பாஜக-வுக்கு – முரசொலி வெளிப்படுத்தும் சில “அபூர்வ உண்மைகள் “….

…………………………..

சென்னை: சமீபத்தில் டெல்லியில் உள்ள இந்தியா கேட்
அருகே சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் சிலையை
பிரதமர் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் பிரதமர் கூறிய கருத்துகள் குறித்து
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கருத்து தெரிவித்துள்ளது.


முரசொலி தலையங்கத்தில் –

“சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்திக்கும், நேதாஜிக்கும் முரண்பாடுகள் இருந்தன என்பதை வைத்து – நேதாஜியை தங்களவராக மாற்றிக்கொள்ளும் பாஜகவின் தந்திரம்தான் பிரதமரின் உரையில் வெளிப்படுகிறதே தவிர வேறல்ல” என்று தனது தலையங்கத்தில் விமர்சித்துள்ளது முரசொலி.

ஏற்கெனவே காங்கிரஸ் தலைவர் சர்தார் வல்பாய் படேலுக்கு பிரதமர் மோடி பிரமாண்டமான சிலையை நிறுவி திறந்து வைத்த நிலையில்,

தொடர்ந்து தேசத் தலைவர்களை பாஜக, தங்களுக்கானதாக மாற்றிக்கொள்ள முயற்சிப்பதாகவும் முரசொலி குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து அந்நாளேட்டின் தலையங்கத்தில் எழுதியுள்ளதாவது, “சொந்த இயக்கத்தில் சொல்வதற்கு தலைவர்கள் யாரும் இல்லாததால் மாற்று இயக்கத் தலைவர்களை கபளீகரம் செய்தாக வேண்டிய அரசியல் நெருக்கடி பா.ஜ.க.வுக்கு இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் சர்தார் படேலுக்கு, இத்தனை ஆண்டுகள் ஆண்ட காங்கிரசு கட்சிகூட இத்தனை பெரிய சிலையை அமைத்தது இல்லை; பா.ஜ.க.தான் அமைத்தது. தங்களிடம் சொல்வதற்கு படேல் போன்ற ஒரு தலைவர் இல்லாமல் போனது காரணமாக இருக்கலாம்….! பாராட்டுக்குரியதுதான்…

அடுத்ததாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸை கையில் எடுத்துள்ளார்கள். குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையை மறுவடிவமைப்பு செய்து, அதற்கு ‘கடமைப் பாதை’ என்று பெயர் சூட்டி இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 28 அடி உயரம் கொண்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்கள். பாராட்டுக்குரியதுதான் இது.

அதனைத் திறந்து வைத்து பிரதமர் பேசி இருப்பதுதான் நெஞ்சை அடைக்கிறது…. பிரதமரின் உரை “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காட்டிய வழியைப் பின்பற்றியிருந்தால்
இந்தியா முன்பே உச்சத்தை எட்டியிருக்கும். ஆனால்
நேதாஜி மறக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.

‘இந்தியா கேட்’ அருகே அமைக்கப்பட்டுள்ள சுபாஷ் சந்திர போஸின் சிலை நமக்கு உத்வேகத்தையும் வழிகாட்டியாகவும் திகழும். இந்தியாவின் வருங்காலத்தை இதில் காணலாம். அந்தச் சக்தி இந்தியாவுக்கு புதிய பாதையை உருவாக்கும்.

நேதாஜியின் கனவு, லட்சியங்களின் அடிப்படையில் மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. அந்த முடிவுகள் அரசின் கொள்கைகளாக அமைந்துள்ளன” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர்.

பாஜகவின் தந்திரம் நேதாஜியின் கொள்கைப்படிதான்
ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது என்றால் எப்படி என்பதை அவர்தான் இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் விளக்க வேண்டும்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்திக்கும்; நேதாஜிக்கும் முரண்பாடுகள் இருந்தன என்பதை வைத்து – நேதாஜியை தங்களவராக மாற்றிக்கொள்ளும் பா.ஜ.க.வின் தந்திரம்தான் இந்த உரையில் வெளிப்படுகிறதே தவிர வேறல்ல.

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் இந்திய தேசியத்தின்
அனைத்துப் பண்பாட்டு விழுமியங்களையும் ஒருங்கே கடைப்பிடித்த உன்னதத் தலைவர்.

கொள்கையே ஒட்டாது –


தனது காலத்தில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகக் குரல் கொடுத்தவர் மட்டுமல்ல; மதச்சார்பற்ற நெறியைக் கடைப்பிடிப்பவராகவும் இருந்தார். சோசலிசத் தத்துவத்தை தனது பொருளாதாரக் கொள்கையாகக் கொண்டிருந்தார்.

அரசியலில் எதேச்சாதிகார – சர்வாதிகாரத் தன்மைகளுக்கு எதிரானவராகவும் இருந்தார். ஆய்வாளர் சுபாஷினி அலி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த வரலாற்றுத் தகவல்களைத் தொகுத்து அளித்துள்ளார். அந்த வகையில் நேதாஜியின் கொள்கையும், பா.ஜ.க.வின் கொள்கையும்
ஒட்டாது என்பதே உண்மை.

நேதாஜி, தான் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தின் கொள்கையாக ‘ஒற்றுமை,- நம்பிக்கை, – தியாகம்’ என்பதை அறிவித்திருந்தார். அதில் முதல் சொல்லே, பா.ஜ.க.வுக்கு கசப்பானது ஆகும்.

சோசலிஸ்ட்டுகளை ஊக்குவித்த நேதாஜி நேதாஜி –


காங்கிரசுத் தலைவராக இருந்த காலத்தில் காங்கிரசு உறுப்பினர்கள் யாரும் இந்து மகாசபையிலோ, முஸ்லீம் லீக்கிலோ உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்று தடை விதித்து இருந்தார். அதாவது மதச்சார்பற்றவர்களாக
காங்கிரசு உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று
சொன்னார்.

அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரசுடன் இணைந்து ‘காங்கிரஸ் சோசலிஸ்ட்’களாகச் செயல்பட்டு வருவதை நேதாஜி தடுக்கவில்லை. அத்தகையவர்களை ஊக்குவிப்பவராக நேதாஜி இருந்தார்.

மதச்சார்பற்ற நடைமுறையை ஊக்குவித்தவர் –

மதச்சார்பு அமைப்புகளில் உறுப்பினராக இருப்பவர்கள், காங்கிரசு கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு எதிலும் உறுப்பினராக இருக்க முடியாது” என்ற விதியைச் சேர்த்தவரே நேதாஜிதான். அவர் காங்கிரசு கட்சித்
தலைவராக இருக்கும்போதுதான் இந்த விதி சேர்க்கப்பட்டது.

ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, இந்து மகாசபையில் சேர்ந்தபோது அவரைச் சந்தித்த நேதாஜி, அவரைக் கடுமையாக எச்சரித்தார். கல்கத்தா மாநகராட்சித் தலைவராக இருந்தபோது முஸ்லிம்களுக்கான பணி இட ஒதுக்கீட்டை துணிச்சலுடன் நேதாஜி கொண்டுவந்து அமல்படுத்தினார்.

இந்திய தேசிய ராணுவத்தின் தலைமைக் கமாண்டராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும், ரங்கூனில் இருந்த பகதூர் ஷா ஜபாரின் நினைவிடத்துக்குச் சென்று நேதாஜி மலர் வளையம் வைத்தார். ‘1857 முதல் சுதந்திரப் போரின் போது, இந்து — -முஸ்லிம் ஒற்றுமைக்கு மாபெரும் முன்னுதாரணமாக திகழ்ந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’ என்று நேதாஜி அப்போது சொன்னார். ‘
அவரது உடலை எடுத்து வந்து டெல்லி செங்கோட்டையில் அடக்கம் செய்வேன்’ என்றும் சொன்னவர் அவர்.

நேதாஜியும் கம்யூனிஸ்டும் –

1931-ஆம் ஆண்டு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத் தலைவராக நேதாஜியும், அதன் செயலாளராக கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.வி.தேஷ்பாண்டேவும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்க வேண்டும்
என்று 1933 ஆம் ஆண்டு சொன்னவர் நேதாஜி. இந்தியாவின் பயணம் என்பது சோசலிசத் திசைவழியில் செல்ல வேண்டும் என்றார். ‘எந்த வகைப்பட்ட பாசிசமாக இருந்தாலும் அது ஏகாதிபத்தியத் தன்மை கொண்டதே’ என்றும் சொன்னார்.

அதனால்தான் அவர், காங்கிரஸ் மாகாணக் கமிட்டித் தலைவராக ஆனபோது, கம்யூனிஸ்ட்களான பங்கிம் முகர்ஜியை துணைத்தலைவராகவும், பஞ்ச் கோபால் பாதுரியை துணைச் செயலாளராகவும் நியமித்துக்
கொண்டார்.

நேதாஜிக்கு இழைக்கும் அநீதி –

இடதுசாரி சக்திகளின் ஆதரவு இருந்ததால்தான் காந்தியின் வேட்பாளரான பட்டாபி சீத்தாராமையாவை வீழ்த்திவிட்டு, காங்கிரஸில் அகில இந்தியத் தலைவராக நேதாஜி ஆக முடிந்தது. ”பாசிச நாட்டில் என்னை கம்யூனிஸ்ட் என்றே முத்திரை குத்துவார்கள்” என்று சொன்னவர் நேதாஜி.

சமரசமற்ற விடுதலைப் போராட்டம் –

 • நம்பகமான ஏகாதிபத்திய எதிர்ப்பு,
  -நீர்த்துப் போகாத சுதந்திரம்,- ஆகியவற்றை –
 • தனது இலக்காகச் சொன்னவர் நேதாஜி. ‘விடுதலை இந்தியாவை சோசலிசம் வழிநடத்த வேண்டும்’ என்று சொல்லி வந்தார்.
 • அத்தகைய நேதாஜி கொள்கைப்படி
  பா.ஜ.க. அரசு நடப்பதாகச் சொல்லிக் கொள்வது,
  அவருக்கு இத்தனை ஆண்டுகள் கடந்து இழைக்கும்
  அவமானம் ஆகும்.

.
…………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to பாஜக-வுக்கு – முரசொலி வெளிப்படுத்தும் சில “அபூர்வ உண்மைகள் “….

 1. புதியவன் சொல்கிறார்:

  சாத்தான் வேதம் ஓதுகிறதே… ‘கடவுள் இல்லை’, ‘தமிழ் காட்டுமிராண்டிகளின் பாஷை’ என்று பலவிதமான கருத்துக்களை உதிர்த்தவரைத் தன் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள திமுக, தனக்கு வந்தால் தக்காளிச் சட்னி, மற்றவர்க்கு வந்தால் ரத்தம் என்று சொல்கிறதே. ஒருவரின் வாழ்க்கையில் எத்தனையோ கருத்துகள் இருக்கும், செயல்கள் இருக்கும். அதில் தனக்குச் சாதகமானவற்றை எடுத்துக்கொள்வது என்றால் முதலில் திமுகவைத்தான் குற்றம் சுமத்த வேண்டும்.

  சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் இப்போதிருக்கும் காங்கிரஸ்காரர்கள் என்றால், அவர்களைத்தானே திமுக தன் தலைவர்களாகக்கொள்ளவேண்டும்? தேச விடுதலைக்குப் பாடுபட்டவர்கள் யாருக்கு அவர்கள் சிலை திறந்திருக்கிறார்கள்?

  பாஜக செய்ய முனைவது, காங்கிரஸ், நேரு குடும்பத்தைத் தவிர மற்றவர்களை இருட்டடிப்புச் செய்ததை, மற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகப் பார்த்து, அதனைச் சரிசெய்ய முயல்கிறது. பாரத தேசம் என்ற கருத்தை முன்வைக்கிறது.

  இந்த ‘மதச்சார்பற்ற’ என்ற ஜல்லியடிப்பவர்களை என்ன சொன்னாலும் திருத்தமுடியாது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   முரசொலியை விடுங்கள்…

   ஆனால், நேதாஜியையும், பாஜகவையும்
   பல விஷயங்களில் ஒன்றுபடுத்தி
   பார்க்கவே முடியாது …

   நேதாஜி அடிப்படையில் மத சார்பு இல்லாதவர்.
   கம்யூனிச, சோஷலிச கொள்கைகளில்
   தீவிர பற்றும், நம்பிக்கையும் கொண்டவர்…

   ஆனால், பாஜக இதற்கு நேர்மாறான
   சித்தாந்தங்களை கொண்டது.

   அப்புறம் எங்கே நேதாஜி வழியில்
   பாஜக … ?

   • புதியவன் சொல்கிறார்:

    “மதசார்பு” என்றால் என்ன? “மதச்சார்பின்மை” என்றால் என்ன? எந்தக் கட்சி இந்த இரண்டு தலைப்புகளில் சரியாகப் பொருந்துவார்கள்? அந்தப் புரிதல் இல்லாமல், பாரதிய ஜனதா என்றால் இந்துக்கள் கட்சி, காங்கிரஸ் என்பது கிறித்துவ முஸ்லீம்களுக்கான கட்சி என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லமுடியுமா?

    இங்க பாஜக நேதாஜி வழியில் இந்தியா பயணித்திருந்தால் என்று சொல்வது,, ‘பாரதம், பாரதீய உணர்வு’ என்றுதான் பொருள் கொள்ளணும். உடனே வெளிநாடுகளுக்குச் சென்று ஆதரவு தேடி பாகிஸ்தானை அழிப்பேன், பிரிட்டனை அழிப்பேன் என்று பொருள் கொள்ளக்கூடாது. அதே போல, ஸ்டாலின், திமுக அரசு பெரியார் வழியில் பயணிக்கிறது என்று சொன்னால், அதற்குப் பொருள், ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி’, ‘பிரிட்டன் கீழ் இந்தியா அடிமைப்பட்டுக் கிடக்கணும்’, ‘கடவுள் இல்லவே இல்லை’ என்று நம்புகிறது, அந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தம் கொள்வது அனர்த்தம் ஆகும்.

 2. புதியவன் சொல்கிறார்:

  //சாமானிய மக்களிடம் இருந்து விலகி நிற்கும் நிதியமைச்சர்: ப.சிதம்பரம் விமர்சனம்// – இந்த விமர்சனத்தில் அர்த்தம் இருக்கிறது என்று நினைக்கிறேன். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நல்ல அட்மின்.. அதாவது நிர்வாகி. ஆனால் அவர், சாதாரண மக்கள், அவர்களின் நலம், கஷ்டம் இவற்றைப் புரிந்துகொண்டமாதிரித் தெரியவில்லை. இதைப்பற்றி நீங்க எழுதணும்.

 3. Tamil சொல்கிறார்:

  //நேதாஜியின் கனவு, லட்சியங்களின் அடிப்படையில் மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. அந்த முடிவுகள் அரசின் கொள்கைகளாக அமைந்துள்ளன//

  அவை என்ன என்று மட்டும் அடித்து கேட்டாலும் சொல்ல மாட்டார்!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s