பைத்தியக்காரத்தனமான யோசனை ….

……………………

………………………….

” முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்
எழுத்தாற்றலைப் போற்றும்விதமாக, சென்னை மெரினா
கடலுக்கு நடுவே அவரின் பேனா வடிவ சிலை அமைப்பதற்கு
தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இது சுமார் 80 கோடி
ரூபாய் செலவில், 134 அடி உயரத்தில் கடலில்
அமைக்கப்படும் “….என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே, கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் சுமார்
2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ. 39 கோடி செலவில் அரசு சார்பில்
நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த வளாகத்தின்
முகப்பிலேயே பேனா வடிவ பிரமாண்ட தூண் ஒன்றும்
அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், இன்னும்
இரண்டு மடங்கு தொகையை ஒதுக்கி, கடல் நடுவில், அதுவும்
அரசு செலவில் இன்னொரு சிலை கட்ட வேண்டிய
அவசியம் என்ன….?

ஏற்கெனவே, இதுவரை, கலைஞர் கருணாநிதியின் பெயர்
சூட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள்,
பூங்காக்கள், நூலகங்கள் எத்தனை என்கின்ற எண்ணிக்கையை
யாராவது சொல்ல முடியுமா….?

அவருக்கு அரசு செலவில் எழுப்பப்பட்டுள்ள சிலைகள்,
நினைவிடங்கள் எத்தனை என்று சொல்ல முடியுமா…?

இவற்றால் எல்லாம் கலைஞரை நினைவுபடுத்த முடியாதா…?
புதிதாக இத்தனை கோடி – மக்கள் பணத்தை உப்புத்தண்ணீரில்
கொண்டு போய் கொட்டுவானேன்….?

கடந்த ஆண்டு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். அவர்கள்
வெளியிட்ட வெள்ளை அறிக்கையில்,
மாநிலத்தின் மொத்தக்கடன் ரூ. 5.7 லட்சம் கோடியாக
இருப்பதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2.63 லட்சம்
கடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அதேபோல கடந்த மார்ச் மாதம்
அவர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக
பட்ஜெட்டில், வரும் 2023 மார்ச் மாதத்தில் தமிழகத்தின்
நிலுவைக்கடன் ரூ. 6.53 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்….

வீடு வைத்திருக்கும் தமிழக மக்கள் அத்தனை பேர்
தலையிலும் ஏற்கெனவே வரியை கன்னா பின்னாவென்று
உயர்த்தி, மண்ணைக் கொட்டி விட்டார்கள்…

அது பற்றாதென்று, மின் கட்டணத்தையும், சகட்டு மேனிக்கு
உயர்த்தி விட்டனர்.

இன்னும் எந்தெந்த விதத்தில் மக்கள் தலையில் கை வைக்க
உத்தேசித்திருக்கிறார்களோ தெரியவில்லை….
மக்கள் பயந்துகொண்டே இருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில், – ” பேனா சிலை குறித்து விமர்சிப்பது
கருணாநிதிக்கு செய்யும் துரோகம் ” -என்று ஒரு
மகாமேதையான திமுக மந்திரி ஒருவர் கண்டுபிடித்து
அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு
உடைத்த கதையாக, மக்கள் வரிப்பணத்தை,
இப்படி நாசம் செய்வதை விட்டு விட்டு –

கலைஞர் கருணாநிதிக்கு விசுவாசம் காட்டும் வகையில்,
திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்,அமைச்சர்கள் அனைவரும்
தங்கள் மாதச் சம்பளத்தையும், அலவன்சுகளையும்
தியாகம் செய்து விட்டு, அந்தப் பணம் மொத்தமாக
80 கோடி அளவிற்கு சேர்ந்த பிறகு –

பேனா சிலை, கருப்பு கண்ணாடி சிலை, வாட்ச் சிலை,
செருப்பு சிலை எல்லாவற்றையும் அமைக்கலாம்.

உண்மையில், அப்படிச் செய்யத் தவறினால் தான் –
தங்களை எம்.எல்.ஏ.க்களாகவும், மந்திரிகளாகவும் ஆக்கி
சம்பாதிக்க வைத்து அழகுபார்த்த கலைஞருக்கு
அவர்கள் செய்யும் துரோகமாகவே மக்களால் மட்டும்
அல்லாமல்,

கடற்கரையில் உறங்கிக்கொண்டிருக்கும் கலைஞராலும் கூட
கருதப்படும்….

( இந்த அற்புதமான யோசனை எவர் தலையில் முதலில்
உதித்தது என்று நிறைய பேர் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்…
இதுபற்றிய தகவல் எங்குமே காணோம். யாருக்காவது
தெரிந்திருந்தால் சொல்லுங்களேன்……!!! )

.
……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to பைத்தியக்காரத்தனமான யோசனை ….

 1. புதியவன் சொல்கிறார்:

  வல்லபாய் படேல் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வீரர்கள், நடிக நடிகைகள் இப்போது பயந்து பதுங்கியிருக்கிறார்களா இல்லை கொத்தடிமையாகிவிட்டார்களா என்று கொஞ்சம் பார்த்துச் சொல்லவும். அதிலும் இந்த சூர்யா ஜோதிகா என்று இரண்டு ‘இந்து எதிர்ப்பு’ ‘வாய்ச்சொல்லில் வீரர்களை’ எங்காவது பார்த்தால் கேட்டுச் சொல்லவும்.

  எப்படியும் சுற்றுப்புறச் சூழ்நிலை அனுமதி கிடைக்காது என்பதால்தான் இப்போது பவ்யம் காட்டப்படுகிறதா?

 2. Vicky சொல்கிறார்:

  யாருக்கு தோன்றினால் என்ன, ஸ்டாலின் அனுமதி இல்லாமல் இதைப்பற்றி பேசமாட்டார்கள். ஸ்டாலினை மட்டுமே விமர்சனம் செய்வோம்.

  சூர்யா, ஜோதிகா, சித்தார்த் என யாரும் திமுகவுக்கு எதிராக பேச தைரியம் இல்லை. இன்னுமா இவங்கள இந்த நாடு நம்புது?

  மத்தியிலும் திமுகவுக்கு இணக்கமான ஆட்சி இருந்தால் 2001 வரை இருந்த ஆட்சியை நிச்சயமா நினைவூட்டுவார்கள்.

  • புதியவன் சொல்கிறார்:

   மத்தியில் திமுகவுக்கு இணக்கமான ஆட்சியாக பாஜக இருக்கவே இருக்காது. அப்படி ஒருவேளை இருந்துவிட்டால், அண்ணாமலை அவர்கள் பாஜகவுக்குத் தலை முழுகிவிட்டு, பொரிகடலை கடை போடலாம்.

   பாஜகவின் இலக்கு மாநிலத்தின் முக்கியமான இரண்டு கட்சிகளில் ஒன்றாக இருப்பது. அதையேதான் கர்நாடகத்தில் நிகழ்த்தினார்கள். அதையே தமிழகத்திலும் கொண்டுவருவதற்கு முயலுவார்கள். இதைத் தவிர வேறு பாதையை நாடினால், இத்தனை நாட்கள் அண்ணாமலை அவர்கள் முயற்சி செய்தது வீணாகிவிடும்.

 3. bandhu சொல்கிறார்:

  விநாச காலே விபரீத புத்தி!

  இது போன்ற பெயர் சூட்டல்கள், சிலைகள், நினைவு சின்னங்கள் மூலம் ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயற்சிக்கிறார்கள். இது எத்தனை நாள் செய்ய முடியும்? கலைஞரின் ஆட்சியை கொண்டு வருவோம் என்று இவர்களே சொல்பதில்லை. காமராஜரின் ஆட்சியை கொண்டு வருவோம் என்றுதான் சொல்கிறார்கள்!

  பெரியாரின் சாதனைகள் என்று ஊதிப்பெருக்கப்பட்ட ‘வைக்கம் வீரர்’, ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ போன்ற கதைகள் சமீபத்தில் சீப்பாறியது!

  ஊரெங்கும் கட்சி சின்னத்தை சிலையாக வடித்த மாயாவதி இப்போது எங்கிருக்கிறார்?

  அதே போலத்தான் இதுவும்!

  அவர் மீது அவ்வளவு அக்கறை இருந்தால் இருக்கும் ஆயிரக்கணக்கான கோடி திமுக ‘அறக்கட்டளைகளில்’ இருந்து செலவு செய்து வைக்கலாமே?
  ஊரான் காசில் உல்லாசம் என்பது இன்னும் எவ்வளவு நாளைக்கோ!

 4. ஆதிரையன் சொல்கிறார்:

  நமக்கு பயந்து இந்த திட்டத்தை திமுக கைவிடுமோ, இல்லையோ. ஆனால் அண்ணாமலை இருக்கும் வரையில் இது போன்ற திட்டங்களை இவர்களால் நிறைவேற்ற முடியாது.
  இது போல் தான், கலாச்சார சிறப்பு மிக்க கோவிலின் புனித தேரோடும் வீதியின் பெயரை , தேவையே இல்லாமல் அதை அழித்து , இவர்கள் குடும்பத்து பெயர்களை சூட்டி, புனிதத்தை சீர்கெடுக்க முயன்ற பொழுது, அண்ணாமலையின் ஆவேசத்திற்கு அடிபணிந்து ஓடி ஒளிந்ததை பார்க்க முடிந்தது. இது வரையிலும் தட்டி கேட்க ஆட்கள் இல்லாததினால் தான், இந்த ரவுடியிசம் போலும்.அதே போன்று காலம் காலமாக அமைதியாக நடந்து கொண்டிருந்த பட்டின பிரவேசத்தையும் , இவர்களின் ஆணவத்தால் தடை செய்ய முயன்ற பொழுதும், எதிர்ப்பு குரலால் ஓடி ஒளிந்து கொண்டார்கள். பல ஊழல்களையும் இதே போல அரங்கேற்ற முயன்று, பின் வாங்குகிறார்கள் .
  நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு வேளை , இவர்கள் பிஜேபியுடன் கூட்டணி அமைக்காத வரை எல்லாம் சரிதான் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.