
அரச்சனை முடிந்து மணியடித்து தீபாராதனை காட்டியபடி
சொன்னார் அர்ச்சகர் ” லக்ஷ்மி தேவி.. நன்னா தாயாரை
தரிசனம் பண்ணுங்கோ.. ஒரு மண்டலம் தர்சனம் பண்ணினா ஐஸ்வர்யம் கொட்டும். அவ்வளவு சக்தி தாயாருக்கு! ”
ராமசந்திரன் பயபக்தியுடன் வணங்கினார்.
” இப்போ பெருமாள் சன்னதிக்கு போலாம் ” என்று தாயார் சன்னிதியை பூட்டிவிட்டு நடந்தார்.
அது ஒரு புராதனமான கோவில்.
ராமசந்திரன் தன் முன்னோர்கள் அங்கு வழிபட்டதாக
அறிந்திருந்தார். கூகிளீல் விலாசம் தேடி கண்டுபிடித்து தன் குடும்பத்தாருடன் மகனின் காரை தானே ஓட்டி வந்திருந்தார்.
மெயின் ரோடிலிருந்து கரடு முரடான சாலையில் மூன்று
கிலோமீட்டர் பயணத்தின் பின்னர்தான் கோவிலை
அடைய முடிந்தது.
பத்தாம் வகுப்பு படிக்கும் பேரன் கவுதம் புலம்பிக்கொண்டே
வந்தான். ‘ இப்படி ஒரு மட்டமான ரோடு இருக்குன்னு
தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன்.” என்று தாத்தாவை செல்லமாக கடிந்து கொண்டான்.
தாத்தாவுக்கு பேரன் மீது கொள்ளை பிரியம். அவனுக்கும்
இவர் மீது அன்புதான். ஆனால் எப்போதும் அவருடைய கருத்துக்கெதிராக பேசி வம்புக்கு இழுப்பான். அவன்
இந்தக் காலத்து பையன். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. கடவுள் என்று ஒருவர் இல்லை என்று
விதண்டா வாதம் செய்வான். நாளாவட்டத்தில் அவனுக்குக்
கடவுள் நம்பிக்கை தானாகவே வரும் என்று ராமசந்திரன்
நம்பினார்.
ஏற்கெனவே அர்ச்சகரிடம் தொலைபேசியில் பேசியிருந்ததால்
அவர் நைவெத்தியத்துக்காக பொங்கல், வடை, சர்க்கரை
பொங்கல் எல்லாம் செய்து வைத்திருந்தார்.
பெருமாள் சன்னதிக்கு போகும் வழியில் தாத்தாவிடம்
கேட்டான் கவுதம் ” தாத்தா மண்டலம்னா எத்தனை நாள்?”
” நாப்பத்தெட்டு நாள்… ஏன் கேக்கறே…நீ வந்து
சேவிக்கப்போறியா?”
” அதில்லை தாத்தா..இவர் இத்தனை வருஷமா தர்சனம்
பண்ணிட்டு தானே இருக்காரு. ஆனா இவரு இன்னும்
அழுக்கு வேஷ்டி துண்டு கட்டிட்டு ஏழையா இருக்காரே…”
‘ உஷ்…அவர் காதில் விழுந்தால் வருத்தபடுவாரு.
கம்முனு வா” என்றார் ராமசந்திரன் கடுமையாக.
பெருமாள் சன்னிதியிலும்
தீபாராதனை நைவேத்தியம் எல்லாம் முடிந்தது.
மந்திரம் ஓதி தேங்காய் பழங்கள் பிரசாதம் எல்லாவற்றையும் ஒப்படைத்தார் அர்ச்சகர்.
” அப்ப நாங்க கிளம்பறோம்..ரொம்ப சந்தோஷம்” என்ற
ராமசந்திரன் ‘எவ்வளவு செலவாச்சு’ என்று கேட்டு அவர்
சொன்ன தொகையுடன் ஐன்னூரு ரூபாய் சேர்த்து தந்தார்.
” எனக்கு நூறு ரூபாய் போதும். பாக்கி நானூறு ரூபாய்க்கு
உங்க பேரில் நாலு வெள்ளிக்கிழமை அர்ச்சனை பண்ணிடறேன்” என்றார்.
காரில் எல்லோரும் ஏறியதும் ஸ்டார்ட் செய்தார் ராமசந்திரன்.
ஆனால் இஞ்சின் உறுமி உறுமி அடங்கியது. வண்டி
கிளம்பவில்லை. எல்லோரும் தள்ளி ஸ்டார்ட் செய்தாலும்
பயனில்லை. மக்கர் செய்தது…அவர் முகத்தில் கவலை
படர்ந்தது . இந்த அத்துவானத்தில் எந்த மெகானிக்கை
அழைப்பது ?
கோவிலைப் பூட்டிய அர்ச்சகர் அருகில் வந்தார்.
” கார் பிரச்னையா…கவலை வேண்டாம். இந்த நெம்பருக்கு
டயல் பண்ணிக் கொடுங்கோ..நான் பேசறேன். ”
அவர் போனில் பேசினார் ” இங்கே காரில் ஒரு சின்ன
பிராப்ளம். வர்றியா?”
மோபெட்டில் ஒருவன் வந்தான். கார் பான்னெட்டை திறந்து
பத்தே நிமிடத்தில் சரி செய்துவிட்டான். காரில் ஒரு ரவுண்டு
அடித்து நிறுத்தினான். ராமசந்திரனுக்கு ஏக மகிழ்ச்சி.
இருனூறு ரூபாயை நீட்டினார். அர்ச்சகர் சொன்னார்
” பணமெல்லாம் வேணாம். பர்சில் வையுங்க…இவன்
என் பையன். பிரான்ஸ்லே நிச்சான் கார் கம்பெனியில்
சீப் எஞ்சினியர்.லீவுலே வந்திருக்கான்..லீவு முடிந்ததும்
ஒரகடம் பாக்டரியில் இன் சார்ஜாக பொறுப்பெடுக்கப் போறான்… ”
” ஓ.. தட்ஸ் கிரேட் .” என்றார் ராமசந்திரன் இன்ப அதிர்ச்சியுடன்
” உங்களுக்கு ஒரே பையனா?”
” ஒரு டாட்டர் இருக்கா. லண்டனில் டாக்டர்”
ராமசந்திரன் கவுதமை அர்த்தபுஷ்டியுட பார்த்தார் ‘ தாயாரை
தினம் தரிசிக்கும் இவர் ஏழையா இருக்கார்னு சொன்னியே..
இப்ப பார்த்தியா தேவியின் சக்தியை?” என்று பார்வையால் வினவினார்.
அர்ச்சகர் கவுதம் அருகில் வந்தார் ” அம்பி, நீ ஸ்கூலில்
எந்த டிரஸ் வேண்டுமானாலும் போட்டுகிட்டு போலாமா?”
” இல்லை..யூனிபார்ம் இருக்கு..அதைத்தான் போட்டுக்கணும்”
” அதே மாதிரிதான் இந்த கோவிலைப் பொறுத்தவரைக்கும்
எனக்கும் இந்த வேஷ்டியும் துண்டும்.தான் யூனிபாரம்.
நான் பேண்ட் சர்ட் போட்டுகிட்டு பூஜை செஞ்சா நல்லா இருக்குமா…அதுதான். மத்தபடி கடவுளை நம்பினால்
நிச்சயம் விரும்பினது கிடைக்கும். ” என்றபடி .
காரில் ஏறிய அனைவரும் அர்ச்சகருக்கும் அவர் மகனுக்கும் கையசைத்து விடை பெற்றார்கள்.
” இதே மாதிரி வாராவாரம் ஒரு கோவிலுக்கு போலாமா தாத்தா”
என்று ஆவலுடன் கேட்ட கவுதமை ஆதரவுடன் தட்டிக்கொடுத்தார் ராமச்ச்ந்திரன். ” நிச்சயம் போவோம்”
காரை ரிப்பேர் ஆக்கி கவுதமை ஆன்மீகத்துக்கு மாற்றிய
இறைவனின் திருவிளையாடலை எண்ணி வியந்தபடி
வண்டியை ஓட்டலானார்.
( எந்த கடவுளாக இருந்தாலென்ன …
எந்த மதமாக இருந்தாலென்ன…
அடிப்படைத் தேவை- “நம்பிக்கை” ஒன்றே –
நல்லது நினைத்தால் –
நல்லது செய்தால் –
நல்லது நடக்கும் என்கிற – நம்பிக்கை மட்டுமே –
அல்லவா …..? )
.
……………………………………………..
SUPER