
……………………….
நீண்ட கால நண்பர்கள் இருவர் காலை வாக்கிங்
போய்க் கொண்டிருந்தனர். பல வருடங்களாக, தினசரி,
ஒரே வழியில் நடப்பதால், சுற்றுப்புறத்தில் நடைபெறும் நிகழ்வுகளால் பெரிதாக கவனச் சிதறல் ஏற்படாமல்,
ஒரு ரிதத்துடன், சீராக இருக்கும் அவர்களது வாக்கிங்.
ஒரு நாள் காலையில் நடந்து கொண்டிருக்கும் போது சடசடவென்று மழை பெய்யத் துவங்கியது. சட்டென்று
அருகே மண்டபம் போலத் தோற்றமளித்த ஒரு கட்டிடத்தின் வாயிலில் ஒதுங்கினர். மழை சற்று பலமாகவே பெய்யத் துவங்க, மண்டபத்தினுள் ஒதுங்க வேண்டியதாகி விட்டது.
உள்ளே ஒரு இருபது பேர், தரையில் விரிப்பு அமைத்து, அதன்மீது அசையாமல், கண்மூடி அமர்ந்திருந்தனர்.
அங்கு என்னதான் நடக்கின்றது என்று மழைக்கு ஒதுங்கிய இருவரும் ஆர்வமாக கவனிக்கத் துவங்கினர்.
அமர்ந்து இருந்தவர்கள் முன்பாக ஒரு சிறிய மேடை
இருந்தது. அங்கு ஒரு துறவியின் படம், பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அருகே ஒரு தீபம் ஏற்றப்பட்டு, அகர்பத்தி புகைவிட்டு நறுமணம் பரப்பிக் கொண்டிருந்தது.
மேடை ஓரமாக ஒருவர் அமைதியாக அமர்ந்திருந்தார். இவர்களை நோக்கி வணங்கி, வாய் மீது விரல் வைத்து, மௌனம் காக்குமாறு கேட்டுக் கொண்டார். இவர்கள் இருவரும் தலையசைத்து விட்டு, ஓரமாக அமர்ந்து கொண்டனர்.
இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளிலிருந்து ஒருசில நிமிடங்களுக்கு ஒரு முறை, மென்மையான குரலில், நிதானமாக அவர்களுக்கு வழிகாட்டல் வழங்கப்பட, அவர்கள் அதன்படி, மெதுவாக, இயல்பாக சில செயல்முறைகளை, அமர்ந்த நிலையிலேயே செய்து கொண்டிருந்தனர்.
வெளியே மழை ஆரவாரமாக, இடி முழக்கத்துடன் பெய்து கொண்டிருந்தது. சுமார் இருபது நிமிடங்கள் கடந்த பின்னர், ஒலிபெருக்கியில் ஒரு பூஜை மணியின் சப்தம் கேட்டது. அதுவரை அமைதியாகப் பயிற்சி செய்து வந்த அனைவரும், மேடையில் இருந்தவரும், ஒருமித்த குரலில், துதி போலிருந்த ஒரு பாடலைப் பாடினர். மெல்ல எழுந்து, தாங்கள் அமர்ந்திருந்த விரிப்புகளை மடித்து, ஒரு ஓரமாக அடுக்கி வைத்த பின்னர், வரிசையாகச் சென்று, துறவியின் படத்தை நமஸ்கரித்து வணங்கினர்.
மழை பெய்வதை அப்போதுதான் கவனித்த அவர்கள், மண்டபத்தின் சுவர் ஓரமாக, வரிசையாக அமர்ந்து, மழை நிற்பதற்காகக் காத்திருந்தனர் – அமைதியாக. அவர்களுக்கிடையில் உரத்த சம்பாஷணையோ, உலகை வெல்லும் பரபரப்போ அறவே இல்லை.
மேடையில் இருந்தவர் மெல்ல நடந்து, இந்த இருவரிடமும் வந்தார். மறுபடியும் வணங்கினார். மெல்லிய உடல்; ஒளி வீசும் விழிகள்; மலரச் சிரித்த முகம்; தளர்வாக அணிந்திருந்த வெண்ணிற மேலாடை மற்றும் கால்சட்டை. மென்மையான குரலில், ஒவ்வொரு சொல்லாக, மலர்களைத் தேர்ந்தெடுத்து மாலையாகத் தொடுப்பதுபோல், நிதானமாக, அழகாகப் பேசினார்.
“நீங்கள் இருவரும் இங்கு மழைக்கு ஒதுங்கியது போலத் தெரிகின்றது. இதுவரை மௌனம் காத்ததற்கு நன்றி.”
அங்கு ஒரு கனத்த மௌனம் நிலவியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மறுபடியும் அவரைப் பார்த்தனர். ஒருவர் வாயைத் திறந்தார்.
“வணக்கம்.. இது என்ன யோகப் பயிற்சி மையமா சார்?”
புன்னகைக்குப் பின் பதில் வந்தது.
“அப்படியும் சொல்லலாம். ஆனால் இங்கு ஹட யோகம் போன்ற யோகாசனப் பயிற்சிகளை அளிப்பதில்லை. அவற்றை ஆசிரமத்தில் சென்று பயிலலாம். இங்கு நடைபெறுவது பெரும்பாலும் தியானப் பயிற்சிதான். வகுப்புகளில் ஏற்கனவே பங்கு பெற்றவர்கள், இங்கு தினசரி வந்து, கூட்டாகப் பயிற்சி செய்வார்கள்.”
…
“எல்லாப் பயிற்சியுமே இப்படி அமைதியாகத்தான்
இருக்குமா சார்?”
மென்மையான சிரிப்பொலி மழைத்தூறல் மாதிரி அங்கு சிதறியது, சப்தமின்றி.
“தியானப் பயிற்சி செய்வதே அமைதி நிலையை அடையும் பொருட்டுதானே. அதனால், நீங்கள் பார்த்ததைப் போன்ற கைடட் மெடிட்டேஷன் எல்லாமே அமைதியாகத்தான் இருக்கும்.”
“இதனால் என்ன பயன் சார்?”
அவர் அங்கு அமர்ந்திருந்தவர்களை நோக்கிக் கைகாட்டி,
“இதுவும் கூட ஒரு பயன்தான். இதுபோக, பல நிலைகளில், அவர்களுள் அமைதி பரவும் – பயிற்சி செய்யச் செய்ய. ஒரு நிலையில், அவர்களது இருப்பே அமைதியானதாகி விடும்.”
“ஆனால் பரபரப்பான, ஆரவாரமான, கூச்சல் நிறைந்த உலகில்தானே இவர்களும் இருக்கிறார்கள் சார்.. அதிலிருந்து தப்பிக்க யாருக்கும் வாய்ப்பில்லையே?”
மழை நின்று விட, அவர்கள் மெல்ல எழுந்து, வாயில் நோக்கி நகர்ந்து, வெள்ளாடைக்காரரை வணங்கியதோடு நில்லாமல், அவருடன் உரையாடிக்கொண்டிருந்த இருவருக்கும் கூட வணக்கம் தெரிவித்து விட்டு, வெளியே சென்றனர்.
“நீங்கள் இருவரும் நீண்ட நேரமாக இங்கு காத்திருக்க வேண்டியதாகி விட்டது. தங்களுக்கு ஏதேனும் பணியிருந்தால் சென்று விட்டு, மாலையில் தாராளமாக வரலாம்.”
இருவரும் மறுபடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“நோ பிராப்ளம் சார். நாங்கள் இருவருமே பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்கள்தான். உங்களுக்கு இப்போது ஏதும் மீட்டிங் இல்லையென்றால், சிறிது நேரம் பேசலாமா?”
“ஓ, தாராளமாக. எனக்கு அடுத்த வகுப்பு மதியம்தான். இல்லத்தரசிகள் சிலர் மற்றும் ஓய்வு பெற்றோர் சிலர் ஆகியோர், அந்த நேரம்தான் பயிற்சிக்குத் தடையில்லாதது என்று வருவார்கள். வாருங்கள், நாம் உள்ளே சென்று, அமர்ந்து பேசலாம்.”
அலுவலக அறை போன்ற இடம் தூய்மையாக, வெண்மையாக இருந்தது. ஒரு மேசை, நான்கு நாற்காலிகள், ஒரு புத்தக அலமாரி, ஒரு பெடஸ்ட்டல் மின் விசிறி ஆகியவை தவிர, ஓரமாக ஒரு மண்பானை. சுவற்றில் அதே துறவியின் படம். அறையில் சாம்பிராணி மணம்.
“இவர்தான் உங்க குருவா சார்?”
அவர் இயல்பாக அந்தப் படத்திலிருந்த துறவியை வணங்கி,
“ஆம்.”
“நீங்க எப்போ இவரிடம் சேர்ந்தீர்கள்.”
“எட்டு வருடங்களுக்கு முன்பு. நான் பணிபுரிந்த அலுவலகத்தில் அவரது பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்.”
“ஓ, என்ன வேலை செஞ்சுக்கிட்டிருந்தீங்க?”
“ஒரு சர்வதேச ஐ.டி நிறுவனத்தில், மேலாளராக இருந்தேன்.”
“இப்ப என்ன செஞ்சுக்கிட்டிருக்கீங்க?”
“இந்த மையத்தில் தன்னார்வத் தொண்டராக, பயிற்சி அளித்தல், பராமரிப்பு, புதிதாக வருவோருக்குத் தகவல் அளித்தல் போன்ற பணிகளைச் செய்து வருகிறேன்.”
“ஐ.டி வேலையை விட்டுட்டீங்களா?”
“ம்ம்ம், பிழைத்துப் போ என்று பிழைப்பு என்னை விட்டுவிட்டது என்றுதான் நான் நினைக்கிறேன்.”
அவரது முகத்தில், அப்போதுதான் விடுதலை அடைந்து, சிறையில் இருந்து வெளியே வந்து, சுதந்திரக் காற்றை சுவாசித்த மாதிரி பொலிவுடன், பிரகாசமான ஒரு புன்னகை உதித்தது.
“இந்த வாலன்ட்டியர் வேலை மட்டும் பண்ணினாக்க, எப்படி சார் செலவையெல்லாம் சமாளிக்கறீங்க?”
“எனக்கு என்று தனிப்பட்ட செலவுகள் பெரிய அளவில் ஏதுமில்லை. இருக்க இடம், உடுக்க ஒருசில உடைகள், படுக்கப் பாய், தலையணை, போர்வை, வசிக்க ஒரு சிறிய அறை ஆகியவை இங்கேயே உள்ளனவே.”
“சாப்பாட்டுக்கு என்ன சார் செய்வீங்க?”
“தினசரி இங்கு அன்னதானம் உண்டு. பகலில் அதையே நானும் உட்கொள்வேன். இரவில் ஏதேனும் பழங்கள். உடல் இயக்கத்திற்கு அது போதுமானது.”
“உங்கள் குடும்பத்தினர் இதற்கு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?”
“என் மனைவியும் ஒரு தன்னார்வத் தொண்டர்தான். அவர் ஆசிரமத்தில் இருக்கிறார். எங்களுடைய பெண் குழந்தை அங்குள்ள பள்ளியிலேயே படிக்கிறார். இருவரது பெற்றோரும் சொந்த ஊரில் இருக்கின்றனர்.”
இப்போது இருவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் மையமாக விழித்தனர். அந்த வெள்ளாடை வாலன்ட்டியரே தொடர்ந்தார்.
“அது சரி, நாம் என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் தியானப் பயிற்சியின் பயன்களைப் பற்றிக் கேட்டீர்கள் அல்லவா!”
“அட ஆமாம் சார். இங்கு பயிற்சிக்கு வர்றவங்களும் இதே சத்தமான உலகத்துலதானே வாழறாங்க.. அதுக்கு இந்தப் பயிற்சி என்ன மாதிரி ஹெல்ப் பண்ணுதுன்னு கேக்க நெனச்சேன்..”
“ஓ, அது சரியான கேள்விதான். இங்கு விசாரிக்க வரும் பலருக்கும் அந்தக் கேள்வி இருப்பதுண்டு. அதற்கான விடையை, இந்த வரைபடத்தின் உதவியுடன் விளக்குகிறேன்.”
அவர்கள் அப்போதுதான் அந்த மேசைமீது கண்ணாடி இருந்ததையும், அதன் கீழே இரு வரைபடங்கள் இருந்ததையும் கவனித்தனர்.
…
அவர்களது சம்பாஷணை மேலும் முக்கால் மணி நேரம் தொடர்ந்தது. மறுநாள் காலை நடைப்பயிற்சியின்போது, அவர்கள் இருவருமே தியானப் பயிற்சிக்குத் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டனர்.
அந்த மையத்தின் பொறுப்பாளர் அவர்களைப் பயிற்சிக்குப் பதிவு செய்யுமாறு கேட்கவே இல்லை. தன் குருநாதர் வழங்கிய பயிற்சியை ‘இதுதான் உலகிலேயே தலைசிறந்த தியானப் பயிற்சி’ என்று விற்பனை செய்ய முயலவும் இல்லை. அவர் செய்ததெல்லாம் அவர்களை மதித்து, அவர்களது கேள்விகளுக்கு விடையளித்தது மட்டுமே. அவர் வாழ்ந்த, உரையாடிய, பழகிய விதம்தான் அவர்களுக்குள் பயிற்சி பெறும் ஆர்வத்தை உண்டாக்கியது.
நிபந்தனைகளற்ற அன்பு மட்டுமே ஆத்மாவுடன்
அளவளாவும் மொழி.
நிபந்தனையற்ற அன்பை எல்லா உயிர்களிடத்திலும் ஒரேமாதிரி வெளிப்படுத்துவோர் மட்டுமே
மெய்யறிந்த ஞானியர். அத்தகைய மெய்ஞானியரின் வழிநடந்து, மெய்யாகவே மெய்யறிய விழைவோர் அனைவரும், பிறர் நலன் கருதிச் செய்யும் தன்னலமற்ற தங்களது தன்னார்வச் செயல்களின் மூலம்தான், இவ்வண்ணம் பலரின் ஆத்மாவுடன் உரையாடுகின்றனர்….
( எனக்கு வேதாத்ரி மகரிஷி அவர்களின் அறிமுகம்
கிட்டியது, கிட்டத்தட்ட இத்தகையதொரு முறையில் தான்…)
கருப்பு-வெள்ளை தாடி, மீசை – வித்தியாசமான உடையலங்காரம்,
உரக்க கத்தும் ஒலிபெருக்கிகளுடனும் –
வண்ண வண்ண விளம்பர விளக்குகளோடும்,
சினிமா நடிகையரின் கவர்ச்சித் துணையோடும்
இரவு முழுவதும் மேடையில் ஆடிப்பாடி
சிவனை கொண்டாடுகிறேன் என்று
விளம்பரப்படுத்திக் கொள்பவர்களால்
என்றுமே பிற ஆத்மாவுடன் உண்மையாக
தொடர்பு கொள்ள முடியாது. அவர்கள் வேடதாரிகள்….
அவர்களின் உண்மையான நோக்கம்
ஆத்மாக்களை – தங்களை முழுவதுமாக நம்பும் சீடர்களை –
கடைத்தேற்றுவது அல்ல…. காசு சம்பாதிப்பதே…..!!!
.
………………………………………….
குரு விஷயத்தில் ராமகிருஷ்ணர் சொன்னது ஞாபகம் வருகிறது.
ஒருவர் ராமகிருஷ்ணரிடம் என் குரு சொன்னபடி செய்கிறேன். என் மனம் அமைதி அடைகிறது. ஆனால் என் குரு செய்யும் அலப்பறைகளும் ஆடம்பரங்களை எனக்கு பிடிக்கவில்லை. வெறுப்பாக இருக்கிறது. தவறான குருவை தேர்ந்தெடுத்து விட்டேனோ என்று கவலையாக இருக்கிறது என்றார்.
அதற்கு ராமகிருஷ்ணர் ஒரு துடைப்பம் சுத்தமாக பெருக்குகிறதா என்று பார்க்கிறோம். அந்த துடைப்பம் சுத்தமாக இருக்கிறதா என்று பார்க்கிறோமா? ஏன் பார்ப்பதில்லை என்றால் அது தேவையில்லை. துடைப்பத்தின் வேலை சுத்தம் செய்வது. அதை செய்தால் போதுமானது.
அது போலத்தான் குருவும். உனக்கு மன நிம்மதி கிடைக்கிறது என்ற போது அவர் எப்படி இருந்தால் என்ன?
bandhu,
சரியான விஷயத்தை,
சரியான இடத்தில் –
நினைவு படுத்தினீர்கள்…. நன்றி.
.
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஐயா
மிகவும் அருமையான ஒரு பதிவை பகிர்ந்துவிட்டு கடைசியாக இந்த பதிவிற்கு முற்றிலும் எதிரான ஒரு விஷயத்தோடு முடித்துள்ளீர்கள்.
எல்லாவற்றையும் அமைதியாக கடந்து செல்ல சொல்லும் கருத்தோடு ஆரவாரமாக நடக்கும் மற்றொரு நிகழ்வை ஒப்பிட்டு…
நாம் எல்லா விஷயங்களையும் கேட்டுக்கொள்வோம். ஆனால் உள்வாங்கிக் கொள்ளமாட்டோம் என்ற உண்மையை போட்டு உடைத்து விட்டீர்கள்.
பந்து சார்-ன் கருத்து என்னை யோசிக்க வைத்தது.
நினைத்துப் பாருங்கள் ஐயா…
துடைப்பான் சுத்தமாக இல்லையென்றால் அதை எறிந்துவிட்டு புதிய துடைப்பானை பயன்படுத்துவோமா அல்லது துடைப்பான் எவ்வளவுதான் சுத்தமின்றி இருந்தாலும் (அழுக்கானது என்று அறிந்தும்) நாம் அதையே பயன்படுத்துவோமா?
அஜீஸ்,
நான் நண்பர் bandhu-விற்கு பதில்
அளிக்கும்போதே இன்னும் விவரமாக
இதை எழுத வேண்டுமென்று இருந்தேன்.
நான் சில வருடங்களுக்கு முன்னர்
ராமகிருஷ்ண பரமஹம்சரின் சரித்திரத்தை
விரிவாகப் படித்தபோதே, இந்த
கேள்வி-பதிலையும் படித்திருந்தேன்.
அப்போதே, ராமகிருஷ்ணரின் உதாரணம்
தவறோ என்றும் நினைத்தேன்.
இதை என் வழியில் சொல்ல வேண்டுமானால்,
துடைப்பம், வாங்கும்போது புதிதாகத்தான்
வாங்கி பயன்படுத்த ஆரம்பிப்போம்.
நமது பயன்பாடு காரணமாக, நாளாவட்டத்தில்,
நிறைய அழுக்காகி விட்டால், அசிங்கமாக
இருந்தால் – தூக்கி எறிந்துவிட்டு புதியதை
பயன்படுத்த துவங்குவோம்.
ஆனால், யாரும் ஏற்கெனவே அழுக்காக இருக்கும்
துடைப்பத்தை வாங்கி பயன்படுத்த மாட்டோம்.
“குரு” என்பவர், புது துடைப்பத்தைப்போல்
சுத்தமாகத்தான் இருக்க வேண்டும். அவர்
சரியான குருவாக இருந்தால், சீடர்களின் உள்ளத்தை
தூய்மைப் படுத்துவதால், அழுக்காகி விட மாட்டார்.
ஏற்கெனவே, அழுக்காக இருப்பவர்கள்,
உண்மையான குருவாக இருக்க மாட்டார்கள்….!!!
( நான், இடுகையின் கடைசி பகுதியில்
சொல்லி இருப்பவர்கள் அழுக்கான துடைப்பங்கள்…
அவர்களால், சீடர்களுக்கு எந்த பயனும் இருக்காது…)
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்