“எம். ஜி.ஆர்..” & ” சோ” – சில சுவாரஸ்யங்கள் ….!!!

‘துக்ளக்’ பத்திரிகையைத் தொடங்கிய பிறகு எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாக சோ விமர்சித்துக் கொண்டிருந்தபோதிலும் அதைப் பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு தந்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

பொதுவாக தன்னை விமர்சிப்பவர்களை எம்.ஜி.ஆர் தன்னருகில் வைத்துக் கொள்ளமாட்டார் என்றாலும் கவிஞர் கண்ணதாசன், சோ போன்ற ஒரு சிலருக்கு அந்தக் கொள்கையிலிருந்து விதிவிலக்கு அளித்திருந்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு திரையுலகில் இருந்த செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை சோ நான்கு அறிந்திருந்தபோதிலும் அவரை விமர்சிக்கும் போக்கை சோ கை விடவேயில்லை. அதே போன்று படப்பிடிப்பு தளத்திலும் மற்றவர்கள் எம்.ஜி.ஆரோடு பேசத் தயங்குகின்ற விஷயங்கள் பற்றி சர்வசாதாரணமாக அவரோடு பேசுவது சோவின் வழக்கம்.

கலைஞர் கருணாநிதி துவங்கிய ‘மேகலா பிக்சர்ஸ்’ தயாரித்த படம் ‘எங்கள் தங்கம்.’ .அந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டபோது எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக்கும் இடையே இருந்த சுமுக உறவு, படம் முடிவடைகின்ற கட்டத்தை நெருங்கியபோது இல்லை.

அவர்கள் இருவருக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் அந்தப் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர்.வந்தார்.

சண்டைக் காட்சியில், இரண்டு ஷாட்டுகளும் ‘சோ’வுடன் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு காட்சியில் விடுபட்டுப்போன இரண்டு ஷாட்களும் மட்டுமே அன்று படமாக்கப்படவிருந்தன. எம்.ஜி.ஆர். ஒத்துழைத்தால் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிட கூடிய படப்பிடிப்பு அது.

அன்றைய படப்பிடிப்பை முடித்துவிட்டு மறுநாள் எம்.ஜி.ஆர். வெளிநாடு செல்லவிருந்தார். அன்று படப்பிடிப்பை முடிக்கவில்லையென்றால் அறிவிக்கப்பட்டிருந்த தேதியில் அந்தப் படம் வெளிவருவது சிக்கலாகிவிடும் என்பதால் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட எல்லோரையும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது.

9 மணிக்கு துவங்க இருந்த படப்பிடிப்பிற்கு எம்.ஜி.ஆர். சரியாக எட்டு மணிக்கே வந்துவிட்டார். அவர் அவ்வளவு சீக்கிரம் வருவார் என்று படக் குழுவினர் எவரும் எதிர்பார்க்கவில்லை.

அவர் சரியான நேரத்துக்கு வந்து விட்டதால் 9 மணிக்கு படப்பிடிப்பை ஆரம்பித்தால் பத்து மணிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகளை இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சு ஆகிய இருவரும் துரிதப்படுத்தினார்கள்.

அப்போது மேக்கப் அறைக்கு வெளியே ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்த எம்.ஜி.ஆர். அங்கிருந்தவர்களை கூப்பிட்டு பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்துவிட்டு மேக்கப் போட்டு படப்பிடிப்புக்கு அவர் தயாராகிவிடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது காரில் ஏறி யாரையோ சந்திக்க புறப்பட்டுவிட்டார் அவர்.

அவர் திரும்பி வந்தபோது மணி பன்னிரண்டு. அவர் இப்படி போக்குக் காட்டிக் கொண்டு இருந்ததால் அன்றைய படப்பிடிப்பை முடிக்க மாட்டார் என்று ‘சோ’-விற்கு தோன்றியது. அதை எம்.ஜி.ஆரிடமே கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பிய அவர் எம்.ஜி.ஆர். அருகில் சென்றார்.

“இன்னிக்கு ஷூட்டிங் இருக்கா இல்லையான்னு எனக்கு மட்டுமாவது சொல்லுங்க. ஷூட்டிங் இல்லேன்னா நான் எதுக்கு தண்டமா இங்கே காத்துக் கிட்டு இருக்கணும்?” என்று அவரிடம் சோ கேட்டபோது “எனக்கு ஒரு உதவி பண்ணுங்க” என்று சோவிடம் கேட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர் “நீங்க கொஞ்சம் பேசாம இருங்க” என்று அவரிடம் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

அன்று ஷூட்டிங்கில் கலந்து கொள்வதில்லை என்று எம்.ஜி.ஆர் முடிவெடுத்திருந்தால் நிச்சயம் தன்னை அவர் காக்க வைக்க மாட்டார் என்று எண்ணிய சோ பேசாமல் இருக்கச் சொல்லி எம்.ஜி.ஆர் சொல்லியதால் அமைதியாக மேக்கப் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார்.

அன்று இரவு எட்டு மணிவரை ஸ்டுடியோவில் இருந்த பலரோடு பேசுவதும் அடிக்கடி வெளியே போவதும், வருவதுமாக எம்.ஜி.ஆர். இருந்தாரே தவிர மேக்கப் போட்டுக் கொள்ளவேயில்லை.

“இன்று ஷூட்டிங் உண்டா இல்லையா?” என்று எம்.ஜி.ஆரிடம் நேரடியாகக் கேட்கக் கூடிய தைரியம் படத் தயாரிப்பாளரான முரசொலி மாறனுக்கோ, இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சுவிற்கோ அறவே இல்லை. அவரிடம் அப்படி கேட்டு அதுவே பிரச்னையாகி அவர் கிளம்பிவிட்டால் என்ன செய்வது என்று எல்லோரும் பயந்தனர்.

நிச்சயமாக இன்று படம் முடியாது என்ற முடிவுக்கு படப்பிடிப்புக் குழுவினர் வந்துவிட்ட நிலையில் இரவு பதினொரு மணிக்கு மேக்கப் போட்டுக் கொண்டு படப்பிடிப்புக்கு வந்தார் எம்.ஜி.ஆர்.

இரவு பன்னிரண்டு மணிக்கு படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் ”என்ன தெளிவு வந்ததா?” என்று ‘சோ’வைப் பார்த்து எம்.ஜி.ஆர். கேட்டபோது “இல்லை சார்… தூக்கம்தான் வந்தது” என்று பதில் சொன்னார் சோ.

“என்ன காரணத்திற்காக அன்றைய படப்பிடிப்பில் எம். ஜி. ஆர் அப்படி நடந்து கொண்டார் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும் எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக்கும் இடையே அப்போது இருந்த கருத்து மோதல்கள்தான் அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று நானே ஒரு முடிவுக்கு வந்தேன் ”என்று ஒரு கட்டுரையில் ‘சோ’ குறிப்பிட்டிருக்கிறார்.

ப.நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆருடன் ஒரு படப்பிடிப்பில் சோ கலந்து கொண்டபோது எம்.ஜி.ஆரை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருந்த சோவைக் கிண்டல் செய்யும் நோக்கத்துடன் அவரை வம்புக்கு இழுத்த இயக்குநர் ப.நீலகண்டன், ”என்ன சோ… உங்க ‘துக்ளக்’ பத்திரிக்கை விற்பனை எப்படி இருக்கு?” என்று அவரிடம் கேட்டார்.

“ரொம்ப நல்லா இருக்கு சார்“ என்று ‘சோ’ பதில் சொன்னவுடன் எம்.ஜி.ஆரைப் பார்த்து சிரித்தபடியே ”கலைமகள் பத்திரிகையின் விற்பனை எப்படி இருக்கு..?” என்று நீலகண்டன் கேட்க “பரவாயில்லை சார்..” என்று பதில் பிறந்தது ‘சோ’விடமிருந்து.

அடுத்து ”துக்ளக்கைவிட ‘கலைமகள்’ விற்பனை குறைவுதான் இல்லையா?” என்று நீலகண்டன் கேட்டபோது அவரது கேள்வியின் நோக்கம் சோவிற்கு புரிந்து விட்டது. அடுத்து ‘சோ’ எதிர்பார்த்த மாதிரியே ஒரு கேள்வியினை எழுப்பினார் நீலகண்டன்.

“கலைமகள் எப்படிப்பட்ட பத்திரிகை?” என்று அவர் கேட்ட கேள்விக்கு “ரொம்பவும் தரமான ஒரு பத்திரிகை சார்” என்று பதிலளித்தார் சோ. அடுத்து “துக்ளக்”பத்திரிகை ‘கலைமகள்’ அளவிற்கு தரமான பத்திரிகையா?” என்று அவர் கேட்க “நிச்சயமாக இல்லை” என்று சோவிடமிருந்து பதில் வந்தது.

“துக்ளக்’கின் விற்பனை ‘கலைமகளு’க்கு இல்லை என்பது எதைக் காட்டுகிறது? தமிழ் நாட்டில் தரமுள்ள சரக்கு விற்பதில்லை. தரமில்லாத சரக்கு நன்கு விற்பனையாகிறது என்பதைத்தானே“ என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து சிரித்தபடியே சொன்ன ப.நீலகண்டன் அடுத்து அப்படியொரு பதிலை ‘சோ’ சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

“தமிழ் நாட்டில் எப்போதும் அப்படித்தான் சார். தரமான பல படங்கள் இங்கே ஒடுவதில்லை. தரமில்லாத படங்கள்தான் நன்றாக ஓடுகின்றன. பல நல்ல படங்கள் தோல்வியடைந்துள்ளன. அதே சமயம் நீங்க டைரக்ட் செய்த ‘என் அண்ணன்’ நன்றாக ஓடுகிறது” என்று சிரித்தபடியே அவருக்கு பதில் சொன்னார் ‘சோ’.

ப.நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘என் அண்ணன்’. ‘சோ’ அப்படி சொன்னவுடன் ப.நீலகண்டனால் எதுவும் பேச முடியவில்லை.அப்போது ப.நீலகண்டனின் பக்கத்திலிருந்த எம்.ஜி.ஆர் “அவரிடம் என் வம்புக்கு போனீங்க? அவர்கிட்ட வம்பு பண்ணா அவர் இப்படித்தான் பதில் சொல்வாருன்னு தெரியுமில்லே?” என்று சொன்னாரே தவிர சோ மீது கோபம் கொள்ளவில்லை.

தமிழக அரசியலிலும் சரி, தேசிய அரசியலிலும் சரி.. சோவை அறியாத தலைவர்களே இல்லை என்ற நிலைமைக்கு ஒரு கட்டத்தில் உயர்ந்த சோ தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜ், கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஜி.கே.மூப்பனார் ஆகியோருடனும் வி.பி.சிங், சந்திரசேகர், வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி போன்ற பல தேசியத் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியவர் என்ற போதிலும் அவர்களையும் விமர்சிக்க என்றுமே அவர் தயங்கியதில்லை. அந்த விமர்சனங்களை மீறி பல அரசியல் தலைவர்கள் அவரோடு நெருக்கமான உறவை வைத்துக் கொண்டிருந்தனர்.

நாடக உலகிலும், பத்திரிகை உலகிலும் சோ நிகழ்த்திய சாதனைகளை அவருடைய அளவிற்கு துணிச்சலோடு இனி எவராலும் நடத்த முடியாது என்பதும் அதற்கான அரசியல் சூழல் இப்போது இல்லை என்பதும் நிதர்சனமான உண்மைகள்.
(நன்றி – டூரிங் டாக்கீஸ்….)

.
…………………………………………………………………………………………………………………………..……..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to “எம். ஜி.ஆர்..” & ” சோ” – சில சுவாரஸ்யங்கள் ….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    சோவின்விமர்சனத்தில் உண்மையும் நேர்மையும் இருக்கும். Below the belt அடிப்பது என்பது அவரிடத்தில் கிடையாது. தேர்தல் என்று வரும்போது இருப்பதில் யார் வந்தால் நாட்டுக்கு நல்லது என்றே அவர் பார்த்து எழுதுவார். அப்படி எழுதும்போது, தான் ஆதரிக்கும் தலைவரின் குறைகளை அதிகமாக எழுதமாட்டார். அப்படி எழுதினால் தன் நோக்கம் பழுதுபடும் என்ற காரணம்தான். அவர் மதம் ஜாதி பார்த்து எந்த விமர்சனமும் எனக்குத் தெரிந்து எழுதியதில்லை. துக்ளக்கின் அறம், வாசகர்களை மதிக்கும் குணம் என்பதெல்லாம் தனித்துவமானது.

    எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டுப் பிறகு நடந்த தேர்தலின்போது, ஆற்காடு சாலையில் தன் வீட்டில் (ஆபீஸில்) துக்ளக் சோவிடம், தன்னிடம் 25000 ரூபாய் இருந்தால் தேர்தலில் செலவழிப்பேன். தேர்தலுக்கான பணத் தேவை இருக்கிறது. ஆனால் நிச்சயம் ஜெயித்துவிடுவேன் என்று சொன்னார்.

    எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ ஆகியோர் மாத்திரம்தான் தொடர்ந்து இரு முறை தேர்தலில் வென்றவர்கள். எம்ஜிஆர் வைத்திருந்த 30 சதம் வாக்குகளை 42 சதத்திற்கு மேல் உயர்த்தியவர் ஜெ., தனித்தே அதிமுகவை வெற்றிபெற வைத்தவரும் ஜெ. அத்தகைய அதிமுக இப்போது சசிகலா தினகரன், ஓபிஎஸ் போன்ற துரோகிகளால் பின்னடைவைச் சந்திப்பது மனதிற்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. தமிழக மக்களின் எதிரியான திமுகவை மக்கள் நீக்கும் முடிவில் இருக்கும்போது, அதிமுகவை வலிமையற்றதாகச் செய்கிறார்களே என்று வருத்தமுறுகிறேன்.

    சோ இருந்தவரை நான் துக்ளக் வாசகன், ரசிகன். குருமூர்த்தில் hasn’t and can’t come to that level.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.