
கவிஞர் வாலியை அணு அணுவாக ரசித்து எழுதப்பட்டிருந்த
ஒரு அற்புதமான பதிவை தமிழ் இந்து தளத்தில் பார்த்தேன்…
அதனை எழுதிய மூத்த பத்திரிகையாளர் லாரன்ஸ் விஜயன்
அவர்களுக்கு நமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும்
தெரிவித்துக் கொண்டு நமது வலைத்தள நண்பர்களும்
ரசிக்க – கீழே தருகிறேன்…..
……..
உறவு என்றொரு சொல்லிருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவு இருக்கும்
பிரிவு… காலங்கள் சில ஆன பின்னே காயங்கள்,
வடுக்களாக மாறிவிடும். ஆனால், வடுக்களை
காலாகாலத்திற்கும் காயங்களாக மாறி நம்மை வதம்
செய்யும். இதற்குப் பெயர்தான் பிரிவு. பிரிவின் வலி
வலியது. கொடியது. பிரிவு. ஒரு பங்கமா? அல்லது
வாழ்வின் ஒரு அங்கமா?
பிரிவுத் துயரை பாடலாக வடித்து நெஞ்சை பிழிய
வைத்திருக்கும் இந்த நேசமிகு கவிஞன் யார்?.
அதுதான் கவிஞர் வாலி.
தீரர்கள் கோட்டமாம் திருச்சி.. 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என
போற்றப்படுவதுமான திருவரங்கம். இங்குதான் சீனிவாச ஐயங்காருக்கும் – பொன்னம்மாளுக்கும் மகனாக
பிறந்தார் வாலி. இயற்பெயர் ரங்கராஜன். திருவரங்கத்தில்
பிறக்கும் பல ஆண்குழந்தைகளுக்கு ரங்கராஜன், ரங்கநாதன் போன்றவைதான் திருப்பெயராய் சூட்டப்படும். வாலியும் அதற்கு விதிவிலக்கல்ல.
பிள்ளைபிராயத்திலேயே தமிழின் மீது தணிக்கமுடியாத
காதல், ரங்கராஜன் என்ற வாலிக்கு.
கோலிக்குண்டு, கிட்டிப்புள்ளும் விளையாட வேண்டிய
பருவத்தில் இலக்கிய கூட்டங்களுக்கும், இசை விழாக்களுக்கும்
சென்று முன்வரிசையில் அமர்ந்துகொள்ளும் பழக்கம்
வாலிக்கு இருந்தது.
ஸ்ரீரங்கத்தில் ஒருமுறை தமிழ் எழுத்தாளர் மாநாடு
நடைபெற்றது. திரு. வல்லிக்கண்ணன் தலைமையில் நடந்த
அந்த மாநாட்டில், அத்தனை எழுத்தாளர்களின் பேச்சையும் அருகிலிருந்து கேட்கும் வாய்ப்பு வாலிக்கு வாய்த்தது.
தமிழ் மீது ஆர்வம் வளர இந்த மாநாடு, வாலிக்கு
மேடை அமைத்துக் கொடுத்தது.
எழுத்தின் மீது இருந்த காதல்போல், சித்திரம் தீட்டுவதிலும் சிறந்தவனாக விளங்கினார், சிறு வயது வாலி.
மாலியைப் போல சிறந்த ஓவியராக விளங்கவேண்டும்
என்பதற்காக ரங்கராஜனுக்கு வாலி எனப் பெயரிட்டார்
அவரது பள்ளித்தோழர் பாபு.
தேசிகர் என்றொரு தமிழ் ஆசிரியர் வாலியை அழைத்து,
”உன் பெயர் ரங்கராஜ்தானே?” உனக்கு வால் இல்லையே,
பிறகு ஏன் வாலி என வைத்துக் கொண்டாய் எனக் கேட்டார். மாணவர்கள் எல்லாம் கொல் என்று சிரித்தனர். அடுத்த நாள்
ஒரு துண்டு காகிதத்தை ஆசிரியர் தேசிகரிடம் நீட்டினார்
வாலி. அதில் இப்படி எழுதியிருந்தது.
‘வாலில்லை என்பதால்
வாலியாகக் கூடாதா?
காலில்லை என்பதனால்
கடிகாரம் ஒடாதா?’
இதைப்படித்த தமிழ் ஆசிரியரின் பாராட்டு, வாலிக்கு
தமிழின் மீதுள்ள ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தது.
திருச்சி வானொலியில் வேலை கிடைத்தது வாலிக்கு.
வானொலியில் நாடகம் எழுதினார் வாலி. ஸ்ரீரங்கத்தில்
வடக்கு திசையில் ஓடும் காவிரிக்கு பெயர் கொள்ளிடம், அந்தக்கொள்ளிடத்திற்கு செல்லும் வழியில் பழங்கால
கல் மண்டபம் உண்டு. அதற்குப் பெயர் கழுதை மண்டபம்.
இந்த மண்டபத்திலிருந்து தான் வாலியின் வற்றாத
கற்பனை மற்றொரு காவிரியாக பொங்கிப் புறப்பட்டது.
‘கற்பனை யென்றாலும் கற்சிலை என்றாலும் –
கந்தனே! உனை மறவேன்?’
என்ற பாடலும்,
‘ஓராறு முகமும் ஈராறு கரமும்-
தீராத வினைதன்னைத் தீர்க்கும்! -துன்பம்?
துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும்?’
-போன்ற உன்னதமான பக்திப் பாடல்கள் இந்தக் கழுதை மண்டபத்தில்தான் அரங்கேறின.
எழுதத் தொடங்கிய பல நாட்களுக்குப் பிறகுதான் தமிழ் இலக்கணத்தையே தான் இனம் கண்டுகொண்டதாக வாலி குறிப்பிடுகிறார்.
வாசித்துத் தமிழ்கற்றோர்
வரிசையிலே யானில்லை;
யோசித்துக் கவிபுனையும்
யோக்கிதை தானில்லை;
நேசித்தேன்; நெஞ்சாரப்
பூசித்தேன்; நின்னடியில்
யாசித்தேன் அடடாவோ!
யானும் ஓர் கவியானேன்!
-என்று வாலி தன் தமிழ்புலமையை இப்படி விவரிக்கிறார்.
1958-ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரம். சென்னைக்கு
வாலி குடிபுகுந்த வருடம். திருவல்லிக்கேணியில் நண்பர்
ஒருவரின் அறையில் திடீர் விருந்தாளி ஆனார்.
திருவல்லிக்கேணிதான் தனது பாட்டுப் பயணத்திற்கு
இந்த ராஜ கவிஞன் தன் சிறகுகளை சிலிர்த்துக்கொள்ள
தொடங்கிய இடம். பல அலைக்கழிப்புகள், அவமானங்கள், காத்திருப்புகள் எனத் தொடங்கியது, வாலியின் திரைப்பட
வாழ்க்கை. சென்னை தியாகராய நகர் கிளப் ஹவுஸில்
வாலிக்கு பல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களில்
முக்கியமானவர் நடிகர் நாகேஷ். நாகேஷ் வாலியின்
முன்னேற்றத்தில் ஒரு முக்கியப் பாதை. நல்லவன்
வாழ்வான் என்ற படத்தில்
‘சிரிக்கின்றாள்! -இன்று
சிரிக்கின்றாள்!’
என்பதுதான் வாலியின் முதல் பாடல். பாடலின் சரணத்தில்
வரும் சில வரிகளை பேரறிஞர் அண்ணா அடிக்கோடிட்டு,
அவை கட்டாயம் இடம்பெறவேண்டும் என்று கருத்து
தெரிவித்திருந்தார். அண்ணாவின் பாராட்டு, வாலிக்கு
ஆனந்தத்தை தந்தது. இந்தப் பாராட்டுதான் வாலியின்
பல வெற்றிகளுக்கு நீரூற்று.
சாரதா ஸ்டூடிவோயில் இருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
பாடலை கேட்பதற்காக கம்போசிங் அறைக்கு வருகிறார்.
அப்போதுதான் வாலிக்கு எம்.ஜி.ஆரின் அறிமுகம் கிடைத்தது.
இந்த அறிமுகம்தான் பின்னர் எம்.ஜி.ஆரின் பாடல்கள்
மூலமாக வாலியை இந்த ஊருக்கு அறிமுகப்படுத்தியது.
தனக்கு வாழ்வளித்த வள்ளலை, வாலி ஒரு திரைப்படப்
பாடல் வாயிலாக இப்படி நன்றி செலுத்துகிறார்.
‘என்னைப் பாடவைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோயில் இல்லாத இறைவன்’
பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான முக்தா
சீனிவாசனின் அறிமுகம் வாலிக்குக் கிடைத்தது. வாலியின் வெற்றிப்படிக்கட்டில் எத்தனையோ பேர். முதற்படியாய்
இருந்தவர் முக்தா சீனிவாசன். அவரது இதயத்தில் நீ படத்தில்
வாலி இயற்றிய எல்லாப் பாடல்களும் எல்லையில்லாப்
புகழை அவருக்கு வழங்கியது. ‘பூவறையும் பூங்கொடியே’,
‘உறவு என்றொரு சொல்லிருந்தால்’, ‘ஒடிவதுபோல் இடை
இருக்கும்’ போன்ற பாடல்கள் வாலியை உயரத்துக்குக் கொண்டுபோயின.
திரைப்படக் கவிஞருக்கெல்லாம் பிதா மகனாய் திகழ்ந்த
உடுமலை நாராயணக் கவியோடு உடனிருந்து, குட்டை கவி
என பெயரிடப்பட்ட திரு.கே.எஸ். கோபாலகிருஷ்ணன்,
வாலியின் வளர்ச்சிக்கு ஏணியாய் இருந்தார். கற்பகம்
படத்தில் வாலியின் வைர வரிகளில் தமிழின் தாகமும்,
காதலின் மோகமும் கைகோர்த்து, களிநடனம் புரிந்தன.
அதில் வரும் ‘பக்கத்து வீட்டு பருவ மச்சான்’ பாடலில்
ஒரு சரணத்தில் ‘மனசுக்குள்ள தேரோட்ட மை விழியில்
வடம் பிடிச்சான்’ இந்த சரணத்தில் வாலியின் வரியழகில்
தான் சரணடைந்ததாக கவியரசு கண்ணதாசன், கவிஞர்
வாலிக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார்.
கற்பகத்துக்குப் பிறகு வாலியின் பட வாய்ப்பு அதாவது
பாடல் வாய்ப்பு கற்பகவிருட்சம்போல் விரிந்தது. ஒரு பாடல் கம்போசிங்போது, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.,
தான் அசருவதுபோல ஒரு பல்லவியை சொன்னால் தன்
கையில் இருக்கும் மோதிரம், கைகடிகாரம் ஆகியவற்றை
உடனே தருவதாக வாலிக்கு கட்டளையிட, வாலி சொன்ன
பல்லவிதான் இது.
‘காற்று வாங்கப் போனேன் – ஒரு
கவிதை வாங்கி வந்தேன்! – அதைக்
கேட்டு வாங்கிப் போனாள்! – அந்தக்
கன்னி என்ன வானாள்?’
கலங்கரை விளக்கத்தில் வெளியான இந்தப் பாடல்
இன்றுவரை கலங்கரை விளக்கமாக காட்சியளிக்கிறது.
கண்ணதாசனைப் போலவே ஒவ்வொரு சூழலுக்கும்,
வாலியின் பாடலும் வசதியாய் நின்றது.
‘தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்க்கின்றேன்’
வாழ்க்கையைப் போன்றே மரணமும் நிஜம். சத்தியம்.
உயிருக்கு ஏற்படும் மரணம், ஒரு நொடியில் முடிந்து போகிறது.
ஆனால், மனதிற்கு ஏற்படும் மரணம், பிரிவு என்ற பேரில்
பல காலம் கொல்கிறது. மரணம், அன்றே கொல்லும்.
பிரிவு, நின்று நின்று கொல்லும். பிரிவைப் பற்றி
பிழிந்தெடுத்த வாலியின் பாடல்தான் இது.
இதயங்கள் இணைந்துவிட்டபின்,
இடைவெளிகளால் என்ன செய்துவிட முடியும்?
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்கிறது வாழ்க்கை தத்துவம். அப்படியிருக்க, பிரிவு மட்டும் எப்படி நிரந்தரம்?. பிரிவு தற்காலிகமானதுதான் என்கிறது, வாலியின்
‘என்னையெடுத்து தன்னைக் கொடுத்து’ என்ற
படகோட்டி பாடல்.
ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
‘என்னை எழு’ தென்று சொன்னது வான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியத் தீட்டுக, என்றுரைக்கும்!
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதையைப்போல,
இயற்கையை மட்டுமல்ல, இயல்பாக தோன்றுவதைக்கூட
பாடுபவன்தான் கவிஞன்.
ஒலிநயம் உள்ள சொற்கோர்வைகளின் தொகுப்புதான்
பாட்டு எனப்படுகிறது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகையில்
உள்ள நீண்ட செய்யுள்களை, பாடல் என வழங்கும் மரபு
தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இறைவனையே
இசையவைத்தது இசை, அதாவது பாட்டு…
இது தலைகனம் அல்ல. தமிழ் கனம்! கவிஞர் வாலியின்
தமிழ் கனமும், எதையும் ஈடுசெய்யமுடியாத தனி கனம்.
‘யார் சிரித்தால் என்ன? இங்கு
அழுதால் என்ன’
வாழ்க்கையின் நிலையாமையை
சொன்னது இந்தப் பாடல்.
‘வானம் எனும் வீதியிலே – குளிர்
வாடை எனும் தேரினிலே’
வாழவைக்க மனைவியாய் வரப்போகிறவளை
மானசீகமாக வரவேற்றது ஒரு பாடல்.
‘நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல’
நடிக்கத் தெரியாத மனிதர்கள் முன்னே, நாடகமாடும்
மனிதர்களின் முகத்திரையை கிழித்தது இந்தப் பாடல்.
‘கண் மையேந்தும் விழியாக
மலரேந்தும் குழலாக’
காற்றுப் புகாத இடத்திலும் காதல் புகும். காதல் இருக்கும்
இடத்தில் காமம் உச்சம் தொடும். ஆனாலும் காதலே அங்கு வெற்றிபெறும். இதை விளக்கியது இந்தப் பாட்டு.
‘தொட்ட இடம் துலங்க வரும்
தாய்க்குலமே வருக’
பெண்மையின் மேன்மையை விளக்கியது இந்தப் பாடல்.
‘பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்’
காதலியை வர்ணிப்பதில் காலங்காலமாய் கவிஞர்கள்
கங்கனம் கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வாலியும்
அதற்கு விதிவிலக்கல்ல. வாலிபக் கவிஞராயிற்றே.
‘மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே’
காதலியை தமிழால் வர்ணித்து பார்த்திருப்பீர்கள்.
தமிழகமாக வர்ணித்திருப்பதை பார்த்திருக்கிறீர்களா?
திரைப்படப் பாடல் உலகில் வாலி ஒரு வல்லரசு.
‘அழகு தெய்வம் மெல்ல மெல்ல’,
‘அவளுக்கும் தமிழ் என்று பேர்’,
‘கண்ணன் பிறந்த வேளையிலே
அந்த தேவகி இருந்தாள் காவலிலே’
- இப்படி எத்தனையோ மனது மறக்காத பாடல்கள்,
தமிழ்த் திரையில் வாலி வாரி இறைத்தது.
1964-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு
அறிமுகம் வாய்த்தது வாலிக்கு. இந்த அறிமுகம்தான்
80 படங்களுக்கு அவருக்கு பாட்டெழுத வைத்தது.
அன்புக்கரங்கள் என்றொரு படம். அதில் இடம் பெற்ற
‘ஒன்னா இருக்க கத்துக்கணும்’, என்ற பாடல் வாலியின்
பெருமையை உரக்கப் பேசியது… இந்தப் பாடலைப் பற்றி
கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., உங்கள் அன்புக்கரங்கள்
எப்போது ரிலீஸ் என வாலியிடம் கேட்டாராம்.
உங்கள் அன்புக்கரங்களிலிருந்து என்றைக்குமே எனக்கு
ரிலீஸ் கிடையாது என்றாராம் வாலி. எத்தனையோ
கவிஞர்களை வாழவைத்த எம்ஜிஆர், வாலியின்
வார்த்தைகளில் நெகிழ்ந்து போனாராம்.
பின்பு சிவாஜிகணேசனுக்காக எழுதிய பல பாடல்கள்
வெற்றி பெற்றன. வாலியின் தமிழ்மணம் தமிழ்
உலகெல்லாம் பரவியது.
எத்தனையோ இசையமைப்பாளர்களின் வர்ண
மெட்டுகளுக்கு வார்த்தை அளித்த வாலி, இளையராஜா என்ற
இசை இமயத்துடன் இணைந்தபோது, தமிழ் சினிமாவின்
இசை, தங்க ரதத்தில், வசந்தத்தின் பாதையில் பூக்களின்
ஊர்வலமாய் உலா வரத் தொடங்கின. பத்ரகாளியில்
‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’,
‘சின்னப்புறா உந்தன் எண்ணக் கனாவினில்’,
‘ராசாவே உன்ன நான் எண்ணித்தான்’ போன்ற
பல பாடல்கள் வாலி-இளையராஜா கூட்டணியில் திரை
இசையில் அருதிப் பெரும்பான்மை பெற வைத்தன.
திருமண மேடைக்கு வராமலேயே முதிர் கன்னிகளாகிவிட்ட பெண்களைப் போல, வாலியின் பல இனிய பல்லவிகள் திரைப்படங்களில் இடம்பெறாமலேயே போய்விட்டன.
‘இறைவனில்லா ஆலயத்தில்
ஏற்றி வைத்த தீபம்;
இரவு பகல் எரிவதனால்-
எவருக்கென்ன லாபம்?’
இந்தப் பாடல் ஒலிப்பதிவு கட்டத்திற்கே போகவில்லை.
என்ன காரணத்தினாலோ, இந்தப் பாடல் இடம்பெற்ற படம் கைவிடப்பட்டது.
கற்பனைத் திறன் உள்ள வாலியிடம் நகைச்சுவை
உணர்வுக்கும் பஞ்சமில்லை. உடல்நலக் குறைவால்
மருத்துவமனை படுக்கையில் இருந்தபோது, மூச்சுத்
திணறல் காரணமாக அவருக்கு மாஸ்க்
வைக்கப்பட்டிருந்தது. பிறப்பால் நான் ஒரு வைணவன்,
ஆனால், இப்போது என்னைக் காப்பாற்றி வருவது
மாஸ்க் என்று, தன்னை பார்க்க வந்த நண்பர்களிடம்
நகைச்சுவையாகக் கூறினாராம் வாலி.
மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக
கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி வாலி மறைந்தார்.
பல ஆயிரம் பாடல்கள் எழுதிய வாலி, இலக்கிய உலகிலும்,
இசை உலகிலும் ஈடு இணையற்று கம்பீரமாய் உயர்ந்து
நிற்கிறார். 1973-ம் ஆண்டு, இந்திய நாடு என்வீடு என்ற
பாரதவிலாஸ் பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
இதனை வாலி ஏற்கவில்லை. 2007-ம் ஆண்டு வாலிக்கு
பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
பண்டிதர்களின் உயர்ந்த ரசனைக்கும், பாமரர்கள்
உள்ளத்தின் ரசனைக்கும் பாடல் எழுதியவர் வாலி.
‘நானும் இந்த நூற்றாண்டும்’… கவிஞர் வாலி தன் சுயசரிதை
பற்றி எழுதிய நூல். பலநூறு ஆண்டுகள் வாலியின் புகழ்,
தமிழ் மக்கள் மத்தியில் வாசம் வீசிக் கொண்டே இருக்கும்.
அற்புதக் கவிஞர் வாலி. அவர் புகழ் வாழி.
.
…………………………………………………………………………………………………………..
வாலி கடைசிவரை புகழ் வெளிச்சத்தில் இருந்ததற்கு அவரின் நேரம் சரியாக அமைந்தது, தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருந்ததால் காலத்தை மீறிப் பாடல்கள் புனைய முடிந்தது. பழகுவதில் சமத்காரமாகவும் இனிமையாகவும் இருந்ததால் எல்லோரிடமும் பணிபுரிய முடிந்தது. அவருடைய தன் வரலாறு புத்தகங்களைப் பலமுறைகள் படித்திருக்கிறேன். ஒருவனுக்கு விதிப்படிதான் அவன் முன்னேற்றம் அமையும் என்பதை அதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.
இளையராஜாவுக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமை. முதல் பாடல், முதலில் இசையமைத்த படம் வெளியே வருவதற்குள் ஏகப்பட்ட தடங்கல்கள். வாலிக்கு, பலர் பாடல் வரிகளை ஓக்கே செய்தும் படமாக்கும்போது செட் அழிந்து தடங்கல்கள். என்னடா ராசியில்லாத பாட்டு, ராசியில்லாத கவிஞர் என்று சொல்லிடுவாங்களோ என்ற பயம். இளையராஜாவுக்கு ஒலிப்பதிவின் கோது பலமுறை மின் தடங்கல்கள்.