பாஜக – திமுக நெருக்கம் …இது எங்கே கொண்டு சேர்க்கும்….???

……

சென்னையில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி
தொடக்க விழாவில் பிரதமர் மோடிஜி, முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆகியோரின் உடல் மொழிகள் மிகவும் நெருக்கமாகவே
காணப்பட்டன.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற
அரசு விழாவில் பிரதமர் மோடிஜி முன்னிலையில்
முதல்வர் ஸ்டாலின் காட்டிய உடல் மொழிக்கும், ஒலிம்பியாட்
தொடக்க விழாவில் காட்டிய உடல் மொழிக்கும் மிகப் பெரிய
வேறுபாடு இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

வழக்கத்துக்கும் மாறாக முதல்வர் ஸ்டாலினுக்கு,
பிரதமர் மோடிஜி கொடுத்த முக்கியத்துவம் தமிழக அரசியல் கட்சிகளையும், அரசியல் நோக்கர்களையும் வியக்கச்
செய்துள்ளது. இது மீடியாவில் ஒரு பெரிய விவாதப் பொருளாகவும் ஆகியுள்ளது. பாஜகவும், திமுகவும் நேர் எதிர்
கொள்கையில் இருக்கும்போது எதற்காக பிரதமர் மோடிஜியும்-
முதல்வர் ஸ்டாலினும் இப்படி நெருக்கம் காட்டுகின்றனர் என்ற
சந்தேகமும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் இருமுனைப் போட்டி நிகழும்போதெல்லாம்
கிட்டத்தட்ட 13-14 சதவீத சிறுபான்மை வாக்குகள்,
சிதறாமல் திமுக அணிக்கு கிடைக்க கிரியா ஊக்கியாக
காங்கிரஸ் இருக்கிறது என்பதால் தான் காங்கிரஸை
திமுக தூக்கிச்சுமக்கிறது என்பதை பாஜக தலைமை
உணர்கிறது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல், 2019 மக்களவைத்தேர்தல்,
2021 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் திமுகவுடன்
கூட்டணி சேர்ந்து கூடுதலான எம்.எல்.ஏ.க்களையும்,
எம்.பி.க்களையும் காங்கிரஸ் பெற்று, தனது எண்ணிக்கையை
அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது என்பதையும்
பாஜக தலைமை உணர்கிறது.

மொத்தத்தில், தமிழகத்தில் பாஜகவைவிட
தேர்தல் ரீதியாக அதிக பலத்தை திமுக கூட்டணி
காரணமாக காங்கிரஸ் பெற்று வருகிறது.

எனவே இந்த கூட்டணி பிரிந்தால், இரண்டு கட்சிகளுமே
பலவீனமாகி விடும் என்பது கண்கூடு.

எனவே, இருமுனைப்போட்டி என்பதை தவிர்ப்பதும்,
திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைத்து பலமுனைப்
போட்டியை உருவாக்குவதுமே பாஜகவுக்கு சாதகம் என்பது
பாஜக தலைமையின் எண்ணமாகத் தெரிகிறது…

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் பாஜகவை, திமுக-வுக்கு
எதிராக வலுப்படுத்துவதும், தன் தலைமையில் ஒரு
கூட்டணியை உருவாக்குவதும் ( அதிமுகவுடன் அல்லது
அது இல்லாமலே – இதர கட்சிகளை சேர்த்துக்கொண்டு )
ஒருபக்கம் இருக்க,

என்ன விலை கொடுத்தேனும் திமுக-காங்கிரஸ் கூட்டணியை
உடைக்க வேண்டும் என்பதும் பாஜக நிலைப்பாடாக இருக்கும்.

“ஸ்டிக் அண்ட் கேரட் ” – பாலிஸி தான்…..!!!

ஒரு பக்கம் மத்திய அரசிலிருந்து, தமிழக திமுக அரசுக்கு
ஆதரவும், தடங்கல்கள் இல்லாத உதவிகளும்,

மற்றொரு பக்கம் அமலாக்கப் பிரிவு, வருமான வரி இலாகா படையெடுப்புகள், ஊழல் வழக்குகள் –

-என்கிற இரண்டையும் காட்டினால்,
திமுக எதை தேர்ந்தெடுக்கும்…..?

நிச்சயமாக முதலாவதைத் தானே….?

எனவே, பாஜக-திமுக கூட்டணியா …?

நிச்சயமாக இருக்காது.

பாஜகவும் – திமுகவும், கொள்கை ரீதியாக இருவேறு
துருவங்கள்… எனவே இவை இரண்டும் கூட்டணி அமைத்து
தேர்தலை சந்தித்தால், இரண்டு கட்சிகளுக்குமே அது
பெருத்த தற்கொலை முயற்சியாகவே இருக்கும். மக்கள்
நிச்சயமாக நிராகரித்து விடுவார்கள். இது இந்த
இரண்டு கட்சிகளுக்குமே தெரியும்…

அதே நேரத்தில், மத்திய ஆளுங்கட்சியான பாஜகவையோ,
தேசிய அளவில் செல்வாக்குப் பெற்ற தலைவரான
பிரதமர் மோடிஜியையோ பகைத்துக் கொள்ளவும்
திமுக தயாராக இல்லை. தமிழகத்தின் நிதிநிலைமை
தள்ளாடுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
எழுப்பும் ஊழல் குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில்
பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவின்
ஏனைய மாநிலங்களில் நடைபெறும் அமலாக்கத் துறை
நடவடிக்கைகள், திமுகவை எச்சரிக்கையாக இருக்கத்
தூண்டுவது இயல்பு. மஹாராஷ்டிராவில் சிவசேனை
தலைமையிலான அரசுக்கு நேர்ந்தது மிக அண்மை
உதாரணம்.

என்வே, பிரதமரைப் பகைத்துக் கொள்ளவும் கூடாது;
அதே நேரத்தில், பாஜக எதிர்ப்பை முன்வைத்து
சிறுபான்மையினர் வாக்குகளைத் தக்க வைத்துக்
கொள்ளவும் வேண்டும் என்பதுதான் திமுகவின்
திட்டமாக இருக்க முடியும்.

திமுகவின் திட்டம் மட்டுமல்லாமல், அதைவிட கூடுதலாகவும்
பிரதமருக்கும் தெரியும்.

காங்கிரஸ், தானாக, திமுகவை விட்டு நகருவதற்கான
வாய்ப்பே இல்லை…. எனவே, திமுக-வே காங்கிரஸை
விலக்கினால் தான் உண்டு.

தற்போதைய பாஜக-திமுக நெருக்கம் அநேகமாக
இங்கே தான் சென்று முடியும் –

பாஜகவும்-திமுகவும் சேர்ந்து கூட்டணி அமைக்காது.
திமுக வெளிப்படையாக பாஜகவை எதிர்த்துக் கொண்டே
இருக்கும்….

பாஜக, திமுகவை தொடர்ந்து விமரிசனம் செய்துகொண்டே
இருக்கும்… ஆனால், மறைமுகமாக திமுக-வுக்கான
அனைத்து ஆதரவு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

ஆனால் திமுக இதற்காக கொடுக்க வேண்டிய விலை…?

காங்கிரஸ் கட்சியை, எப்படியாவது கூட்டணியிலிருந்து
கழட்டி விட வேண்டும்….

இது உடனடியாக நிகழாது…
நிகழ்ந்தால், எதிர்பார்க்கும் பயன்கள் கிடைக்காது.

மெது, மெதுவாக – 2024 பாராளுமன்ற தேர்தல் சமயத்தில்
நடந்தால் போதும்….

தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால்,
திமுக இதைச் செய்தே ஆக வேண்டும்…

செய்யும்…. !!!

.
…………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to பாஜக – திமுக நெருக்கம் …இது எங்கே கொண்டு சேர்க்கும்….???

  1. புதியவன் சொல்கிறார்:

    பாஜக நிச்சயமாக திமுகவுடன் கூட்டணி சேராது. சேர்ந்தால் இருவருக்குமே ஆபத்து, பதிவு சொல்வதைப் போல. அதிமுகவின் 30 சத வாக்குகளில் எவ்வளவு யாருக்குப் போகும் என்று தெரியவில்லை (அதில் அதிமுகவின் பங்கு எத்தனை, பாஜகவுக்கு எவ்வளவு போகும் என்ற கணக்கு. குறைந்தது 5-8 சதமாவது பாஜகவுக்குப் போகும் என்று நான் நம்புகிறேன். மீதியில், 75-15-10 என்று பிரியலாம், எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன் குழுவினருக்கு). நிச்சயமாக மோடி, தனக்கு நிகழ்ந்த அவமானத்தை மறக்கவே மாட்டார். அதற்கான விலை திமுக கொடுக்கவேண்டியிருக்கும்.

    காங்கிரஸை கழற்றிவிட்டாலும் திமுகவுக்கு பெரிய பிரச்சனை இருக்காது. அந்த அளவு காங்கிரஸை மிக மிக பலவீனப்படுத்தி அதன் தலைவர்கள் தொடர்ந்து வைத்திருக்கிறார்கள். வாழப்பாடியோடு, இளமை முறுக்கு இருந்த இளங்கோவனோடு காங்கிரஸின் முதுகெலும்பு போய்விட்டது. இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள், கட்சிக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாதவர்கள், ப.சி குடும்பம், அழகிரி….. என்று அனைவரையும் சேர்த்துச் சொல்கிறேன். இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஸ்டாலின் வீட்டைப் பெருக்கி ஒரு ராஜ்ஜியசபா சீட்டுக்குப் பிச்சையெடுப்பது. இவர்களுக்கும் காங்கிரஸுக்கும் சம்பந்தம் இல்லை.

    ஆனால் பதிவு சொல்வதுபோல திமுக காங்கிரஸ் பிரிவு நடக்காது. ராகுல்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நிற்கலாம் என்ற நினைப்புடன் இருக்கிறார், திமுகவிடம் பிச்சை எடுத்து அவர்கள் தயவில் நிற்குமளவு அவரது தன்மானம் இடம் கொடுக்காது என்று தோன்றுகிறது. ஏதோ புண்ணியம், இன்னமும் திமுக, தங்களது சின்னத்தில் நிற்குமாறு காங்கிரஸை வற்புறுத்தவில்லை. திமுக, காங்கிரஸ் பிரிவு, கிறித்துவ வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பிருக்கிறது (பிரிவு நடந்தால்).

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    Whether we accept his arguments or not –
    His talks are quite interesting to watch ….

    ….

    …..

  3. bandhu சொல்கிறார்:

    கொள்கை என்பதெல்லாம் கழகங்களுக்கு கிடையாது. பிஜேபியுடன் கூட்டணி வைத்தால் முஸ்லீம் மற்றும் கிறிஸ்டியன் ஓட்டு கிடைக்காது. அதனால் திமுக பிஜேபியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது.

    காங்கிரஸுக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை. செருப்பால் அடித்தாலும் செல்லமாக அடித்ததாக வெளியில் சொல்லிக்கொண்டு ‘கூட்டணி தர்மம்’ காப்பார்கள்.

    எதுவும் பெரிதாக நடக்காது!

  4. நெல்லை பழனி சொல்கிறார்:

    கனவு கானாதீர்கள். அரசு விழாவில் இதெல்லாம் சகஜம் . அதற்காக எப்போதும் முறுக்கி கொண்டே இருக்க முடியுமா. விரும்பி தான் அழைத்தார்கள். மேடையில் இயல்பாக பேசிக் கொண்டு இருப்பதையெல்லாம் வைத்து யூகத்தின் அடிப்படையில் எழுதுவது நிஜமாகுமா. திமுகா-காங்கிரஸ் கூட்டணி பலம் வாய்ந்தது. பா.மா.காவும் வந்து விட்டால் அதீத வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கும். பாமாகாவும் திமுகாவுடன் வந்து ஒட்டிக் கொள்ளும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.