பாராட்டுகள்… வெல்டன் திரு.பி.டி.ஆர்………….!!!

…………………….

பல மாநிலங்களில் நிறைய இலவசங்கள் வழங்கப்
படுகின்றன. இலவசங்கள் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை
பாதிக்கின்றன…. இலவசங்களை வழங்கும் கட்சிகளின்
உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் – என்று பாஜகவை வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடுத்திருக்கிறார்.

முதல் கட்ட விசாரணையின்போது, மத்திய அரசும்
இதற்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்திருக்கிறது.

இது குறித்து, எல்லா கட்சிகளும் கருத்து தெரிவிக்கலாம்.
மத்திய அரசும் இதில் கருத்து தெரிவிக்க வேண்டும்.
அனைத்து தரப்பு நிலைகளையும் விசாரித்து அறிந்த
பின்னரே இதில் முடிவு எடுக்க முடியும் என்று கூறி உச்ச நீதிமன்றம் வழக்கை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது.

இந்த இலவசங்கள் மற்றும் இதில் வெவ்வேறு கட்சிகளின்
நிலை குறித்து, டெல்லி செய்தி தொலைகாட்சிகள்
விவாதங்களை நடத்தி வருகின்றன.

நேற்று இந்தியாடுடே டிவி நிகழ்த்திய தொலைக்காட்சி
விவாதத்தில், கருத்து கூற தமிழக நிதியமைச்சர்
திரு.பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களை
அழைத்தது….

சாதாரணமாக பெரும்பாலும், வட மாநிலத்தவர்களே
பங்கு பெறும் இத்தகைய விவாதங்களில்,
கிடைத்த குறுகியகால அவகாசத்தில், திரு.பி.டி.ஆர்.
விவாதித்த விதம் – நீண்ட நாட்களுக்குப் பிறகு
மிகுந்த திருப்தியைத் தருகிறது.

நம்மைப் பொருத்தவரையில் – இலவசங்களை அவ்வளவு சுலபமாக வேண்டும் என்றோ, கூடவே கூடாது என்றோ
ஒட்டுமொத்தமாகச் சேர்த்து முடிவு கட்டி விட முடியாது.

அடித்தட்டு மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் அவசியமான
இலவச திட்டங்கள் நிறைய தமிழகத்தில் செயல்பாட்டில்
இருக்கின்றன….

கல்வி, மற்றும் மருத்துவத் துறைகளில் இலவசம் மிக மிக
அவசியம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு –
இலவச யுனிஃபார்ம், புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள்,பை,
செருப்பு, சைக்கிள், லேப்டாப், காலை உணவு, மதிய உணவு,
என்று படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு எல்லாவற்றையுமே இலவசமாக கொடுப்பதில் எந்தவித தவறும் இல்லை.

அதே போலத்தான் மருத்துவத் துறையும்.
அடித்தட்டு மக்களுக்கு முற்றிலுமாக இந்த வசதிகள்
இலவசமாக கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில்
எந்தவித ஐயமும் நமக்கு இருக்க முடியாது.

அதே போல், சமுதாயத்தில் மிக ஏழ்மை நிலையில்
இருக்கும் பெண்களுக்கு, விதவைகள் – கணவரால்
கைவிடப்பெற்றவர்கள், முதியவர்கள் – ஆகியோருக்கும்
அரசின் உதவி மிக மிக அவசியம்.

அதே சமயம், ஓட்டுகளை கவர்வதற்காக இலவச டிவி,
இலவச செல்போன் என்று வரிசையாக போட்டி போட்டுக்
கொண்டு அரசியல் கட்சிகள் அறிவிப்பதை ஏற்பதற்கில்லை.

இதற்காக, ஒட்டுமொத்தமாக இலவசங்களை ரத்து செய்
என்று சொல்வதும் நடக்கக்கூடிய காரியமல்ல… மேலும் –
இதை யார் தீர்மானிப்பது ….. பாஜக வக்கீல் ஒருவரா….?
பாஜக மத்திய தலைமை மட்டுமா…?

முக்கியமாக – நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய
விஷயமே இல்லை இது. சட்டமன்றங்களிலோ, பாராளுமன்றத்திலோ விவாதித்து தீர்மானம் எடுக்க வேண்டிய கொள்கை விஷயம்…..

அதே போல் – இந்த விஷயத்தில்
மத்திய அரசு, மாநில அரசுகளை குறைகூறவோ, உத்திரவிடவோ
முடியாது….

இது குறித்து பாராளுமன்றத்தில் விவாதித்து, அனைத்து
கட்சிகளும் கலந்தோசித்து ஒரு நியாயமான முடிவிற்கு
வரலாம்…. தேவைப்பட்டால், தேர்தல் விதிகளில் கூட
திருத்தங்களை கொண்டு வந்து நிறைவேற்றலாம்.
தேர்தல் கமிஷன் கூட இது குறித்து பரிந்துரைகளைச்
செய்யலாம்.

நேற்றைய இந்தியாடுடே டிவி-யில்,
திரு.பி.டி.ஆர். அவர்களின் ஆங்கில விவாதம்
மிக அருமையாக இருந்தது… பல மாநிலங்களிலிருந்தும்
இந்த விவாதத்தில் பிடிஆர் அவர்களின் நிலை
மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது…..

அந்த காணொளியை , ஏற்கெனவே பார்க்காத –
விமரிசனம் தள வாசகர்களுக்காக கீழே பதிகிறேன்…..

…………………………….

.
………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to பாராட்டுகள்… வெல்டன் திரு.பி.டி.ஆர்………….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    PTR சொல்வது, சுப்ரீம் கோர்ட்டைப் பொறுத்த வரையில் சரி. கோர்ட், நாட்டை ஆளுபவர்கள் என்ன செய்யவேண்டும், எப்படி ஆளவேண்டும் என்று சொல்லும் தகுதி படைத்தது அல்ல. எப்படித் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று நியாயமான மக்களின் எண்ணங்களை, பலப் பல வழக்குகளில் எப்படி வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாதோ, அதுபோன்று அரசை எப்படி நடத்துவது என்பதைச் சொல்ல, நீதிமன்றங்களோ, நீதியரசர்களோ qualified கிடையாது. அவர்கள், சட்டப் புத்தகத்தைப் படித்து, அதில் உள்ள ஓட்டைகளை உபயோகித்து ஒருவன் தப்பினாலும், கண்ணை மூடிக்கொண்டு, அவர்கள் சார்பாகத் தீர்ப்பளிப்பதில் மட்டும்தான் qualified. கண்ணுக்கு எதிராகத் தெரியும் நியாயத்தைக்கூட எடுத்துச் சொல்லி அவர்களால் நீதி வழங்கமுடியாது.

    PTR சொல்வதில், இலவச தொலைக்காட்சியைப்பற்றிச் சொல்லவில்லையே. அது கருணாநிதி மற்றும் அவருடைய உறவினர்களின் லாபத்துக்காகச் செய்யப்பட்டது இல்லையா?

    தமிழ்நாடு நம்பர் 1 மாநிலம் என்றால், ஏன் 21,000 கோடி ரூபாயை மின்சாரத்திற்கு இன்னும் outstandingஆக வைத்துள்ளது? தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தாலே மின் தட்டுப்பாடு வரும் மர்மம் என்ன?

    தமிழகத்தின் கட்டாயச் செலவு (committed expenditure) 65 சதத்திற்கும் அதிகம் (பென்ஷன் போன்ற பல செலவுகள்). இதற்கு பிடிஆர் கடந்த 13 மாதங்களில் என்ன செய்திருக்கிறார்? தேர்தல் அறிக்கையிலேயே இலவசங்கள், பழைய பென்ஷன் என்று பலவற்றையும் சொன்னபோது இவர் கட்சியில் இல்லையா? அல்லது பதவியேற்றுக்கொண்டதும் தமிழக நிதிநிலைமை மிகவும் மோசம் என்று சொன்னாரே (ஏப்ரல் 2021ல்). அதற்குப் பிறகு தமிழகத்தின் கடன், 2 லட்சம் கோடி (அல்லது 1 1/2 லட்சம் கோடிக்கும் மேல்) அதிகமானதன் மர்மம் என்ன?

    ஏப்ரல் 21ல் தியாகராஜன் சொன்னது, //“The fiscal situation of the state is in dire circumstances, in part due to extraneous circumstances, but in substantial measure due to structural flaws in governance which have not been rectified in a timely manner. The COVID pandemic has greatly exacerbated the situation and highlighted how vulnerable Tamil Nadu currently is. There are no buffers left. No fiscal headroom that will allow for delay.”// – 16 மாதங்களில் அவர் என்ன நடவடிக்கைகள் எடுத்து நிலைமையைச் சீர் செய்துள்ளார், 2 லட்சம் கோடி கடன் வாங்கியதைத் தவிர?

  2. ஆதிரையன் சொல்கிறார்:

    அய்யா
    படித்தவர்கள் தானா அனைவரும்.இன்று தமிழகத்தில் விளையாடும் இலவசங்களை போல் இந்தியாவில் எங்கும் காணமுடியாது.இங்கு வருமான வரி கட்டுபவர்களின் வரி பணம் முழுவதும் கடைசியில் உழைக்காத சோம்பி திரியும் கூட்டத்திற்கு தான் பகிர்ந்தளிக்க படுகிறது .தேர்தலை மனதில் கொண்டு,இங்கு திராவிட கட்சிகள் கொண்டு வந்த இந்த அபாயகரமான இலவச அறிவிப்புகள் உண்மையில் நமது மாநிலத்தை இலங்கையின் நிலைக்கு தான் இட்டு செல்லும்.யார் கேட்டார்கள் 100 யூனிட் இலவச மின்சாரம்.தான் உபயோக படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணம் கட்ட வக்கு இல்லாதவனுக்கு எதற்கு மின்சாரம்.இலவச காஸ் அடுப்பு,இலவச பஸ் கட்டணம்,இலவச லேப்டாப்,இலவச டிவி,பேன்,கிரைண்டர்,இலவச வேட்டி ,இலவச சேலை,இலவச கடன் தள்ளுபடி,.அப்பப்பா இதில் புளங்காகிதம் அடைவதற்கு என்ன இருக்கிறதோ ?
    இந்த தேர்தல் விளையாட்டு ,ஒவ்வொரு தேர்தலிலும் மென்மேலும் விசுவரூபம் பெற்று, நம்மை திவாலாக்குவது உறுதி. இங்கு கடைசியில் வரி கட்டுபவனின் , உழைப்பை, உழைக்காத ஒரு கூட்டம் சுரண்டி சொகுசு காண்கிறது. ஒவ்வொரு தேர்தல்களிலும் , இப்பொழுது நமது தமிழக கட்சிகள் மென்மேலும் புதிது, புதிதாக இலவசங்களை அறிவிக்க வேண்டிய அபாயகரமான சூழலில் சிக்கியுள்ளன. இதை ஆதரிப்பது , மேலும் அபாயகரமானது .ஓட்டுக்கு பணம் பெற்றுக்கொண்டு, ஒட்டு போடும் நிலையில் உள்ள நம் மக்களும் இதை விட ஆபத்தானவர்கள்.நிச்சயம் இதற்க்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும் .
    நல்ல வேலை, dmk கட்சி, தான் அறிவித்த பல இலவச திட்டங்களை நடைமுறை படுத்தவில்லை .என்னதான் அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று கூறினாலும்,நான் இதற்காக அவர்களை பாராட்டவே விரும்புகிறேன் .

  3. புதியவன் சொல்கிறார்:

    கல்ஃப் தேசங்களில் ஒன்றான பஹ்ரைனில், கோதுமை மாவு, ரவை, மைதா போன்ற சில, கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சப்சிடைஸ்ட் விலையில் வழங்கப்படுகிறது. இதனை அரசே அதன் மில்களில் அரைத்து கடைகள் மூலம் விநியோகிக்கிறது. இது சமூகத்தில் சிறிது ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்காக வழங்கப்படுகிறது (ஆனால் மற்றவர்கள் வாங்கிக்கொள்ளவும் தடையில்லை). இதனை வைத்து கபூஸ் எனப்படும் ரொட்டியை (களிமண் அடுப்பில்) தயாரிக்கிறார்கள். நம் nan sizeஐ விடப் பெரிதான ரொட்டி 3 ரூபாய் விலையில் (அங்குள்ள பணத்திற்கு அது கிட்டத்தட்ட இலவசம் போலத்தான்). இதைத் தவிர இந்திய/பாகிஸ்தானிய ரவை, கோதுமை மாவு, All purpose flours (Maida) போன்றவை ரெகுலர் விலையில் கிடைக்கின்றன. நான் பலமுறை அரசின் கோதுமை மாவு, ரவை, மைதா ஆகியவற்றை உபயோகித்திருக்கிறேன்.

    ஆனால் ஒவ்வொரு குடும்பப் பெண்ணிற்கும் மாதம் 1000 ரூபாய் என்பது எந்த விதமான இலவசம்? என்னைப் பொருத்தவரையில் நியாயமான இலவசம் என்பது,
    1. மருத்துவம் 2. கல்வி 3. தொலைக்காட்சி/ஃப்ரிட்ஜ் போன்றவை இல்லாத, குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள், உடை, கஷ்டமான காலங்களில் போர்வை, கம்பளி போன்றவை விநியோகிப்பது
    ஆகியவைகள்தாம். பேருந்துக் கட்டணங்கள், மின்சாரம் போன்ற பலவற்றை actual priceல் தகுதி உள்ளவர்களுக்குக் கொடுக்கலாம்.

    அரசு, ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு, 2000ரூ என்றெல்லாம் அறிவித்திருந்தபோது, காரில் வந்து இவற்றை வாங்கிக்கொண்டு சென்றவர்களை நான் பார்த்திருக்கிறேன். இத்தகைய இலவசங்கள் தடை செய்யப்படவேண்டும். மதத்தை வைத்து, ‘புனித யாத்திரைக்குப் பணம்’, ‘மௌல்விக்களுக்கு அரசு செலவில் வாகனம்’ , கோவிலை நிர்வகிக்கும் ஆபீசர்களுக்கு விலை உயர்ந்த கார் என்பதெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? திமுக, தங்கள் அறக்கட்டளை மூலமாகப் பணம் கொடுப்பதைக் கேள்விகேட்பது இயலாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.