இந்து மதம், கீதை – பற்றிய புரிதல்கள் ….(1)

……………….

இந்த இடுகைத் தொடரை நான் எழுத முன்வருவதற்கான
முக்கிய காரணம் – என் சுயநலமே.

இந்த இடுகைத் தொடரை, விமரிசனம் வலைத்தளத்தில்
எழுதுவதன் மூலம், ஒரு மிகப்பெரிய விஷயத்தை
நான் முறையாக தொடர்ந்து படிக்கவும், இன்னும் கொஞ்சம்
தெளிவு பெறவும் உதவும் என்பதே முதல் காரணம்.

அதே சமயம், நான் பெறும் இந்த அனுபவத்தை
விமரிசனம் தள வாசக நண்பர்களும் பெறுவதற்கு,
இந்த தொடர் உதவியாக இருக்கும்; என் முயற்சிகள்
மற்ற நண்பர்களுக்கும் உதவும் என்பது அடுத்த காரணம்.

இந்து மதம், மற்றும் கீதை பற்றி எவ்வளவோ
புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன அவற்றில் சிலவற்றை
நானும் படித்திருக்கிறேன் என்றாலும் கூட,

பல ஆன்மிகப் பெரியவர்களின் கீதை குறித்த உரைகளை
(சுவாமி சின்மயானந்தா உட்பட ) பலமுறை
கேட்டிருக்கிறேன் என்றாலும் கூட,

இப்போதும் கீதையைப் பற்றி இன்னமும் தெரிந்துகொள்ள
வேண்டும் என்கிற அவா எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்த தலைப்பில், அள்ள அள்ளக் குறையாத விதத்தில்
நாம் அறிய வேண்டிய தகவல்கள் அந்த அளவிற்கு,
ஏராளமாக இருக்கின்றன என்பது தான் உண்மை.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இந்த தலைப்பில்
பல்வேறு காலகட்டங்களில் நிறைய எழுதி இருக்கிறார்.
தீர்க்கமான யோசனைகளுக்குப் பின் எழுதப்பட்டவை இவை.
அறிவுபூர்வமாகவும், தர்க்கபூர்வமாகவும் மிகச் சரளமான
நடையிலும் எழுதப்பட்டவை இவை.

ஜெயமோகன் தமிழுக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம்.
அவர் எழுதும் வேகத்தைப் பார்த்தாலே பிரமிப்பாக
இருக்கிறது.

ஜெயமோகன் இந்து மதம் குறித்தும், கீதை குறித்தும் எழுதிய
பல கட்டுரைகள் மிக அற்புதமானவை. இந்த தலைப்புகளில்,
அவர் எழுதியிருக்கும் கருத்துகள் படிப்பவர்களுக்கு
பெரும் தெளிவை ஏற்படுத்தும்.

முதலாவதாக இந்த தொடருக்கு மூல காரணமாக இருக்கும் ஜெயமோகன் அவர்களுக்கு – என் சார்பாகவும், இந்த வலைத்தள வாசக நண்பர்களின் சார்பாகவும், உளமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயமோகனின் கட்டுரைகளின் விசேஷம் என்னவென்றால்,
அவற்றைப் படிக்கும்போது, நம் நண்பர் ஒருவரின்
அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு
நமக்கு ஏற்படுவது தான். நமக்கு ஏற்கெனவே இருக்கும்
நிறைய சந்தேகங்களுக்கான விளக்கங்கள் தன்னாலேயே
அங்கு கிடைக்கும்.

அந்த கருத்துகளை ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா
என்பதைத் தாண்டி –

நம் விமரிசனம் தள வாசக நண்பர்கள் இவற்றையெல்லாம்
படிக்க வேண்டும், அவற்றைப்பற்றி சிந்திக்க வேண்டுமென்று
நான் விரும்புகிறேன்…. பல வாசகர்கள் ஏற்கெனவே இவற்றை
படித்திருக்கக் கூடும்…. இருந்தாலும் கூட, மீண்டும் அவற்றை
ஒரே இடத்தில் படிக்கவும், அது குறித்து சிந்திக்கவும்,
விரும்புவோர், தங்கள் கருத்துகளை பின்னூட்டங்கள் மூலம்
தெரிவிக்கவும், விவாதிக்கவும் கூட- விமரிசனம் தளம் பயன்பட வேண்டுமென்று விரும்புகிறேன்.

எனவே, நிறைய எண்ணிக்கையிலான, இந்த தலைப்புகளிலான கட்டுரைகளைத் திரட்டி, அவ்வப்போது விமரிசனம் தளத்தில் வெளியிடலாமென்று இருக்கிறேன்…

அந்த வரிசையில், முதலாவதாக –

……………………………………………………………………………………………….

கீதையை எப்படிப் படிப்பது…? …ஏன்….?

கேள்வி –

பகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும்
விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதி
வெறிபரப்பும் நூலா? சுயநலத்துக்காக கொலை செய்வதை
அது வலியுறுத்துகிறதா? என்னைப்போன்றவர்களுக்கு
இந்தவகையான சர்ச்சைகள் மிக்க குழப்பத்தை அளிக்கின்றன.

கீதையைப்பற்றி இப்போது தமிழில் மிகவும் எதிர்மறையான பார்வையை அளிக்கும் நூல்கள் பல வந்துள்ளன. அவற்றைப்படித்துவிட்டுச் சிலர் ஏளனமும் கண்டனமும்
செய்கிறார்கள். பகவத் கீதை உரைகளில் அதற்கான
பதில் உண்டா? அவற்றில் எது சிறப்பானது?
எப்படி அவற்றைப் படிப்பது? வழிமுறைகள் என்னென்ன?
உங்கள் பதில் எனக்கு தனிப்பட்டமுறையில் உதவியாக இருக்கும்
என்று படுகிறது.

………………….
ஜெயமோகன் பதில் –

உங்களை தனிப்பட்டமுறையில் எனக்கு தெரியாதென்றாலும் வாசகனாக நீங்கள் என் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு
நன்றி. இந்த நம்பிக்கையானது என் படைப்புமொழிக்கு
கிடைக்கும் அங்கீகாரம் மட்டுமே என்று எடுத்துக் கொள்கிறேன். இவ்விஷயத்தில் என் கருத்துக்கள் பெரும்பாலும் நான் முன்னோடிகளாகவும் வழிகாட்டிகளாகவும் கொண்ட
மனிதர்களின் சிந்தனைகளின் கண்டடைதல்களின் நீட்சிகள்
அல்லது வளர்ச்சிகளே.

நான் கற்றவற்றை என் மொழியில் தொகுத்துக் கொள்கிறேன்.
என் மொழியை மிகுந்த உத்வேகத்துடன் பழகியிருப்பதனால்
என்னால் நான் எண்ணுவதை வார்த்தை வரிசையால்
பின்தொடர இயல்கிறது. என் எண்ணங்களில் நான்
என் தேடலுக்கு அந்தரங்கமாக விசுவாசமாக இருக்கிறேன்.

என் ஆழத்தை திருப்திசெய்யாத ஒரு விடையை அக்கணமே தூக்கிவீசவும், அதில் ஏற்படும் அனைத்து இழப்புகளுக்கும்
தயாராக இருக்கவும் முயல்கிறேன். இந்தப் பின்னணியில்
என் சிந்தனைகள் முக்கியத்துவமுள்ளன என்பதே
என் எண்ணமாகும்.

தங்கள் வினாவைப்போன்ற இருபத்திமூன்று கடிதங்கள்
எனக்கு வந்துள்ளன. இது ஒட்டுமொத்தமான பதில்.
ஆகையினால் இப்பதில் சற்று நீளமாக, தாங்கள் கேட்காத சிலவற்றையும் அடக்கியவையாக இருப்பதைப் பெரிதாக எண்ணமாட்டார்கள் என்று என்ணுகிறேன். முதலில்
இப்போது வந்துள்ள இவ்வார்வம் நம் செய்திஊடகங்களுக்கும்
நாம் அளிக்கும் மிதமிஞ்சிய முக்கியத்துவத்தையே
காட்டுகிறது.

இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படும் அளவுக்கு அவை தரமானவையா, நல்ல நோக்கங்கள் கொண்டவையா, பொறுப்பானவையா என்பது நாம் சிந்திக்கவேண்டிய
விஷயமாகும். நமது அடிப்படையான வினாக்களைக்கூட,
அதற்கான தேடல்களைக்கூட நாம் அன்றாடச் செய்திஊடகப் பரபரப்புகளை ஒட்டி வந்தடைவது சரியானதாகுமா ?

சரி, இவ்விஷயங்களைப்பற்றி பேசுவதற்கு இது ஒரு
முகாந்திரம் என்றே கொள்வோம்.

நான் ஏன் கீதையை நியாயப்படுத்த முயலவேண்டும்….?

அவசியமே இல்லை. ஒரு சிந்திக்கும் தனிமனிதனாக நான் தூக்கிச்சுமக்கவேண்டிய நூல் என்று ஏதும் இல்லை. நான் நியாயப்படுத்தியாகவேண்டிய எந்தநூலும், எந்த தத்துவமும்
இல்லை. இந்தச் சுதந்திரத்தையே சிந்திக்கும் ஒருவன்
அடிப்படையான விதியாக தனக்கு விதித்துக் கொள்ளவேண்டும்.

உலகிலுள்ள எந்த நூலைச்சார்ந்தும் என் இருப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. எதன் மீதும் நான் விட இயலாத
பிடிப்பு கொண்டிருக்கவில்லை.

அதைப்போல ஓர் இந்துவாக நான் நியாயப்படுத்தியாக
வேண்டிய நூல் அல்லது தத்துவம் அல்லது ஆளுமை என
எதுவும் இல்லை. ஓர் இந்துவாக நான் இருப்பதற்குக் காரணம்
இந்த சுதந்திரமே.

வேதங்களோ, உபநிடதங்களோ, கீதையோ, மகாபாரதமோ, சைவத்திருமுறைகளோ, ஆழ்வார் பாடல்களோ எவையுமே ஓர் இந்துவுக்குக் கடைசிச் சொற்கள் அல்ல. இவையெல்லாம்
முற்றாக அழிந்தாலும், நித்ய சைதன்ய யதி வரையிலான ஆசிரியர்களின் அனைத்துச் சொற்களும் முற்றாக
அழிந்தாலும் இந்துஞானமரபு அழிவடையாது.

தொடர்கிறது …..பகுதி -2-ல்


.(அடுத்த பகுதி இன்னும் 2 மணி நேரத்தில் ….)
…………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.