பாவமாம், புண்ணியமாம்…..!

பாவமாம், புண்ணியமாம்…..! கவிஞர் கண்ணதாசன் –

………………………………………………………………………………………………..

இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை.
இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தே
அவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர்.

சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ
இல்லாத சிலரில் அவரும் ஒருவர். மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர்.

முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்க்கை
கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது. அப்போதும்
அவர் நாணயத்தையும் நேர்மையையும் விட்டதில்லை.

குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார்.
ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலை
பார்த்தார்.

அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு
ஒரு பாடமாகும்.

அந்த நேரத்தில் ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் அவருக்கு
ஆறு ரூபாய் வரை கடனாகி விட்டது.

கடைக்காரன் அவர் கழுத்தில் துண்டைப் போட்டு
முறுக்கினான்; அந்தக் கடையிருக்கும் பக்கமே போக
முடியாதபடி அவதிப்பட்டார்.

அடிக்கடி கோவைக்குப் பத்து மைலுக்கு அப்பாலிருக்கும்
மருதமலைக்குப் போய் `முருகா! முருகா!’ என்று அழுவார்.

அந்தக் கோவிலோ ஜன நடமாட்டமில்லாத கோவில்.

கடைக்காரன் கோபித்துக் கொண்ட அன்று இரவு. அந்த
மருதமலைக் கோவிலில் போய் உட்கார்ந்து கொண்டு அழுதார்;
“முருகா! காப்பாற்று” என்று வேண்டிக்கொண்டார்.

நள்ளிரவில் காடுகள் நிறைந்த அந்த மலையை விட்டு
இறங்கினார்.

வழியில் ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்தது. அதைக் காலால்
உதைத்துக் கொண்டு நகர்ந்தார்.

கொஞ்சதூரம் வந்ததும் என்ன தோன்றிற்றோ?

அந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தார். உள்ளே
இரண்டு சிகரெட்டுகளும், பத்து ரூபாய் நோட்டும் இருந்தன.

அப்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?

“நல்லவனாக வாழ்ந்தோம்; தெய்வத்தை நம்பினோம்;
தெய்வம் கைவிடவில்லை” என்றுதானே எண்ணியிருக்கும்!

அந்த முருகன் அவரை வாழ வைத்தான்.

ஒவ்வொரு நாளும், “முருகா! முருகா!” என்று உருகுகிறார்.

“தனக்கு நஷ்டம் வந்தாலும் பிறருக்கும் நஷ்டம் வரக்கூடாது”
என்று தொழில் புரிகிறார். அதனால், அவர் நாளுக்கு நாள் செழித்தோங்குகிறார்.

நீயும் நல்லவனாக இரு. தெய்வத்தை நம்பு.

உனக்கு வருகிற துன்பமெல்லாம், பனிபோலப் பறந்து
ஓடாவிட்டால், நீ இந்துமதத்தையே நம்ப வேண்டாம்.

“பாவமாம், புண்ணியமாம்; எந்த மடையன் சொன்னான்?”

“சொர்க்கமாம், நரகமாம்! எங்கே இருக்கின்றன அவை?”

“பாவமும் புண்ணியமும் பரலோகத்தில்தானே?
பார்த்துக் கொள்வோம் பின்னாலே?”

இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும்
பொன் மொழிகள்.

பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம் என்ற வார்த்தைகளைக்
கேட்கின்ற இளைஞனுக்கு, அவை கேலியாகத் தெரிகின்றன.

`நரம்பு தளர்ந்துபோன கிழவர்கள், மரண பயத்தில் உளறிய
வார்த்தைகள் அவை’ என்று அவன் நினைக்கிறான்.

நல்லதையே செய்தால் சொர்க்கத்துக்குப் போவாய் என்றும்,
அங்கே வகைவகையாக விருந்துகள் உனக்குக் காத்திருக்கும்
என்றும், தீங்கு செய்தால் நரகத்துக்குச் செல்வாய் என்றும்,
அங்கே உன்னை எண்ணெய்க் கொப்பரையில் போட்டு வறுத்தெடுப்பார்கள் என்றும் சொல்லப்படும் கதைகள்
நாகரிக இளைஞனுக்கு நகைச்சுவையாகத் தோன்றுவதில்
வியப்பில்லை.

ஆனால் இந்தக் கதைகள், அவனை பயமுறுத்தி, அவன்
வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்காகவே தோன்றிய
கதைகள்.

அவனுடைய பற்றாக்குறை அறிவைப் பயமுறுத்தித்தான்
திருத்த வேண்டும் என்று நம்பிய நம் மூதாதையர் அந்தக்
கதைகளைச் சொல்லிவைத்தார்கள்.இந்தக் கதைகள்
நூற்றுக்கு ஐம்பது பேரையாவது திருத்தியும் இருக்கின்றன
என்பதை அறிந்தால், நம் மூதாதையர் நம்பியுரைத்த
கற்பனைகள்கூட, எவ்வளவு பலனை அளிக்கின்றன என்பதை
அவன் அறிவான்.

பாவம் புண்ணியம் பற்றிய கதைகளை விடு; பரலோகத்துக்கு
உன் ஆவி போகிறதோ இல்லையோ, இதை நீ நம்ப வேண்டாம்.

ஆனால், நீ செய்யும் நன்மை தீமைகள், அதே அளவில்
அதே நிலையில், உன் ஆயுட்காலத்திலேயே உன்னிடம் திரும்பிவிடுகின்றன.

அந்த அளவு கூடுவதுமில்லை, குறைவதுமில்லை.

ஒருவனை எந்த வார்த்தை சொல்லி நீ திட்டுகிறாயோ, அதே வார்த்தையில், எப்போதாவது ஒரு முறை நீ திட்டப்படுகிறாய்.

“எப்படித் தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே
தீர்க்கப்படுவீர்கள்” என்று கிறிஸ்தவ வேதம் கூறுகிறது.

“செய்த வினை, அதே வடிவத்தில் திரும்ப வரும்” என்று
முதன் முதலில் போதித்தது இந்துமதம் தான்.

“பாவம் என்பது நீ செய்யும் தீமை.”

“புண்ணியம் என்பது நீ செய்யும் நன்மை.”

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.”

“அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.”

“விநாச காலே விபரீத புத்தி.”

இவையெல்லாம் இந்துக்களின் பழமொழிகள்.

ஊரைக் கொள்ளையடித்து, உலையிலே போட்டு, அதை
உயில் எழுதி வைத்துவிட்டு மாண்டவன் எவனாவது உண்டா?

பிறர் சொத்தைத் திருடிக்கொண்டு, அதை நிம்மதியாக
அனுபவித்து, அமைதியாகச் செத்தவன் எவனாவது உண்டா?

அப்படி ஒருவன் இருந்தாலும், அவன் எழுதி வைத்த உயிலின்படி
அவன் சொத்துக்கள் போய்ச் சேர்ந்ததுண்டா?

எனக்குத் தெரிந்தவரை அப்படிப்பட்ட சொத்துக்களை
நீதி மன்றத்தால் நியமிக்கப்படும் `ரிஸீவர்’கள்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். இறந்தவனுடைய சந்ததி
சாப்பிட்டதில்லை.

கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகி, தண்டனை
யில்லாமல் நிம்மதியாக வாழ்ந்து, வலி இல்லாமல் செத்தவன்
உண்டா?

எனக்குத் தெரிந்தவரை இல்லை.

ஒருவன் செய்த எந்த பாவமும் அவன் தலையைச் சுற்றி ஆயுட்காலத்திலேயே அவனைத் தண்டித்து விட்டுத்தான் விலகியிருக்கிறது.

“பாவத்தின் சம்பளம் மரணம்” என்கிறது கிறிஸ்துவ வேதம்.

இல்லை, பாவத்தின் சம்பளம் வயதான காலத்தில்

திரும்பவரும் சிறு சேமிப்பு நிதி; சரியான நேரத்தில்

அவனுக்குக் கிடைக்கும் போனஸ்!

சாவுக்குப் பின் நடப்பது இரண்டாவது விசாரணை!

முதல் தீர்ப்பு அவன் ஆயுட்காலத்திலேயே அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு விடுகிறது.

எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது 1953ஆம் ஆண்டு
டால்மியாபுரம் போராட்டத்தில் பதினெட்டு மாதம்
கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, நானும், நண்பர் அன்பில் தர்மலிங்கமும், மற்றும் இருபது பேரும் திருச்சி மத்திய சிறையில் இருந்தோம். அங்கே தூக்குத் தண்டனை பெற்ற கைதிகள் சிலரும் இருந்தார்கள்.

அவர்களைத் தனித்தனியாகச் சில அறைகளில்
பூட்டி வைத்திருந்தார்கள்.

அவர்களிலே, `மாயவரம் கொலை வழக்கு’ என்று பிரபலமான
வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏழு பேர்.

செஷன்ஸ் கோர்ட் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.

அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர்
திரு. சோமசுந்தரம்.

பெரும்பாலான கொலை வழக்குகளில் அவர் தூக்குத்
தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது வழக்கம்.

காரணம், பன்னிரண்டு வருடங்கள் கழித்துத் திரும்பப் போகும் குற்றவாளி நல்லவனாகத் திரும்பி வந்து அமைதியான
வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கையே!

அவர் சட்டத்தோடு தர்மத்தையும் கலந்தே யோசிப்பார்.

செஷன்ஸ் கோர்ட்டின் தூக்குத் தண்டனையொன்றை அவர்
ஊர்ஜிதம் செய்கிறார் என்றால், அதை ஆண்டவனே ஊர்ஜிதம்
செய்ததாக அர்த்தம்.

மாயவரம் கொலை வழக்கில் ஏழு கைதிகளின்
தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார்.

அவரைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டும், அதை
ஊர்ஜிதம் செய்தது.

ஜனாதிபதிக்கு கருணை மனு போயிற்று. அவரும் தூக்குத்
தண்டனையை ஊர்ஜிதம் செய்தார்.

காரணம், நடந்த நிகழ்ச்சி அவ்வளவு பயங்கரமானது.

மாயவரத்தில் நாற்பது வயதான ஒரு அம்மையார், விதவை.
அந்த வயதிலும் அழகாக இருப்பார்.

சுமார் அறுபதினாயிரம் ரூபாய் பெறக்கூடிய நகைகளை
அவர் வைத்திருந்தார்.

சொந்த வீட்டில் ஒரு வேலைக்காரப் பெண்ணை மட்டுமே
துணையாகக் கொண்டு வாழ்ந்திருந்தார்.

அவரை மோப்பமிட்ட சிலர், ஒருநாள் இரவு அவர் வீட்டுக்குள்
புகுந்தார்கள்.

ஐந்து பேர் அவரைக் கற்பழித்தார்கள். அந்த அம்மையார்
மூச்சுத் திணறி இறந்து போனார்.

இறந்த பிறகும் இன்னொருவன் கற்பழித்தான்.

ஆம்; மருத்துவரின் சர்டிபிகேட் அப்படித்தான் கூறிற்று.

நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன! கொலைகாரர்கள்
ஓடிவிட்டார்கள்.

பிடிபட்டவர்கள் ஏழு பேர்.

சிறைச்சாலையில் அந்த ஏழு பேரில் ஆறு பேர் “நாளை
தூக்குக்குப் போகப் போகிறோமே!” என்று துடித்துக் கொண்டிருந்தார்கள். “முருகா முருகா” என்று ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், ஒருவன் மட்டும் சலனம் இல்லாமல்
அமைதியாக இருந்தான்.

சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை
மற்ற கைதிகள் அணுகிப் பேச முடியாது.

நானும் நண்பர் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம்
அனுமதி பெற்று, அவர்களை அணுகினோம்.

சலனமே இல்லாமலிருந்தானே அந்த மனிதன், அவனிடம்
மட்டுமே பேச்சுக் கொடுத்தோம்.

உடம்பிலே துணிகூட இல்லாமல் சிறைச்சாலை விதிகளின்படி நிறுத்தப்பட்டிருந்த அந்த மனிதன், அமைதியாகவே பேசினான்.

நாளை சாகப்போகிறோம் என்ற கவலை அவனுக்கில்லை.
அவன் சொன்னான்:

“ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.
ஏற்கெனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன்.
ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில் இல்லாதது
மாதிரி `அலிபி’ தயார் செய்துவிட்டு அந்தக் கொலையைச்
செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன்.
இந்தக் கொலை நடந்த அன்று நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன்தான் என்னை அங்கே இருக்க வைத்திருக்கிறான்.
பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்சியங்களோடு என்னைக் கைது செய்துவிட்டார்கள்.
காரணம், கொலை செய்தவர்களிலே மூன்று பேர் என்
சொந்தக்காரர்கள். சாட்சியம் சரியாக இருந்ததால், எனக்குத்
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. ஐயா! இந்தக்
கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கெனவே செய்த கொலைகளுக்காகவே சாகப் போகிறேன்.”

அவன் சொல்லி முடித்தபோது, `அரசன் அன்று கொல்வான்,
தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழியே என்
நினைவுக்கு வந்தது.

அப்போது மாலை ஐந்து மணி இருக்கும். அறைக்கதவு
மூடப்படும் நேரம். நானும் தர்முவும் எங்களுடைய
அறைக்குத் திரும்பினோம்.

தர்மு தன்னையும் மறந்து சொன்னார்,

“என்னதான் சொல்லையா, செய்யற பாவம் என்றைக்கும்
விடாதய்யா!”

ஆமாம், பாவம் கொடுத்த, `போனஸ்’ தான் செய்யாத
கொலைக்குத் தண்டனை.

அன்று இரவு நான் தூங்கவே இல்லை.

காலை ஐந்து மணிக்கு, “முருகா! முருகா!” என்று
பலத்த சத்தம்.

கைதிகள் தூக்குமேடைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

அப்போது நான் உணரவில்லை. இப்போது உணருகிறேன்.

.
……………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பாவமாம், புண்ணியமாம்…..!

 1. புதியவன் சொல்கிறார்:

  கடைசி நிகழ்ச்சி என்னை யோசிக்க வைக்கிறது. செய்யாத குற்றத்திற்காகச் சில சமயங்களில் தண்டனை பெறும்போது, என்னடா இறைவன்.. அப்பாவியான எனக்குத் தண்டனை, குற்றம் செய்தவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்றே நினைப்பான். ஆனால் எல்லாவற்றிர்க்கும் ஒரு தொடர்பு இருக்கு என்பதை மறந்துவிடுவான்.

  நான் இளமைக் காலத்தில் கடின உழைப்பாளி. ரொம்ப வருடங்கள் வரை, ஆபீஸில், 10 ரூபாய் சம்பளத்திற்கு 50 ரூபாய்க்கு உழைப்பதே என் வழக்கம். அப்போதெல்லாம் இன்க்ரிமெண்ட் போனஸ் என்பதெல்லாம் எனக்குக் கிடைத்ததில்லை. பணத்துக்காக என்றுமே உழைத்ததில்லை. ‘நான் இவ்வளவு நன்றாகச் செய்திருக்கிறேன்’ என்று என் மேலதிகாரிகள், கம்பெனி நினைக்கணும், I should be proud about my work என்ற அளவிலேயே செய்திருக்கிறேன். ஆனால், உழைப்பு அதிகமில்லாத காலத்தில் நிறைய பணம் சம்பாதித்தேன். உழைப்பு 10 ரூபாய்க்கு என்றால் 500 ரூபாய் சம்பாதித்தேன்.

  வெறும் வேலை, அதற்கான கூலி என்பதற்கே இத்தகைய கணக்கு இருக்கும்போது, நாம் செய்யும் நல்லன, அல்லனவற்றிர்க்கு ஒரு கணக்கை இறைவன் வைத்திருக்கமாட்டானா? என் மகனிடம் நான் சொல்வதும் இதைத்தான். கம்பெனிக்கு உண்மையாக இரு, கடுமையாக உழை, சம்பளம் கம்மி என்ற எண்ணமே வராமல் பார்த்துக்கொள், உனக்கு ஒரு காலம் வரும், எனக்கு வந்ததுபோல என்றே சொல்லுவேன்.

  நாமெல்லாம் பொதுவாக, முடிச்சவிக்கிகள், மொள்ளமாரிகள், கொலைகாரர்கள், உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணினவர்கள், நன்றாக நிறையப் பணம், பதவிகளோடு இருப்பதைப் பார்க்கிறோம். எதற்கும் ஒரு கணக்கு உண்டு என்பதை நாம் நம்பினால், இறைவனை நொந்துகொள்ளமாட்டோம். பணம் என்பது நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம், நமக்கு பிறர் எவ்வளவு மரியாதை தருகிறார்கள் என்பதில் அல்ல. நமக்கு அது எவ்வளவு நிம்மதியைத் தருகிறது என்பதில்தான் இருக்கிறது.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  .

  புதியவன்,

  ஒரு விதத்தில் கிட்டத்தட்ட
  நானும் அதே ரகம் தான்.

  ஆனால், நான் 18 வயதிலிருந்து, 59 வயதில்
  ஓய்வு பெற்ற கடைசி நாள் வரை கொஞ்சம் கூட
  அயராமல், சலித்துக்கொள்ளாமல்
  முழுமனதுடன், ஈடுபாட்டுடன் – உழைத்திருக்கிறேன்.

  முக்கியமாக, கடைசி 20 வருடங்களில்,
  3 பேர் பார்க்க வேண்டிய பொறுப்புகளை
  நான் ஒருவனாகவே செய்திருக்கிறேன்.
  இத்தனைக்கும் நான் பார்த்தது மத்திய அரசுப் பணி.

  ஆனால், இத்தனைக்கும் முக்கிய காரணமாக
  இருந்தது -என் மனோபாவமும்,
  எனக்கு கிடைத்த ஊக்கமும் …

  எனக்கு கீழே பணியாற்றியவர்களும், என் உடன்
  பணியாற்றியவர்களும், எனக்கு மேலே இருந்தவர்களும்
  என்னிடம் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தார்கள்.
  எதையும் என்னிடம் எதிர்பார்க்கலாம் என்கிற
  நம்பிக்கையோடு என்னிடம் பழகினார்கள்.
  எனக்கு மிகுந்த மரியாதையும், ஆதரவும் அனைவரிடம்
  இருந்தும் கிடைத்தது.

  ஊழியர்கள் முதல், யூனியன் தலைவர்கள் முதல்,
  அதிகாரிகள் – ஜெனரல்மேனேஜர் வரை அனைவரும்
  என்னை நம்பினார்கள். அந்த நம்பிக்கையும்,ஊக்கமும்
  தான் என்னை அந்த அளவிற்கு செயல்பட வைத்தது.

  மிகுந்த சந்தோஷத்துடன், மன நிறைவோடு
  அனைவரின் வாழ்த்துகளுடன் நான் கடைசி நாளில்
  அவர்களிடமிருந்து விடைபெற்றேன்.

  நான் செய்த அலுவலகப் பணியும்,
  சமூக நலப்பணிகளும், எனக்கு அளவுகடந்த
  மன நிறைவையும், சந்தோஷத்தையும் கொடுத்தன.

  நான் இந்த வயதில் – மனதில் எந்தவித குறையோ,
  குற்ற உணர்ச்சியோ இன்றி – நிம்மதியாகவும்,
  சந்தோஷமாகவும் இருப்பதற்கு என் இளம்வயது
  செயல்பாடுகளே அடிப்படை. என் குழந்தைகளும்,
  மற்ற குடும்ப உறுப்பினர்களும் நல்ல முறையில்
  வாழ்வதற்கும், என் நற்காரியங்கள் தான் காரணம்
  என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

  வயோதிகத்தில் ஒரு மனிதனுக்கு முக்கியமான
  தேவைகள் – மன நிம்மதி, நல்ல மகிழ்ச்சியான குடும்பம்,
  அடிப்படைத் தேவைகளுக்கு சுய வருமானம்,
  உடல் ஆரோக்கியம்….

  இதில் ஆரோக்கியம் தவிர, மற்றவை அனைத்தையும்
  இறைவன் எனக்கு கொடுத்திருக்கிறான்.

  என் உடல் ஆரோக்கியம் குன்றியதற்கு – நானே –
  என் இளமைக்கால கவனக்குறைவுகளே காரணம்
  என்று நினைக்கிறேன்…30 வயது வரை அநேகமாக –
  பாதிநாட்கள் நான் காலை உணைவை
  உட்கொண்டதே இல்லை; வறுமையும்,
  வசதியின்மையுமே காரணங்கள்…
  அதன் விளைவுகளை இப்போது அனுபவிக்கிறேன்.

  இருந்தாலும் – நான் மனதளவில் குறையின்றி
  இருக்கிறேன்…. இறைவனுக்கு நன்றி. என்னுடன்
  பழகும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s