விட மனசில்லை – இன்னுமொரு கலர்ஃபுல் பேட்டி …..!!!

பொன்னியின் செல்வன் படம் உருவான விதம் குறித்து
இயக்குநர் மணிரத்னம் அவர்களை விகடன் தளம்
விசேஷ பேட்டி எடுத்திருக்கிறது…

அதிலிருந்து கொஞ்சம் –

‘பொன்னியின் செல்வ’னை எப்படி ரசித்தேனோ, உணர்ந்தேனோ, உள்வாங்கினேனோ, அப்படியே கொண்டு வர முயற்சி செய்திருக்கேன். நல்லா வந்திருக்குன்னு நியாயமா சொல்லத் தோணுது. நம்ம ஊர்ல பொன்னியின் செல்வனுக்கு ஒரு பெரிய மேஜிக் இருக்கு. நானும் ஆர்வமா இருக்கேன். ரொம்ப காத்திராமல் அடுத்த வாரமே பார்த்திடலாம்…”

‘‘ரொம்பவும் பாதித்தது ஜப்பானின் குரோசோவாதான். அவர் சாமுராய் பற்றிக்கூட படம் எடுத்திருக்கிறார். அதெல்லாம் இப்ப நிகழ்காலத்தில் நடக்கிற மாதிரி இருக்கும். நாம் அங்கேயிருந்தால் எப்படி உணர முடியுமோ அப்படி இருக்கும். அழுக்கு, புழுதி, வியர்வை இருக்கும். அதெல்லாம் அவரோட ஸ்பெஷாலிட்டி. இந்த ஸ்டைலைத்தான் பொன்னியின் செல்வனில் கொண்டுவரப் பார்த்திருக்கோம். To make it real.

‘அந்தக் காலத்துக் கதை சொல்றான் பாரு’ன்னு இல்லாமல் கல்கி
‘நாம் அங்கே போவோமா’ன்னு எழுதுவார்ல, அப்படி முயற்சி செய்திருக்கேன். படம் பிடிச்சது, கலர்ஸ் எல்லாம் நிகழ்காலம்
மாதிரியே இருக்கும். பேசுகிற விதத்தில், எமோஷன் வெளிப்படுவதில் நடிகர்களின் நடிப்பில் எல்லாம் நாடகத் தன்மை குறைந்து ரியலிசம் அதிகம் வெளிப்பட்டிருக்கும். அதைத்தான் நானே விரும்பினேன்.”

‘‘கல்கியே ஒரு கோடு போட்டுக் காட்டிட்டார். வந்தியத்தேவன் வழியாகத்தான் ஒவ்வொரு கேரக்டரும் அறிமுகமாகுது. அவர் மூலமாகத்தான் ஒவ்வொண்ணா தெரிஞ்சிக்கிறோம். சினிமாவில் அதுதான் அழகு. ஒரு கேரக்டர் வழியாக நாமும் வந்தியத்தேவனும் சேர்ந்து கத்துக்கிறோம். அது வெளியிலிருந்து கதை சொல்லாமல் உள்ளிருந்தே கதை சொல்கிற அமைப்பு. கல்கி போட்ட பாதையில்தான் போயிருக்கோம். அவர் தொட்டதையெல்லாம் நாங்களும் தொட ஆசைப்பட்டோம். இதைப் பத்துப் பாகமாக வேண்டுமானாலும் பண்ணலாம். சினிமாவாகச் செய்யும்போது சில விஷயங்கள் இருக்கு. இது ஒரு எக்னாமிக் மீடியா. அதனோட பலம், மினிமம் இடத்தில் மேக்சிமம் கொண்டு வரணும்.

“அந்தக் காலத்தை நிறுத்தற இடங்கள், உடைகள், உண்மைத்
தன்மைக்கு எப்படி சிரமப்பட்டீங்க?’’

‘‘டெக்னாலஜி நிறைய வளர்ந்திருப்பதால் இப்ப பெரிய சௌகரியம்.

20 வருஷத்துக்கு முன்னாடி செய்திருந்தால் டெலிபோன், மின் கம்பங்கள் இல்லாமல் தேடணும். இப்ப எங்கே ஷூட் பண்ணினாலும் அதை அழிச்சிடலாம். அந்தக் காலத்தில் அவர் எழுதிய இடங்கள் இப்ப அப்படி இல்லை. அப்படியே மாறிக்கிடக்கு. சத்தியமாக அதைக் காட்டவே முடியாது. சொல்லியிருக்கிறதை நிஜத்திற்குப் பக்கமாக நிறுத்திக் கொண்டு வந்திருக்கோம். ஒரு செட் போட்டு எடுத்த மாதிரி செயற்கைத்தனம் வரக்கூடாது. முடிந்தவரை வானம், கீழே மண் தெரியணும். புழுதி பறக்கணும்னு சளைக்காமல் வேறு வேறு இடங்களுக்குப் பயணப்பட்டுக்கிட்டே இருந்தோம்.”

“என்னென்ன சவால்கள் இருந்தன?’’

‘‘நாம் அடிக்கடி பீரியட் படம் பண்றதில்லை. ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியிருந்தது. எதுவுமே நம்மகிட்டே இல்ல. கத்தி, ஈட்டி, வாள்னு ஆராய்ச்சிகள் மூலம் தேடிக் கண்டுபிடிச்சு, நிறைய தயார் செய்தோம். அதுவும் சரியாக இருக்கணும். பழைய இரும்புக் கவசம் எல்லாம் டிராமாவிலிருந்து வந்தது. சாதாரணமாக அதைப் போட்டுக்கிட்டு சண்டையெல்லாம் போடவே முடியாது. அதனால் அதையும் தேடிக் கண்டுபிடிச்சு செய்தோம். அதை இங்கே செய்ய ஆள் கிடையாது. டெல்லிக்குப் போய் ஆளைப்பிடித்து இங்கே கொண்டுவந்து சேர்த்தோம். எல்லாத்தையும் கண்டுபிடிக்கணும். அதைப் பல மடங்காகவும் செய்யணும். இதுமாதிரி இன்னும் இரண்டு படங்கள் வந்தால் சுலபமாகிடும். காகிதத்தில் எல்லாத்தையும் சரி பண்ணி எல்லா முக்கிய முடிவுகளையும் முன்னாடியே எடுக்கணும்.அப்படி சரி பண்ணி வைத்திருந்ததால் நல்லபடியா கொண்டுவந்திட்டோம்.”

“எம்.ஜி.ஆர், கமல்னு முயற்சி பண்ணின ‘பொன்னியின் செல்வன்’ உங்களுக்கு எப்படிக் கைகூடி வந்தது?’’

“இப்ப என்ன வசதின்னா, இதை இரண்டு பாகமாகச் செய்யலாம். முன்னாடி ஒரே பாகமாகப் பண்ணியிருப்பாங்க. ஐந்து பாகத்தை மூணு மணி நேரத்திற்குள் சுருக்கறது ரொம்பக் கடினம். அவசரமா கதை சொல்ல வேண்டியிருக்கும். சம்பவங்கள் விட்டுப்போயிரும். இப்ப அப்படியில்லை. அதை ரொம்பவும் நன்றாகச் சொல்ல வாய்ப்பிருக்கு.”

“நடிகர்களை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’

‘‘டைரக்டரின் வேலையே அதுதானே. கல்கி ஒவ்வொரு கேரக்டரையும், தன்மையையும் எழுதிட்டார். யார் சரியாக இருப்பாங்கன்னு பார்க்கணும். சரியாக இருக்கிற ஆளைக் கூப்பிட்டுப் பேசும்போது அவங்களுக்கு நேரம், ஆர்வம் இருக்கணும், அவங்க கால்ஷீட் தரணும். உடம்பு ரெடியாகணும். குதிரை ஓட்டக் கத்துக்கணும். எல்லாம் தேவைப்பட்டது. இதெல்லாம் பொருந்தினால்தான் நடிகர்கள் உள்ளே வர முடியும். உடல் அமைப்பும் பெர்சனாலிட்டியும் ஒண்ணு. அதைத் தாண்டி திறமை வேறொண்ணு. திறமை இருக்கறவங்க பண்ணிடுவாங்க.

சில சமயம் லுக் சரியாக வரவேண்டும். அவங்களைச் சந்தித்து நிறைய பேசி… இந்த விஷயங்களே நாலு மாதத்திற்கு மேலே போச்சு. அப்புறம்தான் முடிவுக்கு வந்தது. எனக்கு வாய்த்த நடிகர்கள் அருமையானவர்கள். யார் யார்னு casting சரியாக முடிவு பண்ணிட்டால் டைரக்டரோட பாதி வேலை சுலபமாகிடும். அப்படி யோசிச்சபோது அமைஞ்ச காம்பினேஷன்தான் இது. ஒவ்வொருத்தரும் இப்ப எப்படி இருக்காங்களோ, அதைவிட பெரிய உயரங்களுக்குப் போக வேண்டிய தகுதியுடையவர்கள்.”

“உங்களுக்கு மரபின் வழியில் காப்பியங்கள், நாவல்கள்மீது ஏன் இவ்வளவு ஆர்வம்? இத்தனைக்கும் நீங்க ஆங்கிலவழிக் கல்விதான் படிச்சீங்க. அப்படிப் பார்த்தா ‘ரோஜா’கூட சத்தியவான் சாவித்திரி தான்…’’

‘‘நான் தமிழன்தானே! கதை கேட்டு வளர்ந்தவன்தானே! காப்பியங்களில் அவ்வளவு விஷயம் இருக்கு. அதுக்குள்ளே இருக்கிற டிராமா, கேரக்டர்கள் நெளிவுசுளிவை வச்சு நிறைய படம் பண்ணலாம். அதில் இருக்கிற ஒரு விஷயத்தை எடுத்து உலகத்தில் போட்டால், ‘ரோஜா’ மாதிரி ஒண்ணு கிடைக்கும்.

1950களில் கல்கி எழுதியிருக்கார். அதிலிருக்கிற எல்லா விஷயமும் இன்னும் சரியாக இருக்கு. அதிகாரத்திற்கு நடக்கிற சண்டை, அதில் இருக்கிற சூழ்ச்சி, சிற்றரசர்கள் சேர்வது, தியாகம், காழ்ப்பு இப்படி எதை எடுத்தும் இப்ப ஒட்டிப் பார்க்க முடியும். அரசியல் அப்படியே இருக்கு. அதனால் பழசைப் பண்ற மாதிரி தோணவே இல்லை. நாம் வாழ்கிற காலத்தின் கதையாகவே எனக்குத் தெரியுது. அதனால்தான் இதற்கு கிளாசிக்னு பெயர். அதனாலேயே இன்னும் நிலைச்சு நிற்கிறது.”

“ரஜினி பழுவேட்டரையராக நடிக்க ஆசைப்பட்டிருக்காரே… ஏன் விட்டீங்க?’’

‘‘அவர்பாட்டுக்குச் சொல்லிட்டுப் போயிட்டார். அவருக்கு எவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம். அவர் இந்த கேரக்டருக்கு ஆசைப்படுகிறார் என்று போட்டால் நான்தான் மாட்டிக்குவேன். ஏன்னா கதை மாறிடும். அவர் கேட்டது ஒரு கேரக்டர்‌. அவரோ சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்தைக் கூட்டி வந்து ‘ரோஜா’ எடுக்க முடியுமா? பழுவேட்டையரைத் தனியாகப் பிரிச்சு, அவரை வச்சுமே மட்டும் பண்ணலாம். அவர்கிட்ட அவர் ரசிகர்கள் எதிர்பார்க்கிறதைத் தள்ளி வச்சிட்டு எதுவும் பண்ணமுடியாது.”

“நவீனக் கவிஞர் இளங்கோ கிருஷ்ணனைக் கொண்டு வந்திருக்கீங்க…’’

‘‘ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவர் திறமை வாய்ந்தவர். இந்தப் படத்தோட நல்ல கண்டுபிடிப்பு இளங்கோ. கைவிரல் அளவுக்கு இப்படி நல்ல கவிஞர்கள் இலக்கியத்தில் இருப்பாங்கன்னு தோணுது. எழுத்தாளர்களும் இதுமாதிரி நிறைய வரணும். இலக்கியத்தின் ஆற்றலை சினிமாவில் காட்டணும்.”

“ஜெயமோகன், குமரவேல் திரைக்கதையில் உங்களுக்கு எப்படி உதவியாக இருந்தாங்க?’’

‘‘எனக்கு ஜெயமோகன் ஒரு கையிலும் கல்கி ஒரு கையிலும் இருந்தது பெரிய பலம். எழுதின விதம், வசனம் எல்லாம் பழைய தமிழில் இருக்கணும். நாடகம் மாதிரி தெரியக்கூடாது. அலங்காரத் தமிழும் வேண்டாம். ‘மனோகரா’ மாதிரி போயிட முடியாது. அது அந்தக் காலத்திற்கு அருமையாகப் பொருந்தியது. அது தமிழ் பிரவாகமெடுத்த நேரம். இப்ப அது மாதிரி இருக்கக்கூடாது. ஜெயமோகன் எளிய, புரியக்கூடிய, வடசொல் கலக்காத மொழியில் வசனம் எழுதினார். அது பேச சுலபமாக இருந்தது. குமரவேலுக்கு ஐந்து பாகத்தில் எந்த சந்தேகம் கேட்டாலும் தெரியும். அவர் நாவலில் அத்துப்படியாக இருந்தார். அவர் உதவி முக்கியமானது.”

“ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்னு நல்ல டீம் வேறே…’’

‘‘ரஹ்மான் எல்லோரும் போகிற வழியில் போகாமல், சுலபமான வழியிலும் போகாமல், புதுசாக ஒன்றைத் தேடுவார். ஆரம்பத்தில் அதற்குக் கொஞ்சம் நேரமாகும். அதுக்குள்ளே ஒன்றைக் கண்டுபிடித்து அதில் வளர்வார். அவர் தந்த இசை, குவாலிட்டி இதுவரை பார்த்த சரித்திரப் படங்களிலிருந்து வித்தியாசத்தைக் கொடுத்திருக்கு.

ரவிவர்மன் பிரமாதம். நாங்கள் எவ்வளவு உழைப்பைப் போட்டோமோ அதுக்கு மேலே அவர் போட்டாகணும். எப்பவும் ரெடியா இருப்பார். நிறைய நடிகர்கள். யாரையும் காக்க வைக்க முடியாது. நாங்கள் நிற்கும்போது அவர் ஓடணும். நாங்க ஓடும்போது அவர் பறக்கணும். அழகாகவும் எடுக்கணும். குறைந்த அவகாசத்தில் நிறைவு வேணும். அப்படியே செய்தார் ரவி. அவரால்தான் அது முடியும்.”

“நடிகர் நடிகைகள் காலையில் ஆறு மணிக்கே மேக்கப் போட்டு
நின்ற அதிசயத்தை எல்லோரும் பேசுறாங்க…’’

‘‘எல்லா நடிகர்களும் நல்ல நடிகர்களே. அவங்களுக்கு நல்ல வேஷம் செய்யணும்னு ஆசைதான். அவங்ககிட்ட நாம் ஒரு உறுதி கொடுத்தால், அதைச் செயல்படுத்தினால், சரியான நேரத்திற்கு வந்து நிற்பாங்க. முதல் நாள் நல்லா பயன்படுத்தினால் அடுத்த நாளும் அப்படியே வருவாங்க. நமக்கு டிஸிப்ளின் இருந்திட்டால் அதுவே அவங்களுக்கும் வந்திடும். இது இரண்டு பேருக்கும் நல்லதுன்னு தெரியும். நான் வேணுங்கிறது கிடைக்கும் வரை நல்லா தொந்தரவு பண்ணுவேன். அதைச் தொந்தரவா அவங்க எடுத்துக்கலைங்கிறது அவங்க பெருந்தன்மை.”

“பொன்னியின் செல்வனின் அடுத்த பாகம் எப்போ?’’

‘‘படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மத்தபடி நிறைய வேலைகள் இருக்கு.
9 மாதம் ஆகும். அடுத்த வருஷம் மே, ஜூனில் எதிர்பார்க்கலாம்.”

“37 வருட சினிமா அனுபவம் என்ன சொல்லுது..?’’

‘‘இன்னமும் ஒண்ணுமே கத்துக்கலைன்னு தோணுது. ஒரு படத்தை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு இன்னும் தெரிய மாட்டேங்குது. தெரியாத வரைக்கும் முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கலாம். அதைத்தான் செய்துக்கிட்டே இருக்கேன். உலகத்தை ஆச்சரியமாகப் பார்க்கறேன். ரியாக்ட் பண்றேன். இவ்வளவு நாளாக இங்கே இருந்தாலும் சினிமா கைவந்த கலையாக மாற மாட்டேங்குது. சொல்லப்போனால் இன்னமும் அதான் என்னை சினிமாவிற்குள் உட்கார வைக்குது.”
(நன்றி – விகடன்….)

.
……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to விட மனசில்லை – இன்னுமொரு கலர்ஃபுல் பேட்டி …..!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    நாளை மதியம் எழுதுகிறேன். இப்போ எழுதுவது perception ஆகிவிடும்

  2. புதியவன் சொல்கிறார்:

    இந்த மாதிரி எபிக் நாவலை (சரித்திர நிகழ்ச்சியை)த் தொடுவதற்கே தைரியம் வேண்டும். இது பாஹுபலி போலக் கிடையாது. அந்தப் படத்தில் நினைத்தமாதிரி கதையைத் திருப்பி திரைக்கதை அமைக்கலாம். இங்கு கல்கியின் பொன்னியின் செல்வன் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லியிருந்தாலும், அவரது கற்பனை ரசிக்கத் தகுந்ததாகவும், சரித்திரத்தைவிட்டு ரொம்ப விலகாமலும் இருந்தது.

    படத்தை பிரம்மாண்டமாகச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர். அரண்மனை முதல் எல்லாமே அவ்வளவு அட்டஹாசமாக இருக்கின்றன. பார்ட் 1 ன் பாடல்கள் முழுவதும் கதையை ஒட்டி இருக்கின்றன. பின்னணி இசையும் அருமை. வசனம் எக்ஸெலெண்ட். பாத்திரங்களும் மிக அருமையாகப் பொருந்தியுள்ளன. எதையுமே குறை சொல்லமுடியாது. ஈகோ இல்லாமல் எல்லா நடிகர்களும் நடித்துள்ளதும், காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்ளாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளதும் மிகவும் பாராட்டத்தக்கது. கல்கி எழுதிய எல்லா நிகழ்வுகளையும் கொண்டுவருவதற்கு பத்து பாகம் எடுக்கவேண்டும் அதனால் சில நிகழ்வுகள் (உதாரணம் கந்தமாறன் சகோதரி போர்ஷன், வந்தியத்தேவன் பெரியபழுவேட்டரையர் மாளிகையிலிருந்து தப்பிப்பது…) இல்லை.

    படத்தைப் பார்க்கும் முன்னரே, எதுவரை முதல் பாகம், எது இரண்டாம் பாகம், எதை எதைத் தவிர்த்திருப்பார் என்று நான் நினைத்ததற்கு மாறாக படம் இருந்தது.

    நாம் புத்தகங்களில் வெறும் நிகழ்வாக ஹைலைட்டுகள் மாத்திரம் படித்திருப்போம். அதைவிட்டு, அவை எப்படி நிகழ்ந்திருக்கும் என்று கல்கி எழுதியதைத் திரையில் முடிந்தவரை கொண்டுவந்திருக்கிறார் மணிரத்னம். இது நம் மண்ணில் நிகழ்ந்த நிகழ்வு.

    குறை என்று பார்த்தால், கதை தெரியாதவர்களுக்கு, இடைவேளைக்குப் பின் பல இடங்கள் புரியாது. படத்தின் கடைசி அரை மணி நேரம் நடப்பவைகள் பலருக்குப் புரியாமல் போக வாய்ப்பு உண்டு. ஒரு க்ளைமாக்ஸோடு படம் முடியவில்லை.

    ஆனால் பார்ட் 1, பிரம்மாண்டம், ஏமாற்றமில்லை. இருந்தாலும் இரண்டு பாகத்தையும் பார்த்திருந்தால்தான் முழுப்படம் பார்த்த திருப்தி வரும் என்பதை மறுப்பதற்கில்லை.

    இதை எந்தத் தனிப்பட்ட நடிகரும் எடுத்திருக்கமுடியாது. எந்த bankable starம் கதாநாயகனாக நடித்துப் படத்தை அமைத்திருக்கவும் முடியாது, வெற்றிபெற்றும் இருக்கமுடியாது.

  3. புதியவன் சொல்கிறார்:

    நடிப்பையும் குறைசொல்வதற்கில்லை. விக்ரம், கோபக்கார ஆதித்த கரிகாலனாகப் பொருந்துகிறார். நல்ல நடிப்பு. குரல் மாத்திரம் பல படங்களில் கேட்டிருப்பதால், ரொம்பவே கவரவில்லை. ஆனால் மற்ற எல்லாப் பாத்திரங்களும் மிக அருமையான நடித்திருக்கிறார்கள். யாரையும் குறை சொல்லவே முடியாது.

    அரண்மணை, கோட்டை, கப்பல், போர்கள் என்று மிரட்டியிருக்கிறார்கள்.

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    .
    புதியவன்,

    உங்கள் விமரிசனம் மிகுந்த மன நிறைவை
    தருகிறது. .. இந்தப்படம் கமர்ஷியலாக
    வெற்றிபெற வேண்டியது மிக மிக அவசியம்.

    ஒன்று – படம் வெற்றி பெற்றால் தான்
    தமிழரின் சரித்திரம் உலக அரங்கில்
    பேசப்பட முடியும்….

    இரண்டு – தமிழில் இன்னும் இந்த மாதிரி
    எடுக்க வாய்ப்புள்ள பல கதைகள் வெளிவர
    அது உதவியாக, ஊக்கமாக,
    முன்னுதாரணமாக இருக்கும்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    .

    • புதியவன் சொல்கிறார்:

      ஐஸ்வர்யா ராய்லாம் போட்டு… என்று நான் நினைத்தேன். எப்படி அந்தப் பாத்திரத்துக்குப் பொருந்துகிறார் என்று பார்த்து அசந்துவிட்டேன். குந்தவை (80 சதத்துக்கு மேல் திருப்திதான்), பார்த்திபன், சரத்குமார்…. கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஜெயராம், முதலமைச்சராக நடிப்பவர் என்று பாத்திரத்துக்கு அப்படி பொருந்திப் போகிறார்கள். என் பெண் (அவள் இன்னும் படம் பார்க்கவில்லை. அதனால் நான் படத்தைப்பற்றி எதையும் சொல்லவில்லை) வானதியாக நடிப்பவள் ஃபேமஸ் ஆர்டிஸ்ட் என்றாள். ஓரிரு காட்சிகள்தாம் அவருக்கு. ஓரிரு இடத்தில்தான் வசனம். ஆனால் கல்கி எழுதிய வானதியின் குணத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். ஜெயமோகன் ரொம்ப நல்லா வசனம் எழுதியிருக்கார். (இதெல்லாம் கூட்டு முயற்சி). வதந்திச் செய்திப் பகிர்வுகள் சொன்னதுபோல நான் மத ரீதியான எந்தக் குறையையும் காணவில்லை. இதற்கெல்லாம் பாராட்டுகள் மணிரத்னத்துக்குத்தான் போகவேண்டும்.

      கதையை எங்குமே நான் கோடிட்டுக் காட்டவில்லை. கொஞ்சம் நாளாகட்டும், பார்ட் 1ல் எந்தக் க்ளைமாக்ஸோடு நிறுத்தியிருக்கலாம் என்று எழுதுகிறேன்.

      படத்தை விடுங்கள். அரசுக் கட்டில் என்பது முள் கிரீடம் என்பதை நாம் புரிந்துகொள்ளும்படி கதையோட்டம் இருக்கிறது. ஆக்ரா அக்பர் கோட்டையில், ஒரு நூறு சதுர அடி இடத்தில் இருந்துதான், பரந்துபட்ட இந்தியாவின் பெரும்பகுதியை அக்பர் வழி வந்த அரசர்கள் ஆண்டனர் எனும்போது பெரும் ஆச்சர்யம் தோன்றியது. வரலாற்றில், சோழன் ஆதித்த கரிகாலன், வீரபாண்டியனிடம் மாத்திரம் அத்துமீறி தன் வெறியைக் காண்பித்திராவிட்டால், ஒரு வேளை சோழ மாளிகைகள் போன்றவை இன்னும் நாம் காணக் கிடைத்திருக்கும். பெரியகோவிலையும், தாராசுரத்தையும், கங்கைகொண்ட சோழபுரத்தையும் கட்டத்தெரிந்த சோழ சிற்பிகள், சோழ அரண்மனையை பிரம்மாண்டமாகக் கட்டியிருக்கமாட்டார்களா என்ன?

  5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    .

  6. புதியவன் சொல்கிறார்:

    I am disappointed to see negative feedback விமர்சனம் of this movie. One person says, இரண்டு நாட்களாக புத்தகத்தைப் படித்துவிட்டு வந்தேன். படம் பார்த்தால் சம்பந்தமே இல்லை. தஞ்சைப் பகுதியைக் காட்டவில்லை. நல்லாவே இல்லை என்று பேசுகிறான். இப்படிப்பட்ட ஆட்களுக்கும் வரலாறு குறித்த தெளிவிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம். சிலர் சொல்கிறார்கள், பிரம்மாண்டமாக இருக்கிறது. திருப்தி இல்லை என்று. பாஹுபலியில் 2வதில் தமன்னாவைக் காட்டாததும், முதல் பாகத்தில் அனுஷ்காவைக் காட்டிய விதமும் எனக்குப் பிடிக்கவில்லை. அது கற்பனைக் கதை. ஆனால் பொன்னியின் செல்வன் நிஜம்.

    வரலாற்று நாவலை ஒவ்வொருவர் படிக்கும்போதும் அது நம் இமேஜினேஷனுக்கு வழிவகுக்கிறது. ஆழ்வார்க்கடியானை உருவகமாக வைத்துள்ள நமக்கு 4 அடியில், குண்டாக நெற்றியிலும் உடம்பு முழுவதும் நாமத்துடன் இருக்கும் உருவம்தான் மனதில் வரும். ஒவ்வொரு நிகழ்வைப்பற்றியும் நம் எண்ணவோட்டம் வேறு. ஏன்… கல்கியில் 3 தடவை இந்தத் தொடர் வந்தபோதும், மணியம் ஓவியம் நமக்கு ஒரு பிம்பம் தந்தது. வினுவின் ஓவியம் ஒரு பிம்பம் தந்தது. என்னால் கீர்த்தி வாசன் ஓவியங்களை ஏற்கவே முடியவில்லை, நன்றாக்வே இல்லை.

    ஒரு படத்தை நாம் எப்படிப் பார்க்கவேண்டும் என்றால்… எப்படி அது கதையின் எசென்ஸைத் தருகிறது, முக்கியமான நிகழ்வு விட்டுப்போய்விட்டதா? Sequence சரியாக இருக்கிறதா? லாஜிக் மீறல்களாக இருக்கிறதா, பாத்திரத்திற்கான நடிகர்கள், அவர்களின் உருவம் முழுமையாகப் பொருந்துகிறதா என்றுதான். பொக்கிஷ அறையிலிருந்து எப்படி வந்தியத்தேவன் தப்பித்தான் என்றெல்லாம் படம் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாவல் பல வருடங்களுக்கானது. இந்த நாவலையே 60 வருடங்கள் எழுதவேண்டும் என்று சொன்னால், கல்கி வந்தியத்தேவன் பல் துலக்கச் சென்றது முதல் எழுதவேண்டியிருக்கும்.

    படத்தின் (நாவலின்) கிளைமாக்ஸ்… அருள்மொழி, தனக்கான அரசபதவியை விட்டுவிட்டு, சித்தப்பாவுக்குக் கொடுப்பது. அது ஒரு அரசியல் தந்திரம் மாத்திரமல்ல, நல்ல லாஜிகல் நிகழ்வு. அதற்கு முன்னால் ஆதித்தனின் கொலை நிகழவேண்டும் (அதை நிச்சயமாக உடல் மாத்திரமதான் பார்க்கும்படி காட்டமுடியும். யார் கொன்றார்கள் என்று காட்டுவது கடினம், ஆனால் அதை நிகழ்த்தியது வீரபாண்டியனின் ஆபத்துதவிகள்தாம்).

    என்னைக் கேட்டால், ராஜேந்திரசோழனின் வெற்றிக்கதை, நரசிம்ம பல்லவனின் சாளுக்கிய வெற்றி, பெரியகோவிலைக் கட்டிய நிகழ்வுடன் ராஜராஜன் ஓய்வு பெறுவது என்று ஒவ்வொரு வரலாறுமே திரைப்படமாக மிளிரலாம்.

    ராஜராஜ சோழன் திரைப்படம் சிவாஜி நடித்தும், தோல்வியுற்றது என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். மணிரத்னம் சாத்தியப் படாத ஒன்றை சாத்தியமாக்கியிருக்கிறார், முதல் பகுதியில்… என்பதே அவரைப் பாராட்டி திரைப்படத்தைக் கொண்டாடப் போதுமானது.

  7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    “I am disappointed to see negative
    feedback விமர்சனம் of this movie. ”

    -இந்த மாதிரியும் சிலர் இருக்கத்தான்
    செய்வார்கள்.

    பொதுவாக நல்ல ரிப்போர்ட்
    வருவதால், இதையெல்லாம் நாம்
    கண்டுகொள்ள வேண்டியதில்லை.

    கமர்ஷியலாக எப்படி ஓடுகிறது…
    ரிபீட் ஆடியன்ஸ் வருவார்களா என்று தான்
    பார்க்க வேண்டும்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.