என் அப்பாவின் நண்பர் …(2)

………………..

சாதாரண நிலையில் இருந்து, கடும் உழைப்பாலும்,
மதிநுட்பத்தாலும், துணிச்சலாலும் வாழ்வின் சிகரத்தை
அடைந்தவர், வாசன். வாசனின் இறுதி நாட்கள் பற்றி
ஒரு கட்டுரையில் விகடன் எம் டி பாலசுப்பிரமணியன்
கூறியிருந்த சேதி இது:-

“தன் பொருட்டு யாரும் துன்பப்படவோ, அனுதாபப்படவோ
கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார் அவர் (வாசன்).
அவருக்கு வயிற்றில் புற்று நோய் வந்ததே எங்கள் வீட்டில்
யாருக்கும் தெரியாது.

1968 ஏப்ரலில்தான் எனக்குத் தெரியும். எங்கள் குடும்ப டாக்டர் எம்.எஸ்.வெங்கட்ராமன் என்னை அழைத்து, விஷயத்தைச் சொன்னார்.”இது நோய் முற்றிய நிலை. ஆபரேஷனுக்காக
வயிற்றைத் திறந்து பார்த்தபோது, நானே பயந்துவிட்டேன். `
இந்த விஷயத்தை யாருக்கும் சொல்ல வேண்டாம்’ என்று
அவர் என்னிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், சொல்லாமல்
இருக்க முடியவில்லை” என்றார், டாக்டர்.

அதன் பிறகு, பாஸ் (தன் அப்பாவை அப்ப்டித்தான் அழைத்தார்) முகத்தைப் பார்த்தேன். எதுவுமே நடக்காதது போல் அவர் வீட்டில் நடமாடிக் கொண்டிருந்தார். அதையும் மீறி அவரிடம் ஒரே சோர்வு தென்படுவதை அப்போதுதான் ஊன்றி கவனித்து உணர்ந்தேன்.
ஒரு நாள் `பாஸ்’ என்னைக் கூப்பிட்டார். தனக்கு என்ன என்பதை அவராகவே சொல்லிவிட்டார். முன்கூட்டித் தெரியும் என்று நானும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டேன்.

“பாலு! திறமையுள்ள, தகுதியுள்ள மனிதர்கள் பலரிடமும்
கருத்து கேட்டு, அவர்கள் சொல்வதையெல்லாம் வைத்து ஓர்
இறுதி முடிவை எடுத்து அதன்படி செய்வது என் வழக்கம்.
வாழ்க்கையில் அடுத்தடுத்து எனக்குக் கிடைத்த வெற்றிகளுக்
கெல்லாம் அதுதான் காரணம். ஆனால், என் சொந்த உடல் நலம்
பற்றிய விஷயத்தில் அதையே செய்தது தவறு என்று
இப்போது புரிகிறது.

ஒன்றரை வருடத்துக்கு முந்தியே டாக்டர் வெங்கட்ராமன் என்னை ஆபரேஷன் செய்து கொள்ளச் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டிருந்தால், இன்னும் சில காலத்துக்கு என் ஆயுள் நீண்டிருக்கும். பலரிடம் கருத்துக் கேட்டுக் காலத்தைக் கடத்தியதுதான்,
என் உயிரையே விலையாகக் கேட்கிறது” என்றார்.

இவ்வளவும் சொல்லிவிட்டு, “இந்த விஷயங்கள் எதையும்
நீ அம்மாவிடம் சொல்லாதே” என்று என் வாயை கட்டிப்
போட்டார். ஆனால், அம்மாவிடம் சொல்லாமல் இருக்க
எனக்குத் தைரியமில்லை. தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொல்லிவிட்டு, “தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளாதீர்கள்”
என்றேன்.

எப்படித்தான் என் தாயார் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்
கொண்டாரோ, அவர் எதுவும் தெரிந்ததாகக் காட்டிக்
கொள்ளாமல் வளைய வந்தார். வீட்டுக்குள்ளேயே ஒரு
கொடுமையான, வேதனையான கண்ணாமூச்சி நடந்து
கொண்டிருந்தது.

மறைவதற்கு சில மாதங்களுக்கு முன், ரங்கா நர்சிங் ஹோமில்
ஒரு நாள் அவருக்கு டிரிப்ஸ்’ ஏற்றிக் கொண்டிருந்தார்கள். மருந்தில் ஏதோ தவறு நடந்து, உடம்பு தூக்கிப்போட ஆரம்பித்தது. படுக்கையில் இருந்தபடி ரொம்ப அவஸ்தைப்பட்டிருக்கிறார். உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டு, வேறுடிரிப்ஸ்’
பாட்டில் பொருத்தப்பட்டதில் உடல் நடுக்கம் சரியாகிவிட்டது.
இது நடக்கும்போது, இரவு 8 மணி இருக்கும்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், ரங்கா நர்சிங் ஹோம்
பறந்தோடிப்போய் அவர் முன்னால் நின்றேன்.என்னைப்
பார்த்தவர், “நடந்ததைக் கேள்விப்பட்டிருப்பாயே… எனக்கு
ராத்திரி ஏதாவது ஆகிப்போனால், உடனே போன் செய்து
யாருக்கும் தகவல் சொல்ல வேண்டாம். இரவு வேளையில்
யாரையும் தொந்தரவு செய்யாதே. எதுவானாலும், காலை
ஆறு மணிக்கு மேல் சொல்லு” என்றார்.

இதற்கு அவர் என்னிடம் எதிர்பார்த்த ஒரே பதில், “யெஸ் சார்”.
——–அதையே நானும் சொன்னேன்.

அவ்வாறு இல்லாமல், நான் உணர்ச்சிவசப்பட்டு, “ஏன்
இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? உங்களுக்கு ஒன்றும் ஆகாது”
என்று சொல்லியிருந்தால், அவருக்குப் பிடிக்காது.

நான் அமைதியாக நிற்க, “மாதவன் (உதவியாளர்) இங்கே
என்னுடன் இருப்பான். நீ இப்போது புறப்படு” என்றார்.
அதற்கும் “யெஸ் சார்” சொல்லிவிட்டு, கனத்த இதயத்துடன்
வெளியே வந்தேன்.

1969 ஆகஸ்டு 26-ந்தேதி காலையில் என்னைக் கூப்பிட்டு
அனுப்பினார். அப்போது ஏழரை மணி இருக்கும். நான் எதிரில்
போய் நின்றேன். அவரால் பேச முடியவில்லை. மிகவும்
நலிந்து போயிருந்தார்.

அன்றைய காலைப் பத்திரிகையைக் கொடுத்து, “இதைப்படி”
என்று வலது கையால் சுட்டிக் காட்டினார். “காங்கிரசில் பிளவு மறைகிறது” என்ற தலைப்பிட்டு வெளியாகி இருந்த
செய்தி அது. காமராஜருக்கும், இந்திராவுக்கும் இடையே
ஏற்பட்டிருந்த மனக்கசப்பு மறைவதற்கான அறிகுறிகள்
தெரிவதாக அந்தச் செய்தி சொன்னது. தன் உயிர் மூச்சாக
அவர் கருதிய காங்கிரசில் பிளவு ஏற்பட்ட போது, அவரால்
தாங்க முடியவில்லை. அந்தப் பிளவு மறைகிறது என்ற
செய்தியைப் பார்த்ததும் அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
சிரிக்க முடியாத அளவுக்கு பலவீனம்.

ஆனாலும் உதடுகள் லேசாக நெளிந்து ஒரு புன்னகையை
வெளிப்படுத்த முயன்றன. அன்று காலை 9.20 மணி.
நான் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தேன். கண் மூடி
படுத்திருந்தவரின் இடது கை மட்டும் `முடியவில்லை,
முடியவில்லை’ என்பது போல் இரு முறை அசைகிறது.

அதன்பின் எந்தச் சலனமும் இல்லை. பதறிப்போய் நாடி
பிடித்துப் பார்க்கிறேன். துடிப்பு இல்லை. டாக்டரை அழைக்க
எழுந்து ஓடுகிறேன். டாக்டரே அப்போது உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறார். பரிசோதித்துப் பார்த்துவிட்டு,
`உயிர் பிரிந்து விட்டது’ என்று டாக்டர் அறிவித்தார்.”

  • இவ்வாறு பாலசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

வாசன் மறைந்தபோது தமிழக முதல் அமைச்சராக
கருணாநிதி இருந்தார். அவர், மற்ற அமைச்சர்களுடன்
சென்று இறுதி மரியாதை செலுத்தினார். வாசன்
மரணச்செய்தி பரவியதும், சென்னையில் உள்ள எல்லா ஸ்டூடியோக்களும் மூடப்பட்டன. நடிகர், நடிகைகள்,
பட அதிபர்கள், டைரக்டர்கள் அனைவரும் வாசன் வீட்டுக்குச்
சென்று இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி, கணவர் “கல்கி” சதாசிவத்துடன் வந்து
மரியாதை செலுத்தினார். மாலையில் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம், மைலாப்பூர் எட்வர்டு எலியட்ஸ் சாலையில்
(இன்றைய ராதாகிருஷ்ணன் சாலை) உள்ள வாசன் இல்லத்தில்
இருந்து புறப்பட்டது. எம்.ஜி.ஆர், பட அதிபர்கள்
ஏவி.மெய்யப்ப செட்டியார், சுந்தர்லால் நகாதா, முன்னாள்
அமைச்சர்கள் கக்கன், பூவராகன், தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம் மற்றும் திரை உலகப் பிரமுகர்கள்
ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.

உடலை சுமந்து செல்ல, ஜெமினிகணேசன் தோள் கொடுத்தார். ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இறுதி ஊர்வலம், கிருஷ்ணாம்பேட்டை மயானத்தை அடைந்தது.
அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. “சிதை”க்கு வாசனின்
ஒரே மகன் பாலசுப்பிரமணியன் தீ மூட்டினார்.

வாசன் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதத்தில்,
சென்னை நகரில் எல்லா சினிமா கொட்டகைகளிலும் காட்சிகள்
ரத்து செய்யப்பட்டன. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆபீசில்,
கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

ஒரு மிகப்பெரிய சகாப்தம் முடிவிற்கு வந்தது…..

…………………………………………………………………………………………..…….

பின் குறிப்பு – 1930-களின் முடிவு, 40-களின் துவக்கம்.
ஜெமினி ஸ்டூடியோவை வாசன் ஏற்று நடத்துவதற்கு
முந்தைய சமயம். வாசன் அவர்கள், மிகச்சாதாரண
சராசரி மனிதராக இருந்த சமயம்….

அப்போதைய சென்னை தியாகராய நகர் –
மனிதர்களோ, வீடுகளோ -அதிகம் இல்லை.
உருவாக்கப்படுகிறது என்கிற அறிவிப்போடு இருந்தது.

கூட்டம் இல்லாத, வெறுமையான – ஹபிபுல்லா சாலையில் –
என் அப்பா, எஸ்.எஸ்.வாசன், ஆசிரியர் “கல்கி”
ரா.கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் துமிலன் ஆகியோர்
அடுத்தடுத்த குடித்தனங்களில் வசித்து வந்தனர்.
அவர்களது குடும்பங்கள் மிக நெருக்கமாக பழகின.
என் அப்பாவுக்கு, வாசன் அவர்களுடன் நல்ல, நெருங்கிய
பழக்கம் இருந்தது….

அப்போதெல்லாம், அப்பா சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக
ஈடுபட்டு வந்த நேரம்…..சுதேசமித்திரனில் ஆசிரியர் குழுவில்
பணியாற்றி வந்தார்…கௌரவமான பதவி தான்.
மனதுக்குப் பிடித்த பணி தான்.
ஆனால் சம்பளம்….? கேள்விக்குறி தான்…. 3-4 மாதங்களுக்கு
ஒருமுறை எதாவது கிடைத்தால் அபூர்வம்.

வீட்டில் குடும்பம் பெருகியது. வறுமை தாண்டவமாடியது. …வருமானமின்றி அதிக நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
எனவே – அடுத்த 3 வருடங்களில், என் அப்பா வடக்கே
உருப்படியாக மாதச் சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையில் சேர்ந்து
குடும்பத்தோடு குடி பெயர்ந்தார். இங்கே அடுத்தடுத்த
குடித்தனங்களில் இருந்தவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தனர்.

அதன்பின், வாசன் அவர்கள் ஜெமினி ஸ்டூடியோ,
மெகா பட்ஜெட் அளவில் அகில இந்திய சினிமாக்கள்
தயாரிப்பு, விகடன் வார இதழ் என்று மிகவும்
பெரிய நிலைக்கு சென்று விட்டார்.

அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து சென்னை வந்த
என் அப்பா, பழைய நண்பர் வாசனை பார்ப்பதை தவிர்த்து
விட்டார். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தது எங்கள்
குடும்பம்…. வாசன் அவர்கள் மிக உயர்ந்த நிலையில்
இருந்தார்…. அந்த நிலையில் நட்புரிமை கொண்டாட
விரும்பவில்லை என் அப்பா….. தவிர்த்து விட்டார்….!!!

பல வருடங்கள் கழித்து நான் வளர்ந்து
பெரியவனான பிறகு – வயது முதிர்ந்து தன் இறுதிக்காலங்களில் இருந்த என் அப்பாவை உற்சாகப்படுத்துவதற்காக, அடிக்கடி அவருடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பேன்….அந்த காலகட்டத்தில் – “மலரும் நினைவுகளாக”
பல பழைய சங்கதிகளை என்னுடன் என் அப்பா பகிர்ந்து
கொண்டபோது ” ஒரு காலத்தில் வாசன் என்
நெருங்கிய நண்பர் ” என்று சொல்லி மேற்படி
தகவல்களைச் சொன்னார்…!!!

.
………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to என் அப்பாவின் நண்பர் …(2)

  1. புதியவன் சொல்கிறார்:

    எஸ் எஸ் வாசன் அவர்களைப் பற்றி நான் படித்தவைகள் புத்தகங்களோடு மறந்துவிட்டன. அவருக்கு உதவிய ஆசிரியருக்கு (எஸ் எஸ் வா. இளமையில் கஷ்டப்பட்டபோது), பிறகு உதவி செய்திருக்கிறார் (வேலை போட்டுக்கொடுத்து). எல்லோரிடமும் மிக மரியாதையாகப் பேசக்கூடியவர் என்று வாலி அவர்கள் எழுதியிருக்கிறார் (சாதாரணமாக, இவன் பணத்துக்கு வேலை செய்பவந்தானே என்று நினைத்துவிடாமல்).

    ஆனால் அந்தக் காலத் தமிழகம் எங்கே…50-60 ஆண்டுகளில் தமிழகத்தின் தரம் எவ்வளவு குறைந்திருக்கிறது என்று தெரிகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.