மரணத்தை விட கொடூரமான விஷயம் –

……………..

கீழே இருப்பவை கவிஞர் வாலி சொன்னது –

………….

“அடக்கமாகும் வரை அடக்கமாக இரு” என்று
உணர்த்தும் சில நினைவுச் சின்னங்கள் .

1) “இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்
இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால்
நலமாயிருக்கும்..!’

இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன்
வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்..
அவருக்கா இப்படிஒரு சிரமம்…?

2) ஒரு கம்பெனியில் பாட்டு ‘கம்போஸிங்’.
எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன். கம்பெனி
மாடியில் குடியிருக்கும் ஒருவர் ‘ஹாய் வாலி ..!’
என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ”வாலி..!
உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் ‘பர்க்லி’
சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட
பிராண்ட் 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே…!”

எவ்வளவு பெரிய நடிகர்..! எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்..?

3) என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி. ஒரு நடிகை.
ஒரு காலத்தில் தமிழ்திரையுலகின் முடிசூடா அரசி.
என்னைப் பார்க்க வந்தவர், ‘வாலி சார்.. எனக்கு ஒரு
நாடகம் எழுதிக் கொடுங்க; ஒரு ட்ரூப் வெச்சு,
நடத்தலாம்னு இருக்கேன்’ என்று மெல்லிய குரலில்
சொன்னார்.

4) சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட்
பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய
தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை.
நான் கவனித்து விட்டேன்.

ஓடிப் போய் அவரருகே சென்று, ‘நமஸ்காரம் அண்ணா..!
நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ,
சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி’
என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை
வணங்குகிறேன்.

‘ஓ நீங்கதான் அந்த வாலியா..?’ என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள்
ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அவர்
என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.

அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில்நிலையத்தில்
அவர் ரயிலிருந்து இறங்கவிடாமல் மக்கள் அலை மோதினார்களோ அங்கே கவனிக்க ஆளில்லாமல்
தனியாக அவர் அமர்த்திருந்த நிலையை பார்த்து.

………………..

காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையை காட்டுகிறது.
எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை:-

1) கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், ‘கண்ணகி’க்கு
உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய
கதை, வசனகர்த்தா – திரு. இளங்கோவன்.

2) என்னிடம் சிகரெட் கேட்டவர் ‘மாடி வீட்டு ஏழை’யான திரு.சந்திரபாபு அவர்கள்.

3) நாடகம் எழுதித் தரக் கேட்டவர் – நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.

4) எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும்
ஈர்க்காமல் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தவர் –
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் –
திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.

இவர்களைவிடவா நான் மேலானவன்…..?

அன்று முதல் நான் —————————-
‘நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்.!

இதுதான் மனிதவாழ்க்கை.

  • இருந்தாலும் வாழ்ந்து கெட்டவர்களின் துயரம்
    மரணத்தை விட கொடூரமானது.
  • சமயங்களில் மரணம் தான் விடுதலையோ
    என்று ஏங்க வைத்து விடுமளவு குரூரமானது.

”””””””””””””””””””””””
பின் குறிப்பு –
மற்றவர்களைப்பற்றி வாசக நண்பர்களுக்கு
அறிமுகம் தேவை இல்லை; எனவே,
இளங்கோவன் பற்றி மட்டும் கீழே –
…………

…………..
இளங்கோவனின் இயற்பெயர் தணிகாசலம்.
எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘அம்பிகாபதி’
படத்தின் வாயிலாக திரை உலகில் அடி எடுத்து
வைத்தார். தமிழ் சினிமாவில் தமிழைப் பேச வைத்த
முதல் வசன கர்த்தா இளங்கோவன்.

பி.யூ.சின்னப்பா நடித்த ‘கண்ணகி’ படத்தின் மூலம்
புகழின் உச்சிக்கே சென்ற வசன கர்த்தா. தனது
படங்களுக்கு இளங்கோவன் வசனம் எழுதுவதாக
இருந்தால் மாத்திரமே நடிக்க ஒப்புக்கொள்வேன் என எம்.கே.டி.பாகவதர் கண்டிஷன் போடும் அளவிற்கு
விசேஷத் திறமை படைத்தவர்.

திரையுலகில் கலைஞர் கருணாநிதிக்கு அடுத்து எண்ணிக்கையில் அதிகப் படங்களுக்கு வசனம்
எழுதிய நபர்களில் ஒருவராக இளங்கோவனைச்
சொல்ல முடியும். 1937இல் ஆரம்பித்த இவரது
பணி 1957 வரையிலும் நீடித்தது. சுமார்
30 திரைப்படங்களுக்கு மேலாக, கதை, வசனம்
என்று இவரது பணி நீண்டது.

.
…………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to மரணத்தை விட கொடூரமான விஷயம் –

  1. புதியவன் சொல்கிறார்:

    நல்லா வாழ்ந்து, உயர்ந்த இடத்தில் இருந்து, பிறகு கெட்டுப்போவது, அதாவது ஏழையாக மாறுவது உண்மையிலேயே வருத்தமான விஷயம்தான். இதனால்தான் ‘கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே’ என்ற பழமொழியும் வந்தது.

    ஆனால் மேலே குறிப்பிட்டுள்ளவர்களில் முதல் மூவர், குடிக்கு அடிமை ஆனவர்கள். ‘குடிகார நண்பர்கள்’ அட்வைஸால், தொழிலை இழந்து, வாழ்க்கையை இழந்து…. ஏதேனும் காரணமில்லாமல் உயர்ந்த இடத்தில் இருந்து தலைகுப்புற விழுவது அரிது, அவர்களின் ‘நல்ல நேரம்’ முழுவதுமாக முடிந்திருந்தாலொழிய.

    இந்தக் குடிகார நண்பர்கள்தாம், நல்லா ஒழுங்கா ‘நடிகன்’ என்று பெயரெடுத்தவர்களை, சொந்தப் படம் எடு என்று சொல்லி, அவர்களைக் கடன்காரர்களாக ஆக்கிவிடுவது. இதனால் கிடைக்கும் நீதி, ‘குடிகாரன்’ எவனையும் நண்பராக வைத்துக்கொள்ளாதே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.