” துக்ளக் ” – இபின் பதூதாவின் சுவாரஸ்யமான பதிவுகள்….

………………….

இபின் பதூதா, மொரொக்கோவைச் சேர்ந்தவர்.
அவ்வளவு தூரம் பயணித்து டெல்லி சுல்தான் துக்ளக்’கிடம்
வந்து சேர்ந்து அவர் பணியாற்றியது மிகப்பெரிய விஷயம்.
ஆனால், கொஞ்ச வருடங்கள் பணியாற்றிய பிறகு அவருக்கு
கிடைத்த அனுபவங்கள் கொடுமையானவை….

துக்ளக் தர்பார் குறித்து கிடைத்திருக்கும்
பதிவுகளில் இபின் பதூதாவுடையது மிக முக்கியமானது.

அவ்வப்போது அவர் எழுதிவைத்திருந்த அனுபவக்
குறிப்புகள் அனைத்தும் கொள்ளையர்களிடம் சிக்கித்
தொலைந்து விட்டதால், இறுதிக்காலத்தில்
தன் நினைவுகளிலிருந்து மீட்டெடுத்துத்தான் தன்
பயண நூலை எழுதி முடித்தார் இபின் பதூதா.

பதூதாவின் குறிப்புகளிலிருந்து சுவாரஸ்யமான
பகுதிகள் …………

……………..

`துக்ளக்கின் மாளிகைக் கதவை எப்போது தட்டினாலும் –

ஒன்று – உங்கள் கைநிறைய பணம் கிடைக்கலாம் அல்லது

உங்கள் தலை துண்டிக்கப்படலாம்.

இந்த இரண்டில் எதுவும் நடக்கலாம்.
அந்த சமயத்தில், இரண்டும் நடந்துகொண்டிருந்தன’
என்கிறார் இபின் பதூதா.

அள்ளி அள்ளிக் கொடுப்பதால் துக்ளக்கின் கரம்
சிவந்திருக்கிறதா அல்லது ஓயாமல் கொன்று குவிப்பதால்
ரத்தக்கறை நிரந்தரமாகப் படிந்துவிட்டதா என்றால்,
இரண்டுமேதான் என்பார் பதூதா.

டெல்லியில் மக்கள் கூட்டம் மிகுந்திருக்கும் பகுதிகளில்
திடீரென்று துக்ளக்கின் யானைகள் தோன்றும். அவற்றின்மீது அமர்ந்திருக்கும் சுல்தானின் ஆட்கள் கவட்டை மூலம் தங்கம்,
வெள்ளி நாணயங்களை மக்களை நோக்கிச் செலுத்துவார்கள்.

கூட்டம் போட்டி போட்டு, முண்டியத்துக்கொண்டு பரிசுகளைப் பெற்றுக்கொள்ளும். இதுவொரு வகை துக்ளக்.

கோபாவேசத்தில் யாரேனும் ஒருவர் தப்பித்தவறி துக்ளக்கைப் பழித்துவிட்டால் அவரைக் கைதுசெய்து இழுத்துவருவார்கள்.
உலோகக் கருவிகள் மூலம் அவர் வாயை அகலமாகப் பிரித்துக்
கிழித்து, மனிதக்கழிவுகளைத் தொண்டை வழியே உள்ளே செலுத்துவார்கள். இது இன்னொரு துக்ளக்.

ஒருநாள் பதூதாவுக்கே ஆபத்து வந்துவிட்டது.
ஒரு சூஃபி துறவியோடு (துக்ளக்கிற்கு பிடிக்காத நபர்….)
பதூதா நெருங்கிப் பழகுகிறார் என்னும் தகவல் துக்ளக்கின்
காதுகளை எட்ட, உடனடியாக இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
மத நம்பிக்கைகளுக்கு விரோதமாகச் செயல்பட்ட துறவிக்கு
உடனடி மரண தண்டனை விதித்தார் துக்ளக்.

தண்டனை எப்படி நிறைவேற்றப்பட்டது தெரியுமா?
அவருடைய தாடியைப் பிடித்து ஒவ்வொரு ரோமமாகப்
பிடுங்கியெடுத்து இறுதியில் அவர் தலையைக்
கொய்திருக்கிறார்கள்.

அடுத்து பதூதா விசாரிக்கப்பட்டார். அதற்குள் குலை
நடுங்கிவிட்டது அவருக்கு. `எனக்கு அந்தத் துறவியைத்
தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர் தங்கியிருந்த
குகையைக் காணவே சென்றேன், அவரைக் காண அல்ல’
என்று மன்றாடினார் பதூதா. மௌன விரதம் பூண்டு,
33,000 முறை பரிகார உச்சாடனம் செய்த பிறகு
ஒரு வழியாக அவர் விடுவிக்கப்பட்டார்.

அதன் பிறகு, டெல்லி அவருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. துறவுக்கோலம் பூண்டார். உலக வாழ்க்கை போதுமென்றாகி
விட்டது. `நான் புனித யாத்திரைக்குப் போக முடிவெடுத்து
விட்டேன். விடை கொடுங்கள் சுல்தான்’ என்று துக்ளக்கிடம் விண்ணப்பித்துக் கொண்டார். ‘சரி போ’ என்று
விட்டுவிடுவார் என்று நினைத்தார் பதூதா. அவர் நினைப்பு பொய்த்துப்போனது.

சமீபத்திய நிகழ்வுகளால் மனம் நொந்துவிட்டார் போலிருக்கிறது. அவரை வழிக்குக்கொண்டு வருவோம்’ என்று நினைத்த துக்ளக், மதிப்புமிக்க ஒரு புதிய பதவியைத் தூக்கி அவரிடம் கொடுத்தார்.இன்று முதல் உங்களை
என் அயலகத் தூதுவராக நியமிக்கிறேன். பயணங்களை
விரும்பும் உங்களுக்கு இந்தப் பதவி பொருத்தமாக இருக்கும். சீனாவுக்குச் சென்று அங்குள்ள மன்னரைச் சந்தியுங்கள்.
இதுதான் உங்கள் முதல் பணி.’

செய்ய மறுத்தால் அதற்கென்ன தண்டனையோ என்று பயந்த
பதூதா, பரிவாரங்களோடு சீனாவுக்குக் கிளம்பினார்.
மொத்தம் 4,000 பேர். அவர்களில் பெரும்பாலானோர்
சீன மன்னருக்குப் பரிசாக துக்ளக் அனுப்பியிருந்த அடிமைகள்.
‘பரிசை’ ஒப்படைக்கவேண்டியது பதூதாவின் பணி. டெல்லியைவிட்டுக் கிளம்பி, அலிகாரை அடைவதற்குள்
கொள்ளைக் கூட்டத்தினரிடம் ஒட்டுமொத்தக் கூட்டமும் சிக்கிக்கொண்டது. பதூதாவோடு வந்த பலர் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். உயிர்பிழைத்தால் போதும் என்று
இபின் பதூதா அங்கிருந்து தப்பியோடினார். அலைந்து,
திரிந்து உணவு கிடைக்காமல் எங்கெங்கோ சுற்றித்திரிந்து
மயங்கிச் சரிந்தார். வழிப்போக்கர்கள் யாரோ கவனித்து
அவரை மீட்டிருக்கிறார்கள்.

நடந்த அனைத்தையும் துக்ளக் கேள்விப்பட்டார்.
இப்போதும் இபின் பதூதாவை அவர் விட்டுவிடவில்லை. ‘உயிரோடுதானே இருக்கிறாய், நல்லது. நான் சொன்னபடி
சீன மன்னரைச் சந்தித்துவிட்டு வா’ என்று செய்தி
அனுப்பினார். ‘நிச்சயம் செல்கிறேன் சுல்தான்’ என்று
பதில் அனுப்பிவிட்டு மீண்டும் இந்தியாவில் சுற்றித்திரிய
ஆரம்பித்தார் பதூதா. `சுல்தான் இட்ட பணியைச் செய்து
முடித்தேன். சீனா சென்றேன்’ என்று தன் குறிப்புகளில்
அவர் எழுதினார். ஆனால் உண்மையில் சீனா சென்றாரா
அல்லது சென்றதுபோல் கணக்கு காட்டினாரா என்பது
உறுதியாகத் தெரியவில்லை.…………..

இந்தியா மட்டுமல்ல, 14-ம் நூற்றாண்டு இஸ்லாமிய உலகம்
பற்றிய ஒரு சித்திரத்தையும் அவர் குறிப்புகளிலிருந்து
நம்மால் உருவாக்கிக்கொள்ள முடிகிறது. அவர் பயணம்
செய்தவை பெரும்பாலும் இஸ்லாமிய நாடுகள் என்றாலும்
ஒவ்வோர் இடத்திலும் இஸ்லாம் ஒவ்வொருவிதமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஒவ்வோர் இடத்திலும் அங்கிருந்த மற்ற மதங்களோடு,
மற்ற நம்பிக்கைகளோடு, தத்துவங்களோடு, பண்பாடுகளோடு
அது உரையாடியிருக்கிறது. தன்னிடமிருப்பதைக்
கொடுத்திருக்கிறது, அங்கிருப்பதைப் பெற்றுக்
கொண்டிருக்கிறது.

இந்தியாவின் இஸ்லாமும் – மொரோக்கோவின் இஸ்லாமும்
ஒன்றல்ல. அரபுலகப் பண்பாடும், இந்திய இஸ்லாமியப்
பண்பாடும் ஒன்றல்ல. பொதுவான அம்சங்கள் பல
இருந்தாலும் வேறுபாடுகளும் மிகுதிதான். ஆக, இஸ்லாம்,
இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமியப் பண்பாடு ஆகிய பதங்கள்
உலகப் பொதுவானவை அல்ல; அவற்றை ஒரே பொருளில்
எல்லா இடங்களிலும் பயன்படுத்த இயலாது என்னும் புரிதலை
பதூதா நமக்கு ஏற்படுத்துகிறார்.

அவருடைய வாழ்வில், டெல்லி கால் பகுதியை
எடுத்துக்கொண்டது. இஸ்லாமிய உலகிலேயே பெரிய நகரம், டெல்லிதான்’ என்கிறார். பரந்து விரிந்த டெல்லியின் அழகும் வலிமையும் அவரை ஈர்த்தன.இங்கே நகரைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள மதில் சுவர் போன்றதொன்றை உலகில்
வேறெங்கும் கண்டதில்லை’ என்கிறார். டெல்லி
சுல்தானகத்தின் அடையாளமாகத் திகழும் குதுப் மினார்
அவரை மயக்கியது. சிவப்பு நிறக் கற்களால் உருவாக்கப்பட்ட
மசூதியின் உயர்ந்த கோபுரத்தையும் வேலைப்பாடுகளையும் வர்ணிக்கிறார். `குதுப் மினார் அமைந்திருக்கும் இடம்
விசாலமாக இருக்கிறது. யானைகூட வந்து பார்க்கலாம்.
உண்மையில் யானை உதவியோடுதான் இதைக் கட்டியதாகவே சொல்கிறார்கள்’ என்கிறார் பதூதா.

தெற்கு டெல்லியில் அமைந்துள்ள மெஹ்ராலி இரும்புத்தூணைக்
கண்டு வாய்பிளந்து நின்றிருக்கிறார் பதூதா. `துருப்பிடிக்காத
இந்தத் தூணை எந்த உலோகத்தைக்கொண்டு உருவாக்கினார்கள்
என்றே தெரியவில்லை. நான் விசாரித்தவரையில்
ஏழு உலோகங்களின் கலவை என்று இதைச் சொல்கிறார்கள்’ என்கிறார்.

1335-ம் ஆண்டு தொடங்கி ஏழாண்டுகள் டெல்லியில் நீடித்த
பஞ்சத்தை நினைவுகூர்கிறார் பதூதா.

`சுல்தான் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து மும்முரமாகப் போரிட்டுக்கொண்டிருந்தபோது, ஆயிரக்கணக்கானவர்கள்
டெல்லியில் மடிந்துகொண்டிருந்தார்கள்’ என்கிறார் பதூதா.
தெற்கில் தொடங்கிய கிளர்ச்சி, டெல்லியையும் நெருங்கி
யிருக்கிறது. ராணுவத்துக்குள்ளிருந்தே துக்ளக்குக்கு
எதிர்ப்புகள் வெடித்திருக்கின்றன. எதிர்த்த அனைவரையும்
துக்ளக் வீழ்த்தினார்.

துரோகிகளை யானைகள் மிதித்தும் கிழித்தும் (தந்தத்தில்
வாளைக் கட்டிவிடுவார்களாம்!) கொன்றிருக்கின்றன.
சுற்றிலும் மேளங்கள் முழங்கிக்கொண்டிருக்கும்.
ஒரு மனிதனை இழுத்து வந்து யானையிடம் போடுவார்கள்.
பந்துபோல் பாவித்து அந்த மனிதனை வானில் தூக்கிப்
போட்டு கீழே விழுந்ததும் மிதிக்குமாம் யானை!

டெல்லியில் என்னவெல்லாம் உண்டேன், என்னென்ன உணவுகளைக் கண்டேன்’ என்று தனியே விவரிக்கிறார் பதூதா. வட்ட வடிவ பெரிய ரொட்டி, ஆட்டிறைச்சி, நெய்ப் பதார்த்தங்கள், இனிப்புகள், வெங்காயம், பச்சை மிளகாய், ஏதேதோ உள்ளேவைத்து மடித்து மடித்து உருவான ‘சம்புசாக்’ (சமோசா) என்று பட்டியல் நீள்கிறது. துக்ளக் அவையில் சமோசாவை எல்லோரும் விரும்புவார்களாம்.வட இந்தியாவுக்கு உளுத்தம் பருப்பும் காராமணியும்’ பிடித்தமானவை என்கிறார்.

உண்பதற்கு முன்பு இனிப்பு சர்பத், உண்டு முடித்த பிறகு
பார்லி நீர் அருந்துவது வழக்கமாம். பிறகு வெற்றிலை பாக்கு.
காய்கள், இறைச்சி வகைகள், (தயாரிக்கப்படும் முறையும்
உள்ளது) பழ வகைகள் ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்.
எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் உள்ளதைப்போல் பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் உண்பதாகச் சொல்கிறார்.

வழி நெடுகிலும் இபின் பதூதா திருமணங்கள் செய்துகொண்டேயிருந்தார். அவருக்கு எத்தனை மனைவிகள்
இருந்தனர், எத்தனை குழந்தைகள் பிறந்தன என்று சொல்வது
கடினம். தனது 65-வது வயதில் மரணமடைந்தார்.

கலகத்தை அடக்க சிந்து மாகாணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, துக்ளக் தனது 61-வது வயதில் இறந்துபோனார்.
(படித்ததிலிருந்து ….)

.
…………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to ” துக்ளக் ” – இபின் பதூதாவின் சுவாரஸ்யமான பதிவுகள்….

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  பாராளுமன்றத்தில் திருச்சி சிவா பேசுகிறார்…
  ஓப்பனை இல்லாத எளிய உரை …

  பேசுவது திமுக எம்பி
  என்று இதை ஒதுக்குவதற்கில்லை –

  மத்திய அரசு யோசித்து செயல்பட வேண்டிய
  சில உண்மைகளும் அதில் உள்ளன…..

  …….

  …….

  • bandhu சொல்கிறார்:

   நீங்கள் சொன்னது போல், திருச்சி சிவாவின் பேச்சில் உண்மையும் இருக்கிறது. கன்டென்ட் உள்ள பேச்சு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s