திருடனும் துறவியும் …..

……………

……………………

நாகார்ஜுனா என்பவர் ஒரு பெளத்தத் துறவி.
அவர்மீது பெருமதிப்பு கொண்ட ஒரு மகாராணி அவரைச்
சந்தித்தார். ‘சுவாமி, நீங்கள் மனமுவந்து எனக்காகத் தங்களின்
பொருள் ஏதாவது ஒன்றை எனக்குத் தரவேண்டும். உங்களின்
ஆசி தாங்கிய அந்தப் பொருளை நாங்கள் தலைமுறை
தலைமுறையாகப் போற்றிப் பாதுகாப்போம்’ எனக் கேட்டார்
அந்த மகாராணி.

அந்தத் துறவியும் தன்னிடம் இருந்த ஒரே பொருளான திருவோட்டைத் தயங்காமல் அந்த ராணியிடம் கொடுத்துவிட்டார். மகாராணிக்கு அளவிடமுடியாத ஆனந்தம். அந்த மகிழ்ச்சியில் தங்கத்தாலும்
வைரத்தாலும் இழைக்கப்பட்ட ஒரு திருவோட்டை பதிலுக்கு
அந்தத் துறவியிடம் கொடுத்தார். துறவிக்குத் தங்கமாக இருந்தால்
என்ன, தகரமாக இருந்தால் என்ன – மண்டை ஓட்டினாலான
குவளையைப் போலத்தான் அதை பாவித்துப் பெற்றுக்கொண்டார்
அந்தத் துறவி.

இதையெல்லாம் தூரத்தில் இருந்து நோட்டம்விட்டுக்கொண்டிருந்த
ஒரு திருடன், அந்தத் துறவியைப் பின்தொடர்ந்து சென்றான்.
துறவி அன்றைய இரவைக் கழிக்க ஒரு கோயில் மண்டபத்தில் தங்க,
திருடனும் அங்கே தங்கினான். இவன் நோக்கத்தைப் புரிந்துகொண்ட
துறவி, அந்தத் தங்கத் திருவோட்டைத் திருடன் இருந்த தூணின்
பக்கமாக நகர்த்திவிட்டு, திரும்பிப் படுத்துக்கொண்டார்.

இதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான் திருடன். தான் திருடன்
எனத் தெரிந்தும், விலைமதிக்க முடியாதது அந்தத் திருவோடு
என்பது அறிந்தும் எப்படி இவரால் இப்படி நடந்துகொள்ளமுடிகிறது
என்கிற நெகிழ்ச்சியில் அவரின் காலில் விழுந்தான்.

‘‘எந்தவொரு சலனமும் இன்றி உங்களிடமிருக்கும் ஒரே ஒரு
பொருளை அடுத்தவருக்கு விட்டுத்தர முடிகிறது? இந்தப் பெரிய
மனது எனக்கும் வர நான் என்ன செய்யவேண்டும்?’’ என
நன்றிப்பெருக்கோடு திருடன் கேட்க, ‘‘அது ஒன்றும் அவ்வளவு
கஷ்டமான விஷயமில்லை. எப்போது நினைத்தாலும் அது நடக்கும்’’
என்றார் அந்தத் துறவி.

‘‘ஐயா, நான் இந்த ஊரில் திருடாத வீடே இல்லை. இந்த
வட்டாரத்தில் என்னளவிற்குத் திருடிச் சொத்து சேர்த்த ஆளும்
வேறு யாரும் இருக்கமுடியாது. அப்படியிருக்க ஒரே நாளில்
உங்களைப் போன்ற துறவு மனநிலை எனக்கு எப்படி சாத்தியமாகும்?’’
எனக் கண்களில் கேள்விக்குறியோடு கேட்டான் அந்தத் திருடன்.

‘‘பல நூறு ஆண்டுகளாக இருண்டு கிடக்கும் குகையில்
ஒரு விளக்கை ஏற்றினால் அது அந்தக் குகையை ஏற்றப்பட்ட
நொடியிலிருந்தே வெளிச்சமாக்கிவிடும். அதுபோலத்தான்
எல்லாமே. நீ எத்தனை ஆண்டுகளாகத் திருடுகிறாய்
என்பதெல்லாம் முக்கியமல்ல, நீ திருந்த முடிவெடுக்கும் கணம்
உன் மனது தூய்மையாகிவிடும்’’ என்றார் அந்தத் துறவி.

‘‘நான் இதை எதிர்பார்க்கவில்லை. ‘முதலில் திருட்டை
விட்டொழி. அதன் பிறகுதான் மற்ற விஷயங்களைப் பற்றி
யெல்லாம் உன்னால் சிந்திக்க முடியும்’ என்றுதான் நீங்கள்
சொல்வீர்கள் என நினைத்தேன்’’ என்றான் அந்தத் திருடன்.

திருடன் வாக்கியத்தை முடிப்பதற்கு முன்னரே மகான்
குறுக்கிட்டார். ‘‘நீ என்ன தொழில் செய்கிறாய் என்பதெல்லாம்
எனக்குப் பொருட்டல்ல. இருண்டுபோன மனதில் ஒளி ஏற்றுவது
எப்படி? மனதில் அமைதியும் சாந்தமும் தவழ என்ன செய்ய
வேண்டும் எனக் கேட்டாய். அதற்கான வழியை மட்டும் சொல்கிறேன்.
அதோடு என் வேலை முடிந்தது’’ என்றவர் தொடர்ந்தார்.

‘‘நீ என்ன செய்தாலும் சரி, அந்தக் குறிப்பிட்ட செயலைச்
செய்யும்போது எப்படி மூச்சுவிடுகிறாய் என்பதை ஆழ்ந்து கவனி.
வீட்டின் கதவைக் கள்ளச்சாவி போட்டுத் திறக்கிறாயா?
உன் இஷ்டம், திறந்துகொள். ஆனால் அப்போதும் உன்
சுவாசத்தை உன்னிப்பாகக் கவனி. நகைப்பெட்டியை
உடைக்கிறாயா? உடை. ஆனால் அப்போது நீ இழுத்துவிடும்
மூச்சைக் கவனிக்க மறக்காதே. நீ என்ன செய்தாலும் உன் கவனம்
உன் மூச்சில் நிலைக்குத்தி நிற்கட்டும்’’ என்று சொல்லி அந்தத்
திருடனை அனுப்பி வைத்தார்.

சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த மகான் எங்கிருக்கிறார்
என்று தேடிக் கண்டுபிடித்து அவர் காலில் வந்து விழுந்தான்
அந்தத் திருடன். ‘‘ஐயா… இத்தனை நாள்களாக நானும் எவ்வளவோ முயன்றேன். என்னால் திருடவே முடியவில்லை. கள்ளச்சாவி
போட்டு ஒரு வீட்டின் பூட்டைத் திறக்க முயற்சி செய்தபோது,
நீங்கள் சொன்னதைப்போல என் மூச்சுக்காற்றை கவனிக்கத்
தொடங்கினேன்.

அப்படி உற்று நோக்கும் அந்த கணத்தில் என் மனதில்
ஒளி பரவுவதையும், அமைதி குடியேறுவதையும், தெளிவு
பிறப்பதையும் என்னால் உணர முடிந்தது. அந்த கணத்தில்
என்னால் எந்தத் தீயகாரியங்களையும் செய்ய முடியவில்லை.
திருட்டினால் கிடைக்கும் பொன் பொருள்களைவிட, மனதில்
தோன்றும் இந்த அமைதியும், தெளிவும்தான் எனக்கு வேண்டும்.
என்னை உங்கள் மாணவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’’
எனக் கையெடுத்துக் கும்பிட்டான்.

……………………………………………………………………………………………………………………..

மூச்சுப் பயிற்சிக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க
வேண்டும் என்பதை நம்மில் பெரும்பாலானோர் உண்டரவே
இல்லை; கொஞ்ச நாள் பழகிப் பார்த்தால் – அதன் அருமையும்,
பயனும் புரிய வரும்.

.
………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.