மூச்சு …..!!!

உண்மையில் மூச்சுப்பயிற்சிக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு.
ஆனால் பொதுவாகவே மூச்சுப்பயிற்சி பற்றிய எண்ணம்
உடற்பயிற்சி செய்யும் எண்ணம் போலத்தான். திடீர் திடீரென
உத்வேகம் பிறக்கும். சில நாள்களில் காணாமல்போகும்.

உடற்பயிற்சிக்கூடங்கள் நடத்தும் சிலருக்கு நமது இந்த
மனநிலைதான் முதலீடு. நூறு பேர் சந்தா கட்டி உடற்பயிற்சி
நிலையங்களில் சேர்ந்தால், அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்
அடுத்த சில தினங்களிலேயே அங்கு போவதை நிறுத்தி
விடுவார்கள். வேலைப்பளு, வெயில், மழை எனக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் பிரதான காரணம் அலட்சியமே.

மூச்சுப்பயிற்சி, அப்படியான ஒரு பயிற்சியாக இருந்துவிடக்கூடாது.
தினம் பழகும் பழக்கமாக இருக்கவேண்டும். ‘‘நாள் முழுதும்
சுறுசுறுப்பாக இருக்கிறேன். வேலைக்குப் போகிறேன். சமையல்
செய்கிறேன். வீட்டைச் சுத்தம் செய்கிறேன். நடைப்பயிற்சி
செய்கிறேன். இதையெல்லாம் தாண்டி, தனியாக மூச்சுப்
பயிற்சியும் செய்ய வேண்டுமா’ என்று கேட்டால்,
‘ஆமாம், நிச்சயம் செய்ய வேண்டும்.’

ஏனென்றால், சாதாரண உடற்பயிற்சிகள்
செய்யும்போது நுரையீரல் விரிவடைவதைவிட மூச்சுப்பயிற்சி
செய்யும்போது அது அதிகமாக விரிந்து சுருங்கும். அதனால்
உள்ளிழுக்கும் காற்றின் அளவும் கால அளவும்,
வேகமும் மாறுபடும்.

நம் உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஆக்சிஜன் அவசியம்.
மூளைக்கு அதன் தேவையைவிடக் குறைவாக ஆக்சிஜன்
செல்லும்போது மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும் தன்மையை
இழக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் ஒரு விஷயத்தை
நீண்ட நேரம் ஊன்றிக் கேட்கவோ, பார்க்கவோ, படிக்கவோ,
சிந்திக்கவோ முடியாமல் போகிறது.

வெளிப்பார்வைக்கு ஒருவர் எவ்வளவு கட்டுமஸ்தான உடல்
கொண்டவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால்
ஒருவரின் Lung Capacity தான் அவரது உண்மையான
பலத்தை தீர்மானிக்கிறது.

நுரையீரல் முழுமையாக இயங்க இந்த மூச்சுப்பயிற்சி
மிக அவசியம். முறையாகப் பிராணாயாமம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் சிரமம் பார்க்காமல் தகுதியான
நபர்களிடம் சென்று பயிற்சி பெறுவது நல்லது.
நிச்சயம் பலன் கிடைக்கும்.

‘இங்கே சைலன்ஸ் என்பதையே சத்தமாகத்தானே
கூற வேண்டியிருக்கிறது’ என ஒரு திரைப்பட வசனம் வரும்.
பல சமயங்களில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் அருமையை
உணர்த்த ஒரு மாபெரும் துயரம் தேவையாய் இருக்கிறது.

——-நமக்கு நுரையீரலின் அருமையை உணர்த்தவே
வந்த கொரோனா என்கிற இந்தப் பெருந்தொற்றுபோல.

மற்ற உடற்பாகங்களைப் போல நுரையீரல் பற்றி நாம்
அதிகம் பேசுவதுமில்லை. ‘Taken for granted’ ஆக
நுரையீரலை எடுத்துக்கொள்ளக்கூடாது, அதற்குப் பயிற்சிகள்
எவ்வளவு அவசியம் என்பதையெல்லாம் கொரோனா
இப்போது புரிய வைத்திருக்கிறது.

மூச்சு சம்பந்தப்பட்ட சில தகவல்கள் –

நமது உடலில் உள்ள ரத்தத்தின் மொத்த அளவு –
சுமார் 5 முதல் 6 லிட்டர்கள் .

இதயத்தின் எடை சுமார் 300 கிராம் தான்.

ஆனால், இந்த இதயத்தின் மூலம் வெளிவரும் ரத்தம் –
ஒன்றரை நிமிடத்திற்கு ஒருமுறை
உடலைச் சுற்றி வந்து விடுகிறது…..

ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் 10 லிட்டர் காற்றை
உள்வாங்கி வெளியிடுகிறோம்.

தினமும் நாம் ஏறத்தாழ 23,000 தடவை
மூச்சு விடுகிறோம்…..!!!

மூச்சுப்பயிற்சி செய்ய குழந்தைகளை மட்டும்
கட்டாயப்படுத்தாமல் அவர்களோடு நாமும் சேர்ந்து
செய்ய வேண்டும்.. அது ஒரு ஆனந்த அனுபவமாக இருக்கும்.
உடம்பில் தெம்பும், மனதில் அமைதியும்,
சிந்தனையில் தெளிவும் ஒருசேரப் பிறப்பதை மூச்சுப்பயிற்சி
செய்யும்போது நிச்சயம் உணர முடியும்.

கொஞ்ச நாட்கள் தொடர்ந்து பழகி விட்டோமானால்,
பிறகு அது நம்மை விடாது. தினமும் பண்ணச் சொல்லும்…
தானாகவே வழக்கமாகி விடும்.

என்ன – இன்றே ஆரம்பித்து விடலாமா….?

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.