ராஜீவ் காந்தியுடன் எனக்கு ஏற்பட்ட அரை நாள் பழக்கம்… !

………………..

இன்று ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் என்பது
செய்திகளில் பார்த்தபின் நினைவு வந்தது.

இந்த சமயத்தில் – ஏற்கெனவே 2010-ல் விமரிசனம்
வலத்தளத்தில் நான் எழுதியிருந்த ஒரு இடுகை
பற்றியும் நினைவிற்கு வந்தது….

எந்தவித பாரபட்சமும் இல்லாமல் –
ஜஸ்ட் ஒரு அனுபவம் – என்கிற முறையில்
நான் எழுதிய இடுகை அது….அதைத் தேடியெடுத்து,
இங்கே மறுபதிவு செய்கிறேன்…..

……………………………………

ராஜீவ் பிரதமர் ஆனது நவம்பர் 1984 ல்.
அதற்கு சுமார் 6 மாதங்கள் முன்னதாக கிடைத்தது
அந்த வித்தியாசமான அனுபவம்.

ராஜீவ் 6 மாதங்களில் இந்தியாவின் மிக மிக இளைய
வயதுடைய பிரதமர் ஆகப்போகிறார் என்பதை
யாரும் அறியாத காலம் அது !
அவரது அன்னை இந்திரா காந்தியின் திடீர் மறைவை
யாரால் தான் முன்கூட்டியே யூகித்திருக்க முடியும் ?

அப்போது ராஜீவ் வெறும் M.P. மட்டுமே.
சஞ்சய் காந்தியின் இறப்பிற்கு பின்னர் அன்னைக்கு
உதவி செய்வதற்காக, தன் பைலட் பணியைத்
துறந்து விட்டு அரசியல் வாழ்வை அப்போது தான்
துவக்கி இருந்தார்.

பாதுகாப்பு அமைச்சராக அப்போது இருந்தவர் ஆர்.வி.
என்று அன்புடன் அழைக்கப்பட்ட தமிழ் நாட்டைச்சேர்ந்த
ஆர்.வெங்கட்ராமன் அவர்கள்.பிற்காலத்தில் அவரே
ஜனாதிபதியாகவும் ஆனார்.

பாதுகாப்பு அமைச்சர் ஆர்வி பங்கு கொள்ளும்
நிகழ்ச்சி ஒன்றுக்கு
நான் சார்ந்திருந்த அலுவலகம்
ஏற்பாடு செய்திருந்தது.
வரவேற்பு மற்றும் பிற ஏற்பாடுகளை
கவனித்துக்கொள்ளும் பொறுப்பில்
நானும் இன்னும் சிலரும் இருந்தோம்.

நிறுவனத்தின் தலைவர் -ஜி.எம். – அதற்கு முன்னால்
8 ஆண்டுகள் அயல்நாட்டில் இருந்து விட்டு
அப்போது தான் அந்த நிறுவனத்திற்கு
பொறுப்பேற்றிருந்தார். இந்திய அரசியல்வாதிகள்
பற்றி அவருக்கு அதிகமாகத் தெரியாது.
அங்கிருந்த அனைவரும் அநேகமாக
வங்காளிகள் மற்றும் வட இந்தியர்கள்.

காலை 8.30 மணி. விர் விர்ரென்று கார்கள் வந்தன.
போர்டிகோவில் வரவேற்புக்குழு சார்பாக
நின்றிருந்தேன் நான்.
ஆர்வியுடன், நிகழ்ச்சிக்கு சம்பந்தப்படாத,
நாங்கள் சற்றும் எதிர்பாராத விருந்தாளி
ஒருவரும் வந்திருந்தார்.
ஆம் – ராஜீவ் காந்தி தான்.
அலுவலக நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அமைச்சரே
முக்கிய விருந்தினர் என்பதால் –
அனைவரும் கவனிப்பும் ஆர்வியைச் சார்ந்தே
இருந்தது.

காரை விட்டு வெளியே வந்த
ஆர்வி அவர்கள் சற்று தயக்கத்துடன் யாரையோ
தேடுவதைப்போல் சுற்றும் முற்றும் பார்த்தார்.
4-5 அடி தூரத்தில்
இருந்த என் முகத்தைப் பார்த்ததும் மலர்ந்தார்.
முகத்தை அசைத்து, ஜாடையால்
என்னை அருகில் வரும்படி அழைத்தார்.
என்ன பெயர் என்று கேட்டார். சொன்னேன்.

அதற்குள் என் பேட்ஜையும்,
அடையாள அட்டையையும் கவனித்தார்.
நான் தமிழ் நாட்டைச்சேர்ந்தவன்
என்பது உறுதியானவுடன் மெல்லிய குரலில்
தமிழில் என்னிடம் சொன்னார்.
“என்னை கவனிப்பது
முக்கியமில்லை. என் கூட வந்திருப்பவரை
நல்ல முறையில் கவனிக்க ஏற்பாடு செய்யுங்கள்”
(ராஜீவின் பெயரை உச்சரிக்கவில்லை அவர்.
பெயரைச் சொன்னால் மற்றவர்கள் புரிந்து கொண்டு
விடுவார்கள் என்பதால் – “கூட வந்திருப்பவர்”
என்று குறிப்பாகச் சொன்னார் )

ராஜீவ் காந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி
அவர் சொன்னதன் பின்னணியை உடனே புரிந்து
கொண்டாலும், ஆர்வி ரகசியமாக யாரும் உணராதபடி
தமிழில் என்னிடம் சொன்ன விதம் எனக்கு மனதுள்
சிரிப்பை வரவழைத்தது. “ஓகே சார்” என்று அவரிடம்
சொல்லி விட்டு உடனடியாக
அங்கிருந்து நகர்ந்தேன் நான்.

நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான
ஜெனரல் மேனேஜர் அருகே சென்று, அவருக்கு
புரிகிற வகையில் ஆர்வி அவர்களின் விருப்பத்தை
எடுத்துச்சொன்னேன்.

பின்னர் ராஜீவுக்கு ராஜ மரியாதை அங்கே.
ஆர்வியின் முகத்தில் நிம்மதியும் –
மகிழ்ச்சியும்.

மதியம் 3 மணி வரை அங்கேயே தான்
இருந்தார் ராஜீவ். பகல் உணவும் அங்கேயே தான்.
நானும் அவரது நடவடிக்கைகளை
கவனித்துக்கொண்டு அருகிலேயே
தான் இருந்தேன்.
சில சமயங்கள் அவருடன் பேசினேன் –
நிகழ்ச்சி பற்றியும், நிறுவனம் பற்றியும்
அவர் கேட்ட சில விவரங்களைக்
கூறினேன்.எங்கள் உரையாடல் பொதுவாக
ஆங்கிலத்திலும்,
சில சமயம் இந்தியிலும் இருந்தது.
மீதி நேரங்களில் அவர் பேசுவதையும்,
மற்றவர்களுடன் பழகுவதையும்
பார்த்துக்கொண்டிருந்தேன்.

அந்த அரை நாள் அனுபவத்தில்
நான் கண்ட ராஜீவ் பற்றி –

ஆறு அடிக்கு மேல் உயரம்.
செக்கச்சிவந்த நிறம்.
ஷேவ் செய்யப்பட்ட, கவர்ச்சியான முகம்.
வெள்ளை வெளேரேன்று குர்தா, பைஜாமா.
அப்போது தலையில் நிறைய முடி இருந்தது.
மிகவும் வசீகரமான குரல்.

எதையும் உடனடியாகப் புரிந்து கொள்ளக்கூடிய
ஆற்றல் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது.

சாதாரணமாக நம் அரசியல்வாதிகள்
முகத்தில் இருக்கக்கூடிய இறுக்கமோ,
கபடமோ அவர் முகத்தில் காணப்படவில்லை.
மனிதர் வெளிப்படையாக இருந்தார்.
(அவர் அரசியலுக்கு வந்து அப்போது
6 மாதம் கூட ஆகவில்லை !)

நிறைய தன்னம்பிக்கை –
அதற்கேற்ற அணுகுமுறை !

மற்றவர்கள் யாரும் அவருக்கு
சொல்லிக்கொடுக்க
முயல்வதை அவர் விரும்பவில்லை.
எதையும்,
எதைப்பற்றியும்,
தானாகவே தெரிந்து கொள்ள விரும்பினார்.

“don’t try to teach me –
just answer my questions –
that is enough”

என்பதே அவரது அணுகுமுறையாக இருந்தது.

எந்தவித களங்கமும் இல்லாத,
வெளிப்படையான அவரது அணுகுமுறை அன்று
என்னை வியக்க வைத்தது.
மாலையில் இதைப்பற்றி
என் நண்பர்களிடம் சொல்லி வியந்து போனேன்.

ஆனால் …. 4 ஆண்டுகளுக்குப் பிறகு
இதே ராஜீவை, பிரதமராக – ஒரு மணி நேரம் நீடித்த
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் காண
நேர்ந்த போது –
மீண்டும் வியந்து போனேன்.

இந்திரா காந்தியின் மறைவிற்குப் பிறகு
ஏற்பட்ட மாற்றங்களும்,
தீவிர அரசியலும்,
ஆட்சி அதிகாரமும்,
கண்ணை மூடிக்கொண்டு மக்கள் அவரை
ஆதரித்த விதமும் (அனுதாபமும்) சேர்ந்து
அவரை எந்த அளவிற்கு
மாற்றி விட்டன என்று நினைத்து –

மீண்டும் பிரமித்தேன் !
ஆம் – இப்போது நான் பார்த்தது
சகல சாமர்த்தியங்களுடன் கூடிய ஒரு
தேர்ந்த அரசியல்வாதியை !
4 ஆண்டுகளுக்குள் தான் எத்தகைய
மாற்றங்கள் அவரிடத்தில் !

.
……………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to ராஜீவ் காந்தியுடன் எனக்கு ஏற்பட்ட அரை நாள் பழக்கம்… !

  1. புதியவன் சொல்கிறார்:

    ராஜீவ் காந்தியை நினைத்தால், அவரைப்பற்றிப் படித்தவைகள் நினைவுக்கு வருகின்றன. மிக நல்ல மனிதராகத்தான் அவரைப்பற்றிய என் அபிப்ராயம். அரசியலில் பலவிதமான முடிவுகள் எடுக்கவேண்டியிருக்கும். சிலருக்கு அல்லது பலருக்குப் பாதகமான முடிவுகளாகவும் இருக்கக்கூடும். ஆனால் அதைச் செய்வது ‘பிரதமர்’ என்ற பொறுப்பில் அல்லது ‘கட்சித் தலைவர்’ என்ற பொறுப்பிலிருப்பவர். அதனால் அதனை நாட்டின் முடிவு என்றுதான் நாம் கொள்ளவேண்டும்.

    ராஜீவ், அரசியலுக்கு வந்த பிறகும் எளியவராகவே இருந்தார். அவரைப் பற்றி குண்டுராவ் மற்றும் பலர் எழுதியது அதையொட்டியதாகவே இருந்தது. மீண்டும் பதவிக்கு வந்திருந்தால் இன்னும் மெச்சூர்டாக இருந்திருப்பார்.

    தான் அரசியலுக்கு எந்தக் காலத்திலும் வரப்போவதில்லை என்று நினைத்துத்தான் அவரின் சொந்த வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருந்திருப்பார். ஆனால் விதி அவரது வாழ்க்கையில் அவரைத் தொடர்ந்து வந்திருந்திருக்கிறது.

    காலம் எல்லா அரசியல்வாதிகளையும், அவரது அப்போதைய முக்கியத்துவம் முடிந்தவுடன் மறந்துவிடும். ‘ஜெ’ உடனான கூட்டணியை முடிவைப் பற்றி தன் தமிழகத் தலைவர்களிடம் தெரிவிக்கும்போது, ‘alliance is with that tough lady’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.