்த அழுத்தமும் உயர் சர்க்கரை அளவும் கூடுதலானது. தைராய்டு சுரப்பும் குறைவாக இருந்தது. மன அழுத்தமும் அதிகமானதால், உடல்நிலை சரியில்லாமல் போனது. அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட ஆரம்பித்தது. இதன் காரணமாக அவர் கட்டுப்பாடு இல்லாமலேயே மலம் வெளியேறும். அதற்காக டயாபர் அணிவார். இதன் விளைவாக உடலில் அரிப்புகளும் வரத் தொடங்கியது’ என்கிறார் சசிகலா.

  • ‘2016 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜெ.வுக்கு நடப்பதில் சிரமங்கள் ஏற்பட்டன. மே மாதம் தேர்தலுக்கு முன்பாக அது பெரும் சிரமமாக மாறியது. ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதற்கே சிரமப்பட்டார். நடந்தால் மிகுந்த வலி ஏற்படும். நடக்கும்போது உடலில் சின்ன அதிர்வு வந்து போகிறது என்று சொன்னார். அனைத்து மருத்துவப் பரிசோதனைகளையும் அப்போலோவிலிருந்து வீட்டுக்கே வந்து செய்வார்கள்’ என்கிறார் சசிகலா.

  • 2000-ம் ஆண்டு முதலே ஜெ.வின் சிகிச்சைகளை ஒருங்கிணைப்பு செய்து வருபவர் டாக்டர் சிவகுமார். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மருமகன் இவர். ‘ஜெயலலிதா பிடிவாத குணம் கொண்டவர், தான் எடுத்த முடிவிலிருந்து மாறாதவர். சிகிச்சை தொடர்பாகக் கேள்விகள் கேட்டுத் திருப்தி அடைந்த பிறகே தொடர்வார். சிகிச்சை பிடிக்கவில்லை என்றால் தொடர மாட்டார். இது அவரின் சுபாவம்’ என்று குறிப்பிடுகிறார் சசிகலா.

  • ஆனால், ஜெ.வின் மருத்துவ அக்கறை ஆச்சர்யம் தருவதாக இருக்கிறது. இந்தத் தகவலும் சசிகலாவின் பிரமாணப் பத்திரத்திலேயே உள்ளது. 2015 காலத்திலேயே Flash Glucose Monitoring System கருவியைத் தன் கையில் பிளவுஸுக்கு அடியில் கட்டியிருந்தார் ஜெ. இது 24 மணி நேரமும் சர்க்கரை அளவைக் கண்காணிக்கும். தினமும் தன் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளை நோட்டில் எழுதி வைப்பார் ஜெ. என்ன சாப்பிட்டார், எத்தனை மணிக்குச் சாப்பிட்டார் என்பதையும் எழுதி வைப்பார். 2014 இறுதிக்குப் பிறகு அவருக்கு சிகிச்சை அளிக்க போயஸ் தோட்டத்துக்கு வந்த டாக்டர்கள் மருத்துவக் குறிப்புகள் எழுதுவதற்காகவே ஒரு நோட்டையும் தனியாகப் பராமரித்துவந்தார். போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெ. அறையில் இந்த எல்லா நோட்டுகளும் உள்ளன. மேற்கத்திய நாடுகளில் தீவிரமான பிரச்னைகள் கொண்ட நோயாளிகள் இப்படிச் செய்வது வழக்கம். முதல்வராகத் தனது பணிகளுக்கு மத்தியிலும் இதையெல்லாம் செய்து வந்த ஒருவர், தன் உடல்நலத்தை அலட்சியம் செய்தார் என்று சொல்வதுதான் முரண்.

  • எந்த நோயாளியுமே தனக்கு சிகிச்சை அளிப்பதை ஒருவர் படம் பிடிப்பதை விரும்ப மாட்டார்கள். அதிலும் ஜெயலலிதா போஸ் கொடுப்பதை விரும்பாதவர். 1996 தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டபோது அவர் வேட்புமனு தாக்கல் செய்ததைப் பலரால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. திரும்பவும் ஒருமுறை மனுவைக் கையில் பிடித்தபடி போஸ் கொடுக்குமாறு கேமராமேன்கள் கேட்டபோது, ‘‘சாரி, எனக்கு நடிக்கத் தெரியாது” என்று நகர்ந்தவர். ஆனால், அவருக்கு சிகிச்சை தந்ததைத் தானே வீடியோ எடுத்ததாக சசிகலா சொல்லியிருக்கிறார். ‘2016 தேர்தலுக்கு முன்பாக போயஸ் தோட்டத்தில் ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை அவரே வீடியோ எடுக்கச் சொல்லி நான் எடுத்தேன். அந்த வீடியோக்கள் ஜெயலலிதாவின் அறையில்தான் உள்ளன’ என்று குறிப்பிடுகிறார் சசிகலா. ஜெயலலிதா சொல்லித்தான் இவற்றை சசிகலா எடுத்தார் என்பதற்கு இப்போது சாட்சியங்கள் இல்லை. ஒருவேளை பின்னால் இப்படி நிகழும் என்பதற்காக ஆதாரங்களை சசிகலா சேகரித்து வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

  • இதேபோல அப்போலோ மருத்துவமனையில் ஜெ. சிகிச்சை பெற்று வந்ததை மூன்று கட்டங்களாக சசிகலா வீடியோ எடுத்தார். ‘டிரக்கியோஸ்டமி செய்திருப்பதால் தன்னைத் திரும்பிப் பார்க்க முடியவில்லை என்று வீடியோ எடுத்துத் தரச்சொல்லிக் கேட்டார் ஜெயலலிதா. அதற்காக எடுத்தேன்’ என்று காரணம் சொல்கிறார் சசிகலா. இந்த வீடியோக்களில் ஒன்றுதான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது வெற்றிவேல் வெளியிட்டது.

  • ஜெ.வை மருத்துவமனையில் சேர்க்கக் காரணமாக இருந்த சூழலையும் சசிகலா விவரித்திருக்கிறார். ‘2016 ஜூன் முதல் அவர் உடலில் கொப்புளங்கள், அரிப்புகள், தடிப்புகள் ஏற்பட்டன. அன்றாடப் பணிகளையே அவரால் செய்ய முடியவில்லை. சரும மருத்துவர்கள் வந்து சிகிச்சை தந்தனர். செப்டம்பரில் தோல் பிரச்னைகளுக்காக அவருக்கு ஸ்டீராய்டு மாத்திரை தரப்பட்டது. குணமடையத் தொடங்கியதும் படிப்படியாக அதைக் குறைத்தார்கள். 19.09.2016 அன்று அவருக்கு ஜுரம் வந்தது. அப்போது டாக்டர் சிவகுமார் சபரிமலை போயிருந்தார். அவரிடம் கேட்டு பாராசிட்டமால் கொடுத்தோம். மறுநாள் அப்போலோ மருத்துவர்கள் வந்து சிகிச்சை தந்தனர். 21-ம் தேதி ஜுரம் அதிகமானது. இருந்தாலும் சென்னை மெட்ரோ ரயில் தொடக்க விழா நிகழ்ச்சிக்குச் சென்றார். 22-ம் தேதி ஜுரம் இன்னும் அதிகமானது. மருத்துவமனைக்குக் கூப்பிட்டபோது கோபத்துடன் மறுத்தார். அங்கே போனால் அட்மிட் ஆகச் சொல்லுவார்கள், வேண்டாம் என்றார். இரவு 9 மணிக்கு சிவகுமார் வந்தார். 9.30க்கு பல் துலக்கச் சென்ற ஜெ. மயக்கமாக இருக்கிறது என்று கூப்பிட்டார். குளியலறையிலிருந்து தாங்கிப் பிடித்து அழைத்து வந்தேன். கட்டிலில் உட்கார்ந்தவர் மயங்கிச் சரிந்தார். அதன்பின் அப்போலோ கூட்டிச் சென்றோம்’ என்கிறார் சசிகலா.

  • அப்போலோவில் பல சோதனைகள் செய்கிறார்கள். டயாபர் அணிவதால் சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்பட்டு, அது ரத்தத்தில் கலந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள். அவருக்கு இதயத்திலும் நுரையீரலிலும் பிரச்னைகள் இருந்தன. ஜெயலலிதா இதயத்தில் பெர்ஃபொரேஷன் மற்றும் சந்தேகத்துக்கு இடமான வெஜிடேஷன் பிரச்னையால் அவதிப்படுகிறார் என்று 28.09.2016 அன்று கண்டறியப்பட்டது. ‘இதயத்தில் வெஜிடேஷன் கண்டறியப்பட்டால் அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு’ என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் நிதிஷ் நாயக், தேவ கௌரவ் வேலாயுதம் ஆகியோர் ஆணையத்தில் சாட்சியம் அளித்தனர். அதை ஏன் செய்யவில்லை என்பதுதான் ஆணையம் எழுப்பும் பிரதான கேள்வி.
  • 01.10.2016 அன்று செப்சிஸ் பிரச்னைக்கு சிகிச்சை அளித்தார் லண்டன்
  • செயின்ட் தாமஸ் மருத்துவமனை டாக்டர் ரிச்சர்ட் பீலே. இது கவனிக்கப்படாவிட்டால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படலாம் என்றார். ‘டாக்டர் ரிச்சர்ட் பீலே வெளிநாட்டு சிகிச்சைக்குப் பரிந்துரைத்தார். தானே ஏர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்வதாகவும் கூறினார்’ என்று டாக்டர் சிவகுமார் ஆணையத்தில் சாட்சியம் அளித்திருக்கிறார். ஆனால், ஜெ. வெளிநாடு கூட்டிச் செல்லப்படவில்லை.

  • ரிச்சர்ட் பீலே வருகைக்குப் பிறகு 5.10.2016 அன்று எய்ம்ஸ் மருத்துவக் குழுவை அமைப்பதற்காகக் கேட்டு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதினார். பல நிபுணர்களைக் கேட்டாலும், கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணரை அவர் கேட்கவில்லை. ஜெ.வுக்கு இதயப் பிரச்னை இருந்தபோது, இப்படி ஒரு நிபுணர் ஏன் குழுவில் இல்லை என்பது ஆணையத்தின் அழுத்தமான கேள்வி.

  • எய்ம்ஸ் குழு ஐந்து முறை சென்னை வந்தது. ஆனால், அப்போலோ அளித்த சிகிச்சையை அவர்கள் வெறுமனே கண்காணிக்க மட்டுமே செய்தனர். அவர்கள் எந்த சிகிச்சையையும் மருந்தையும் பரிந்துரைக்கவில்லை.

  • இதற்கிடையில் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனை இதய நிபுணர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஜெ.வுக்கு ஆஞ்சியோகிராம் செய்ய ஆலோசனை கூறினார். 25.11.2016 நியூயார்க் மவுன்ட் சினாய் மருத்துவமனை இதய நிபுணர் டாக்டர் சமின் சர்மா வந்து பார்த்தார். மருத்துவ அறிக்கைகளைப் பார்த்த அவர், அன்றே ஆஞ்சியோ செய்யவும் தயாரானார். ஆனால், அப்போதும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை. சமின் சர்மாவை சசிகலா குடும்பத்தினர் அழைத்து வந்ததாகக் கூறப்பட்டது. அவரை அழைத்து வந்தவர் யார் என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது.

  • ஜெயலலிதா மருத்துவமனையில் பல நாள்கள் சுயநினைவுடன் இருந்திருக்கிறார். காவிரிப் பிரச்னை தொடர்பாக அதிகாரிகளுடன் ஒருநாள் ஆலோசனையும் நடத்தினார். தன் சிகிச்சை பற்றிக் குறிப்புகளைக் கைப்பட எழுதியும் வைத்திருக்கிறார். ‘அப்போது அவருக்கு ஏன் சிகிச்சை விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை, ஏன் அவர் இருளில் வைக்கப்பட்டார்? இதயம், நுரையீரல் வீக்கம் உள்ளிட்ட மோசமான உபாதைகள் குறித்து யாருக்குமே தெரிவிக்கப்படாதது திகைப்பு ஏற்படுத்துகிறது’ என்று கேட்கிறார் ஆறுமுகசாமி.

  • சிகிச்சைக்காக ஜெ.வை வெளிநாடு அழைத்துச் செல்லாதது ஏன் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘அது இந்திய மருத்துவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கும்’ என்று பதில் சொல்லியிருக்கிறார். இதைக் கண்டிக்கும் ஆறுமுகசாமி, ‘முதல்வர் குணமடைவது முக்கியமா? இந்தியா குறித்த தன்முனைப்பு முக்கியமா? அமெரிக்க டாக்டர்கள் ஆலோசனை கேட்டோம், பிரிட்டிஷ் டாக்டர் வந்தார், சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் வந்தார்கள். அப்போதெல்லாம் இந்தப் பிரச்னை எழவில்லையா?’ என்று கேட்டிருக்கிறார்.

  • ‘முதல்வரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதா என்பதை அமைச்சரவை பரிசீலித்திருக்க வேண்டும். ஆனால், சசிகலா, அவரது மருத்துவ உறவினர்களின் கட்டுப்பாட்டில் எல்லாமே இருந்தது’ என்கிறது ஆணையம். ஜெ. சிகிச்சைக்கு உதவ மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.விமலா, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு உள்ளிட்ட ஆறு பேர் குழுவை நியமித்தது அரசு. அவர்கள், ‘அப்போலோ மருத்துவர்கள் எங்களிடம் ஆலோசனை எதுவும் கேட்கவில்லை. நாங்கள் சுழற்சி முறையில் அங்கு பணியில் இருந்தோம். டி.வி பார்த்தே முதல்வரின் உடல்நிலை குறித்துத் தெரிந்துகொண்டோம்’ என்று சாட்சியம் அளித்திருக்கிறார்கள். அப்போது அரசில் செல்வாக்காக இருந்த இருவர், சிறப்புப் பணி அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ். ‘ஜெ. சிகிச்சைகள் தொடர்பாக சசிகலாவும் அப்போலோ மருத்துவர்களும் மட்டுமே அறிந்திருந்தனர்’ என்று அவர்கள் சாட்சியம் தந்துள்ளனர்.

  • ஜெயலலிதாவுக்கு இதயப் பிரச்னைக்குக் கடைசியாக சிகிச்சை தந்தது டிசம்பர் 4-ம் தேதிதான். மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் நிகழ்ந்தபிறகே அது நடந்தது என்கிறார் ஆறுமுகசாமி. ஜெ. உதவியாளர் பூங்குன்றன் சாட்சியப்படி அன்று மதியம் 2 மணிக்கு அலறல் சத்தம் கேட்டது. மாலை 4.30 மணிக்கு அழுகைச் சத்தம் கேட்டு முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி வீரப்பெருமாள் சென்றபோது, அழுதபடி சசிகலாவை ஜெ. அறையிலிருந்து வெளியே அழைத்து வந்தனர். தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், தான் தகவல் கேட்டு வந்து பார்த்தபோது ஜெ.வுக்கு அவர் அறையிலேயே ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்ததைக் கண்டு அதிர்ந்துபோனதாக சாட்சியம் அளித்திருக்கிறார்.

  • ஜெ.வின் ஸ்க்ரீனிங் ரிப்போர்ட், ‘மாலை 4.20 மணிக்கு நோயாளிக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதன்பிறகு அவரது இதயம் செயல்படுவது நின்றது. எக்கோ பரிசோதனை எடுத்து இது உறுதி செய்யப்பட்டது. ரத்த ஓட்டம் நின்றிருந்தது’ என்கிறது. ஆறுமுகசாமியோ, ‘4.12.2016 மதியம் 3:50 மணிக்கு ஜெ. காலமானார். அதன்பின் செய்யப்பட்ட சி.பி.ஆர் மற்றும் ஸ்டெர்னோடமி போன்றவை பயனற்றவை’ என்கிறார்.

  • 5.12.2016 இரவு 11.30 மணியளவில் ஜெ. இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுதா சேஷய்யன் ஜெ. உடலுக்கு எம்பார்மிங் செய்தார். ‘10, 15 மணி நேரத்துக்கு முன்பே முதல்வர் இறந்திருக்க வேண்டும்’ என்று அவர் சாட்சியம் அளித்தார். ‘ஜெயலலிதா 04.12.2016 மதியம் 3.00 முதல் 3.30-க்குள் இறந்ததாகக் கருத்தில் கொண்டு, ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் திதியை அனுஷ்டிக்கிறார்’ எனப் பூங்குன்றன் மற்றும் ஜெயலலிதாவின் டிரைவர் அய்யப்பன் ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர்.

விடை தெரியாத பல கேள்விகளை விசாரித்து உண்மையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது இந்த அரசின் பொறுப்பு.
( நன்றி -விகடன் தளம் …)

இந்த கட்டுரையை படிக்கும்போதும், எழுதும்போதும் – மிகவும் வேதனையாகவும், எரிச்சலாகவும் இருக்கிறது. சுற்றிலும் இத்தனை பேர் இருந்தபோதே இத்தனை அநியாயங்கள், துரோகங்கள நடந்திருக்கின்றனவே… மற்ற அத்தனை பேரும் ஊமைகளாக, மௌனமாக பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்களே…

இனியும் கூட, இந்த விஷயங்கள், தற்போதைய ஆளும்கட்சியால், தங்கள் அரசியல் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும் என்பதைத்தவிர, இறந்துபோனவருக்கு எந்த நியாயமும் கிடைக்கப்போவதில்லை…தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படப் போவதுமில்லை…

.
……………………………………………………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஜெ. முடிவு முன்கூட்டியே சசிகலாவுக்குத் தெரியுமா….?

  1. Raghuraman சொல்கிறார்:

    Sir, only one thing I am not convinced. Arriving at the date of death based on thidhi may not be relevant. Because, srartha thidhi may vary due to the amount of time the thidhi falls on specific day. This is governed by the panchangam and there also two panchangams in practice, so, following this and suspecting the date of death may be ridiculous. This is my view.
    Raghuraman

  2. புதியவன் சொல்கிறார்:

    எந்தத் தலைவரும் இறந்துவிட்டாலும், தக்க நேரத்தில்தான் (ஆபீஸ் சென்றவர்கள் திரும்பியபிறகு, கொஞ்சம் இரவு நேரத்தில்) அறிவிப்பார்கள். அதனால் இது பெரிய பிரச்சனை இல்லை. தந்தி தொலைக்காட்சி முதலிலேயே (மதியம்) ஆறிவித்துவிட்டு பிறகு வாபஸ் வாங்கியது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

    ஆணையம் எழுப்பிய கேள்விகள் யார் வேண்டுமானாலும் எழுப்பலாம். ஆணையத்திற்கு technical knowledge கிடையாது. ஏன் வலதுபுற வாசல் வழியாக ஜெ. ஆஸ்பத்திருக்குக் கூட்டிச்செல்லப்பட்டார் என்றெல்லாம் கேள்வி கேட்பது யாருக்குமே சுலபம்தான். சசிகலாவின் பிரமாணப் பத்திரத்தின்படி ஜெ அவர்களுக்கு பலவித உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்திருக்கின்றன. தேர்தல் பிரச்சாரத்தின்போதே மேடை ஏறாமல், அதற்கே லிஃப்ட் வைத்திருந்தனர். சசிகலா, ஜெ வின் இமேஜைக் காப்பாற்றவே ரொம்பவும் வெளிப்படையாகச் செயல்படவில்லை என்று நினைக்கிறேன். அமைச்சர்களில் பெரும்பான்மையினருக்கு ஆலோசனை சொல்லும் கெபாசிட்டி இருந்திருக்காது. இருந்தும் சசிகலா இன்னும் கொஞ்சம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டிருக்கவேண்டும். முக்கியமானவர்களை, கண்ணாடி அறைக்கு வெளியிலிருந்தாவது பார்க்கவிட்டிருக்க வேண்டும். கடுமையான கட்டுப்பாடுகள்தாம் அவர் மீதான சந்தேகங்களுக்கு ஆரம்பம். ஜெ. முதல் நாளிலிருந்தே அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததில்லை. எம்.ஜி.ஆர் தலைமையில் பல வருடங்கள் இருந்து, தான் தலைவியானபோதுதான் முழுக்கட்டுப்பாட்டை மேற்கொண்டார். அதிமுக தலைவர்கள், சசிகலாவிடம் பயம் கலந்த மரியாதை காட்டியது, சசிகலாவின் திறமைக்கான அங்கீகாரம் அல்ல. ஜெ. வுக்கான மரியாதை. ஜெ. முழுமையாக சசிகலாவை நிரந்தரமாகத் துரத்தியிருந்தால், ஈ காக்கைகள் தவிர வேறு யாரும் சசிகலாவை எட்டிப்பார்த்திருக்க மாட்டார்கள். சசிகலா, ஜெ. வுக்குப் பிறகு தான் ஆட்டிப்படைக்கலாம் என்று நினைத்ததால்தான் யாரையும் ஆஸ்பத்திரியில் அண்டவிட வில்லை. இது மாபெரும் தவறுதான்.

    சசிகலா செய்தது என்ன? தினகரனை மீண்டும் கட்சிக்குள் சேர்த்தது. ஒரு தலையாட்டி பொம்மை ஆளவேண்டும் என்று, ஜெ. வின் முடிவுக்கு மாறாக ஓபிஎஸ்ஸை அவமானப்படுத்தி எடப்பாடியைக் கொண்டுவந்தது (அதற்கு காசு வாங்கியிருக்க வாய்ப்பு குறைவு). மக்கள் சசிகலாவுக்கு வாக்களிக்கவே மாட்டார்கள். எம்.ஜி.ஆரே தன் கடைசிக் காலத்தில் நிறைய முறை ஜெ.வை வேண்டிக்கேட்டுக்கொண்டது, அந்த சசிகலாவை விட்டு நீங்கு என்பதுதான். காலம் அதனால்தான் சசிகலாவை, அதிமுகவை நெருங்க விடவில்லை.

    மற்றபடி ஆணையம் தெரிவித்திருப்பதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அரசியல் அறிக்கைதான் அது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.