என் அப்பாவின் நண்பர் ….(1)

……

…………………….

“ஒரு பத்திரிகை நடத்தினா, விளம்பரம் மூலம் பணம் வருது,
நமக்குத் தோணுகிற விஷயத்தையும் மக்களுக்குச் சொல்ல முடியுதுங்கறதைப் பார்த்தபோது, நாமே ஒரு பத்திரிகை
நடத்தினா என்னன்னு வாசனுக்குத் தோனியிருக்கு.

அதனால்தான் ஆனந்த விகடன் ஆரம்பிச்சாரு. ஆரம்ப
காலத்திலே என் சங்கதிங்களுக்கு நிறைய இடம் கொடுத்தாரு.
அப்ப அடிக்கடி பார்க்கிறதும் உண்டு. எப்போதும் எங்கிட்டே
ஒரு மரியாதை!

அவர் ஒரு ராஷனலிஸ்ட்; சோஷியலாஜிகலி என் கருத்துக்கு
ஒத்து வருவாரு. அவர் எடுக்கிற எல்லா சினிமா படத்துக்கும்
‘விடுதலை’ பத்திரிகைக்கு விளம்பரம் உண்டு. கேட்காமலே விளம்பரமும் வரும்; பணமும் வரும்.

  • புராணப்படம் தவிரத்தான்!

பத்திரிகைத் துறையிலும் சரி, பொது வாழ்விலும் சரி,
ஒரு குற்றம்கூட சொல்ல முடியாதபடி பெரிய மனுஷனா
வாழ்ந்தார் அவர்.

மூணு நாலு வருஷத்துக்கு முந்தி,
என் பிறந்த நாளுக்கு மீரான் சாகிப் தெரு வீட்டுக்கு வந்தார்.
வழக்கப்படி மரியாதையா நின்னுகிட்டேயிருந்து, பேசிட்டுப்
போயிட்டாரு. போனப்புறம் பார்த்தா, ஒரு கவர் இருக்குது.
அதிலே இரண்டாயிரம் ரூபாய் பணம்! எனக்கு ஆச்சர்யமாப்
போச்சு! கொடுக்கிறதை யாருக்கும் தெரியாம
கொடுக்கணும்கிற பெரிய குணம் அது. ரொம்பப்
பெரிய மனுஷன் அவர்.”

-மேற்கண்ட வாசகங்கள் ….
அமரர் எஸ்.எஸ்.வாசன் அவர்களைக் குறித்து
பெரியார் ஈ.வே.ரா. சொன்னது….

……………………………..

“முதலாளி என்ற எண்ணமே தோன்றியதில்லை!”
“வேலை என்று வந்துவிட்டால், சொந்த சுகங்கள் எல்லாம்
பறந்து விடும். பல இரவுகளில் ஷூட்டிங் மும்முரத்தில்
வெறும் ரொட்டியைத் தின்றுவிட்டுப் படம் எடுப்பார்.
அதிலும், ‘சந்திரலேகா’ படப்பிடிப்பின்போது அவர்
பட்டபாடு சொல்லத் தரமன்று.

ஸ்டுடியோவில் மூலைக்கு மூலை யானைகளும்
குதிரைகளும் கட்டிக்கிடக்கும். அகழிகளின் அருகில்
காவலர்கள் நிற்பார்கள். எங்கு பார்த்தாலும்
அரண்மனைகளாக இருக்கும். அந்தப்புரப் பணிப் பெண்கள்
அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள்.
போர்ட்டிகோக்களில் அரண்மனைக் கோச்சுகளும்,
‘நான்கு குதிரை சாரட்’டுகளும் நிற்கும். ‘மெஸ்’ஸிலிருந்து
அரண்மனைச் சமையல் மணம் வந்துகொண்டே இருக்கும். வாத்தியக்காரர்களும் சங்கீத வித்வான்களும் கொண்ட
ஜெமினி ஆர்கெஸ்ட்ரா முழங்கிக்கொண்டே இருக்கும்.

‘நம்பர் ஒன்’ ஸ்டுடியோவில் ஜெர்மன் பெண் ஒருவர்
100 நாட்டிய வனிதைகளை ஆட்டி வைத்துக்கொண்டு
இருப்பார். ஆயுத சாலைகளில் கத்திகள் தயார் ஆகும்.
ஸ்டன்ட் வீரர்களும், ரஞ்சன், ராதா, சியாம்சுந்தரும்,
சோமுவும் வாட்போர் நடத்திக் கொண்டே இருப்பார்கள்.
ஜெமினி ஸ்டுடியோவே ஒரு பெரிய சமஸ்தானமாகக்
காட்சி அளிக்கும். ஆனால், ‘எங்கே அந்த சமஸ்தான
மன்னர்? ராஜா எங்கே?’ என்று கேட்டால், ஒரு
தொளதொளத்த கதர் சட்டையையும், அதன் மேல்
மூன்று முழத் துண்டையும் போட்டுக் கொண்டு,
அவர் எங்கும் இருப்பார். புதிதாய் அமர்த்திய
தொழிலாளர்கள் சிலர் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தார்கள்…
“எங்கே தம்பி, முதலாளி? இதைப் பார்க்கவே
வரமாட்டேங்கறாரே?”

“பட முதலாளி இல்லியா… எத்தினியோ வேலை இருக்கும்!”

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தங்கள்
அருகில் நிற்கும் எளிய மனிதர்தான் முதலாளி என்பது
தெரியவில்லை. அந்த முதலாளிக்கும், “நான்தான் உங்கள்
முதலாளி” என்று சொல்லத் தோன்றவில்லை. ஏன் என்றால்,
தான் முதலாளி என்ற எண்ணமே அவருக்கு ஒரு நாளும் தோன்றியதில்லை.”

வாசன் அவர்களைப்பற்றி – திரு. கொத்தமங்கலம் சுப்பு

……………………………

“எனக்கு வாசன் காட்டிய வழி!”

” ‘வள்ளி’ படம் எடுத்து, 1945-ல் ரிலீஸ் செய்தேன். பாரகனுக்கு
வந்து படத்தைப் பார்த்தார் வாசன். வாயார, மனமார
பாராட்டினார். அப்போது என்னிடம் வசதி கிடையாது.
மிகச் சிறிய கொட்டகையில் ஸ்டூடியோ நடத்தினேன்.
மிக எளிய ஆரம் பம். எவ்வளவோ இடர்ப்பாடுகள்.
எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, நான் டைரக்ட் செய்த
அந்தப் படத்தை வெளியிட்டேன். வாசன் பாராட்டியபோது,
நான் பட்ட சிரமங்களையும், என் ஸ்டூடியோவின் நிலையையும் சொன்னேன். அதற்கு அவர், ‘மெய்யப்பன், நாம்
எப்படிப்பட்ட படம் எடுக்கிறோம், எந்தச் சூழ்நிலையில்
நமது ஸ்டூடியோ இருக்கிறது என்பது பற்றி ஜனங்களுக்கு
அக்கறை இல்லை. நாம் என்ன கொடுக்கிறோம் என்பதுதான்
முக்கியம். உங்களுக்கு இருக்கும் இந்தச் சொற்ப வசதியில், நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு மிகப்
பிரமாதமான காரியம் செய்திருக்கிறீர்கள்.
என் பாராட்டுக்கள்’ என்றார்.

அதே போல் ‘நாம் இருவர்’ படத்தைப் பார்த்துவிட்டு,
“‘நாம் இருவர்’ பார்த்தேன். அப்படியே பிரமித்துவிட்டேன்”
என்று கடிதம் எழுதினார். சிறப்பு எங்கு இருந்தாலும், தாமாக
முன் வந்து பாராட்டும் உயரிய குணம் அவரிடம் உண்டு.

தமிழ்நாட்டுக்குள் கட்டுப்பட்டு இருந்த நாங்கள், இன்று
அகில இந்திய ரீதியில் படங்கள் எடுக்கிறோம் என்றால்,
அது வாசன் காட்டிய வழிதான். அவரின் ‘சந்திரலேகா’தான்
இந்திப்படம் எடுக்கும் துணிவை எனக்குத் தந்தது. அவருடைய துணிவுதான் எனக்குத் துணை நின்றது. ‘நன்கு சிந்தித்துச்
செயல்படுதல்’ என்பதுதான் எனக்கு வாசன் காட்டிய வழி!”

  • தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்பன்

………………………………..

“பிரபல பத்திரிகை ஆசிரியர் பாபு ராவ் படேல் அவர்களின்
வீட்டில்தான் முதன்முதலில் நான் வாசன் அவர்களைச்
சந்தித்தேன். அப்போது ‘சந்திரலேகா’, ‘நிஷான்’ போன்ற
படங்கள் மூலம் புகழ் பெற்றிருந்தார் அவர். வாசன் என்பது,
திரை உலகில் ஒரு மகத்தான பெயராகியிருந்தது.

பாபுராவ் என்னை வாசன் அவர்களுடன் உணவருந்தக்
கூப்பிட்டிருந்தார். டின்னர் முடிந்ததும், வாசன் என்னிடம்
ஒரு ‘ஃபைலை’க் கொடுத்து, ”இதில் ஒரு கதை இருக்கிறது.
படித்துப் பார்த்து, இதில் எந்தப் பாத்திரத்தை நீங்கள் ஏற்று
நடிக்க விரும்புகிறீர்கள் என்று தெரிவியுங்கள்” என்றார்.

அது ‘இன்ஸானியத்’ என்ற திரைப்படத்தின் கதை.
ஒரு கதாநாயகன், ஒரு கதாநாயகி, ஒரு ஸைட் கேரக்டர்
மூன்றும் அதில் இருந்தன. சாதாரணமாக என்னைப் போன்ற
ஒரு நடிகன், கதாநாயகன் வேஷத்தைத்தான் விரும்புவான்.
ஆனால், என்னை அந்த உப பாத்திரம் கவர்ந்தது. மறுநாள்,
வாசன் அவர்களிடம் இதைச் சொன்னபோது, அவர் சிரித்துக்
கொண்டே, தம் பையில் இருந்த ஒரு கவரை எடுத்துப்
பிரித்தார். அதில், அந்த உப பாத்திரத்தின் பெயருக்கு
முன்னால் என் பெயர் எழுதப்பட்டிருந்தது.

”நீங்கள்தான் இந்த ரோலுக்கு ஏற்றவர் என்பது என் கருத்து.
ஆனால், இதைச் சொன்னால், நீங்கள் என்னைத் தவறாக நினைத்துக்கொண்டு விடுவீர்களோ என்று பயந்தே,
அப்படிச் சொன்னேன். என் கருத்துடன் நீங்கள் ஒத்துப்
போகிறீர்கள். ரொம்பச் சந்தோஷம்!” என்றார்.
அன்று ஆரம்பித்த எங்கள் கருத்து ஒற்றுமை, இறுதி வரை
இருந்தது. அவரைப் போன்று, தொழிலுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு படத் தயாரிப்பாளரை
நான் இதுவரை கண்டதே இல்லை.”

  • புகழ்பெற்ற இந்தி நடிகர் திலீப்குமார்

…………………………….

தமது பழைய ஏழை நண்பர்கள் யாரையும் அவர் மறப்பதில்லை. அவர்களோடு பேசிப் பழகுவதை அகௌரவமாகக் கருதுவதில்லை. அவரது வீட்டு விசேஷங்களுக்கும் ஏழை, பணக்காரர்கள் எல்லாரும் அழைக்கப்படுவார்கள்.”

-பழைய எழுத்தாளர் துமிலன்,

.
………………………………………….
அடுத்த பகுதியில் தொடரும்…..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.