இந்திராவால் – சிறையில் தள்ளப்பட்ட இரண்டு ராணிகள் ….

…………………..

திருமதி இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி கொடுமையில்
சிறையில் தள்ளப்பட்ட 2 ராணிகள் பற்றிய பரிதாபமான
செய்திகளை அண்மையில் படித்தேன்…

கீழே பகிர்ந்து கொள்கிறேன்….

…………………………………………….

இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம்
செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமான அரசியல்
பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு
ஜனநாயக செயல்முறை அமைப்புகள் முடக்கப்பட்டன என்பது
ஏற்கெனவே நாம் அறிந்ததே.

அந்த வரிசையில், இந்திரா காந்தியால் சிறை வைக்கப்பட்ட
இரண்டு ராணிகளில் -ஒருவர் ஜெய்ப்பூர் ராணி காயத்ரி தேவி, இன்னொருவர் குவாலியர் ராணி விஜயராஜே சிந்தியா.

……………………….

நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட பிறகு,
ஜெய்ப்பூர் மற்றும் குவாலியர் ராணிகள் இருவரும்
இந்திரா காந்தியின் இலக்கின் கீழ் வந்தனர்.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் தத்தமது பகுதியின் பொது
மக்களிடையே பிரபலமாகவும் இருந்தனர்.

அவர்களது அரசியல் நம்பகத்தன்மையை குறைக்கும்
வகையில் அவர்கள், அரசியல் எதிரிகளாக அல்லாமல்
பொருளாதார குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டனர்.

நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு முன்பே ராஜ்மாதா காயத்ரி தேவியைத் துன்புறுத்தும் செயல்முறை தொடங்கியது.
ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் ஒவ்வொரு வீடு, அரண்மனை
மற்றும் அலுவலகங்களில் வருமான வரிச் சோதனைகள்
நடத்தப்பட்டன. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது,
மும்பையில் சிகிச்சை பெற்று வந்த காயத்ரி தேவிக்கு வயது 56.

1975 ஜூலை 30ஆம் தேதி இரவு அவர் தனது டெல்லி வீட்டை அடைந்தபோது, ​​​​அந்நிய செலாவணி மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் அவரை கைது செய்தனர்.

அவருடன், அவரது மகன் கர்னல் பவானி சிங்கையும் போலீசார்
கைது செய்தனர். வெளிநாட்டுப் பயணத்திற்குப்பிறகு அவரிடம்
சிறிது டாலர்கள் மீதம் இருப்பதாகவும், அதை அவர் அரசுக்கு வழங்கவில்லை என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திகாரின், மின்விசிறி இல்லாத நாற்றமடிக்கும் அறை
அவர்கள் திகாருக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு
உள்ளூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

“காவல் நிலையத்தில் இருந்த அனைவரும் பவானி சிங்கை அடையாளம் கண்டுகொண்டனர். அவர் குடியரசுத்தலைவரின் மெய்க்காப்பாளராக இருந்தவர். 1971 போரில் அவரது
வீரத்திற்காக, மகா வீர் சக்ரா பெற்றார்.” என்று காயத்ரி தேவி
தனது சுயசரிதையான ‘எ பிரின்சஸ் ரிமெம்பர்ஸ்’ -ல்
குறிப்பிட்டுள்ளார்.

​​”சுற்றுலா சீசனில் ஓட்டல்கள் நிரம்பி இருப்பதுபோல,
அந்த நேரத்தில் டெல்லியின் எல்லா சிறைகளும் நிரம்பியிருந்தன. திகார் சிறை கண்காணிப்பாளர், நாங்கள் அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய காவல்துறை அதிகாரியிடம் சிறிது கால அவகாசம் கேட்டார்.”

“மூன்று மணி நேரம் கழித்து நாங்கள் திகாரை அடைந்தபோது, ​​
அவர் எங்களுக்கு தேநீர் ஆர்டர் செய்தார். மேலும் எங்கள்
வீட்டிற்கு தொலைபேசி அழைப்பை செய்து, எங்கள்
படுக்கைகளை கொண்டுவரச் செய்தார்.”

“சிறையின் குளியலறையில் பவானி சிங் வைக்கப்பட்டார்.
காயத்ரி தேவிக்கு துர்நாற்றம் வீசும் அறை வழங்கப்பட்டது.
அங்கு குழாய் இருந்தது. ஆனால் அதில் தண்ணீர் இல்லை.
ராணியின் அறையில், கம்யூனிஸ்ட் ஆர்வலர் ஸ்ரீலதா
சுவாமிநாதனும் அடைக்கப்பட்டார்.”

அறையில் ஒரே கட்டில்தான் இருந்தது. அதை ராணிக்கு
கொடுத்த ஸ்ரீலதா தரையில் விரிப்பில் படுத்து உறங்கினார்.
ராணியின் செல்வாக்கு காரணமாக அவருக்கு தினமும்
காலையில் தணிக்கை செய்யப்பட்ட செய்தித்தாள் மற்றும்
தேநீர் வழங்கப்பட்டது. மாலையில் தனது மகன் பவானி
சிங்குடன் நடைபயில அவர் அனுமதிக்கப்பட்டார்.

1977 நவம்பர் 15 அன்று, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில்
வெளியான ‘ராஜ்மாதா நரேட்ஸ் டேல்ஸ் ஆஃப் வென்டெட்டா’
என்ற நேர்காணலில் காயத்ரி தேவி, “முதல் நாள் இரவு
என்னால் தூங்க முடியவில்லை. என் அறைக்கு வெளியே
கைதிகள் மலம் கழிக்கும் வடிகால் இருந்தது. அறையில்
மின்விசிறியும் இல்லை. கொசுக்கள் எங்கள் இரத்தத்தை
மிகவும் விரும்பின.”என்றார்.

“சிறையின் சூழல் ஒரு மீன் மார்க்கெட் போல் இருந்தது,
அங்கு திருடர்களும் , பாலியல் தொழில் செய்பவர்களும்
ஒருவர் மீது ஒருவர் கூச்சலிடுவார்கள். நாங்கள் சி கிளாஸ்
என்று வகைப்படுத்தப்பட்டோம்.”

திகாரில் அவர் தங்கியிருந்த காலத்தில், ராணி காயத்ரி
தேவியின் இன்னொரு மகன் ஜகத், இங்கிலாந்திலிருந்து
வரும் வோக் மற்றும் டைட்லர் இதழின் சமீபத்திய இதழ்களை
அவருக்கு அனுப்பி வைப்பார்.

வாரத்திற்கு இரண்டு முறை அவரைச் சந்திக்க வந்தவர்கள்
சிறையில் அவருக்கு டிரான்சிஸ்டர் ரேடியோவை கொண்டு
வந்து கொடுத்தனர்.

விஜயராஜே சிந்தியா –

ஒரு மாதம் கழித்து திகார் சிறை அதிகாரிகள் காயத்ரி
தேவியிடம், குவாலியரின் ராஜ்மாதா விஜயராஜே சிந்தியாவும்
அங்கு அழைத்து வரப்பட இருப்பதாகவும், அதே அறையில்
தங்க வைக்கப்படுவார் என்றும் தெரிவித்தனர்.

தன் அறையில் இன்னொரு படுக்கையை போட்டால், அங்கே
நிற்கக்கூட இடம் இருக்காது என்று ராஜமாதா அதை எதிர்த்தார்.

காயத்ரி தேவி தனது சுயசரிதையான ‘தி பிரின்சஸ் ரிமம்பர்ஸ்’ புத்தகத்தில், “யோகா செய்ய எனது அறையில் சிறிது இடம் தேவைப்பட்டது. மேலும் இரவில் நான் வாசிப்பதற்கும் இசை கேட்பதற்கும் பழகியிருந்தேன். எங்கள் இருவருக்குமே
வெவ்வேறு பழக்கவழக்கங்கள் இருந்தன. அவர் தனது
பெரும்பாலான நேரத்தை வழிபாட்டில் செலவிடுவார்.”
என்று எழுதியுள்ளார்.

“எனினும், சிறைக் கண்காணிப்பாளர் எனது வேண்டுகோளை
ஏற்று, ராஜ்மாதாவுக்கு மற்றொரு அறையை ஏற்பாடு செய்தார்.
ஆனால் செப்டம்பர் மாதம் கோடை வெயில் அதிகமாக
இருந்ததால், ராஜ்மாதா என் அறையை ஒட்டிய வராண்டாவில் தூங்கலாமா என்று கேட்டார். நான் திரைச்சீலை போட்டு,
வராண்டாவில் அவருக்காக ஒரு கட்டிலை போடச்செய்தேன்.”

1975 செப்டம்பர் 3 -ம் தேதி குவாலியரின் ராஜமாதா
விஜயராஜே சிந்தியா திகார் சிறைக்கு அழைத்துவரப்பட்டார்.

அவர் மீதும் பொருளாதாரக் குற்றப் பிரிவு சுமத்தப்பட்டது.
அவரது வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன.
ஒரு கட்டத்தில், சொத்துக்களை விற்று அல்லது நண்பர்களிடம்
கடன் வாங்கிச் செலவுகளை நடத்த வேண்டிய நிலை வந்தது. நண்பர்களிடம் கடன் வாங்குவதும் அவ்வளவு சுலபமான
காரியம் அல்ல. ஏனென்றால் நெருக்கடி நிலை பாதிப்புக்கு
உள்ளான ஒருவருக்கு யார் உதவி செய்தாலும், நிர்வாகம்
அவரை பழிவாங்கும்.

சிந்தியா தனது சுயசரிதையான ‘ப்ரின்ஸஸ்’ல், “நான்
திகாரில் கைதி எண் 2265. நான் திகாரை அடைந்தபோது, ​​
ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரி தேவி அங்கு என்னை
வரவேற்றார். நாங்கள் ஒருவரையொருவர் சிரம் தாழ்த்தியும், கைகூப்பியும் வாழ்த்தினோம்,”என்று குறிப்பிட்டுள்ளார்.

“நீங்கள் இங்கு எப்படி வந்தீர்கள், இது மிகவும் மோசமான
இடம் என்று கவலையுடன் அவர் கேட்டார். ‘என் அறையை
ஒட்டிய குளியலறையில் குழாய் இல்லை. கழிப்பறை என்ற
பெயரில் ஒரு குழி மட்டுமே உள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு
முறை ஜெயில் துப்புரவு செய்பவர்கள் வாளிகளில் தண்ணீரைக் கொண்டு வந்து குழியில் தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்ய முயல்வார்கள்’ என்றும் அவர் என்னிடம் சொன்னார்.”

“அறை முழுவதும் எப்போதும் துர்நாற்றம் வீசும். நாங்கள்
சாப்பிடும் போது ஒரு கையால் ஈக்களை விரட்டுவோம். ஈக்கள்
இரவில் தூங்கச் செல்லும்போது, ​​​​அவற்றின் இடத்தை கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகள் எடுத்துக்கொள்ளும்,”என்று விஜயராஜே எழுதியுள்ளார்.

“முதல் மாதம் ஒருவரைக் கூட சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை. நான் எந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன் என்று கூட என் மகள்களுக்குத் தெரியாது.”

இதற்கிடையில், காயத்ரி தேவியின் எடை பத்து கிலோ குறைந்து, அவருடைய இரத்த அழுத்தம் குறைய ஆரம்பித்தது.

“காயத்ரி தேவியின் வாயில் கொப்புளங்கள் ஏற்பட்டன.
சிறை நிர்வாகம் அவரது தனிப்பட்ட பல் மருத்துவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. பல வாரங்களுக்குப் பிறகு, டெல்லியின்
பிரபல பல் மருத்துவர் டாக்டர் பெர்ரி, கர்சன் சாலையில் உள்ள
பெர்ரி கிளினிக்கில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய
அனுமதி வழங்கப்பட்டது.”

ஆனால் அவர் தனது குடும்பத்தினர் இல்லாமல்
மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள
மறுத்துவிட்டார்.

“மருத்துவமனையில் கழித்த முதல் இரவு மிகவும் பயமாக
இருந்தது. பெரிய எலிகள் என் அறையில் சுற்றித் திரிந்தன.
என் அறைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காவலாளிகள்
அவற்றை விரட்ட முயன்றனர். அவர்களின் பூட்ஸ் சத்தம்
மற்ற நோயாளிகளை தூங்க விடவில்லை. அடுத்த நாள்
டாக்டர் பத்மாவதி என்னை குளியலறையுடன் இணைக்கப்பட்ட சுத்தமான அறைக்கு மாற்றினார்.”என்று காயத்ரி தேவி
தனது சுயசரிதையில் எழுதினார்.

” 1975 ஆகஸ்டில் காயத்ரி தேவி மற்றும் அவரது மகன் பவானி
சிங்கும், உடல்நலக்குறைவு காரணங்களுக்காக தங்களை
சிறையில் இருந்து விடுவிக்குமாறு அரசிடம் கோரிக்கை
விடுத்தனர். அப்போதைய நிதித்துறை இணையமைச்சர்
பிரணாப் முகர்ஜி, அவர்களை விடுவிக்கும் பரிந்துரையுடன்
இந்திரா காந்திக்கு அந்தக் கடிதத்தை அனுப்பினார்.
ஆனால் பிரதமர், காயத்ரி தேவி மற்றும் பவானி சிங்கின்
கோரிக்கையை ஏற்கவில்லை.

மறுபுறம், லண்டனில் உள்ள மவுண்ட்பேட்டன் பிரபு,
காயத்ரி தேவியின் விடுதலைக்காக இந்திரா காந்திக்கு கடிதம் எழுதுமாறு பிரிட்டிஷ் ராணியிடம் வலியுறுத்தத் தொடங்கினார்.

காயத்ரி தேவியின் வாழ்க்கை வரலாற்றில் ஜான் ஸுப்ரிசிக்கி எழுதுகிறார், ” பிரிட்டிஷ் அரச குடும்பம் இந்த விஷயத்தில் தலையிடக்கூடாது என்று டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம்
கருத்து தெரிவித்தது. ஏனென்றால் இது இந்தியாவின்
உள்விவகாரம் என்று அவர்கள் கருதினர். அரச குடும்பத்தின்
இந்த முயற்சியை இந்திரா காந்தி ஏற்றுக்கொள்வதற்கு
வாய்ப்பு குறைவு என்று அவர்கள் தெரிவித்தனர்.”

இறுதியில் காயத்ரி தேவி பொறுமை இழந்தார். தனது
விடுதலையை கோரி இந்திரா காந்திக்கு நேரடியாகக்
கடிதம் எழுதினார்.

“சர்வதேச மகளிர் ஆண்டு முடிவடையும் சந்தர்ப்பத்தில்,
நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக உங்களுக்கும் உங்கள் திட்டங்களுக்கும் ஆதரவளிப்பதாக நான் உறுதியளிக்கிறேன் “
என்று அவர் எழுதினார்.

தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகக்கூறிய அவர்
தனது சுதந்திரக் கட்சி ஏற்கனவே முடிந்து விட்டதாலும்,
வேறு எந்தக் கட்சியிலும் உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லாததாலும், தன்னை விடுதலை செய்ய வேண்டும்
என்று அவர் எழுதினார். இதற்கு வேறு ஏதேனும் நிபந்தனைகள் இருந்தால் அதையும் ஏற்க தயாராக இருக்கிறேன் என்றும்
அவர் குறிப்பிட்டார்.

“காயத்ரி தேவி மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டதை
எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வாபஸ் பெற வேண்டும் என்பதே அரசின் முதல் நிபந்தனை.

இந்த நிபந்தனையை ஏற்க அவர்கள் சற்றும் தாமதிக்கவில்லை.
அவர்களின் விடுதலைக்கான உத்தரவு, 1976 ஜனவரி 11 ஆம்
தேதி கையெழுத்திடப்பட்டது. அவரது சகோதரி மேனகா,
அவரை மருத்துவமனையில் இருந்து திகார் சிறைக்கு
அழைத்துச் சென்றார். அங்கிருந்து அவர் தனது பொருட்களை
எடுத்துக் கொண்டார். அங்கு அவர் மொத்தம் 156 இரவுகளைக் கழித்திருந்தார்,”என்று ஜான் ஸுப்ரிசிகி எழுதியுள்ளார்.

“அங்கு இருந்த கைதிகளும் குவாலியரின் ராஜமாதாவும்
அவரிடமிருந்து விடைபெற்றனர். அவர் டெல்லியில், ஔரங்கசீப் சாலையில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்பினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் காரில் ஜெய்ப்பூர் சென்றார்.

பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடைகள் இருந்த
போதிலும், சுமார் 600 பேர் அங்கு அவரை வரவேற்றனர்.
அதற்குப் பிறகு அவர் பம்பாய் சென்றார். அங்கே பித்தப்பையில் கற்களுக்கான அறுவை சிகிச்சை அவர் செய்துகொண்டார்.


மறுபுறம், விஜயராஜே சிந்தியாவின் மகள் உஷா பெரு
முயற்சிகளுக்குப் பிறகு இந்திரா காந்தியை சந்திப்பதில்
வெற்றி பெற்றார்.

தனது தாயை விடுவிக்கக் கோரியபோது, ​​அவர் அரசியல் காரணங்களுக்காக அல்ல, பொருளாதாரக் குற்றங்களுக்காக
கைது செய்யப்பட்டார் என்று இந்திரா காந்தி கூறினார்.

சிறையில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால்
சிறையில் அவரது பொழுதுபோக்கிற்கான வழியும் இருந்தது.

“ஒரு நாள் பெண் கைதிகள் குழு என் பொழுதுபோக்கிற்காக பாடல்களை இசைத்தனர். இதில் அவர்கள் கோரஸில்
சமீபத்திய படங்களின் பாடல்களைப் பாடி அதை ‘காபரே’
என்று அழைத்தனர். இதற்கு பதிலாக அவர்கள் பஜனைகளை
பாடினால் எனக்குப்பிடிக்கும் என்று நான் சொன்னேன்.
எனது வேண்டுகோளின் பேரில் அவர்கள் பஜன்களை பாட ஆரம்பித்தனர். ஆனால், ‘காபரே’ பாடல்கள் இல்லாமல்
ஒருவர் எப்படி பஜனையை விரும்புகிறார் என்று அவர்களுக்குப்புரியவில்லை. பின்னர் அவர்கள் என்னிடம்,
‘ சரி, முதலில் பஜனை பின்னர் காபரே ‘என்று சொன்னார்கள்
என்று விஜய்ராஜே சிந்தியா எழுதுகிறார்.

சில நாட்களுக்குப் பிறகு, விஜயராஜே சிந்தியாவுக்கு
உடல்நலக்குறைவு ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

“என்னை ஒரு தனியறையில் வைத்து, ஒரு காவலாளியை
வெளியில் உட்கார வைத்தனர். யாரும் என்னைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. ஒரு நாள் ஒருவர் வலுக்கட்டாயமாக
என் அறைக்குள் நுழைந்ததை நான் பார்த்தேன்.”என்று
சிந்தியா எழுதுகிறார்.

“அவர் காஷ்மீர் முதல்வர் ஷேக் அப்துல்லா. எய்ம்ஸ்
மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இது ஒரு விசித்திரமான தற்செயல் நிகழ்வு. 12 ஆண்டுகளுக்கு முன்பு
நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது. அவர்
கைதியாக இருந்த போது, நான் அவரைப் பார்க்கச்
சென்றிருந்தேன். பிறகு ஒரு நாள் காலையில், எனது
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் பரோலில் விடுவிக்கப்படுவதாக என்னிடம் கூறப்பட்டது.”

சிறையில் இருந்து விஜயராஜே சிந்தியா வெளியே வந்தபோது, ​​
அவரது மூன்று மகள்களும் அவருக்காக காத்திருந்தனர்.
அவர் முகத்தில் புன்னகையும், அதே சமயம் கண்களில்
கண்ணீரும் இருந்தது.

.
……………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to இந்திராவால் – சிறையில் தள்ளப்பட்ட இரண்டு ராணிகள் ….

 1. புதியவன் சொல்கிறார்:

  இந்தியாவில் ஜனநாயகத்தில் நாம் எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்பதையே இத்தகைய நிகழ்வுகள் காண்பிக்கின்றன. அதற்கு மிக முக்கியக் காரணம் நீதித்துறை என்றால் அது மிகையல்ல.

  நினைத்தபோதெல்லாம் மாநில அரசைக் கவிழ்ப்பது, தன் ஜால்ராக்களை மாத்திரமே கட்சியில் ஊக்குவிப்பது, பதவிக்குக் கொண்டுவருவது, தனக்கு எதிராக யாருமே இல்லாமல் பார்த்துக்கொண்டது என்று இந்திராகாந்தி ஆடியதற்கும் அளவில்லை. (அந்தக் காலகட்டத்தில் நான் இந்திரா காங்கிரஸ் அனுதாபி. என் அப்பாவுக்கு இந்திராவைச் சுத்தமாகப் பிடிக்காது).

  தற்போதைய ஜனநாயகத்தில், தாங்கள் நினைத்தால் சிலருக்கு அதீத தண்டனை, சிறையில் போடுவது, அதே தவறுகளைத் தனக்கு வேண்டியவர்கள் செய்யும்போது கண்டுகொள்ளாமல் இருப்பது, ஒரு மதத்திற்கு எதிராக நடந்துகொள்வது, என்று நடந்துகொள்ளும் ஸ்டாலின் திமுக பாணிக்கு எப்போது நீதித்துறை கடிவாளம் போடப்போகிறதோ.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   சர்வாதிகாரிகளுக்கு நிச்சயம் தண்டனை
   கிடைக்கிறது என்பது பல தடவை
   நிரூபிக்கப்பட்டிருக்கிறது….

   இருந்தாலும் கூட –
   பின்னால் வருபவர்கள், இதிலிருந்து பாடம்
   கற்றுக்கொள்வதாகத் தெரியவில்லையே…

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  தஞ்சை பெரிய கோயில் சிறப்புகளை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா –

  ஆனந்த் மஹிந்திரா | தஞ்சை பெரிய கோயில்
  மும்பை: தஞ்சை பெரிய கோயிலான பிரகதீஸ்வரர் கோயிலின் கட்டிடக் கலையின் சிறப்புகளை வியந்து பேசும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா. இந்நிலையில், அவரை பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்குமாறு நெட்டிசன் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.

  சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா. அவரது சோஷியல் மீடியா ஷேரிங் அனைத்தும் அமளி துமளி ரகங்களாக இருக்கும். கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு வாழ்த்துவது, சமயங்களில் அதனை வடிவமைத்தவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் அவரது வழக்கம். அதோடு நின்று விடாமல் கவனம் ஈர்க்கும் வகையிலான பதிவுகளையும் பகிர்வார்.

  அந்த வகையில் இப்போது தஞ்சை பெரிய கோயிலின் கட்டிடக் கலையின் புகழை பாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இண்டீரியர் டிசைனரான ஸ்ரவண்யா ராவ் பிட்டி, தஞ்சை பெரிய கோயிலுக்கு நேரடியாக சென்று அதன் கட்டிடக் கலையின் சிறப்பு குறித்து விளக்குகிறார்.

  “11-ம் நூற்றாண்டில் கட்டிய சோழர் கோயிலான பிரகதீஸ்வரர் கோயிலில் நாம் உள்ளோம். ராஜ ராஜ சோழன் கட்டிய கோயில் இது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக இந்த கோயில் விளங்குகிறது. எந்தவித இயந்திரமும் இல்லாத அந்த காலத்தில் இந்தக் கோயிலை ஆறு கிலோ மீட்டருக்கு சாய்வு தளம் அமைத்து கோயில் கோபுரத்தை கட்டியுள்ளார். படம் வரைந்து அதன் அடிப்படையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. பேரண்டத்தின் இடது வலது குறித்து இந்த கோவில் பேசுகிறது. ஆறு பூகம்பங்களை தாங்கி நிற்கிறது” என ஸ்ரவண்யா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

  “ஸ்ரவண்யா வழங்கியுள்ள அற்புதமான தகவல்கள் அடங்கிய வீடியோ கிளிப் இது. சோழப் பேரரசின் சாதனை மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றத்தை நாம் சரிவர உள்வாங்கவில்லை என நினைக்கிறேன். இதன் வரலாற்று சிறப்பு நாம் உலகிற்கு உரக்க சொல்லவில்லை” என ஆனந்த் மஹிந்திரா அந்த ட்வீட்டின் கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

  • புதியவன் சொல்கிறார்:

   சாய்வாக் மேடை அமைத்து இதனைக் கட்டியிருக்க முடியாது (சாய்வுப்பள்ளம் என நினைக்கிறேன்…அந்த மாதிரி ஒரு இடம் இருந்தபோதும்). ஸ்பைரல் முறையில் கட்டியிருக்கிறார்கள் என்று உடையாரில் பாலகுமாரன் அவர்கள் விளக்கியிருந்தார் (அது உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது).

   உலகத்தில் உயரமான கட்டிடம் என்றெல்லாம் தொழில்நுட்பம் இருக்கும் காலத்தில் சொல்லிக்கொள்வதற்கும், அப்போதே எழுநிலை மாட கோபுரங்கள் போன்றவை கட்டியதற்கும் வித்தியாசம் உண்டு. அதுவும் தவிர ஒவ்வொரு நிலையிலும் சிற்பங்களுடன் கூடிய மாடங்கள் (கார்னர்களில் சிற்பங்கள்). ஒவ்வொரு கோயிலையும் கட்டுவதற்கு எவ்வளவு உழைப்பு தேவையாக இருந்திருக்கும் என்றெல்லாம் யோசிக்கவேண்டும். சில கோவில் கர்பக்க்ரஹத்தில் நிறைய சிலைகள் உண்டு. உதாரணம் திருவல்லிக்கேணி போன்று. அவற்றை எப்படி உள்ளே கொண்டுபோயிருப்பார்கள், நிறுவியிருப்பார்கள்? அதுபோல தஞ்சையில் பெரிய உடையாரையும் (சிவலிங்கம்) எப்படி நிறுவியிருப்பார்கள் என்பதும் ஆச்சர்யத்துக்குரியது. கல்வெட்டு என்பது சாதாரணமா? எப்படி தொடர்ச்சியாக 10 மீட்டருக்கும் மேல் கல்வெட்டியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்கவேண்டும். உலோகத்திலும் தமிழர்களின் திறமை அளவிடற்கரியது.

   இந்த மாதிரி வரலாற்றுச் செய்திகளுக்கு விமர்சனம் வாசகர்களிடத்தில் ஆர்வம் இருக்கிறதா? (as you know number of views of a particular issue)

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    .

    புதியவன்,

    “இந்த மாதிரி வரலாற்றுச் செய்திகளுக்கு
    விமர்சனம் வாசகர்களிடத்தில் ஆர்வம்
    இருக்கிறதா? ..”

    வழக்கமாக வருபவர்கள் எல்லாரும் நிச்சயமாக
    பார்க்கிறார்கள்; படிக்கிறார்கள்.

    ஆனால், இதில் ஆர்வம் உடையவர்கள் யார்
    என்பதை இது குறித்து பின்னூட்டம் வரும்போது
    மட்டுமே கண்டுபிடிக்க முடிகிறது…..

    ( முன்பெல்லாம், தமிழ் மணம் ப்ளாக் அக்ரகேட்டர்
    இருந்தபோது, தலைப்பை பார்த்து, நிறைய பேர்
    வருவார்கள்… அந்த சமயங்களில் அது
    சாத்தியமாக இருந்தது…. தமிழ்மணம் காணாமல்
    போனது நம் எல்லாருக்குமே பெரிய இழப்பு.
    அந்த இடத்திற்கு வேறு எதுவும் வந்ததாகத்
    தெரியவில்லை…)

    அந்த குறிப்பிட்ட இடுகையில்,
    புகைப்படங்களை பதிவதில் எனக்கு மிகுந்த
    சிரமம் ஏற்பட்டது.. இருந்தாலும்,
    ஆர்வம் காரணமாக முடித்து விட்டேன்…!!!

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • Raghuraman சொல்கிறார்:

     Sir, I am interested in reading historical articles. I used to visit temples mainly to see sculptures in walls and gopurams. I normally do not respond in blogs as my personal views may differ and also lack of time due to work pressure. I read your blogs since last 7 years.
     I enjoy these types of articles.

    • கணபதி சொல்கிறார்:

     மிக்க நன்றி ஐயா. எனக்கும் வரலாறு சம்பந்தமாக படிக்கவும் பார்க்கவும் பிடிக்கும். உங்கள் வலைதள உழைப்பு அசாத்தியமான ஒன்று. மிக்க நன்றிகள். என்னை போல பலருக்கும் விருப்பம் இருக்கும். என்ன நாங்கள் படித்துவிட்டு போகும் கூட்டம், எழுத ஒரு தயக்கம் உள்ளவர்கள்.

     நான் முதல் முதல் உங்கள் வலைத்தளம் தமிழ்மணம் மூலமாக பல வருடம் முன்பு வந்தேன். அது ஒரு நல்ல aggregator ஆக இருந்தது. தமிழ் மணங்களுக்கு அது ஒரு பெரிய இழப்பு .

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      கணபதி,

      உங்கள் ஆர்வம் குறித்து தெரிந்துகொண்டேன்.
      உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 3. bandhu சொல்கிறார்:

  உலகத்திலேயே பெரிய ஆச்சர்யம் எது என்ற கேள்விக்கு தன் முன்னாலேயே அனைவரும் மரணமடையும்போதும் தான் மட்டும் சாஸ்வதம் என்று மனிதன் நினைப்பது என்று யக்ஷன் கேள்விக்கு தர்மன் பதில் சொல்வான். அது போலத்தான் சர்வாதிகாரிகளும்! தங்கள் அதிகாரம் சாஸ்வதம் என்று convince ஆகிவிடுவதால்தான் இப்படி ஆடுகிறார்கள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.