” தர்க்கத்திற்கு அப்பால்”

வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம்.
தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத்
தோல்வியே வெற்றிதான். ஒரு காலத்தில் எனக்கு இப்படிப்பட்ட ‘வெற்றி ‘கள் வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன.

என் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய்ப் பக்கத்து நகரத்துக்குப் போயிருந்தேன் வழக்கம்போல
‘தோல்வி நிச்சயம் ‘ என்ற மனப்பான்மையுடன் போன நான், வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப் போனேன். தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்குத் தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டு விட்டது.

கற்பனைக்கும் எட்டாத ஒரு பேரழகியை ரகஸ்யமாய்
மனசிற்குள் காதலித்து, அந்தக் காதலை அவளிடம் வெளியிடும் என் எண்ணத்தை நானே பரிகஸித்து, பின்னொரு அசட்டுத் துணிவில், அவளது பரிகஸிப்பையும் ஏச்சையும் எதிர்பார்த்துத் தயங்கி, நாணிக் கூசி அவள் சந்நிதியில் நின்று
‘உன்னை நான் காதலிக்கிறேன் ‘ என்று முற்றிலும் கூறி
முடிக்கும் முன்பாக, அந்த வானத்துக் கனவு எனது வார்த்தையை எதிர்ப்பார்த்துப் பலகாலம் தவங் கிடந்தவளே போன்று ஆயிரம் முத்தங்களை எதிர்நோக்கிச் சிவந்த அதரங்கள் துடி துடிக்க என் கரங்களினிடையே விழுந்ததற்கொப்பான தோல்வி அது ‘

இந்த தோல்வியை, அல்லது வெற்றியைக் கொண்டாடித் தீர வேண்டும். ஊருக்குத் திரும்பிய பின்தானே ? அல்ல, இப்போதே. நான் ரொம்ப அவசரக்காரன்.

கொண்டாடுவது என்பது பெரிய காரியமா ? அது கொள்ளப்பட்ட உள்ளம் தன்னுள் லயித்துக் குதூகலிப்பது. அதன் விளைவாய் ஏற்படும் புற நிகழ்ச்சிகள் பெரிய காரியமன்று.
கொண்டாடத் தக்கதை, சிலர் வானத்தை வண்ணப்படுத்தும் வேடிக்கை நிகழ்த்திக் கொண்டாடுவார்கள். சிலர் நாலு
பேருக்கு வயிறார உணவளித்துக் கொண்டாடுவார்கள்.
இன்னும் சிலர் அந்தப் பொழுதிலாவது தன் வயிறாரத் தான்
உண்டு மகிழ்வார்கள். அதெல்லாம் அப்பொழுதிருக்கும்
அவரவர் சக்தியைப் பொருத்தது எனினும் மனசில் ஏற்படும் அனுபவம் அனைவர்க்கும் ஒன்றுதான்.

இப்பொழுது என் நிலைமை… பையிலிருக்கும் ஒரு வெள்ளி
ரூபாய் நாணயம்தான். அதற்கென்ன ? இந்த ஒரு ரூபாயிலும் கொண்டாடலாமே ‘ அதுதான் முடியாது. ஊருக்குப் போக
முக்கால் ரூபாய் வேண்டும். அதனால்தான் என்ன ? கால்
ரூபாயில் கொண்டாட முடியாதோ ? நிச்சயம் முடியும்.

சங்கரய்யர் ஹோட்டலில், புதுப்பால், புது டிகாக்ஷன்,
சர்க்கரை கம்மி, ஸ்ட்ராங்கா ஒரு கப் காப்பி இரண்டனாதான். காப்பி அருந்தியதும் உடம்பில் ஒரு புதுத் தெம்பும் மனசில் ஒரு தனிக் குதூகலமும் பிறந்தன. ஊர் திரும்ப, ஒதுக்கி வைத்த பன்னிரண்டணா போக, கையிலிருக்கும் இரண்டணாவை
என்ன செய்யலாம். ‘கடைசிச் சல்லியையும் ஒரு ராஜாவைப்
போல் செலவு செய் ‘ என்ற பழமொழியும் நினைவுக்கு வந்தது.

‘ஐயா தருமதுரை…..கண்ணில்லாத கபோதி ஐயா… ‘ என்ற குரல். ஸ்டேஷனுக்குள் நுழையும் இடத்தில், ஒரு ஓரமாய் அந்த குருட்டுப் பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான்; கிழவன்.
அவன் எதிரே இருந்த அலுமினியப் பாத்திரத்தில் வெறும்
செப்புக் காசுகளே கிடந்தன. அவற்றின் நடுவே நான் போட்ட இரண்டணா, வெள்ளை வெளேரென்று விழுந்தது அழகாகத்தான் இருந்தது. குருடன் அதை எடுத்துத் தடவிப் பார்த்தவாறே,
நான் இருப்பதாக அவன் நினைத்துக் கொண்ட திசை நோக்கி
கரம் குவித்து, ‘சாமி நீங்க போற வழிக்கெல்லாம் புண்ணியமுண்டு ‘ என்று வாழ்த்தினான். அதன் பிறகு உண்மையிலேயே நாலணாவில் அந்த நல்ல நாளை கொண்டாடிவிட்ட நிறைவு பிறந்தது எனக்கு.

புக்கிங்கவுண்டரின் அருகே போய் என் சொந்த கிராமத்தின் பெயரைச் சொல்லிச் சில்லறையை நீட்டினேன். சிறிது நேரத்திற்கெல்லாம் டிக்கெட்டை எதிர்பார்த்து நீண்டிருந்த என் கைக்குள் மீண்டும் சில்லறையே விழுந்தது; ‘இன்னும் ஓரணா கொடுங்கள் சார். ‘

‘பன்னிரண்டணாதானே ? ‘

‘அது நேற்றோட சரி, இன்னிலேருந்து அதிகம். ‘

என் கை சில்லறையுடன் வெளியே வந்தது திடாரென்று பாதாளத்தில் வீழ்ச்சியுற்றது போன்ற திகைப்பில் நின்று
விட்டேன். ‘யாரிடம் போய் ஓரணா கேட்பது ? ‘
‘அதோ ஒரு பெரியவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறாரே அவரிடம்….. ‘ என்று நினைக்கும்போதே….
ஒரு அணாதானே, கேட்டால்தான் என்ன என்று நினைக்கும்
போதே — கேட்டால் என்ன நடக்கும் என்பது தெளிவாகிக் கொண்டிருந்தது அங்கே. யாரோ ஒருவன் அவரருகே
சென்றான். அவன் என்ன கேட்டானோ ? அவர் சொன்ன
பதில் உலகத்துக்கே கேட்டது எனக்கும் உறைத்தது.
இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிஷம் ஆகவில்லை. ஓரணாவுக்கு யாசிப்பதா என்று யோசிக்கும் நிலை வந்து
விட்டதை எண்ணும்போது, மனம்தான் வாழ்க்கையுடன் என்னமாய்த் தர்க்கம் புரிகிறது ?

‘அதோ அந்தக் குருடனின் அலுமினிய பாத்திரத்தில் செப்புகாசுகளின் நடுவே ஒளிவிட்டுச் சிரிக்கிறதே இரண்டணா, அது என்னுடையது ? ‘

‘அது எப்படி உன்னுடையதாகும். நீ கொடுத்துவிட்டாய், அவன் வாழ்த்தி விட்டான் ‘
‘இப்ப சந்தியில் நிற்கிறேனே ? அதில் ஓரணா கூடவா எனக்குச் சொந்தமில்லை ? அவன் பாத்திரத்தில் கிடந்தாலும் அது என்னுடையது அல்லவா ? கேட்டால் தருவானா ? தரமாட்டான்.
அவனுக்கு எப்படித் தெரியும் அதைப் போட்டவன் நான் என்று …
‘எடுத்துக்கொண்டால் ? அதோ ஒரு ஆள் ஓரணா போட்டு விட்டு அரையணா எடுத்துக் கொள்கிறானே ‘ அதுபோல் ஒரு அணாவைப் போட்டுவிட்டு அந்த — என்னுடைய –
இரண்டணாவை எடுத்துக்கொண்டால் ?
‘இது திருட்டு அல்லவா ? ‘
‘திருட்டா ? எப்படியும் என் பக்கத்திலிருந்து தர்மமாக ஓரணா அவனுக்குக் கிடைக்குமே… அந்த ஓரணா புண்ணியம் போதும்;
என் காசை நான் எடுத்துக் கொள்கிறேன் ‘ என்று
பொருளாதார ரீதியாய்க் கணக்கிட்டுத் தர்க்கம் பண்ணியபோதிலும், திருடனைப் போல் கை நடுங்குகிறது.
ஓரணாவைப் போட்டேன், இரண்டணாவை எடுத்துக் கொண்டு திரும்பினேன்.

‘அடப்பாவி ‘ ‘ — திரும்பிப் பார்த்தேன். குருட்டு விழிகள் என்னை வெறிக்க, வாழ்த்தத் திறந்த வாயால் சபிப்பது
போல் அவன் கேட்டான்.

‘சாமி, இதுதானுங்களா தர்மம் ? யாரோ ஒரு புண்ணியவான் இரண்டணா போட்டாரு…. அதை எடுத்துக்கிட்டு ஓரணா போடறியே ? குருடனை ஏமாத்தாதே, நரகத்துக்குத்தான்
போவே… ‘

நெருப்புக் கட்டியைக் கையிலெடுத்ததுபோல் அந்த இரண்டணாவை அலுமினியம் தட்டில் உதறினேன்,
இப்பொழுது என் கணக்கில் மூன்றணா தர்மம்.
தெரியாம எடுத்துட்டேன் ‘ என்று சொல்லும்போது, என்
குரலில் திருட்டுத்தனம் நடுங்கியது.

ஒரு பெண் அரையணா போட்டுவிட்டுக் காலணா எடுத்துச் சென்றாள்; குருடன் உடனே இரண்டணா இருக்கிறதா என்று
தடவிப் பார்த்தான்.

அப்படிப்பார்த்தபோது அது இல்லாதிருந்ததுதான் நான் சிக்கிக்கொண்டேன் என்று புரிந்துகொண்டேன். அது
அவனுக்குக் கிடைக்காமல் கிடைத்த செல்வம். விட மனம்
வருமா ? நான் யோசித்தேன்.

‘அது அவன் பணமா ? ‘
‘ஆமாம் ‘
‘நான்தானே தந்தேன். ‘
‘காசைத்தான் கடன் தரலாம், தருமத்தைக் கடன் தரமுடியுமா ? தர்மத்தை யாசித்து, தந்தால்தான் பெற வேண்டும்.

வெகு நேரம் நின்றிருந்தேன். நான் போக வேண்டிய ரயில் வந்துபோய்விட்டது. அடுத்த வண்டிக்கு இன்னும் நேரமிருக்கிறது. தர்மத்தின் பலனை அடுத்த ஸ்டேஷன்வரை கால் வலிக்க
நடந்து அனுபவித்தேன்.
சில வருஷங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஒரு ரயில் விபத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது, அன்று
நான் போக இருந்து தவற விட்ட ரயில்தான்.
இந்த விபத்திலிருந்து நான் எப்படித் தப்பினேன் ?
தருமம் காத்ததா ?

எனக்குத் தெரியாது.
இதெல்லாம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது.

( ஜெயகாந்தன் சிறுகதை ……)

.
………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to ” தர்க்கத்திற்கு அப்பால்”

  1. புதியவன் சொல்கிறார்:

    கதைக்கு அப்பால்…… நான் எங்கு சென்றாலும், 5 ரூபாய்தான் அதிகபட்சம் தேவை என்றாலும் 15-20 ரூபாய் எடுத்துச் செல்லும் வழக்கம் உள்ளவன். அதிலும் இரண்டு பாக்கெட்டிலும் பணத்தைப் பிரித்து வைத்துக்கொள்பவன். ஹோட்டலுக்குள் நுழைவதற்கு முன், இரண்டு மடங்காவது பணம் இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இருமுறை check பண்ணிக்கொள்வேன்.

    கதையைப் படித்ததும் என் வழக்கம்தான் பளிச் என்று நினைவுக்கு வந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s