துக்ளக் ஆசிரியர் “சோ” சொன்ன வித்தியாசமான சில நிகழ்வுகள்… ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் – காஞ்சி பெரியவர்….!!!

ஒரு நூறு வருடங்களுக்கு முன்னதாக தொலைக்காட்சி
என்று ஒன்று வருமென்று கனவிலும் நினைத்திருப்போமா…?

ஒளி, ஒலி இரண்டையும் அலைக்கற்றையாக்கி, அதை
விண்ணில் உலவும் செயற்கை கோளுக்கு அனுப்பி,

பின்னர் நாம் விரும்பும் இடத்தில், விரும்பும் நேரத்தில்,
விரும்பும் வடிவத்தில் மீண்டும் ஒளி, ஒலி -யாக மாற்றி பார்க்க/கேட்க முடியும் என்கிற சாத்தியக்கூறை
நம் தாத்தாக்கள் காலத்தில் கனவிலும் நினைத்திருப்போமா…?

சூரியனிலிருந்து மின்சக்தி உற்பத்தி செய்ய
முடியுமென்று யாராவது சொல்லி இருந்தால்
நம்பி இருப்போமா…?

கொஞ்சம் யோசித்தால், ஒரு விஷயத்தை புரிந்து
கொள்ளலாம். இவை அனைத்தும் அன்றும் இருந்தன…
ஆனால், இந்த ஒளி, ஒலி-யை அலைக்கற்றையாக மாற்றுவது, சூரிய ஒளியிலிருந்து மின்சக்தி பெறுவது –

ஆகிய வழிமுறைகளை நாம் அறிந்திருக்கவில்லை…
அவ்வளவு தான்.

இந்த சக்திகள் ஏற்கெனவே இருந்தவை தான்… இப்படி ஒரு வழிமுறையில் அவற்றை பயன்படுத்த முடியும் என்பதை மட்டும் தான் நாம் பிற்பாடு கண்டுபிடித்தோம்.

இதே போல், நாம் அறியாத, நம் கண்ணுக்கு புலப்படாத – இன்னும் எத்தனையோ சக்திகள் இருக்க வாய்ப்பு உண்டு அல்லவா…?

நமக்கு தெரியவில்லை, உணர முடியவில்லை, பார்க்க இயலவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர –

“இல்லை”… “இல்லவே இல்லை” – “இருக்கும் என்று
நம்புபவன் முட்டாள்” – என்றெல்லாம் சொல்லுவது
சரியாகுமா…?

இந்த கட்டுரையை எழுத முற்பட்டபோது, முன்பொரு
தடவை துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்கள் எழுதியிருந்தது நினைவிற்கு வந்தது..

அவற்றையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்….

ஆசிரியர் சோ சொன்னது – ( என் நினைவிலிருந்து, என்வார்த்தையில் சொல்கிறேன்…)

……………………………….

நமக்கு எல்லாம் தெரிவது கிடையாது; நம்மையும் மீறி
நிறைய விஷயங்கள் நடக்கின்றன…அவை ஏன் இப்படி
நடந்தன என்று யோசித்துப் பார்த்தால் வியப்பு தான்
மிஞ்சும்…..

பல வருடங்களுக்கு முன்னர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த
மூத்த தலைவர் நரசிம்மராவ் – இனி அரசியல் போதும்
ஓய்வில் போகலாம் என்று எண்ணினார்…. ஆனால் –

ஒன்றுக்கொன்று சற்றும் சம்பந்தம் இல்லாத
சில விஷயங்கள் நிகழ்ந்து, அவரை பிரதமர் பதவியில்
கொண்டு சென்று உட்கார வைத்தது.

இது எப்படி நிகழ்ந்தது…?

அப்போது மைனாரிடி ஆட்சியில் பிரதமராக இருந்தவர்
ஜனதா கட்சியை சேர்ந்த சந்திரசேகர்…
ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அவருக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வந்தது.

ஒரு நாள் ஹரியானா போலீசார் 2 பேர் ராஜீவ் காந்தி வீட்டை
வேவு பார்த்தனர் என்று தெரிய வந்தது. ராஜீவ், அதை
சந்திரசேகர் தான் ஏற்பாடு செய்திருக்கிறார் என்று
நினைத்து கோபம் கொண்டார்.

ஆனால், உண்மையில், சந்திரசேகருக்கும் இதற்கும்
எந்தவித சம்பந்தமும் இல்லை. இது ஏதோ லோக்கல்
போலீஸ் செய்த வேலை…!

ராஜீவுக்கு கோபம் வந்தது; சந்திரசேகருடன் மனஸ்தாபம்,
சண்டை வந்தது… விளைவு – ராஜீவ் காங்கிரசின் ஆதரவை விலக்கிக் கொண்டார். சந்திரசேகரின் ஆட்சி கவிழ்ந்தது….

மத்தியில் பாராளுமன்றத்திற்கு – மீண்டும் பொதுத் தேர்தல் வருகிறது…

சூழ்நிலை ராஜீவ் காந்திக்கு சாதகமாக இருக்கிறது.
ராஜீவ் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக கலந்து
கொள்கிறார். மீண்டும் காங்கிரஸ் கட்சி ஜெயித்து,
ராஜீவ் காந்தி பிரதமர் ஆகக்கூடிய வாய்ப்பு உருவாகிறது. நியாயமாகப் பார்த்தால், ராஜீவ் காந்தி தான் அடுத்த
பிரதமர் ஆகி இருக்க வேண்டும்…… ஆனால் –

துரதிருஷ்டவசமாக ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பில்
ராஜீவ் காந்தி உயிர் இழக்கிறார்…. அந்த அனுதாப
அலையில், காங்கிரசுக்கு தேர்தலில் வெற்றி கிடைக்கிறது…

ஆனால், தலைமை ஏற்க தகுதியான மூத்தவர்கள் யாருமில்லை….( திருமதி சோனியா காந்தி அப்போது
அரசியலுக்கு வரக்கூடிய மனநிலையிலேயே இல்லை….!)

யாரும் எதிர்பாராத வண்ணம் அதிர்ஷ்டம்,
கிரீடத்தை நரசிம்மராவ் தலையில் சூட்டியது… ஓய்வு பெற்று வீட்டுக்கு போக முடிவு செய்திருந்த நரசிம்மராவ் அவர்கள் இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆகிறார்….!!!

இது எப்படி, ஏன் நடந்தது…? அதற்கு 4 மாதங்களுக்கு முன்னதாக யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் நரசிம்மராவ் இந்நாட்டின் பிரதமர் ஆவாரென்று…!!!

சம்பந்தமே இல்லாமல், ஹரியானா போலீஸ் யாரையோ
வேவு பார்க்கப்போய், அது நரசிம்மராவ் பிரதமர் ஆனதில்
சென்று முடிந்தது….!!!

“சோ” அவர்கள் சொன்ன இன்னொரு சம்பவம் கூட
நினைவிற்கு வருகிறது… காஞ்சி பெரியவர்
சம்பந்தப்பட்டது.

சோவும், இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்கா, மற்றும்
அவரது நண்பர்கள் சிலருமாக சேர்ந்து, சென்னையிலிருந்து காஞ்சிக்கு காரில் பயணம் சென்று கொண்டிருக்கிறார்கள் – காஞ்சி பெரியவரை தரிசனம் காண…

பயணத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, சோ ஏதோ ஒரு விஷயத்தை குறிப்பிட்டு, “காஞ்சி பெரியவர் ஏன் அப்படிச் செய்தார்..?” என்று கேட்டிருக்கிறார்….மற்றவர்கள் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் “ஏதோ காரணம் இருக்கும்… செய்திருக்கிறார்.. விடு” என்று சொல்லி விட்டு, வேறு விஷயத்திற்கு சென்று விட்டார்கள். ஆனால், இந்த
விஷயம் சோவின் மண்டையை குடைந்துகொண்டே
இருந்தது…!!!

காஞ்சிக்கு சென்றவர்கள், பெரியவர் ஒரு மண்டபத்தில்
அமர்ந்து 200-250 பேர் கொண்ட ஒரு கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டு இருப்பதை பார்த்து, இவர்களும் கூட்டத்தோடு உட்கார்ந்து விட்டார்கள்.

பல விஷயங்களைப்பற்றியும் பேசிக்கொண்டு வந்த
பெரியவர், “சோ”வை பார்த்து, “அதை நான் ஏன் அப்படி செய்தேன் என்று உனக்கு தெரிந்தே ஆக வேண்டும்
இல்லையா – அதுவரை உன் மூளை சும்மா
இருக்காது.. அப்படித்தானே…?” என்று கேட்டிருக்கிறார்…!!!

சோவுக்கு என்னவோ போல் ஆகி விட்டதாம். அங்கிருந்து அப்போதே எழுந்து ஓடிவிடலாமா என்று கூட நினைத்தேன் என்றார்.

பின்னர் சோவுக்கும், மற்ற எல்லாருக்கும் சேர்த்தே அந்த விஷயத்தை பற்றியும், தான் அதை எதனால் செய்ய நேர்ந்தது என்பதையும் விளக்கி இருக்கிறார் பெரியவர்…

சோ இதைப்பற்றி பின்னர், ஒரு கூட்டத்தில் கூட பேசினார்..
நான் அதை நேரிலேயே கேட்டேன்…

அவர் சொன்னார் – மஹாஸ்வாமி எல்லார் எதிரிலும்
என்னிடம் அப்படி கேட்டவுடன் நான் திகைத்துப் போய்
விட்டேன். இங்கே தாம்பரம் அருகே காரில் பயணம்
செய்யும்போது பேசிக்கொண்டிருக்கிறோம். அங்கே போய்ச்சேர்ந்தவுடன், நேராக கூட்டத்தில் போய்
உட்கார்ந்து விட்டோம். நாங்கள் பயணம் செய்யும்போது
பேசியது, பெரியவருக்கு எப்படி தெரிந்தது….?
யோசித்து யோசித்து மண்டை குழம்பியது தான் மிச்சம்…


இந்த மாதிரியெல்லாம் சில சக்திகள் இருக்கின்றன…. பெரிய பெரிய மகான்கள் எல்லாம் அதைப்பற்றி எல்லாம் வெளியில் சொல்லிக் கொள்வதே இல்லை….

இந்த மாதிரி நம்மை மீறிய, நமக்கு தெரியாத சக்திகள்
நிறைய இருக்கின்றன…. இந்த மாதிரி எல்லாம் நிறைய சம்பவங்கள் எல்லார் வாழ்விலும் நடக்கின்றன…
நாம் தான் அவற்றை உணர்வதில்லை….!!! (சற்றே மாற்றப்பட்ட மறுபதிவு )

.
………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to துக்ளக் ஆசிரியர் “சோ” சொன்ன வித்தியாசமான சில நிகழ்வுகள்… ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் – காஞ்சி பெரியவர்….!!!

  1. sparklemindss சொல்கிறார்:

    This is so very true! thanks for sharing

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.