1000 ஆண்டுகளுக்கு முந்தைய ….( பகுதி -2 )

………………..

வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கான ஒரு இடுகை –

ஆர்வம் உடைய நண்பர்களுக்கு ——- இந்த இடுகை தவற விடக்கூடாத ஒரு அரிய பொக்கிஷம்…. நிதானமாகப் படியுங்கள்…. புகைப்படங்களை பாருங்கள்… கல்வெட்டுகளை படிக்க முடிகிறதா….? முயன்று பாருங்களேன்… !!!

” 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றாக இன்றும் நிற்கும் பழுவூர் கோயில்கள் …” – என்கிற தலைப்பில் செப்டம்பர் 25-ந்தேதியன்று
ஒரு இடுகை பதிவிட்டிருந்தேன்…

அதன் தொடர்ச்சியாக நண்பர் புதியவன் அவர்கள் அனுப்பியிருக்கும்
சில புகைப்படங்களையும், கட்டுரையையும் கீழே பதிப்பிக்கிறேன்.

மிகுந்த ஆர்வத்தோடு, நிறைய புகைப்படங்களுடனும்,
வரலாற்று உண்மைகளுடனும், எழுதப்பட்டிருக்கும் இந்த
கட்டுரைக்காக –

நண்பர் புதியவன் அவர்களுக்கு – மிகுந்த நன்றியும்,
பாராட்டுகளும்.

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
……………………………………..

  1. ஆலந்துறை புள்ளமங்கை கோவில்

தஞ்சாவூர் மாவட்த்தில், பாபநாசம் அருகே பசுபதிகோவில் என்ற ஊரில் இருக்கும் அல்லியங்கோதை உடனுறை அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் (ஆலந்துறையார்) என்ற திருத்தலம், சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். புள்ளமங்கை என்ற பெயருக்கேற்ப, இப்போதும் கோபுரத்தில் கழுகுகள் வசிக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆலமரம் தலவிருட்சம் என்பதாலும் நீர்த்துறையின் அருகில் உள்ள கோவில் என்பதாலும் ஆலந்துறை என்ற பெயர் பெற்றது பதிவு பெரிதாகிவிடக்கூடாது என்பதற்காக கோவில் முகப்பு என்றெல்லாம் படங்களைப் பகிராமல், அங்கிருக்கும் சில சிற்பங்களை மாத்திரம் பகிர்கிறேன்.

கோவில் உட்புறத் தோற்றம். சாதாரணமாகத்தான் இருக்கிறது. ஆனால் வெளிச்சுற்றில் (கோபுரம் உட்பட) சிற்பங்கள் மிக மிக அழகாக இருக்கிறது. ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கோவில் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

கோவில் வெளிப்புறச்சுற்று.

மிகப் புகழ்பெற்ற சிற்பம் இது.

கோவிலில் நிறைய கல்வெட்டுகள் இருக்கின்றன. கோவில், தரையிலிருந்து சுமார் 2 அடிக்கும் கீழே ஆரம்பிக்கிறது (சிற்பங்கள் முதல்கொண்டு)

மேலே உள்ள ஆறு சிற்பங்களும் உதாரணத்துக்குப் பகிர்ந்துள்ளேன். இவை அனைத்தும் 3/4 அடி, 1/2 அடி உயரத்திற்கும் சற்றே அதிகம். அதற்குள் செதுக்கியிருக்கின்றார்கள். ஏராளமான இராமாயணக் கதைகள் (இராமரா, இராமாயணமா? தமிழர்நாட்டில் அதற்கான கோவிலோ வேறு எதுவுமோ தமிழர் வாழ்வில் கிடையாது என்று உளறிய, முன்னால் வடமாநில அரசியல்வாதியின் உதவியாளர் ஜோதிமணியின் பார்வைக்கு) சிற்பங்களாக உள்ளன. இவ்வளவு சிறிய இடத்தில் இவ்வளவு அழகாகச் செதுக்கமுடியுமா?

சிற்பம் சுமார் 4 அடி உயரமுடையது. வலதுபக்கம் கீழே சிறிய சதுரத்தில் சிற்பம் இருக்கிறதா? அதுபோன்ற சிறிய இடத்தில் செதுக்கப்பட்டதுதான் மேலே பகிர்ந்துகொண்ட சிற்பங்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு. தமிழக சரித்திரம் தெரியாமல் இப்போதுள்ள புல்லுருவிகள், ஆரியர் திராவிடர், ஆரியர் பெர்ஷியாவிலிருந்து வந்தவர்கள் என்று உளருகின்ற கூக்குரல்களுக்கு மத்தியில், தமிழகம், அதன் அரசு எப்படி evolve ஆனது என்று புரிந்துகொள்ளுவதற்காக எழுதுகிறேன். தமிழகத்தில் காஞ்சி, திருவரங்கம், மதுரை போன்ற இடங்களே மொழி/ஞானத்தில் புகழுடன் இருந்தன. (மற்ற இடங்களைக் குறைவாகச் சொல்லவில்லை. நம் புரிதலுக்காகச் சொல்லுகிறேன்). மதுரை மற்றும் தெற்குப்பகுதி சிதைவுறாத தமிழ். சென்னை மீன்பிடி கிராமம். வடபெண்ணையாற்றின் வடக்குப் பகுதியிலிருந்து சோணையாறு (இதனை மேற்குவங்கம் அதற்குக் கீழான இந்தியா என்று சொல்கிறார்கள்) தெற்குப்பகுதி வரை ஆண்டவர்கள் சாதவாஹனர்கள் (பொது ஆண்டு முதல் நூற்றாண்டு). அவர்கள் ஆரியர்கள் எனப்பட்டனர். காஷ்மீர் பகுதி சைவ சமயத்தின் தோற்றுவாய். (அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்). வடமொழி பொது ஆண்டு துவக்கத்திற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த, இலக்கியம் இருந்த மொழி. (ஐஸ்வர்யா ராய் அழகு என்றால், பானுமதி குரூபி என்று அர்த்தம் கொள்ளாதீர்கள்). அதற்கு இணையாக தென் தமிழகத்தில் தமிழ் மொழி இலக்கண இலக்கியங்களோடு இருந்தது. சாதவாஹனர்களின் கீழ், பல தலைவர்கள் அந்த அந்தப் பகுதிகளைச் சிற்றரசர்களாக ஆண்டனர். அதன்படி, வடபெண்ணை ஆற்றுக்கு வடக்கே உள்ள பகுதியை பல்லவர்களின் முன்னோர்கள் ஆண்டனர். அவர்களுக்கும் வடபெண்ணையின் தெற்குப் பகுதியில் இருந்தவர்களுக்கும் எல்லைப்போர்கள் நிறைய நடந்தன. இந்த மாதிரி ஒரு சண்டையில் பாண்டிய நெடுஞ்செழியன் வென்று, ஆரியப்படை கொண்ட பாண்டிய நெடுஞ்செழியன் என்று புகழ்பெற்றான். திருக்கோவலூர் மலயமானுக்கும் ஆரியப் படை வென்றவன் என்ற பெயர் உண்டு. சாதவாஹனர்கள் வலிமை குன்றியதும், பல்லவர்கள் தாங்கள் ஆண்ட பகுதிக்கு தாங்களே அரசர்கள் ஆயினர். அது தவிர, அவர்கள் தெற்கு நோக்கிப் படையெடுத்து வென்று, காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவராஜ்ஜியம் அமைத்தனர் (2ம் நூற்றாண்டு). அதிலிருந்து 8ம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் வலிமையுடன் திகழ்ந்தனர். பல்லவர்களில் 2வது(?) அரசனான மகேந்திர பல்லவன் சமண சமயத்தைச் சார்ந்தவன். அப்பர் இவன் காலத்தவர். பிறகு சைவ சமயத்தைச் சார்ந்து பல கோவில்களைக் கட்டினான். தன் சமண சமயத்தின் தாக்கத்தால் தமிழகத்தில் குடவரைக்கோவில்களைக் கட்டியவனும், கற்றளியாக கோவில் கட்டியவனும் இவனே. சாதவாஹனர்கள் மொழி ப்ராக்ருதம் (வடமொழியின் சிதைவு என்று நினைக்கிறேன். இதனை அரசர்கள்/ஆட்சி மொழி என்று சொல்கின்றனர். அதாவது வடமொழி இலக்கிய மொழியாக இருந்தாலும் க்ஷத்திரியர்கள் மொழி, அரசாங்க அலுவல் மற்றும் ஆவணங்களின் மொழி ப்ராக்ருதம்). பல்லவர்களோடு இந்த மொழியும் தமிழகம் வந்தது. ஆனால் கோவில்களில் ஆகமங்கள் வடமொழி வேதம் போன்றவை. தமிழகத்தில் இதற்கு இணையாக தமிழில் தேவாரம், நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் என்று சைவ வைணவ பக்தி இலக்கியங்கள் உண்டாகி, கோவில்களில் அவைகளும் சேர்ந்தன. (எதையுமே அரசியல், ஜாதி மதக் கண்ணோட்டத்தில் அணுகினால், அங்கு விவாதங்கள் மாத்திரம் நடக்கும். எந்தக் காலத்திலும் யாரும் இன்னொருவர் சொல்வதை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அதற்கேற்றபடி திரிபு நூல்கள் பல, ஒவ்வொருவராலும் செய்யப்பட்டன). வடமொழி/ப்ராக்ருதத்தில், உச்சரிப்பு வித்தியாசம் ஒவ்வொரு வல்லின மெய்யெழுத்துக்கும் உண்டு. ஆனால் தமிழில் 5 வல்லின எழுத்துகள், வடமொழி/ப்ராக்ருதத்தில் 20 வல்லின எழுத்துகளாக இருக்கும். ka, kha, ga, gha என்பது போன்று. இதனை ஈடுகட்டி கல்வெட்டுக்களில் ‘நாம்’ எழுதுவதற்காக க்ரந்தம் தோன்றிற்று. இதனை தமிழர்களிடத்தில், வட/ப்ராக்ருத மொழி சப்தத்திற்காக உண்டாக்கப்பட்டது என்று கொள்ளவேண்டும். கல்வெட்டில் எழுதுவது என்பது, பல்வேறு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று எழுதக்கூடிய பணி. அதனால் எழுத்துத் தவறுகள் கல்வெட்டில் உண்டு. அதனால்தான், 800 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டிலும் நாம் மொழிக்கலப்பைப் பார்க்கிறோம் (தமிழ், ப்ராக்ருதம், க்ரந்தம், வடமொழி). எனக்குத் தெரிந்து அழகிய கல்வெட்டு (அதிலும் கலப்பு உண்டு. உடனே இதில் அரசியல் பார்வையை நாம் வைக்கக்கூடாது. என் அப்பா காலம் வரை, அவர்கள் பேச்சு மொழி, இந்த வைகாசில, சுபக்ருது ஆண்டுல, அந்தத் திதில என்றுதான் பேசுவார்கள். ஆங்கில வருடங்கள் மாதங்கள் நம் வெகுஜனப் பழக்கத்துக்கு வந்து 50-60 ஆண்டுகள்தான் ஆகும். இப்போதுகூட பெரியவர்கள், ஆவணி வந்தால் இவனுக்கு இவ்வளவு வயசு என்றுதான் பேசுவதைக் கேட்கலாம்) ராஜராஜ சோழன் காலத்தது. அதனையும் இங்கே நான் படமாகப் போட ஆசைப்பட்டுப் போடுகிறேன் (இடுகைக்குச் சம்பந்தமில்லாத போதும்)

இதைப்பற்றி நிறைய எழுதினால் பதிவு நீண்டுகொண்டே போகும். பல்லவர் வலிமை குன்றி சோழர்கள் தஞ்சைப் பகுதியில் தலையெடுத்தார்கள். எப்போதும்போல அவர்களுக்கும் பாண்டிய மன்னர்களுக்கும் எல்லைப் போர்கள், சோழ வெற்றி, அவர்கள் கிட்டத்தட்ட 400-500 ஆண்டுகள் கோலோச்சினர். இமயமலை, தென்கிழக்குப்பகுதிகள், இலங்கை என்று அவர்கள் வெற்றி பெற்றனர் (பல்லவ மன்னனும் இலங்கையை வெற்றிகொண்டிருக்கிறான்). வெற்றியில் செய்த வெறிச்செயல், அதனால் ரோஷத்தை மனதில் இருத்திய பாண்டிய வம்சம், சோழர் வலிமை குன்றியபோது பாண்டிய மன்னர்களின் வெற்றி, சோழர்கள் செய்த கொடுஞ்செயலை மனதில் வைத்து, சோழர்களின் மாளிகைகள் தொடர்புடைய இடங்களை முற்றிலுமாக அழித்தது (அப்போதும் அவர்கள் கோவில்களில் கைவைக்கவில்லை), பிறகு பாண்டிய வம்சம் கடைசி காலத்தில் சகோதரச் சண்டை வந்தபோது, இஸ்லாமியனைக் கொண்டுவந்து சகோதரனுடன் படையெடுத்து, கடைசியில் இஸ்லாமியர்கள் ஆட்சியைப் பிடிக்கும் நிலைவந்தது. இது 13ம் நூற்றாண்டு மற்றும் அதன் பிறகான கதை. அப்போதுதான் கோவில்கள் அழிக்கப்பட்டன. சரி… நம் கதைக்கு வருவோம்.

அரசனைப் பாதுகாக்க வேளக்காரப் படை ஒன்று உண்டு. அரசன் எங்கு சென்றாலும் அவனைச் சூழ்ந்து செல்லக்கூடியவர்கள் இவர்கள். (Blackcats மாதிரி). இளவரசனுக்கும் வேளக்காரப் படை உண்டு. இவர்கள் துர்கையிடம் சபதம் செய்தவர்கள். அரசனுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் தங்கள் தலையைத் தாங்களே அறுத்துப் பலிகொடுப்பதாக. இந்தச் சிற்பமும் ஆலந்துறைநாதர்/புள்ளமங்கை கோவிலில் உண்டு. நம் பாரம்பர்யத்தை யோசித்துப் பாருங்கள்.

  1. பஞ்சவன் மாதேச்வரம்

பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையைப் பற்றிப் பார்ப்போம். பஞ்சவன் மாதேவி, ராஜராஜ சோழனின் மனைவியரில் ஒருவள். அரசனின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தார். பழுவேட்டரையர் குலத்தைச் சேர்ந்தவள். பட்டத்து இளவரசனான ராஜேந்திர சோழனின் மீது அதீத அன்புசெலுத்தியவள், அவனுக்காகவே குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். எப்படி இருந்தாலும், தன்னைப் பெறாத சிற்றன்னையின் மறைவுக்குப் பிறகு, அவளுக்காக ராஜேந்திர சோழன் எடுத்த பள்ளிப்படை இது, என்பதே தன் சிற்றன்னைக்கு எப்படிப்பட்ட முக்கியத்துவம் ராஜேந்திர சோழன் கொடுத்திருந்தான் என நம்மை எண்ணவைக்கும்.

பழையாறை வடதளி. இது நாதன் கோவில் (கும்பகோணம் அருகில்) அருகில் இருக்கிறது. இது அப்பரால் பாடல் பெற்ற தலம். அப்பர் உண்ணாவிரதமிருந்த தலம் என்று சொல்கிறார்கள். இது கீழப்பழையாறை பகுதி. இதன் அருகில் உள்ள பகுதியெல்லாம் சோழ குடும்ப அரசர்கள், மனைவிகள், குழந்தைகள் வாழ்ந்த இடம். இந்தக் கோவிலில் வழிபாடு இருந்தாலும் பக்தர்கள் வருகை வெகு சொற்பம். ஒரு தடவை அந்த மண்ணை மிதித்துவிட்டு வாருங்கள். நாம் தமிழர், நம் மொழி தமிழ் என்ற பெருமிதம் தானாகவே நம் மனதில் குடிகொள்ளும்.

இங்கிருந்து ஓரிரு கிலோமீட்டர்கள் சென்றால், ராஜராஜசோழன் மறைந்த இடம் வரும். அதுவே ராஜராஜசோழன் பள்ளிப்படை என்று சொல்கிறார்கள். அதற்கான தொல்லியல்துறை தேடல் முயற்சிகள் குறைவு.

சாய்ந்து கேட்பாரற்றுக்கிடந்த இடத்தில் ஒரு ஷெட் போட்டு, சிவலிங்கத்தை நிமிர்த்தி, சிறிய கோவில் மாதிரி செய்துள்ளனர். சிவலிங்கம் எட்டு அடிக்கும் மேல் பூமிக்குள் இருக்கிறது என்றார் அங்கிருந்தவர்.

பல்லவர்களின் கலைப்படைப்புகளை மஹாபலிபுரம், காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவில், வைகுண்டப்பெருமாள் கோவில், திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்களில் காணலாம். சோழர்களின் கலைப்படைப்பை தஞ்சை, கும்பகோணம் சுற்றியுள்ள பகுதிகளில் காணலாம் (ராஜராஜேச்வரம், தாராசுரம், ராஜேந்திரசோழன் கட்டிய கங்கைகொண்டான் கோவில் என்று பலப் பல). இதுவும் தவிர, அந்தப் பகுதியிலுள்ள கோவில்களெல்லாம் நம் அரசர்கள் கட்டியது. அதன் கலைப்படைப்புகள், சிற்பங்கள், நம் தமிழரின் வரலாறு திறமை என்று பண்டை வரலாற்றைப் பரக்கச் சொல்லும். இவற்றையெல்லாம் நாம் பெருமிதத்துடன் அணுகவேண்டும்.

தஞ்சைப் பெரியகோவிலில் நுழைந்து ஒவ்வொரு இடமாகப் பார்த்துக்கொண்டு வந்தபோது நான் அடைந்த பரவசத்தை விவரிக்க முடியாது. நம் முன்னோர்கள், அரசர்க்கு அரசர்கள் நடந்துசென்ற இடம்.

எழுத எழுத பதிவு நீண்டுகொண்டே செல்லும் அபாயம் இருப்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

அன்புடன்

புதியவன்

…………………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.