எத்தனையெத்தனை ….!!!

 • மத நம்பிக்கையோ, கடவுள் நம்பிக்கையோ கூட
  இல்லாத சிலரும்,
 • கடவுள் மறுப்பாளர்கள் சிலரும்,

 • போலியாக தங்கள இந்துக்கள் என்று காட்டிக்கொள்ளும்
  சிலசுயநலவாத அரசியல்வாதிகளும்,

” அது சைவம் மதம் தான் – இந்து மதம் அல்ல…. “

என்று உளறத்தொடங்கியதும்,
ஏகப்பட்ட விவாதங்கள்… ஆளாளுக்கு
அரைவேக்காட்டுத்தனமான கருத்து கூறல்கள்…

முழுமையாக இந்த விஷயங்களைப்பற்றி, விஷயம்
அறிந்தவர்கள் யாராவது விவரமாக எழுதினால்
நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்….

 • சரியான நேரத்தில் களத்துக்கு வந்து விட்டார்
  எழுத்தாளர் ஜெயமோகன்.

உலகில் இருந்த, இருக்கும், – அத்தனை மதங்களைப்
பற்றியும், விரிவாக ஆய்ந்து, அலசி – ஒரு அருமையான கட்டுரையை எழுதி இருக்கிறார்.

இந்த கட்டுரையை படிக்கும்போது –
இதை எழுதுவதற்கு முன்னர், அவர் அடிப்படையாக எந்த
அளவிற்கு இந்த விஷயத்தைப்பற்றி தேடித்தேடி படித்திருக்க
வேண்டும்…? எவ்வளவு ஆழமாக யோசித்திருக்க
வேண்டும்… அதை கோர்வையாக தமிழில் சொல்ல எந்த
அளவிற்கு உழைத்திருக்க வேண்டும்….? என்று தோன்றுகிறது.
அனைத்து மதங்களைப் பற்றியும், தேர்ந்த ஞானம் இல்லாதவர்களால் இத்தகைய கட்டுரையை எழுதவே முடியாது.

ஜெயமோகனின் இந்த கட்டுரை – இந்து மதம் பற்றி மட்டுமல்ல…
உலகின் அத்தனை மதங்களைப் பற்றியும், ஒரு தெளிவான பார்வையை தருகிறது…. ஜெயமோகன் அவர்களுக்கு உளமார்ந்த
நன்றியை செலுத்திக்கொண்டு,

விமரிசனம் தள வாசக நண்பர்களும், அவரது உழைப்பின் பயனை
பெற வேண்டும் என்கிற ஆர்வத்தோடு,

ஜெயமோகன் எழுதி –
“இந்து மதம் என ஒன்று உண்டா…?”

 • என்கிற தலைப்பில் 3 பகுதிகளாக வெளியான விரிவான கட்டுரையொன்றை இந்த தளத்தில் பதிப்பிக்கிறேன்….
 • நீண்ட, ஆழமாக உள் வாங்கிக்கொள்ள வேண்டிய
 • கருத்துகள் நிறைந்த கட்டுரை என்பதால், இதை ஒரே மூச்சில்
 • படிக்க முடியாத வாசகர்கள் ‘புக்மார்க்’ செய்து வைத்துக்கொண்டு,
 • கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக படிக்கலாம்.

முதல் பகுதி கீழே – மீதமுள்ள பகுதிகளும், அடுத்தடுத்த
நாட்களில் வெளியாகும்….

……………………………………….

பாண்டிச்சேரியில் பேசும்போது ஒன்று சொன்னேன். உலகிலேயே இந்துக்களிடம் மட்டும் ஒரு விசேஷ மனநிலை காணப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் நம்மிடம் உருவாகி வந்த ஒன்று அது. தமிழகத்தில் இது உச்சத்திலுள்ளது. இந்துக்கள் மட்டும் இந்து மதம் பற்றிய அறிதல்களை இந்து விரோதிகள் என வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டவர்களிடமிருந்தும், இந்துமதம் அழியவேண்டும் என்பதற்காகவே பாடுபடுவதாக கூறுபவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்கிறார்கள். இந்து மதம் பற்றி எழுதிய, பேசிய அறிஞர்களோ ஞானிகளோ அவர்களின் கண்களுக்குப் படுவதே இல்லை.

இந்துமதம் பற்றி அறிய தமிழில் அ.லெ.நடராஜன் முதல் கண்ணதாசன் வரை அறிஞர்கள் எழுதிய நூல்கள் உள்ளன. சுவாமி சித்பவானந்தர் முதல் சுவாமி அசுதோஷானந்தா வரை பல்வேறு ஞானியர் எழுதிய நூல்களும் உரைகளும் உள்ளன. என் நூல்களும் கிடைக்கின்றன. என் கட்டுரைகள் இணையத்திலேயே உள்ளன. இந்த விவாதங்களில் எவரும் அவற்றை மேற்கோளாக்கவில்லை. தாக்குதல்களுக்கும் திரிபுகளுக்கும் பதிலாக அவற்றைச் சுட்டிக்காட்டவில்லை. மாறாக பொதுவெளியில் அரசியல்வாதிகள் என்ன சொன்னார்கள் என்று மட்டுமே கவனித்தனர். இதுதான் உண்மையான பிரச்சினை. இது இந்துக்களிடமிருக்கும் அறியாமை, அக்கறையின்மை.

இந்தக் கட்டுரையே கூட பத்தாயிரம் பேரிடம் சென்று சேரும். என் தளத்துக்கு வருபவர்களிலேயே பலர் படிக்க மாட்டார்கள். ஆனால் அசட்டுத்தனமான ஒரு யூடியூப் வீடியோவை ஒருவன் போட்டால் ஐந்துலட்சம் பேர் அதை சென்று பார்ப்பார்கள். தங்கள் மதநம்பிக்கை மேல், தங்கள் முன்னோர் மேல் ஐயம்கொண்டு குழம்புவார்கள். ஆனால் பதில் தேடி அப்பதில்கள் இருக்குமிடத்துக்கே வரமாட்டார்கள்

அத்துடன் இத்தகைய கேள்விகளுக்கு ஆய்விலும் வாசிப்பிலும் ஆர்வம் கொண்ட என்னைப் போன்ற ஒருவர் அரசியல்வாதிகள் சொல்வதுபோல ‘அதிரிபுதிரி’யான பதிலைச் சொல்லிவிட முடியாது. நக்கல் நையாண்டி என கீழிறங்கி பேசமுடியாது. வரலாற்றுப் பார்வையுடன், மதங்களின் இயங்கியல் சார்ந்த பார்வையுடன் மட்டுமே பேச முடியும். அந்த பதிலை நம்மவர்களின் சிறிய மூளைகளால் புரிந்துகொள்ள முடியாது.

அதாவது இந்து மதம் என்பதே இல்லை என்று கொக்கரிப்பவர், அதற்கு எதிராகச் சொல்லப்படும் விரிவான வரலாற்று விளக்கத்தை புரிந்துகொள்ள மாட்டார். ‘வெளக்கெண்ணை மாதிரி வளவளன்னு நீளமா எழுதியிருக்கார்’ என்று சொல்லி கடந்து செல்வார். அவர் சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்.

ஆயினும், இளைய தலைமுறையினரிடமிருந்து என்றோ ஒருநாள் இவற்றுக்கெல்லாம் கவனம் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால் நான் என் குருவின் ஆணையை ஏற்று இதையெல்லாம் சொல்ல தொடங்கிய தொண்ணூறுகளில் இவற்றைச் சொன்னால் ஐந்தாறுபேர் கூட கவனிக்காத நிலை இருந்தது. இன்று அந்நிலை மாறிவிட்டிருக்கிறது. கவனமே கிடைக்கவில்லை என்றாலும் சொல்லிக்கொண்டே இருப்பது நம் கடமை என நினைக்கிறேன். பதில் இங்கே இருக்கட்டும். தேவையானவர்களுக்கு அது இல்லை என ஆகவேண்டாம்.

மதம், அடிப்படைப் புரிதல்கள்.

மதங்கள் பற்றிய எந்த விவாதத்திலும் அடிப்படையான சிலவற்றை நினைவில் நிறுத்தவேண்டும். அந்த எளிய புரிதல்கூட இல்லாமல்தான் இங்கே இவை சார்ந்த பேச்சுகள் நிகழ்கின்றன.

அ. மதங்கள் இன்று ஒரு நிறுவனம் தொடங்கப்படுவதுபோல ஒரு காலகட்டத்தில் பெயரிடப்பட்டு, நெறிகள் வகுக்கப்பட்டு உருவாக்கப்படுவன அல்ல. அவை ஏதோ ஒரு வகையில் தொடக்கம் கொண்டு, மெல்லமெல்ல காலத்தில் திரண்டு வருபவை. காலந்தோறும் அவற்றின் பெயர், அடையாளம் ஆகியவை மாறுகின்றன. அவற்றின் வளர்ச்சிப் பரிணாமம் மிகச்சிக்கலான ஒரு வரலாற்று நிகழ்வு.

ஆ. மதம் என நாம் இன்று சொல்லும் இந்த கருத்துருவம், இப்போதுள்ள இந்த அர்த்தத்தில் முன்பு இருந்ததில்லை. இன்று மதங்கள் என நாம் அழைப்பவை எவையும் தங்களை மதம் என சொல்லிக்கொண்டவை அல்ல. அவை வழிமுறை அல்லது மார்க்கம் என்றோ, அறம் அல்லது தர்மம் என்றோ, ஒழுங்கு அல்லது சம்பிரதாயம் என்றோதான் தங்களை சொல்லிக்கொண்டன. இஸ்லாம் என்பது மார்க்கம். கிறிஸ்தவம் என்பது ஒழுங்கு (order) இந்து, பௌத்த, சமண மரபுகள் தங்களை தர்மம் என சொல்லிக்கொண்டன. இன்று நாம் பேசும் மதம் என்னும் இந்த கருத்துவடிவம் பதினாறாம் நூற்றாண்டு ஐரோப்பிய தத்துவவாதிகளால் உருவாக்கப்பட்டது.

மதம் என்னும் சொல்

மதம் என்னும் சம்ஸ்கிருதச் சொல் ‘உறுதியான தரப்பு’ என்னும் பொருளிலேயே புழங்கி வருகிறது. மலையாளத்திலும் கன்னடத்திலும் தெலுங்கிலும் இன்று ‘பரோட்டாதான் மிகச்சிறந்த உணவு என்பதே என் மதம்’ என்று சொல்லமுடியும். அரசியல் விவாதங்களில் சாதாரணமாக இதை கேட்கலாம். மதம் என்பதற்குச் சமானமான தமிழ்ச்சொல் சமயம். சமயம் என்பது உறுதியான தரப்பு என்பதையே குறிக்கிறது.

ஒரு சிந்தனைத் தரப்பு அல்லது சிந்தனைப் பிரிவு என்னும் பொருளில் இந்திய சிந்தனை மரபில் வெவ்வேறு மதங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம் ஆகிய ஆறு தரிசனங்களும் ஆறு மதங்கள் என்றே பழைய நூல்களில் சொல்லப்படுகின்றன. இவை தவிர தார்க்கிக மதம், சார்வாக மதம், ஏகான்ம மதம் போன்ற பல மதங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை எவையும் இன்று நாம் மதம் என்னும் சொல்லில் பொருளில் செயல்பட்டவை அல்ல. அதாவது தங்களுக்கான தெய்வங்கள், தனித்த வழிபாட்டுமுறை, நிர்வாக அமைப்பு ஆகியவை கொண்டவை அல்ல. அவை கருத்துநிலைபாடுகள் மட்டுமே.

வேதத்தை முதல்நூலாகக் கொண்டவர்களின் தரப்பை வைதிக மதம் என்பார்கள். அவர்களிலேயே வேதங்களை சடங்குகளாக மட்டுமே கொள்பவர்கள் மீமாம்ச மதத்தவர். வேதங்களை அறிவிற்கான முதல்தொடக்கமாக கருதுபவர்கள் வேதாந்த மதத்தவர்.

மீமாம்ச மரபுக்குள்ளேயே வேதமரபு பல மதங்களாக பகுக்கப்பட்டுள்ளது. இந்திரனை மையத்தெய்வமாகக் கொண்ட ஐந்திரம், வருணனை மையத்தெய்வமாகக் கொண்ட வாருணம், சூரியனை மையத்தெய்வமாகக் கொண்ட சௌரம், அக்னியை மையத்தெய்வமாக கொண்ட ஆக்னேயம் என வேதமதங்களே பல உள்ளன. (பாரதியின் ஒரு கட்டுரையில் இந்து மதப்பிரிவுகளான ஆறு சமயங்கள் என அவர் சுட்டுவது இவற்றையே)

தெளிவான வழிபாட்டு முறை கொண்டவை ஆறு மதங்கள். ஒரு பிரபஞ்ச தரிசனமும், அதையொட்டிய தெய்வமும், அதற்கான வழிபாட்டுமுறையும் கொண்டவை இவை. சிவனை மையத்தெய்வமாகக் கொண்ட சைவம். விஷ்ணுவை மையத்தெய்வமாகக் கொண்ட வைணவம். சக்தியை மையத்தெய்வமாகக் கொண்ட சாக்தம். முருகனை மையத்தெய்வமாகக் கொண்ட கௌமாரம். பிள்ளையாரை மையத்தெய்வமாகக் கொண்ட காணபத்யம். இவை ஒவ்வொன்றுக்குள்ளும் துணைமதங்கள் உள்ளன.

சைவர்களுக்கு தெரியும், அகச்சமயம் புறச்சமயம் என அவர்கள் சைவத்துக்குள் பல பிரிவினைகளை கொண்டிருக்கிறார்கள். இப்பிரிவினைகள் தத்துவரீதியானவை. பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுர அவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என சைவ அகச்சமயங்கள் ஆறு. காபாலிகம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம் என சைவ புறச்சமயங்கள் ஆறு. இவற்றுக்கு வெளியே உள்ள சமணம், பௌத்தம், வேதாந்தம் போன்றவற்றை சைவம் புறப்புறச் சமயம் என்கிறது. (பல அண்மைக்கால நூல்களில் பலவகை பிழைகளுடன் இவை பட்டியலிடப்பட்டுள்ளன). இவை எல்லாமே மதம் என்றே சொல்லப்படுகின்றன.

சைவ வழிபாட்டு மரபிலேயே காஷ்மீர சைவம், வீரசைவம், சித்தாந்த சைவம் (அல்லது மெய்கண்டார் மரபு) ஆகியவை தனித்தனி மதங்களாகவே எண்ணப்பட்டன. இவை தவிர காணபத்யம், கௌமாரம், சாக்தம் ஆகியவையும் இன்று சைவத்துடன் இணைந்து அதன் பகுதிகளாகவே உள்ளன.

வைணவம் சென்ற அறுநூறாண்டுகளாக நான்கு பெருமரபுகளாகவே உள்ளது. இவை சம்பிரதாயம் (order) என அழைக்கப்படுகின்றன. ஆனால் சென்ற கால நூல்களில் வெவ்வேறு மதங்களாகவே இவை குறிப்பிடப்படுகின்றன. ஶ்ரீசம்பிரதாயம் (ராமானுஜர் மரபு) மாத்வ சம்பிரதாயம் (மத்வர் மரபு) ருத்ர சம்பிரதாயம் அல்லது புஷ்டிமார்க்கம் (வல்லபர் மரபு) குமார சம்பிரதாயம் (நிம்பார்க்கர் மரபு). இவையும் இன்று தனித்தனியாகவே செயல்படுகின்றன. ஆறுமதங்களில் சௌரம் வைணவத்துடன் இணைந்தது.

இந்து மரபு மட்டுமல்ல, பௌத்தம் சமணம் ஆகியவையும் பல்வேறு துணைமதங்களின் தொகுதிகளே. இந்து மரபுக்குள் வரும் சைவம் வைணவம் உள்ளிட்ட எல்லா மதங்களுமே பல்வேறு துணைமதங்களின் தொகுப்பாகவே உள்ளன. கொள்கைகள் மற்றும் வழிபாடுகளின் அடிப்படையில் அவை பிரிகின்றன. இணையான கொள்கைகள் மற்றும் வழிபாடுகளின் அடிப்படையில் அவை இணைகின்றன. பலசமயம் இவற்றை மதஞானிகள் நிகழ்த்துகிறார்கள். இந்த செயல்பாடு எல்லா மதங்களுக்குள்ளும் நிகழ்கிறது.

மதம் என நாம் இன்று பகுத்து அடையாளப்படுத்தி வைத்திருக்கும் முறையை இயந்திரத்தனமாக நேற்றைய வரலாற்றின்மேல் போட்டால் மிகமிக அபத்தமான புரிதலையே சென்றடைவோம். இந்துமதம் என ஒன்று இல்லை என்று சொல்லலாம் என்றால் சைவம் என ஒன்று இல்லை என்றும் அடுத்தபடியாகச் சொல்லிவிடலாம். அப்படியே மறுத்தபடியே செல்லலாம்.

நாம் முன்பு மதம் என சொல்லிவந்தது வேறு, ஐரோப்பியர் வருகைக்குப்பின் நவீன காலகட்டத்தில் மதம் என சொல்லப்படுவது வேறு. ஐரோப்பியர் சொல்லும் religion என்பது நவீனக்கருத்து. நவீன காலகட்டத்தில் நாம் வழிவழியாக மதங்கள் என அழைத்துவந்த பல்வேறு தரப்புகளை இணைத்துக்கொண்டுள்ள பொதுமரபை மதம் என வரையறை செய்தனர். அதை இந்து மதம் என்றனர்.

இரண்டுவகை மதங்கள்

இந்து மதம் என்றல்ல எந்த மதமும் ஏதேனும் ஒரு வரலாற்றுப்புள்ளியில் ஒட்டுமொத்தமாகக் கட்டமைக்கப்பட்டது அல்ல. மதங்களின் பரிணாமம் மிகவிரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.

முதலில் மதங்களை நாம் இரண்டாகப் பிரித்துக் கொள்ளவேண்டும். இயற்கையாக திரண்டு வந்த மதங்கள். ஏதேனும் தீர்க்கதரிசிகள் அல்லது ஞானிகளிடமிருந்து தோன்றிய மதங்கள். இயற்கைமதங்கள், தீர்க்கதரிசன மதங்கள் என பிரித்துக்கொள்ளலாம்.

தீர்க்கதரிசன மதங்கள் ஏராளமாக உள்ளன. சமணம்(வர்த்தமான மகாவீரர்), பௌத்தம் (கௌதம புத்தர்), ஆசீவகம் (மகதி கோசாலன்) சீக்கியம் (குருநானக்) ஆகியவை இந்திய தீர்க்கதரிசன மதங்கள். இஸ்லாம் (முகமது நபி) கிறிஸ்தவம் (ஏசு கிறிஸ்து) கன்பூசிய மதம் (கன்பூஷியஸ்) தாவோ (லவோட்சு) ஆகியவை புகழ்பெற்ற மதங்கள்.

சிலகாலம் இருந்து மறைந்த தீர்க்கதரிசன மதங்கள் ஏராளமாக உள்ளன. பெரிய அளவில் வளராமல் நின்றிருக்கும் மதங்களும் உள்ளன. பாரசீக இளவரசரான மாணி என்பவர் நிறுவிய மாணிகேய மதம் (Manichaeism) பொயு 3 ஆம் நூற்றாண்டு முதல் வலுவாக இருந்து பின்னர் இஸ்லாமிய ஆதிக்கத்தால் முற்றாக மறைந்தது. மத்திய ஆசிரியாவில் நூறுக்கும் மேற்பட்ட சிறிய தீர்க்கதரிசன மதங்கள் இருந்துள்ளன.

அண்மைக்காலத்தில்கூட தீர்க்கதரிசன மதங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.1863ல் ஈராக்கில் பகாவுல்லா என்னும் தீர்க்கதரிசியால் உருவாக்கப்பட்ட பகாயி மதம் உலகமெங்கும் உள்ளது. 1889ல் இந்தியாவில் மிர்ஸா குலாம் அகமத் என்னும் தீர்க்கதரிசி உருவாக்கிய அகமதியா மதம் உள்ளது. இவை இஸ்லாமில் இருந்து உருவானவை. கிறிஸ்தவ மரபுக்குள் இருந்து உருவான தீர்க்கதரிசிகளும் துணைமதங்களும் உலகமெங்கும் உள்ளன.

இந்த தீர்க்கதரிசன மதங்கள் எல்லாமே ஒரு தீர்க்கதரிசியில் இருந்து தொடக்கம் கொண்டிருக்கும். ஆனால் அவர் தனக்கு முன்னால் இருந்த ஞானியரில் நீண்ட மரபில், அல்லது தீர்க்கதரிசிகளின் நீண்ட வரிசையில் தான் இறுதியாக வந்தவன் என்றே சொல்வார். வர்த்தமான மகாவீரர் தனக்கு முன் 23 தீர்த்தங்காரர்கள் இருந்ததாகச் சொன்னார். ஏசுவும், முகமது நபியும் அவ்வாறுதான் சொன்னார்கள்.

ஒரு குறிப்பிட்ட தீர்க்கதரிசியால் முன்வைக்கப்படாமல், வரலாற்றின் பரிணாமத்தில் உருவாகி வந்த மதங்களை இயற்கை மதங்கள் என்கிறோம். இந்துமதம் அத்தகையது. பான் மதம் (திபெத்) யூதமதம், ஷிண்டோ மதம் (ஜப்பான்) என பல மதங்கள் உள்ளன உலகில் இருந்த ஏராளமான இயற்கை மதங்கள் இன்று இல்லை. ஐரோப்பாவில் இருந்த கிரேக்கமதம் போன்ற இயற்கை மதங்கள்தான் உலகசிந்தனைக்கே அடித்தளம் அமைத்தவை. அவை மறைந்துவிட்டன.

உலகமெங்கும் இயற்கை மதங்கள் மிகமிகக் கடுமையாக தாக்கப்பட்டு அழிக்கப்பட்டபடியே உள்ளன. பெரும்பாலானவை அழிந்துவிட்டன. மிகச்சிலவே எஞ்சியுள்ளன. பான் மதம், ஷிண்டோ மதம் எல்லாம் பெயரளவுக்கே உள்ளன. யூதமதம் வெறும் குறுங்குழுக்களாகவே நீடிக்கின்றது. இன்று உலகிலுள்ள மிகப்பெரிய இயற்கைமதம் இந்துமதம்தான்.

(மேலும் -பகுதி -2-ல் …)

.
………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.