
……………………
வரலாற்றில் ஆர்வம் உடையவர்களுக்கானது இந்த இடுகை.
அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்’ காவியத்தின்
மூலம் அதிகம் பேர் பழுவேட்டரையர்களை அறிவோம். சோழ
மன்னர்களுக்கும் பழுவேட்டரைய அரசர்களுக்கும் நெருங்கிய
தொடர்பு இருந்தது.
முதலாம் ஆதித்த சோழன் காலம் முதல் முதலாம் இராஜேந்திர
சோழன் காலம் வரை சோழ மன்னர்களுடன் பழுவேட்டரையர்கள் தொடர்பு கொண்டு விளங்கியதை வரலாற்றுச் சான்றுகளுடன்
அறிய முடிகிறது.
பழுவேட்டரைய அரசர்கள் ஆட்சி செய்த “பழுவூர்’
திருச்சியிலிருந்து அரியலூர் வழியாக கங்கைகொண்டசோழபுரம் செல்லும் சாலையில் சுமார் 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வூர் இன்று கீழப்பழுவூர், கீழையூர், மேலப்பழுவூர் என்று பல பகுதிகளாக அழைக்கப்படுகிறது.
இந்தப் பகுதியில் உள்ள கோயில்கள் பழுவேட்டரைய மரபினரால் கட்டப்பட்டவை. இங்குள்ள கோயில்களில் கீழையூரில் உள்ள
இரட்டைக் கோயில் எனப்படும் “அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம்’
ஒரு கலைக் காவியமாகத் திகழ்கிறது.
பழுவூரைத் தலைநகரமாகக் கொண்டு சேரர் வழிவந்த
பழுவேட்டரையர் என்னும் வேளீர் ஆட்சி செய்தனர். பழுவூருக்கும்
சேர நாட்டுக்கும் தொடர்பு இருந்தது என்பதை
திருஞானசம்பந்தரின் பாடல்களில் அறிய முடிகிறது.
இந்நகரை தலைநகராகக் கொண்டு ஆண்ட பழுவேட்டரையர்
வரலாறு கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரையில் தெளிவாகத் தெரியவில்லை. தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட
சோழப் பேரரசர்களுக்கு இவர்கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் குலப் பெண்கள் சோழப் பேரரசிகளாகவும் விளங்கும் பேறு பெற்று விளங்கினர்.
கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சோழ பேரரசன் பராந்தக
சோழனுக்கும், பாண்டிய மன்னன் இராஜநரசிம்மனுக்கும்
நடைபெற்ற வெள்ளூர் போரில் பழுவேட்டரையன் கண்டன்
அமுதன் என்பவன் சோழனுக்கு படைத்தலைவனாக நின்று பாண்டியனைத் தோல்வியுறச் செய்தான்.
பராந்தக சோழனின் தேவியரில் “அருள்மொழி வேங்கை’ பழுவேட்டரைய குலப் பெண் ஆவாள். அவளுக்குப் பிறந்தவரே
சோழ மன்னர்களில் ஒருவரான அரிஞ்சய சோழர்.
இராஜராஜ சோழனின் தேவியர்களின் ஒருத்தியான நக்கன்
பஞ்சவன் மாதேவி என்பவர் பழுவேட்டரையர் மரபை சேர்ந்தவள்.
குமரன் கண்டன், குமரன் மறவன், கண்டன் அமுதன், குமரன் மதுராந்தகன், கண்டன் மறவன், பஞ்சவன் மாதேவி,
அக்கார நங்கை, செம்பியன் மாதேவடிகள் (முன்னை
வல்லவரையர் மனைவி) போன்றவர்கள் பழுவேட்டரையர்
மரபிலேயே வந்தவர்கள் ஆவர்.
பழுவூர் கோயில்கள்:
பழுவூரில் – பல புராதன கோயில்கள் கோயில்கள் வழிபாட்டில்
இருந்து மறைந்து போய்விட்டன.
ஆனால் தற்பொழுது பகைவிடை ஈசுவரம், அவனி கந்தர்ப்ப ஈசுவரகிருகம், ஆலந்துரையார் கோயில், மறவன்சுவரம்,
பெருமாள் கோயில் ஆகியவை மட்டும் இன்றும்
பழுவேட்டரையர்களின் வரலாற்றுப் பெருமையை எடுத்துக் கூறும்
வகையில் நிலைத்து நிற்கின்றன.
கீழப்பழுவூரில் உள்ள ஆளந்துறையார் கோயில்
ஆலமரத்தை தலமரமாகக் கொண்டு விளங்குவதால்
ஆலந்துறை என அழைக்கப்படுகிறது. இறைவன் வடமூலநாதர்
எனவும், இறைவி அருந்தவ நாயகி எனவும் அழைக்கப்
படுகின்றனர்.
இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை
திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகங்களில் போற்றி
பாடியிருக்கின்றார். அவருடைய காலத்தில் இந்தக் கோயில்
செங்கல் திருப்பணியாக இருந்திருக்க வேண்டும். பின்னர், பழுவேட்டரைய அரசன் மறவன் கண்டனால் கற்றளியாகத்
திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கோயில் இருக்கும் பகுதி
“சிறுபழூவூர்’ என்று குறிக்கப்படுகிறது.
அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம்: மேலப் பழூவூரை அடுத்துள்ள கீழையூரில் உள்ள “அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம்’
எனப்படும் கோயில் பழுவேட்டரையர்களின் கலைச்சிறப்புக்கு
சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இக்கோயில் அமைந்திருக்கும் இடம் அவனி கந்தர்வபுரம் என்றும்
அவனி கந்தர்ப்பபுரம் என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்
படுகின்றன.
கோயில் வளாகத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன.
இக்கோயில் முழுமையும் அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம் என அழைக்கப்படுகிறது.
மேற்கு பார்த்த திருக்கோயில் வாயிலில் மூன்று நிலை கோபுரம். கோபுரத்தின் அடித்தளப்பகுதியில் நுழைவு வாயிலின் இருபுறமும் அழகிய துவார பாலகர்கள் காட்சி அளிக்கின்றனர்.
கோயில் திருச்சுற்றில் இரு கோயில்கள் உள்ளன. வடபுறம்
இருக்கும் கோயில் “வட வாயில் ஸ்ரீகோயில்’ எனவும்,
தென் பகுதியில் அமைந்துள்ள கோயில் “தென்வாயில் ஸ்ரீகோயில்’ எனவும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக, கோயில்களை “சோழிச்சுரம்’ எனவும் “அகத்தீசுவரம்’ எனவும் அழைக்கின்றனர்.
திருச்சுற்றில் ஆறு பரிகார ஆலயங்கள் உள்ளன.
கணபதி, முருகன், சண்டிகேசுவரர், ஜேஷ்டை, சூரியன்,
சப்த மாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள்
உள்ளன.
கிழக்கு தேவகோட்டத்தில் முருகனின் அமர்ந்த கோலத்தைக் காண்கிறோம். மேலிரு கரங்களில் வஜ்ரம்- சக்தி ஆயுதங்களை தாங்கியிருக்க, முன் வலக்கை அபய முத்திரை தாங்கியுள்ளது. திருமேனியின் பின்னால் தீச்சுடர்கள் ஒளிவீசுவது போல காட்டப்பட்டுள்ளது. விமானம் முழுமையும் கல்லால் ஆனது.
வட்ட வடிவமான சிகரத்தை உடையதாக விளங்கும் கோயில்
கலைப் படைப்பாக விளங்குகிறது.
கோபுர வாயிலுக்கு எதிரில் அமைந்துள்ளது தென்வாயில்
ஸ்ரீகோயில். கொடிமர பீடம், நந்தி, மகாமண்டபம், இடைநாழிகை, முன்மண்டபம், கருவறை என அமைந்துள்ளது. மகா மண்டபம், கலையழகு மிக்க சிம்மம்- யாளி தூண்களுடன் காட்சி
அளிக்கிறது. இத்தூண்களில் கலியுக நிம்மலன்,
கங்க மார்த்தாண்டன், மறவன் மானதனன், அரையுகன் அரையுளி,
ராஜ ராஜ வஞ்சி இளங்கோ என்ற பெயர்கள் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோயில் வளாகத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட
கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. உத்தம சோழனது
கல்வெட்டில் “மன்னுபெரும் பழூவூர்’ என்று சிறப்பித்துக்
கூறப்படுகிறது.
முதலாம் ராஜராஜ சோழனது காலத்தில் அவருடைய தேவியும், பழுவேட்டரையர் மகளுமான நக்கன் பஞ்சவன் மாதேவி வேண்டுகோளுக்கிணங்கி, நெல் தானமாக அளித்த செய்தி கூறப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் பழமையானது
ஆதித்த சோழனது கல்வெட்டுகள். இதில் இடம்பெற்றுள்ள
பழுவூர் மரபின் முதல் இரு மன்னர்களான குமரன் கண்டனும்,
குமரன் மறவனும் இக்கோயில் எடுப்பிக்க காரணமாக
இருந்தவர்கள்.
சோழர் கால கலைச்சிறப்புடன் கோயில் பரிவார ஆலயங்களுடன் எவ்வாறு விளங்க வேண்டும் என்பதற்கு சான்றாக, பழுவூர் அவனி கந்தர்ப்ப ஈசுவர கிருகம் கோயில் உள்ளது.
கலைக்காவியமாக விளங்கும் இக்கோயிலை தமிழக அரசின் தொல்லியல் துறை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து, போற்றி வருகிறது.
( நன்றி – கி.ஸ்ரீதரன், தொல்லியல் துறை – ஓய்வு )
.
………………………………………………
//இராஜராஜ சோழனின் தேவியர்களின் ஒருத்தியான நக்கன்
பஞ்சவன் மாதேவி என்பவர்// – Interestingly இவர், ராஜேந்திர சோழனின் சிற்றன்னை. இவர் இறந்த பிறகு, இவருக்கு ஒரு பள்ளிப்படையை ராஜேந்திர சோழன் எழுப்பியிருக்கிறார். (அதற்குக் காரணம், அவர் ராஜேந்திரசோழன் மீது செலுத்திய அன்பு, அவன் பட்டத்து இளவரசனா இருக்கணும் என்பதற்காகத் தான் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று காரணம் சொல்கிறார்கள்). அந்தப் பள்ளிப்படை, பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை (பட்டீஸ்வரம் பக்கத்துல 1/2 கிமீ தூரத்துல இருக்கு, ராமநாதன் கோவில்னு சொன்னாத்தான் தெரியும்) இந்த இடத்திற்கும் நான் சென்று புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன்.
//கீழப்பழுவூரில் உள்ள ஆளந்துறையார் கோயில்// – ஆலந்துறையார் அல்லது ஆலந்துறை நாதர் கோவில். இது பசுபதி கோயில் என்னும் பகுதியிலுள்ள புள்ளமங்கை கோவில் என்று நினைக்கிறேன். இதற்கு நான் சென்றிருக்கிறேன். இதில் உள்ள சிற்பங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. ஏன் அங்கு சென்றேன் என்பதே ஆச்சர்யம்தான். நீங்கள் பகிர்வீர்கள் என்றால் படங்கள் அனுப்புகிறேன்
நீங்கள் காட்டியுள்ள பழுவூர் கோவிலின் இறைவன் ஆலந்துறையாரா? நான் பார்த்த கோவில் அப்படி இல்லையே.
பழையாறையில் பாதியில் நிற்கும் கோபுரத்துடன் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. (நாதன் கோவில் அருகில்)
இதெல்லாமே கும்பகோணத்திலிருந்து ஆட்டோவில் செல்லும் தூரத்தில் உள்ளன.
புதியவன்,
இந்த இடுகையை எழுதும்போதே, உங்களுக்கு
இது குறித்து தெரிந்திருக்கலாமென்று
நினைத்தேன். அதே போல் எழுதி இருக்கிறீர்கள்.
எனக்கும் வரலாற்றில் மிகுந்த ஆர்வம் உண்டு.
என்ன …. அலைந்து திரியக்கூடிய
வயதில், உத்தியோகப் பொறுப்புகள் மிக
அதிகமாக இருந்தன. இப்போது –
உடல்நிலை இடம் கொடுக்க மறுக்கிறது….
புகைப்படங்களை அனுப்புங்கள்.
அவசியம் பகிர்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வரலாற்றில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. ஆனால் நான் வெளிநாட்டில் பணிபுரிந்தேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். கடந்த நான்கு வருடங்களாகத்தான் தமிழகத்தில் சில இடங்களுக்குச் சென்று கோவில்கள், வரலாறு தொடர்புடைய இடங்களுக்கும் சென்று பார்ப்பேன். ஓரிரு வருடங்களுக்கு முன்புதான் கல்வெட்டு படிப்பதைச் சிறிது கற்றுக்கொண்டேன் (அப்புறம் தொடரவில்லை. காரணம் நிறைய variationsகற்றுக்கொள்ளவேண்டும்… நூற்றாண்டுகளுக்கு எழுத்துருவில் மாற்றம், இடையில் வேறு மொழி எழுத்துகள், தெளிவின்மை என்று என் ஆர்வத்தைக் குறைத்துவிட்டது)
நிச்சயம் நான் படங்கள் பகிர்கிறேன்.
வெளிநாடுகளிலும் வரலாறு சம்பந்தமான இடங்களைப் பார்த்திருக்கிறேன். நம்மிடமிருந்த கலைப்படைப்பு, கட்டிடக்கலை, சிற்பங்கள் திறமை வெளிநாடுகளில் குறைவுதான். பளிங்குச் சிற்பங்களில் கிரேக்க எகிப்திய ரோமப் பேரரசுகள் திறமை வாய்ந்தவர்களாக இருந்தனர். நம் சிற்பங்களில் ஒருவரின் உண்மைச் சாயலுக்கு முக்கியத்துவம் குறைவு, சிற்ப விதிகளுக்கே முக்கியத்துவம். ஆனால் மேற்கத்தைய கலைகளில் உண்மைத் தன்மைக்கு முக்கியத்துவம். நான் சொல்வது புரியும் என்று நினைக்கிறேன். ராஜராஜன் உருவம் இதுதான் என்பதில் நமக்கு நிச்சயம் சந்தேகம் உண்டு. ஆனால் அதே காலத்திலோ, ஏன் பொது ஆண்டுக்கு முந்தைய காலகட்ட மேற்கத்தைய சிற்பங்களோ உண்மை நிலையைப் பிரதிபலிக்கும். இது என்ன காரணம் என்று எனக்குப் பிடிபடுவதில்லை.