……………..
கழுகு இனங்கள் பற்றி ஒரு செய்தி கட்டுரை படித்தேன்.
வித்தியாசமான விவரங்கள் …
கீழே தருகிறேன்….
……………………..
கழுகு இனங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அழகானவையோ
அதே அளவு ஆபத்தானவை. அழகும் ஆக்ரோஷமும்
ஒருசேர அமைந்துள்ள கழுகுகள் உணவுச் சங்கிலியைத்
துவக்கி வைக்கும் உயிரினங்களில் முக்கியமானவை.
கூரான பார்வை, பிரம்மாண்டத் தோற்றம்,
வேட்டையாடும் குணம், மாமிச வாடை கொண்ட
கழுகுகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில்
புகழ்பெற்ற ஐந்து கழுகு இனங்கள் குறித்த விவரங்கள் –

- வெள்ளை வால் கடல் கழுகு (White tail sea eagle)
வெண்நிற கழுத்து மற்றும் வால் கொண்ட கடல் மீன்களை வேட்டையாடும் கழுகு. பிரிட்டனின் கடற்பரப்பில்
பிரபலமான மாமிசம் உண்ணும் பிரம்மாண்ட பறவை
இனம் ஆகும். இது தனது இறகுகளை முழுவதுமாக
விரித்தால், 2.5 மீட்டர் நீளம் – கிட்டத்தட்ட 8 அடி – இருக்கும்.
அதிகபட்சமாக 5 கிலோ எடை இருக்கும். பெரும்பாலும்
மீன்களை உண்ணும் இது அவ்வப்போது முயல்களையும்
வேட்டையாடி உண்ணும். அழிந்துவரும் இனமான இதை
பிரிட்டன் உயிரியல் ஆர்வலர்கள் இனப்பெருக்கம் செய்து
அழியாமல் காத்தனர்.
- மகுடம் சூடிய ஆப்ரிக்க கழுகு (African crowned eagle)

கரடு முரடான கருப்பு உருவம், மகுடம் போன்ற
தலை இறகுகள் கொண்ட ஆப்ரிக்காவில் வாழும் இந்த
கழுகு வகை தனது எடையைக் காட்டிலும் நான்கு மடங்கு
எடை கொண்ட விலங்குகளை வேட்டையாடும் திறன்
கொண்டது. ஆப்ரிக்க குரங்குகள், ராஜநாகங்களை
உண்ணும். நான்கு கிலோ எடை கொண்ட இது
சகாரா மழை காடுகளில் வசிக்கும். வேகமாக பறந்து
வந்து ஓடும் ஆற்றின் உள்ளே சென்று இரையை
கவ்விப் பிடிக்கும் திறன் கொண்டவை.
- மார்ஷியல் கழுகு (Martial eagle)

தனது கூர்மையான நகங்களைக் கொண்டு மனிதர்களின்
கை எலும்பையே அடித்து முறிக்கும் அளவுக்கு சக்தி
கொண்ட கழுகு, மார்ஷியல் கழுகு (கழுகு இனத்தின்
புரூஸ் லீ ..!). பெரிய பறவைகள், ஆடுகள், குரங்குகளை
அலேக்காக தூக்கிச் செல்லும் இது, அவற்றை மலை
உச்சியில் வைத்து கொத்திக் கொன்று பின்னர்
பொறுமையாக உண்ணும். ஆறரை கிலோ எடை கொண்ட
மார்ஷியல் கழுகு, வெகு உயரத்திலிருந்தே இரையை
தனது கூர்மையான பார்வை மூலம் கண்டறிந்து பறந்து
வந்து தாக்கும் திறன் கொண்டது.
- வழுக்கைத் தலை கழுகு..! (Bald eagle)

வழுக்கைத் தலை கழுகு என்ற பெயரைப் படித்ததும்
இதற்கு தலையில் இறகு இருக்காது என நினைக்க
வேண்டாம். வட அமெரிக்காவைச் சேர்ந்த இந்த கழுகின்
உடல் பிரவுன் நிறத்திலும் தலை, வால் வெள்ளை
நிறத்திலும் இருக்கும். தூர இருந்து பார்த்தால் தலை
வழுக்கை ஆனது போலத் தெரியும். தனிமை விரும்பியான
இந்த கழுகு இனப்பெருக்க காலம் தவிர மலை உச்சியில்
தனியாகவே வாழும். சுறா, இதர பெரிய மீன்களை
உண்ணும். கடலில் வேட்டையாட விரும்பும்.
- தங்கக் கழுகு (Golden eagle)

கழுகு இனங்களின் சூப்பர் ஸ்டார் தங்கக் கழுகுகள்.
பெயருக்கு ஏற்ப இந்த கழுகின் தலை மற்றும் உடல்
காலை வெயிலில் தங்க நிறத்தில் ஜொலிக்கும்.
அடர்ந்த தங்க நிற இறகுகள் கொண்ட தங்க கழுகுகளை
உலகளவில் புகைப்பட நிபுணர்கள் படமெடுக்க
போட்டியிடுவர். மெக்ஸிகோ, ஜெர்மனி, அல்பேனியா
நாடுகளின் தேசியப் பறவை இனமாக அங்கீகரிக்கப்பட்ட பிரம்மாண்ட பறவை இனம். வெறும் 6 கிலோ எடை
கொண்ட தங்கக் கழுகு பெரிய ஆடுகள், நரிகள் என
எடை அதிகமான விலங்குகளை சர்வ சாதாரணமாக
கண்ணிமைக்கும் நேரத்தில் பிடித்துச் சென்று பறந்து
செல்லும். தங்கக் கழுகளின் கூர் நகங்கள் சில விநாடிகள்
இரையின் கழுத்தைப் பிடித்து அழுத்தினாலே ரத்தம்
சொட்டச்சொட்ட இரைக்கு மரணம் நிச்சயம்.
.
…………………………………………….
//ஆறடிக்கு அப்பால் உள்ள இறையை// – ஆறு கிமீட்டருக்கு என்று இருந்திருக்கவேண்டுமா இல்லை 600 மீட்டருக்கு என்று இருந்திருக்கவேண்டுமா?
பதிவில் நிறைய இடங்களில் ‘இரை’ என்பதற்குப் பதில் ‘இறை’ என்று வந்துள்ளது உறுத்துகிறது.
அனிமல் ப்ளானட் போன்ற சேனல்கள் பார்க்கும் வழக்கமுடையவர்களுக்கு இவற்றை ஏற்கனவே தெரிந்திருக்கும். பாம்பைத் தூக்கிச் செல்வதெல்லாம் ரொம்பவே ரிஸ்காக இருக்கும். குட்டி ஆடுகளைத் தூக்கிச்செல்வதைக் காண்பித்திருக்கிறார்கள்.
சிறுத்தை (ஜாகுவார்?) முதலையை வேட்டையாடிக் கொல்வதும் ஆச்சர்யமாக இருந்தது.
அரபு நாடுகளில் கழுகை வளர்ப்பார்கள். விமானத்தில் கொண்டு செல்வார்கள். அது தன் கையில் நிற்கும்படியாக தடிமனான கையுறை அணிந்துசெல்வார்கள். விமான நிலையத்தில் ஆங்காங்கே அது போய் வைப்பதையும் பார்த்து அசூயைப்பட்டிருக்கிறேன். என் கையிலும் ஒரு கழுகை வைத்து போட்டோ வீடியோ எடுத்துக்கொண்டுள்ளேன். பயமாகத்தான் இருக்கும். பல நேரங்களில் அதன் முகத்தை உறை போட்டு மூடிவைப்பார்கள் (மூச்சுவிட இடம் விட்டுவிட்டு)
.
நன்றி புதியவன்…
சரி செய்து விட்டேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்