சட்டமாவது, கடமையையாவது, செய்வதாவது….!!!

………………………

படித்ததிலிருந்து கொஞ்சம் –

சினிமா வட்டாரத்தைக் கலங்கடித்திருக்கும் வருமான
வரித்துறை ரெய்டின் பெரும் பகுதி, ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ அன்புச் செழியனைத்தான் குறிவைத்திருக்கிறது. “தமிழ் சினிமாவுல அன்பு ஒரு முக்கியமான கை. கடந்த
20 வருஷத்துல கோலிவுட்ல வெளியான பெரும்பாலான
படங்கள் இவர் ஃபைனான்ஸ்லதான் வெளியாகியிருக்கும்.
ஒரு போன் பண்ணினா போதும்… இரண்டு மணி நேரத்துல
50 கோடி ரூபாய்கூட ரெடி பண்ணித் தருவார் அன்பு.

ஆனா – அதுக்கான ஆவணங்களை கச்சிதமாக வாங்கிவெச்சுக்குவார். சொன்ன நேரத்துல பணத்தைத்
திருப்பிக் கொடுக்கலைன்னா, அன்புவிடம் அன்பை
எதிர்பார்க்க முடியாது” என்கிறார்கள் மூத்த
தயாரிப்பாளர்கள்.

பல அரசியல் கட்சிகளிலும் அன்புவுக்கு நெருங்கிய
நண்பர்கள் உண்டு. சமீபத்தில் நடந்து முடிந்த அவர் மகள் திருமணத்தில்கூட, பெரும்பாலான முக்கியஸ்தர்களும் வாழ்த்துவதற்கு வரிசை கட்டினார்கள். செல்வாக்கின்
உச்சத்தில் இருக்கும் அன்புவை இந்த ரெய்டில் குடைந்தெடுத்திருக்கிறது வருமான வரித்துறை.

ஐ.டி ரெய்டில் அன்பு சிக்குவது இது முதன்முறையல்ல.

விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் வெளியாவதற்குச்
சில நாள்கள் முன்னதாக, செப்டம்பர் 2015-ல் அன்பு
தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
“லாட்டரி பணம் சினிமாவில் முதலீடு செய்யப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

தவிர, `புலி’ படத்துக்கு அன்புச்செழியன் ஃபைனான்ஸ் செய்ததாகவும் சந்தேகம் எழுந்தது. அதனடிப்படையில்
ரெய்டு நடத்தினோம்” என வருமான வரித்துறை
அதிகாரிகள் அப்போது காரணங்களை அடுக்கினார்கள்.

`பிகில்’ படம் வெளியான பிறகு, பிப்ரவரி 2020-ல் அன்புச்செழியன், ஏ.ஜி.எஸ் சினிமாஸ், நடிகர் விஜய் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தியது வருமான வரித்துறை. அன்புவுக்குத் தொடர்புடைய 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 77 கோடி
ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. இது போக,
பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனைக்கான
ஆவணங்களும் சிக்கின. இந்த வழக்கே இன்னும்
முடிவுறாத நிலையில், அடுத்த ரெய்டை ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி நடத்தியிருக்கிறது வருமான வரித்துறை.

கோலிவுட்டைக் குறிவைத்திருக்கும் இந்த ரெய்டுகள்
குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சிலரிடம்
(???? !!!! )பேசினோம்.

“வருமான வரித்துறை சோதனைக்குள்ளாகும் ஒருவர், முடக்கிவைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள், ஆவணங்கள், விசாரணைகள் என அதிலிருந்து மீண்டு எழுவதற்கே ஒரு வருடமாகிவிடும்.

ஆனால், 2020-ல் ரெய்டுக்குள்ளான அன்புச்செழியன்,
அசராமல் அடுத்தடுத்து படங்களை விநியோகிக்க
ஆரம்பித்தது எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

-அதிலும், `விக்ரம்-2’ திரைப்படம் தொடர்பான
ஒரு ‘டீல்’தான் இந்த ரெய்டுக்கே அஸ்திவாரம்.

அன்புச்செழியனுக்கும், நடிகர் கமல்ஹாசனுக்கும்
இடையே கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது.
அதன் அடிப்படையில், தான் நடித்த ‘விக்ரம்-2’ திரைப்படத்துக்கான விநியோக உரிமையை அன்புச்
செழியனிடம் வழங்கியிருக்கிறார் கமல். எல்லாம்
முறையாகச் சட்டப்படிதான் நடந்திருக்கின்றன.

ஆனால் – `விக்ரம்-2’ படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கேட்டபோது, கமலுக்கும் அன்புச்
செழியனுக்கும் இடையிலான கணக்கைத் தாங்கள் சரிசெய்வதாகச் சொல்லியிருக்கிறது ரெட் ஜெயன்ட் தரப்பு.

இது போக, ஒரு பெரும் தொகையும் கைமாறியிருக்கிறது.

தொடர்ச்சியாக, ‘பெரிய இடத்து குடும்பப் பணம், அன்புச்செழியன் வழியாக சினிமா வட்டாரத்தில்
ஃபைனான்ஸ் செய்யப்படுகிறது.

ஓடாத படங்கள் ஓடியதாகக் கணக்கு காட்டி, கறுப்புப்
பணத்தை வெள்ளையாக்க முயற்சி நடக்கிறது’
என்கிற `பகீர்’ தகவலும் வந்தது. இதன் பின்னரே,
ரெய்டுக்கு நாள் குறித்தோம்.

அன்புச்செழியன் மட்டுமல்லாமல், அவரோடு வியாபார
ரீதியாகத் தொடர்பிலிருந்த கலைப்புலி தாணு,
எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, சத்யஜோதி
தியாகராஜன் ஆகியோர் இடங்களிலும் ரெய்டு
நடத்தப்பட்டது. இதற்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளோடு, டெல்லியிலிருந்து 35 அதிகாரிகள்
வந்து இணைந்துகொண்டனர். மொத்தம் 42 இடங்களில்
ஆகஸ்ட் 2-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு ரெய்டு
தொடங்கியது.

அன்புச்செழியன், அவர் மகள் சுஷ்மிதா, அவர் தம்பி
அழகர்சாமி ஆகியோரின் வீடுகள் ரெய்டுக்கு
உள்ளாக்கப்பட்டன. நுங்கம்பாக்கத்திலுள்ள
அழகர்சாமியின் வீட்டைத் திறப்பதற்கு அங்குள்ள
பணியாளர்கள் மறுத்துவிட்டனர். ‘ரேகை வைத்தால்
மட்டுமே கதவு திறக்கும்’ எனக் கதைகட்டினார்கள்.

‘நீதிமன்ற உத்தரவைப் பெற்று, கதவை உடைத்து ரெய்டு நடத்துவோம்’ என்று நாங்கள் கடுமை காட்டிய பிறகே,
சாவி எங்கிருந்தோ வந்து கதவு திறக்கப்பட்டது. புரசைவாக்கத்தில் அன்புச்செழியனின் நண்பர்
ஒருவரிடமிருந்து 13 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.

தி.நகரிலுள்ள கலைப்புலி தாணுவின் அலுவலகத்திலிருந்து
பல கடன் பத்திரங்கள்தான் கிடைத்தன. கோவையில்
கந்தசாமி ஃபிலிம்ஸ் நிறுவனத்திலும் ரெய்டு
நடத்தப்பட்டது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு நெருக்கமான விநியோகஸ்தர்களான அருள்பதி, படூர் ரமேஷ்
இடங்களையும் சல்லடையாக்கினோம். மூன்றாவது
நாளாக ரெய்டு தொடர்ந்தாலும், எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, முக்கிய ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை.

ஆனால், சினிமாத்துறையில் உதயநிதி அண்ட் கோ
எப்படி முதலீடு செய்கிறது, அன்புச்செழியன் அதில்
என்ன செய்கிறார் என்பதற்குச் சில ரூட்டுகளைக் கண்டறிந்திருக்கிறோம். இந்த ரெய்டுகள் இதோடு முடியாது” என்றனர் விரிவாக.

ரெய்டுக்குச் சென்ற பல இடங்களில் எதிர்பார்த்த அளவு
பணம், ஆவணங்கள் ஏதும் சிக்காததால், அங்கேயே டேரா போட்டிருக்கிறது வருமான வரித்துறை அதிகாரிகள் படை. ரெய்டை முடித்துக்கொள்ளச் சொல்லி டெல்லியிலிருந்து மறு உத்தரவு வராததால், வேளா வேளைக்கு உணவை
வரவழைத்துச் சாப்பிட்டுவிட்டு, சிறு காகிதம்கூட
விடாமல் துருவினார்கள் அதிகாரிகள்.

‘பிறகு எதற்காக நடந்தது ரெய்டு?’ கேள்விகளுடன்
பா.ஜ.க வட்டாரத்தில் பேசினோம். “இந்த ரெய்டுக்கான டார்கெட்டே உதயநிதிதான்” என்று வெடியைக் கிள்ளியெறிந்தார்கள்.

மேற்கொண்டு நம்மிடம் பேசிய பா.ஜ.க சீனியர்
தலைவர்கள் (???!!!) சிலர், “தமிழ்நாட்டில் வெளியாகும்
60 சதவிகித திரைப்படங்கள் உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனத்தாலேயே வெளியிடப்படுகின்றன. பெரும்பாலான சினிமா தியேட்டர்களையும் உதயநிதி
தரப்புதான் ‘கன்ட்ரோல்’ செய்கிறது. இன்று ‘
ரெட் ஜெயன்ட்’ நிறுவனத்திடம் சென்றால் படத்தை
லாபத்தோடு விற்க முடிகிறது.

ஆனால், நாளை அவர்கள் சொல்வதே விலை
என்றாகிவிடும். தவிர, நேரடி ரிலீஸ் நடைமுறையால் `விநியோகஸ்தர்’ என்கிற கட்டமைப்பே கொஞ்சம்
கொஞ்சமாகச் சிதறிக்கொண்டிருக்கிறது.
திரைத்துறையை ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’
கட்டுப்படுத்தும்விதம் மிக ஆபத்தான போக்கு.

இதை, எங்களிடம் சில மூத்த தயாரிப்பாளர்கள் கூறி வருத்தப்பட்டனர்.

தவிர, உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் அளவுக்கு மீறிய வளர்ச்சியைக் கடந்த ஒரு வருடத்தில் அடைந்திருக்கிறது.

ஜூன் 2022 வரை வெளியான 20 பெரிய பட்ஜெட் படங்களில்,
16 படங்களை இந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இதில் ஏழு படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் மட்டுமே
700 கோடி ரூபாய் என்கிறது சினிமா வட்டாரம். இந்த திடீர் வளர்ச்சி எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

உதயநிதித் தரப்பு இந்த விஷயத்தில் கொஞ்சம்
சறுக்கினால்கூட, தி.மு.க-வின் இமேஜ் பெரிய அளவில்
டேமேஜ் ஆகும்.

அதற்குத்தான் டார்கெட் வைக்கப்பட்டிருக்கிறது…!!!

சினிமாவில் அடுத்தடுத்து உதயநிதியும் கமலும்
இணைவதன் வழியே, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு
மக்கள் நீதி மய்யமும், தி.மு.க-வும் கரம்கோக்கத்
தயாராகிவிட்டது தெரிகிறது. இந்த ரெய்டுகளால்,
கமலும் நிச்சயம் ஆட்டம்கண்டு போயிருப்பார்.
அவருக்கான ‘செக்’-கும் சேர்த்தே வைக்கப்பட்டிருக்கிறது” என்றார்கள்.
(……………. நன்றி – ஜூ.வி.)

எல்லாம் சரி….

 • ஆனால், 50 இடங்களில், 75 இடங்களில் ரெய்டு….
  என்றெல்லாம் செய்தி வருகிறது…
 • இத்தனை கோடி – கணக்கில் காட்டப்படாத,
  கருப்புப்பணம் கைப்பற்றப்பட்டது…..
 • இத்தனை கோடிக்கான பணப்பறிமாற்றங்கள்
  குறித்த ஆவணங்கள் சிக்கின ….
 • என்றெல்லாம் ரெய்டின்போது, தகவல்கள் வெளியிடப்படுகின்றன … (யாரால்…??? –
  யாரால் சொல்ல முடியும்..!!!!! )

ஆனால் இவற்றின் இறுதி முடிவுகள்,
(logical conclusions …) விளைவுகள் –
என்றைக்காவது வெளிவந்திருக்கின்றனவா…?

 • முடிவாக எத்தனை கோடி
  கருப்புப்பணம் வெளிவந்தது…?

-எத்தகைய அபராதங்கள் விதிக்கப்பட்டன…?
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயர்கள் …?

 • யார் யார் மீது எந்தெந்த நீதிமன்றங்களில்
  வழக்குகள் தொடரப்பட்டன..?

போன்ற அதிகாரபூர்வமான தகவல்கள்….?????

 • ஊஹூம்…. எனக்குத் தெரிந்து அநேகமாக இல்லை;
  ஏன்….? இந்த குற்றங்கள் எல்லாம் திமன்றங்கள் முன் கொண்டுபோகப்பட்டனவா – இல்லையா….?
  நிரூபிக்கப்பட்டனவா,
  தண்டிக்கப்பட்டனவா – இல்லையா….?

அந்த விவரங்கள் அதிகாரபூர்வமாக
வெளிவராத வரையில் இந்த ரெய்டுகள் மீது
மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்….?

………………………………………………………………………………………………………………….. . பின்சேர்க்கை – தற்போது கிடைத்த காணொளி – அரிவாளோடு துரத்தும் அருமையான காட்சி – திமுக கவுன்சிலர் கணவரின் action சீன்….!!! ( நன்றி – பிபிசி தொலக்காட்சி -) திருச்சி மாவட்டம் தெற்கு தத்தமங்கலத்தை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் நித்யாவின் கணவர் வெற்றிச்செல்வன். இவர் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். தமக்கு கடன் கொடுத்த குணசேகரன் மற்றும் அவரது சகோதரர்கள், பணத்தை திருப்பிக் கேட்டபோது அரிவாளால் வெட்டுவதற்கு குடிபோதையில் இருந்த வெற்றிச்செல்வன் துரத்திய காட்சி…. …………………………………… . …………………………………………

.
……………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to சட்டமாவது, கடமையையாவது, செய்வதாவது….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  ரெய்டுகளை விடுங்கள். இந்த வருமானவரி போன்ற துறையினர்களின் சட்டங்கள் நகைப்புக்குரியனவாக, அரசியல்வாதிகளுக்கும் ஏய்ப்பவர்களுக்கும் சாதகமாக இருக்கின்றனவே. அதை யார் சரி செய்வது? உதாரணமா, 100 கோடி ரூபாய் பதுக்கி வைப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்குரிய 30 சதம் வரியைச் செலுத்திவிட்டால் வருமானவரித்துறை வாயை மூடிக்கொள்ளுமாம். காணொளிகளில் இப்படித்தான் ரெட்டியின் ரெய்டு நடந்தபோது ஓபிஎஸ் ஸின் கணக்கில் வராத 600 கோடி வருமானத்தைக் கண்டுபிடித்து அதற்கு வரி கட்ட வைத்தார்கள் என்றெல்லாம் பல செய்திகளைப் பார்க்கிறேன்.

  சினிமா ஃபைனான்ஸ், திரையுலகம், ஏன் லுலு போன்றவைகளும் அரசியல்வாதிகளின் கறுப்புப் பணம் புழங்கி வெள்ளையாக வரும் தொழிலில் இருக்கிறது. பசி யுள்ளவர்களுமே கறுப்புப் பணத்தை மொரீஷியஸ் வழியாக மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டுவந்து ‘நான் இருக்கிறேன்’ என்று தொழில்கள் தொடங்கும்போது வேறு என்ன சொல்லுவது?

  நம் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மிகவும் மோசமான முறையில் இருக்கின்றன. எந்தக் குற்றத்தையும் சுமத்தி, திகாரில் தள்ளி, ‘குற்றமில்லை’ என்று நிரூபிக்கும் பொறுப்பு குற்றவாளியாக உள்ளே உள்ளவரைச் சேர்ந்தது, அதுவரை, ‘பையன் படிப்பு, கணவர் தனியாக இருக்கிறார், அப்பாவைப் பார்த்துக்கொள்ளணும்’ என்றெல்லாம் சாக்குப் போக்குச் சொல்லி ஜாமீன் கொடுக்க சட்டத்தில் இடமில்லை என்ற நிலை வந்தால் பெட்டராக இருக்குமோ?

  பதிவில் சொல்லப்பட்டிருக்கும் அன்புச் செழியன் போன்றவர்கள் சமூக விரோதிகள்தாம். ஆனால் சட்டம் தன் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  .
  .

  இடுகையை ஏற்கெனவே பார்த்து விட்டவர்கள்,
  கடைசி பகுதியை மீண்டும் பார்க்கவும்….

  பிற்சேர்க்கையில் –
  ஒரு அருமையான லைவ் ஆக்ஷன் சீன்….

  ….

  • புதியவன் சொல்கிறார்:

   செய்தியை முழுமையாக நீங்கள் வெளியிடவில்லை. அந்தக் காணொளியுடன், முதல்வர் ஸ்டாலின், பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கம் கூடாது என்று போதைப் பொருட்களுக்கு எதிராக ‘போதைப் பொருள் எதிர்ப்பு வாரம்’ என்று ஆரம்பித்திருக்கும் நகைச்சுவைக் காட்சியையும் இணைத்திருக்கலாம். (அல்லது அந்தப் பதிவின் பிற்சேர்க்கையாகப் போட்டிருக்கலாம்) அப்போதுதான் படிக்கின்ற வாசகர்களுக்கு, எது போதைப் பொருள், எது போதைப் பொருள் கேட்டகரியில் வராது என்பது தெளிவாகத் தெரியும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s