எப்படி இருந்த அண்ணாமலை, ஐபிஎஸ், – ஏன் இப்படி ஆனார் ….?

…………………………………….

” வெறும் பேச்சு! – அண்ணாமலை புஸ்ஸ்…”

ஜூவியில், பாஜக மாநிலத்தலைவர்
அண்ணாமலை அவர்களைப்பற்றி வெளிவந்திருக்கும்
ஒரு கட்டுரை கீழே –

………………………..

ஊதி ஊதிப் பெரிதாக்கப்படும் பலூன், நாளடைவில் காற்று இறங்கி, சுருங்கிப்போய்விடும். அதுபோலவே காற்று இறங்கி, `புஸ்ஸ்’ ஆகியிருக்கிறது பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிம்பமும். பா.ஜ.க-வின் மீட்பராகவும்,
எழுச்சி நாயகனாகவும் அடையாளப்படுத்தப்பட்ட அண்ணாமலை, தற்போது சொந்தக் கட்சிக்காரர்களாலேயே வெறுக்கப்படும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார். “மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று ஒரு வருடம் உருண்டோடிவிட்டது. கட்சியைக் களத்தில் வலுப்படுத்தும் உருப்படியான நடவடிக்கை எதையும் அவர் இதுவரை செய்யவில்லை.

டெல்லிக்கு அவர்மீதான நம்பிக்கை போய்விட்டதாலேயே, கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பு கூடுதலாக மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு இப்போது ஒதுக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க-விலும் இரட்டைத் தலைமை வந்துவிட்டது” என்கிறார்கள் கமலாலய சீனியர்கள்.

வெறும் பேச்சுகள், ட்விட்டர் சண்டைகள், தடாலடி பிரஸ் மீட்டுகள், வீரதீர சாகசங்கள் என்ற பெயரில் வாங்கும் பல்புகள் என கேமரா முன்னால் மட்டுமே அண்ணாமலை கம்பு சுற்றுவது, கமலாலயத்தில் களேபரப் பிளவுகளுக்கு வித்திட்டிருக்கிறது. “எங்கே, ஏன், எப்படிச் சறுக்கினார் அண்ணாமலை?” என்ற கேள்வியுடன் பா.ஜ.க வட்டாரங்களில் வலம்வந்தோம்.
கொட்டிய தகவல்கள் வடகிழக்குப் பருவமழை ரகம்!

…………..

மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணையமைச்சரான பிறகு, ஜூலை 16, 2021-ல் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றார் அண்ணாமலை. கட்சியில் சீனியர்கள் பலர் இருந்தும், அண்ணாமலையைத் தேர்வுசெய்தது பா.ஜ.க தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் என்பதால், அந்த நியமனத்தை யாரும் அப்போது விமர்சிக்கவில்லை.

‘கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சப்படும்’ என்கிற வார்த்தையை கட்சித் தொண்டர்கள் நம்பினார்கள். ஆனால், அதையெல்லாம் அண்ணாமலை தன் செயல்களால் தவிடுபொடியாக்கியிருப்பதுதான் யாரும் எதிர்பாராத ‘ட்விஸ்ட்.’

உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் மொத்தம் 72,000 பூத் கமிட்டிகள் உள்ளன. எல்.முருகன் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகியபோது, பா.ஜ.க-வுக்கென உருப்படியாக 6,700 பூத் கமிட்டிகளே இருந்தன. அந்த எண்ணிக்கை அப்படியேதான் இருக்கிறது. சட்டமன்றத் தொகுதிகளுக்கு தலா மூன்று மண்டல் தலைவர்களை நியமிக்க வேண்டும். அந்த நியமனங்களெல்லாம் அந்தரத்தில் நிற்கின்றன.

சமீபத்தில், சென்னை அண்ணாநகரில் மண்டல் தலைவர்கள் சந்திப்பு நடந்தபோது, கூட்டத்தில் வெறும் ஐந்து பேர் மட்டும் இருந்திருக்கிறார்கள். டென்ஷனான சீனியர் ஒருவர், ‘இதை ஒரு கூட்டம்னு ஏம்ப்பா வரச் சொல்றீங்க. வெட்கக்கேடா இருக்கு. வெறும் சேர்கிட்ட பேசச் சொல்றீங்களா?’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

மாவட்டத் தலைவர்கள், அணித் தலைவர்கள் நியமனங்களில் பொதுவாக ‘கோட்டா’ சிஸ்டம் பின்பற்றப்படுகிறது. அந்தவகையில், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எல்.முருகன், அண்ணாமலை எனத் தங்கள் ஆதரவாளர்களைப் பொறுப்பில் நியமித்தனர். இதில், மற்றவர்களின் சிபாரிசில் பதவியைப் பிடித்தவர்களை அண்ணாமலை மதிப்பதில்லை.

உதாரணத்துக்கு, கே.பி.ராமலிங்கம் கட்சியின் துணைத் தலைவராக இருக்கிறார். எல்.முருகனின் ஆதரவோடு பதவியைப் பிடித்த அவரை, அண்ணாமலை நம்புவதில்லை. அதனால்தான், பாரதமாதா கோயில் பூட்டை உடைத்த விவகாரத்தில் ராமலிங்கம் கைது செய்யப்பட்டபோதுகூட, ட்விட்டரில் கண்டனப் பதிவு போட்டதோடு நின்றுகொண்டார். ‘ஒரு ஆர்ப்பாட்டமாவது நடத்தலாமே?’ என சீனியர்கள் தயங்கித் தயங்கிக் கேட்டபோது, ‘நிறைய மீட்டிங் இருக்குது. நேரமில்லைங்கண்ணா’ என மறுத்துவிட்டார்.

ட்விட்டரில், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுடன் வெத்துச் சண்டைபோட நேரமிருக்கும் அண்ணாமலைக்கு, கட்சி சீனியர் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த நேரமில்லையா?

அதோகதியில் அணிகள்… அந்தரத்தில் சீனியர்கள்!

கட்சியின் கட்டமைப்பில் 23-ஆக இருந்த சார்பு அணிகளின் எண்ணிக்கையை 28-ஆக உயர்த்தினார் அண்ணாமலை. ஆனால், மாவட்ட அணித் தலைவர்கள் நியமனத்தை மாவட்டத் தலைவர்களே செய்ய வேண்டும் என அவர் கட்டுப்பாடு விதித்ததால், ஏகக் குழப்பம் ஏற்பட்டது. இப்படி நியமிக்கப்பட்ட மாவட்ட அணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகளை மதிப்பதேயில்லை. ஒரு ஊரில் கூட்டம் நடத்த அழைத்தால்கூட, ‘மாவட்டத் தலைவர் சில வேலைகளைச் சொல்லியிருக்கிறார். வேறொரு தேதியில் கூட்டம் நடத்துங்கள்’ என்று ஆர்டர் போடுகிறார்கள்.

பா.ஜ.க மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு அணித் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, மாநில இளைஞரணித் தலைவர் ரமேஷ் சிவா இருவரும் அண்ணாமலைக்கு மிக நெருக்கம். இந்த இருவரது அணியில் மட்டும்தான் பிரச்னை இல்லையே தவிர, இதர அணிகளின் செயல்பாடு அதோகதி ஆகியிருக்கிறது.

தமிழிசை, எல்.முருகன் காலகட்டத்தில் மாதத்துக்கு ஒரு முறை மாநில மையக்குழுக் கூட்டம் நடைபெறும். முன்னாள் மாநிலத் தலைவர்கள், கட்சி சீனியர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, முக்கியப் பிரச்னைகளில் கட்சி எடுக்கவேண்டிய நிலைப்பாடு குறித்து விவாதிப்பார்கள். அண்ணாமலை தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்த மையக்குழுக் கூட்டம் பேருக்கு எப்போதாவது நடத்தப்படுகிறது. கூட்டத்தில் சீனியர்கள் யாராவது கருத்து சொன்னால் அதற்கு அண்ணாமலை காது கொடுப்பதில்லை.

புதுக்கோட்டையில் கட்சிக் கூட்டம் சமீபத்தில் நடந்தது.
அதற்கான மொத்தச் செலவே 11.5 லட்சம் ரூபாய்தான்.
21 ஒன்றியங்களிலிருந்தும் ஆட்களை அவர்கள் திரட்டி வந்திருந்தனர். ஆனால், இதர இடங்களில் கூட்டம் நடத்திய செலவாகப் பல கோடிகள் காட்டப்பட்டது. இந்தச் செலவு இடைவெளியையும், கூடிய தொண்டர்களின் எண்ணிக்கை குறித்தும் ஒரு மாநிலத் தலைவர் ஆய்வுசெய்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கோ கேமரா முன்னால் சவுண்ட் விடுவதற்கு மட்டுமே நேரம் சரியாக இருக்கிறது.

அண்ணாமலையும் மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரனும் பேசிக்கொள்வதான ஒரு ஆடியோ சமீபத்தில் ‘லீக்’ ஆனது. ‘அந்த ஆடியோ போலியானது. அது யார் குரல் என்பதை செக் செய்ய வேண்டும்’ என்றார் சுசீந்திரன். ஹெச்.ராஜா உள்ளிட்ட சீனியர்கள் பலரும் அந்த ஆடியோ போலி’, மிமிக்ரி’ எனச் சொல்லிக்கொண்டிருக்க, அண்ணாமலை
‘அந்த ஆடியோ உண்மைதான். அதை தி.மு.க-வினர் எடிட்
செய்து வெளியிட்டுள்ளனர்’ என குண்டைத் தூக்கிப்போட்டார். இது கட்சிக்காரர்களுக்கே ‘ஷாக்.’

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை பா.ஜ.க கடுமையாக எதிர்த்துவரும் சூழலில், ‘அதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதேநேரத்தில் ஆகம விதிகளை மனதில் வைத்துச் செயல்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறோம்’ எனச் சொல்லி, பா.ஜ.க-வினருக்கு ஷாக் மேல் ஷாக் கொடுத்தார். ஒரு தலைவராகச் செயல்படுவதற்குப் போதுமான பக்குவம் அவருக்கு இல்லை என்பதற்கு இவையெல்லாம் உதாரணம்” என்றனர் ஆற்றாமையுடன்.

பண மோசடி விவகாரம்… புதைகுழியில் கமலாலயம்!

பா.ஜ.க-வில் இணைவதற்கும், சிலரை இணைப்பதற்கும் அண்ணாமலை பேரைச் சொல்லி வசூல் நடப்பதாகப் புகார்கள் தொடர்ந்து எழுகின்றன.

சமீபத்தில், பா.ஜ.க-விலிருந்து தி.மு.க-வில் இணைந்த கோவை மைதிலி என்பவர், ‘பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே பதவி கொடுக்கப்படுவதாக’ புகார் தெரிவித்தார். ‘கட்சி நிதியாகக் கொடுக்கப்படும் தொகைக்கு உரிய ரசீதும் கொடுப்பதில்லை. கமலாலயம் சார்பில் விற்கப்படும் புத்தக விற்பனையிலும் முறைகேடு நடக்கிறது’ என்கிறார்கள்.

பா.ஜ.க-வின் மாவட்டத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “கோயில்களைச் சீரமைத்துத் தருவதாகக் கூறி, 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், பா.ஜ.க ஆதரவு யூடியூபர் கார்த்திக் கோபிநாத் சிக்கினார். அப்போது அவர் குறித்த கேள்விக்கு, ‘கார்த்திக் கோபிநாத் என்பவர் யார், அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம், சிறுவாச்சூர் கோயில் குறித்துப் பணம் வசூல் செய்ததற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்டார் அண்ணாமலை.

ஆனால், கார்த்திக் கோபிநாத்தை ஆவடி போலீஸார் கைதுசெய்தபோது, ‘அவரின் அப்பாவிடம் பேசி ஆதரவு தெரிவித்திருக்கிறேன்’ என்றார். பண மோசடிக் குற்றச்சாட்டு என்றவுடன், `தெரியாது’ என்று பல்டி அடித்தவர், பிற்பாடு ஆதரவு தெரிவித்ததன் மர்மம் என்ன?

சமீபத்தில் பண மோசடிப் புகாரில் சிக்கிய ஒரு நிதி நிறுவன அதிபருக்கும், பா.ஜ.க நிர்வாகி ஒருவருக்கும் இடையிலான ‘டீலிங்’ குறித்து கட்சியின் செயற்குழுவில் பேச வேண்டும் என சீனியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அந்த பா.ஜ.க நிர்வாகி தனக்கு நெருக்கமானவர் என்பதால், அந்தப் பண மோசடி குறித்து மீடியாக்களிடம் பேசுவதைக்கூட அண்ணாமலை தவிர்த்துவிட்டார். அண்ணாமலை கொடுக்கும் தைரியத்தில், மாவட்டம்தோறும் தன் அணியின் நிகழ்ச்சியை நடத்த, பெரும் வசூல் வேட்டையை அந்த பா.ஜ.க நிர்வாகி நடத்திவருகிறார்.

அண்ணாமலையின் பெயரைச் சொல்லி, ‘அமலாக்கத்துறையில் உங்கள் மீதான வழக்கை முடித்துத் தருகிறோம். ஜி.எஸ்.டி துறையிலுள்ள நோட்டீஸை விலக்கித் தருகிறோம்’ என்றெல்லாம் கல்லாகட்டுகின்றன சில கும்பல்கள். இது போன்ற பண மோசடிப் புகார்கள் கமலாலயத்தையே புதைகுழியில் தள்ளியிருக்கின்றன” என்றனர்.

அடாவடி மிரட்டல்… இதற்காகவா கட்சிப் பதவி?

அண்ணாமலையின் மிரட்டல், உருட்டல் அரசியலை பா.ஜ.க தொண்டர்களே ஆரம்பத்தில் ஆஹா... ஓஹோ’வென ரசித்தார்கள். ‘தீரன் அண்ணாமலை ஆர்மி’ என்றெல்லாம் ட்வீட்டுகள் தெறித்தன. ஆனால், அந்த மிரட்டல் அரசியல் தரம் தாழ்ந்து,அடிப்பேன்… உதைப்பேன்… காலி செய்வேன்…’ எனத் தரை லோக்கலாக மாறியிருப்பதைக் கண்டு இப்போது கட்சியினரே முகம் சுளிக்கிறார்கள். மற்றொரு பக்கம் இவரது பல பேச்சுகளும், நடத்தைகளும் காமெடி ஆவதைக் கண்டு தலையிலடித்துக்கொள்கிறார்கள்.

பா.ஜ.க-வின் மகளிரணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “தி.மு.க அமைச்சர்கள் மீது மாதம் ஒரு முறை ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அண்ணாமலை கூறினார். அதற்கேற்ப, மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரத்துறைகளில் நடந்த முறைகேடுகளை அவர் வெளிச்சம் போட்டுக்காட்டியது வரவேற்பைப் பெற்றது. ஆனால், அடுத்தடுத்த அண்ணாமலையின் செயல்பாடுகள், குழாயடிச் சண்டை அளவுக்குத் தரம் தாழ்ந்ததைத்தான் யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார்மீது செருப்பு வீசப்பட்டதைத் தொடர்ந்து, ட்விட்டரில் அண்ணாமலைக்கும் தியாகராஜனுக்கும் இடையே சண்டை மூண்டது. ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிவருகிறார்கள்.

உச்சபட்சமாக, ‘என் செருப்புக்குக்கூட நிகரானவரல்ல பழனிவேல் தியாகராஜன்’ என அண்ணாமலை சொன்னது, அவர் வகிக்கும் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு அழகல்ல. அமைச்சர்கள் சேகர் பாபுவைப் ‘பிச்சையெடுக்கப் போகலாம்’, செந்தில் பாலாஜியை ‘அமலாக்கத்துறை விசாரிக்கும்’, ‘நாசர் ஜெயிலுக்குப் போவார்’, ‘மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு நடந்ததுதான் இங்கே தி.மு.க-வுக்கும் நடக்கும்’, ‘எங்களை எதிர்த்தால் உங்கள் தொழிலில் கை வைப்போம்…’ என மிரட்டிக்கொண்டே இருக்கவா அவரைத் தலைமையாக ஏற்று ஒரு கட்சி செயல்படுகிறது?

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது, தி.மு.க-வினர் முறைகேடு செய்ததாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் ட்விட்டரில் புகார் அளித்தார் அண்ணாமலை.

அதற்கு, ‘நடைபெறுவது உள்ளாட்சித் தேர்தல். புகாரை மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புங்கள்’ என்று பல்ப் கொடுத்தது இந்திய தேர்தல் ஆணையம். பெட்ரோல், டீசல் வரியை மாநில அரசு குறைக்க வலியுறுத்திப் போராட்டம் நடந்தது.

போலீஸார் கைதுசெய்யப்போகிறார்கள் என்ற பேச்சு பரவியதும், -ஆட்டோவில் ஏறித் தப்பினார் அண்ணாமலை.
ஒரு கட்சித் தலைவருக்கு இது அழகா?

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை குறித்தான விவாதம் எழுந்தபோது, ‘நிலுவைத் தொகை அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாடு அரசு பொய் கூறுகிறது’ என்றார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தமிழ்நாட்டுக்கு 6,733 கோடி நிலுவைத் தொகை வழங்கவேண்டியிருக்கிறது’ என்று போட்டுடைத்தார். எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதுகூட இன்னும் அண்ணாமலைக்குத் தெரியவில்லை” என்றனர் விரிவாக.

விளம்பர அரசியல்… கைவிட்ட டெல்லி… போட்டி நாற்காலி!

அண்ணாமலையின் இந்தச் சறுக்கலுக்கு முதன்மையான காரணமே, சுயவிளம்பர அரசியல்தான் என்கிறார்கள் அவருக்கு மிக நெருக்கமானவர்கள்.

பா.ஜ.க சீனியர் நிர்வாகி ஒருவர் நம்மிடம், “அண்ணாமலையை ஒரு மெகா தலைவராக ஆக்கும் முயற்சியில், சமூக வலைதளங்களில் அவர் குறித்த பதிவுகளை டிரெண்ட் செய்ய சென்னை அடையாறில் ஒரு ஐடி விங் செயல்படுகிறது. இவர்களுக்கும், நிர்மல்குமார் தலைமையில் இயங்கும் பா.ஜ.க ஐடி விங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதற்கு முன்பு இது போன்ற நடைமுறைகள் கட்சியில் இல்லை. தனக்கென கட்சியில் ஒரு கோஷ்டி, ஒரு ஐடி விங் என அண்ணாமலை தன்னை மட்டும் முன்னிறுத்துவதால், கட்சியின் நோக்கங்கள் சிதைந்துபோகின்றன.

அண்ணாமலைக்கு உறுதுணையாக இருப்பது தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ்தான். ஆனால், அவருக்கும் மோடிக்கும் இடையே உரசல் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், சந்தோஷின் ஆதரவாளரான அண்ணாமலையை டெல்லி எப்படி நம்பும்… தவிர, டெல்லியின் பல்ஸ் இன்னும் அண்ணாமலைக்குப் பிடிபடவில்லை.

பேச்சு மட்டும்தான் அண்ணாமலையிடம் இருக்கிறது. நிர்வாகரீதியாக, சித்தாந்தரீதியாக கட்சியைக் கொஞ்சமும் வளர்க்கவில்லை. வெறும் பேச்சு, சுயவிளம்பர அரசியல், அடாவடி கருத்துகள், காமெடியாகப் பொதுவெளியில் நடந்துகொள்வது எனத் தொடர்ச்சியாகச் சறுக்குவதால், அண்ணாமலை மீதான நம்பிக்கை மேலிடத்தில் மங்கிவிட்டது.

இன்னும்கூட அண்ணாமலை ஒரு போலீஸ் போலத்தான் நடந்துகொள்கிறார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சுத்தமாக அண்ணாமலைக்கு அரசியல் பிடிபடவில்லை. அதனால்தான், அவர்மீது நம்பிக்கை இழந்த மேலிடம், கமலாலயத்தில் தனி அறை ஒதுக்கி மாநில அரசியலில் கவனம் செலுத்துமாறு எல்.முருகனுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
வானதி சீனிவாசனுக்கு மத்திய தேர்தல் குழுவில் இடமளித்து முக்கியத்துவம் அளித்திருக்கிறது. மாநிலத் தலைவராக அண்ணாமலையின் நாள்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன” என்றனர்.

தன்னை ஒரு சூப்பர்மேன்போலச் சித்திரிக்க முயன்றார் அண்ணாமலை. ஆனால், அவர் காற்று `புஸ்ஸ்…’ என இறங்கிவிட்ட பலூன் என்று விமர்சிக்கிறார்கள் சொந்தக் கட்சியினரே.

.

…………………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to எப்படி இருந்த அண்ணாமலை, ஐபிஎஸ், – ஏன் இப்படி ஆனார் ….?

 1. புதியவன் சொல்கிறார்:

  திமுகவின் அஜெண்டாவாக விகடன் குழுமம் வெளியிட்ட கட்டுரையில் சாரம் தென்படவில்லை. பாஜகவின் முகமாக அண்ணாமலை செயல்படுகிறார். அளவுக்கு மீறிய விதமாக அவர் பொறுப்புகளைச் சுமக்கிறாரோ என்று தோன்றுகிறது. திமுக பிரச்சார பீரங்கி விகடன் குழுமம் சொல்வதால் அவர் இமேஜ் சரியாது. பொதுஜனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பாராளுமன்றத் தேர்தலின்போது தெரியவரும்.

  பொதுவாக பாஜக, மற்ற கட்சிகள் போன்று தலைவர்களை திடீரென்று மாற்றாது. ஒரு அஜெண்டாவுடன் அண்ணாமலையைக் களத்தில் இறக்கியிருக்கிறது. எல்லா விஷயங்களிலும் அவரால் மூக்கை நுழைப்பதோ, தீர்வு காண்பதோ சாத்தியமல்ல, அரசு பொறுப்பு இருந்தாலொழிய.

  //மாநிலத் தலைவராக அண்ணாமலையின் நாள்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன”// – மூன்று-ஆறு மாதங்களில் மாற்றம் நிகழ்ந்தால் விகடன் குழுமம் இதையவது நேர்மையாகச் சொல்லியிருக்கிறது என்று எடுத்துக்கொள்வேன். அப்படி நடக்கவில்லை என்றால், அவர்களும் 3000 ரூபாய் உ.பிஸ் குழுமத்தில் ஒன்று, காசை வாங்கிக்கொண்டு எழுதிய கட்டுரை என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்வோம்.

 2. ஆதிரையன் சொல்கிறார்:

  இந்த கட்டுரை சிரிப்பை தான் வரவழைக்கிறது . அண்ணாமலை மீட்டிங் நடக்கும் இடங்களில் கூடும் கூட்டத்தை இதுவரை எந்த பிஜேபி தலைவருக்கும் நான் பார்த்ததில்லை .ஆளும் கட்சியின் முழு கட்டுப்பாட்டிலேயே, எல்லா மீடியாக்களும் ஒத்து ஊதும் நிலையிலும், அவர் மீடியாக்களின் கவனத்தை மிக சிறப்பாகவே பெற்று, நாள்தோறும் ஆக்கபூர்வமான கேள்விகளை கேட்டு, திறம்பட ஒரு எதிர் கட்சியின் வேலையை அழகாகவே செய்து வருகிறார். அவரை எல்லா மீடியாக்களும் தவிர்த்தாலும், அவர் எழுப்பும் கேள்விகள் பல தளங்களில் எதிரொலித்து ,ஆளும் கட்சியினருக்கு மிக பெரிய தர்ம சங்கடங்களை உருவாக்கி கொண்டுதான் இருக்கிறார்.உண்மையில் ஆளும் கட்சியினர் இவருக்கு பயந்து தான் தங்கள் ஊழல்களை ரகசியமாக செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். அண்ணாமலை கேள்வி கேட்டால், ஊழல்களை கைவிடும் அளவிற்கு பயத்தை உருவாக்கியே வைத்திருக்கிறார். பகிங்கிர கொலை மிரட்டல் விட்டு பார்த்த கட்சியினர் கூட, அது எடு படாத நிலையில், அடக்கியே வாசிக்கின்றனர் .
  இதில் அவர் “புஸ்” ஆகி விட்டார் என்று எதை கூறுகிறார்கள் .அவர் ஒன்றும் ஆட்சி அதிகாரத்தில் இல்லை.வெறும் கேள்வி கேட்க்கும் இடத்தில் தான் உள்ளார்.தொடர்ந்து ஆக்கபூர்வமாகவே விமர்சனத்தை எழுப்புகிறார். அவர் தம் கேள்விகளுக்கு பயந்து, ஆளும் கட்சியினர் முன்பு போல் ஆட முடிவதில்லை என்பதே கண்கூடு .அவர் எதிர்த்தால், இவர்கள் சில திட்டங்களை கைவிடும் அளவிற்கு பயத்தை வெளிப்படுத்து கின்றனர் .அது ஊழலாகவோ,இந்து மத துவேஷமாகவோ எது வாகவும் இருந்தாலும் , அவர் எதிர்க்காதவரையே இவர்களால் செயல் படுத்த முடிகிறது.
  இதை தான் “புஸ்” என்று கூறி புளங்காகிதம் அடைகின்றனரோ ….
  விகடன் கடைசியில் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஒரு சாதாரண பிஜேபி தொண்டருக்கு, இவ்வளவு பெரிய கட்டுரையை எழுதி விசுவாசத்தை காட்டும் அவல நிலையில் உள்ளது.
  அண்ணாமலை அவர்களின் தெளிவை ஒவ்வொரு பேட்டிக்களிலும் காண முடிகிறது.எல்லோரும் (ஹ.ராஜா ,வானதி ஸ்ரீனிவாசன்,L .முருகன்)ஆவேசமாக பேட்டி கொடுத்து, பெயரை கெடுத்து கொள்ளும் இடங்களிலும்,மிக மிக தெளிவாக, சட்ட நுணுக்கங்களுடனும் ,புள்ளி விவரங்களுடனும் பேசும் இவரை, பேட்டி எடுப்பவரே , விவரங்கள் தெரியாத நிலையில் தடுமாறுவதை கவனித்து இருக்கிறேன் .ஒருவேளை இவர் மாற்ற பட்டாலும், இவர் சாதாரண தொண்டராக இருக்கும் நிலையிலேயே,ஒரு மிக பெரிய சலசலப்பை உருவாக்கி இருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.ஆளும் கட்சியினருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் , அண்ணாமலை அவர்கள் நிச்சயம் தூக்கியடிக்க படலாம். அப்பொழுது ஆளும் கட்சியினர் வெடி வெடித்து தங்களது சந்தோசத்தை வெளிப்படுத்தினால் , இவர் நிச்சயம் அவர்களை பயமுறுத்தியிருக்கிறார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி புரிந்துகொள்ளப்படும் .

 3. புதியவன் சொல்கிறார்:

  பாஜக தீர்க்கமான முடிவுகளை நோக்கித்தான் தமிழகத்தில் செல்லுகிறது என்று நான் அவதானிக்கிறேன். அண்ணாமலை, வன்னியர்/கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். பொதுவாக அந்தப் பகுதிகளில் (கொங்கு, வட தமிழகம்) வன்னியர்/கவுண்டர் மற்றும் தலித்துகளுக்கு இடையில் அரசியல் சச்சரவுகள் எப்போதும் உண்டு. அதனால்தான் திருமாவுக்கான தேவை இருக்கிறது. இதை balance பண்ணுவதற்காக முருகனையும் களத்தில் இறக்கியிருக்கிறார்கள், down the line கிருஷ்ணசாமி அவர்களையும் சேர்த்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். யாதவர்கள், நாடார்கள், முக்குலத்தோர் என்று முக்கியமான இனங்களையும் அரசியல் கட்சிகள் விட்டுவிட முடியாது. இந்த balanceஐ நோக்கித்தான் பாஜகவின் பயணமும், டிக்கெட்டுகளும் இருக்கும்.

  ஏதோ ஒரு பேட்டியில் எஸ் வி சேகர், தன்னால் பாஜக பயனடைந்தது என்பதுபோலப் பேசியிருந்தார். அவரால் எந்தக் கட்சியும் பயனடைய முடியாது, தமிழகத்தில். முன்னேறிய சமூகத்திற்கு, அதனின் சதவிகிதப்படி, 2 சீட்டுகள்கூடக் கொடுப்பது கடினம். அதனால்தான் மோடி தலைமையிலான பாஜக பழைய தலைகளைக் களைந்துவிட்டு, தமிழகத்துக்கு ஏற்ற மாதிரியான அரசியல் கணக்கைப் போட்டுவருகிறது. எப்போதாவது அவர்கள் திமுகவுடன் கூட்டுச் சேர்ந்தால், அப்போது பாஜக தமிழகத்தில் அழிவை நோக்கிச் செல்லும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.