தேவலையே கஸ்தூரி ஸ்மார்ட்டாகவே பேட்டி கொடுக்கிறாரே …!!!

அவ்வப்போது ட்விட்டரில் சின்ன சின்னதாக அரசியல் கமெண்ட்
மட்டும் போடுவது திருமதி கஸ்தூரியின் பாணி.

பொறுப்பாக, இப்போது விகடனுக்கு தொலைபேசி
வாயிலாக ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்….கீழே –

…………………..

“மனுதர்மம் குறித்த சர்ச்சையை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“மனுதர்மத்தை எளிய மக்கள் யாரும் புரிந்துகொள்ளவோ,
பின்பற்றவோ இல்லை.

திராவிடர் கழகம்தான் தமிழகத்துக்கு மனுதர்மம் என்ற
ஒன்று இருப்பதையே அறிமுகம் செய்தது. வாஜ்பாய்
ஆட்சிக்கு வர ராமஜென்ம பூமி, ரத யாத்திரை தான்
முக்கியக் காரணம். ஆனால், பிரதமர் ஆன பிறகு,
அவர் மதம் சார்ந்து பேசவே இல்லை.

ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும், தமிழ்நாட்டை
வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்வதில் கவனம்
செலுத்தாமல் மனுதர்மம் குறித்துப் பேசுவதெல்லாம்
அவசியமில்லாதது.”

“ஆனால், தி.மு.க எம்பி ஆ.ராசா, `மனுதர்மத்தில்
இருப்பதைத்தான் சொன்னேன்’ என்கிறாரே?”

“தி.மு.க தொண்டர்கள் உட்பட தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள்தான் கடவுள்மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம், `மனுதர்மம்
தவறாகக் கூறுகிறது’ எனக் குழப்பிவிடுகிறார் ஆ.ராசா.

இதை பா.ஜ.க கையில் எடுக்கும்போது –
இந்துக்களின் கட்சி இதுதான் என்று
மக்களுக்குத் தோன்றும்.

உண்மையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் வளர்ச்சிக்கு
தி.மு.க-தான் ரகசியக் கூட்டணி அமைத்து அதிகமாக
வேலை பார்க்கிறது.”

“பா.ஜ.க மதப் பிரச்னைகளைக் கையிலெடுக்கும்போது,
அதன் எதிர்க்கட்சிகள் பேசித்தானே ஆக வேண்டும்?”

“அது அவசியமில்லாதது. பா.ஜ.க ஒன்றும் ஒட்டுமொத்த
இந்துக்களின் பிரதிநிதியோ, காவலர்களோ கிடையாது.
அறிவுக் களஞ்சியம் என்று நான் நினைக்கும் கமல்ஹாசனும், வெற்றிமாறனும்கூட இந்த இடத்தில்தான் சறுக்கிவிட்டனர்.

ஆதிமனிதன் தன்னை ‘மனிதன்’ என்று குறிப்பிடவில்லை
என்பதற்காக, அப்போது மனிதனே இல்லை என்பது எப்படி
அபத்தமோ, அதுபோலத்தான் `இந்து’ என்ற சொல் இல்லை
என்பதும்.

சைவமும் வைணவமும்தான் இந்து மதத்தின் வேர்.
பா.ஜ.க மதப் பிரச்னைகளைக் கையிலெடுத்தால் – வளர்ச்சி
என்ற சித்தாந்தத்தை தி.மு.க கையில் எடுக்கலாமே..?”

“நீங்கள் தொடர்ந்து சப்போர்ட் செய்யும் ஆளுநர் தமிழிசை,
ஆளுநர் வேலையை விடுத்து அரசியல்வாதிபோலப் பேசுவதாக விமர்சனம் இருக்கிறதே?”

“வெறும் கையெழுத்து போடும் அதிகாரம்தான் ஆளுநருக்கு
இருக்கிறது. மாநில அரசுக்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்க
வேண்டும் என்று விதிகள் இருக்கின்றன. அவர் அதன்படிதான் செயல்படுகிறார். மத்திய பா.ஜ.க அரசின் கொள்கைகளை, தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை ஒன்றும் திணிக்கவில்லையே…

ஆனால், அரசியல் காரணங்களுக்காக ஒரு மாநிலத்தின்
ஆளுநருக்கு அரசு கொடுக்கும் பாதுகாப்பையும், சம்பிரதாய மரியாதையையும்கூட தெலங்கானா அரசு கொடுக்க மறுக்கிறது.
அது குறித்துப் பேசுவது அரசியலாக்கப்படுகிறது.”

“ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பா.ஜ.க-வின்
கொள்கைகளைச் செயல்படுத்துவதில்தான் அதிகம் முனைப்பு காட்டுகிறார் என்கிறார்களே?”

“தமிழக அரசியலில், ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இருக்கும்
பிரச்னை வழக்கமானதுதான். ஆனால், மத்திய அரசின்
திட்டங்களைப் பற்றி ஒரு ஆளுநர் பேசக் கூடாது என்று யாரும்
சொல்ல முடியாது. மதம் குறித்த அவரது நம்பிக்கையைக்கூடப்
பேசக் கூடாது என்பதை ஏற்க முடியாது.”

“எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயல்பாடு எப்படி இருக்கிறது?”

“அமைதி, அமைதி. அமைதியோ அமைதி…
`ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’
என்பதுபோல, அ.தி.மு.க-வின் சண்டையில்
பா.ஜ.க வளர்கிறது.

ஏற்கெனவே தி.மு.க Vs அ.தி.மு.க என்ற நிலை மாறி,
தி.மு.க Vs பா.ஜ.க என்ற நிலை வந்துவிட்டது.

இதே நிலைமை நீடித்தால், மகாராஷ்டிராவில்
சிவசேனாவுக்கு ஏற்பட்ட நிலைமை இங்கு அ.தி.மு.க-வுக்கும்
ஏற்படும்.
இதை அ.தி.மு.க-வினர் உணர வேண்டும். ஓ.பி.எஸ்.,
இ.பி.எஸ் இரண்டு பேரும் விட்டுக்கொடுத்துச் சென்றால்தான்,
அவர்கள் கட்சிக்கு நல்லது.”

“தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறாரே?”

“துணைப் பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் முன்பாக,
அவருக்குக் கட்சியில் முக்கியத்துவம் இல்லையென்று சொல்ல
முடியுமா… கட்சியில் அவரின் செல்வாக்கும் செயல்பாடும்
இந்தப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே முழுவீச்சில்
இருக்கத்தானே செய்தது… ஆனால், அவர்மீதான கவனம் முன்பு இருந்ததைவிட தற்போது அதிகமாகும். அது தி.மு.க கட்சிக்கும், தமிழ்நாட்டின் அரசியலுக்கும் நல்லதுதான்.”

“எப்போது நேரடி அரசியல்..?”

“ட்விட்டரில் வரும் கெட்ட வார்த்தைகளையே என்னால் தாங்க முடியவில்லை. நேரடி அரசியலில் அதைவிடவும் தாக்குதல்
இருக்கும். அதைச் சமாளிக்க, சக்தி இல்லை. இன்னொரு
விஷயம், அவ்வளவு பணம் என்னிடமில்லை.

அனைத்துக்கும் மேலாக –
அரசியல் கட்சியில் சேர்ந்தால்
சுதந்திரமாகக் கருத்து சொல்ல முடியாது!”

.
…………………………………………………………………………………………………………………….…..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.