பட்டத்து யானையை போன்றவர்கள் நம் பிள்ளைகள்….

…………………………..

நமது பிள்ளைகளின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போனின் ஒளி, சுற்றியிருக்கும் உலகத்தை அவர்கள் கண்களிலிருந்து மறைத்து
விடுகிறது. வீடியோ கேம், கார்ட்டூன் படங்கள், யூடியூப், சோஷியல்
மீடியா என… கண்கள் பூத்துப்போகும்வரை ஸ்மார்ட் போனில்
நேரத்தைச் செலவிடும் அவர்களின் கவனத்தையும் நேரத்தையும்
எதில் மடைமாற்றுவது என்று தெரியாமல்…

‘அதைப் படி, இதைப் படி’ என்று கிளிப்பிள்ளை மாதிரி பெற்றோர்கள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்குள் அடைந்து கிடக்கச் சொல்வதே பெரும் வன்முறையாக குழந்தைகளுக்குத் தெரிகிறது. அப்புறம் பெற்றோர் சொல்வதை
எப்படி கேட்பார்கள்?

இதுபோன்ற நேரங்களில் நாம் குழந்தைகளுக்குக் கட்டளை
போடுபவராக இருக்க முடியாது. அவர்களை நெறிப்படுத்தும்
தோழர்களாக மட்டுமே இருக்க முடியும். அதற்கு நாம் அவர்களின் உலகத்துக்குள் போக வேண்டும்.

இந்த நேரத்தில் அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவர நாம் முயற்சி செய்யலாம். உங்கள் பெண்
நிறைய பாடல்கள் கேட்கிறாள் என்றால், அவளுக்கு முறைப்படி
பாடுவதற்குப் பயிற்சி எடுக்க வழிகாட்டிவிட்டு நீங்கள் விலகி நிற்க
வேண்டும்.

உங்கள் மகன் ஏராளமான வெப் சீரிஸ் பார்க்கிறானா?
அவன் பார்த்த வெப் சீரிஸின் கதைகளைச் சொல்லச் சொல்லி
குடும்பத்துடன் கேளுங்கள். அவன் உற்சாகமாவான். அப்போது
அவனுக்குள் இருக்கும் கதைசொல்லி வெளிப்படுவான். ஒரு கட்டத்தில்
அவன் தான் பார்த்த படங்களுக்கு விமர்சனம் எழுத ஆரம்பிப்பான்.
அவனது எழுத்தாற்றலை உணர இதுவே வழிவகுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

‘‘இதெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கைக்குச் சரிப்படுமா…? என் பிள்ளைகள் நீங்கள் நினைப்பது மாதிரியெல்லாம் இல்லை. போனில் அவர்கள் ஏதோ செய்யும்போது
அருகில் போனாலே, ‘என்ன, ஸ்பை வேலை பார்க்கிறாயா?’ என்று கோபமாகக் கேட்டுவிட்டு விலகிப் போகிறார்கள்.
ஒரு மிருகத்திடமிருந்து அதன் இரையைப் பிடுங்கினால் அது
எப்படி ஆக்ரோஷம் காட்டுமோ, அப்படி ஒரு கோபம், அவர்களின்
ஸ்மார்ட் போனை நாம் எடுத்தால் வெளிப்படுகிறது.’’

இப்படிச் சிலர் சொல்லக்கூடும். பிரச்னை என்று ஒன்று இருந்தால்,
அதற்கான தீர்வும் நிச்சயம் இருக்கும். எல்லா பூட்டுகளுக்கும்,
சாவிகளும் சேர்த்தே தானே உருவாக்கப்படுகின்றன.

எல்லோருக்கும் தெரிந்த கதைதான். காட்டில் தூங்கிக்கொண்டிருந்த
ஒரு சிங்கத்தை நெருங்கிய குரங்கு, காதுகளைப் பிடித்து இழுப்பதும்,
சிங்கம் கண் திறக்கும்போது ஒளிந்துகொள்வதுமாக விளையாடிக்கொண்டிருந்தது. தூக்கம் கலைந்து எழுந்த சிங்கம்,
‘‘யார் என் தூக்கத்தைக் கெடுத்தது?’ என்று கர்ஜித்தது.
‘‘அரசே, அது நான்தான். என் கூட்டதை விட்டுப் பிரிந்து வெகுநாள்
ஆகிறது. யாருமே என்னைச் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள்.
அதனால் தனிமையும் வெறுமையும் என்னைக் கொல்கின்றன.
மனதுக்குப் பிடித்தபடி விளையாடிவிட்டு செத்துப்போக
நினைக்கிறேன். அதனால்தான் இப்படிச் செய்தேன்’’ என்றது
சிங்கத்தின் முன்னே வந்து நின்ற குரங்கு.

சுற்றிலும் யாருமில்லை என்பதை உறுதி செய்துகொண்ட சிங்கம்,
‘‘காட்டிற்கு அரசனாக இருப்பதால், யாருமே என்னிடம் நட்பாகப் பழகுவதில்லை. நான் இடும் கட்டளைகளைக்கூட நான்கு அடி
தள்ளி நின்று கேட்டுவிட்டு உடனே போய்விடுகிறார்கள்.
உன்னைப் போலவேதான் நானும் தனிமையில் இருக்கிறேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நீ என் காதுகளை இழுத்து விளையாடியபோது எனக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
ஆகையால் தாராளமாக நீ என்னோடு விளையாடலாம்’’ என்று சொன்னதுடன், குரங்கின் வாலைப் பிடித்து இழுத்து சிங்கமும்
விளையாடத் தொடங்கியதாம்.

கதை கற்பனைதான். ஆனால், அது சொல்லவரும் கருத்து நிஜம்.
உங்கள் குழந்தைகள் தவழ்ந்த காலத்தில், அவர்களுடன் கட்டிப்
புரண்டு விளையாடிய காலத்தை மனக்கண்ணில் கொண்டு
வாருங்கள். இப்போது அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி
விட்டார்கள் என்றாலும், அவர்கள் தலை சாய்க்க இப்போதும்
நீங்கள் மடி தரலாம், தலைமுடியைக் கோதலாம்,
நெற்றியில் முத்தமிடலாம். அவர்கள் உங்கள் நண்பர்களாவார்கள்.

ஏதோ சின்னச்சின்ன காரணங்களுக்காக உங்களுக்கும்
பிள்ளைகளுக்கும் இடைவெளி பெரிதாகியிருந்தால், உங்களின்
ஸ்பரிசம் நிச்சயம் பலன் கொடுக்கும்.

இந்த நேரத்தில் இன்னொரு கதையைச் சொல்வதும் பொருத்தமாக
இருக்கும். எல்லா வளங்களும் நிறைந்த மிகப் பெரிய நாட்டின்
மன்னன் அவன். பல யுத்தங்களை வென்ற பெருமை அவனுக்கு
உண்டு. காலாட்படை, குதிரைப்படை என்று பல படைகள் இருந்தாலும்,
அவனது யானைப்படை மிகவும் வலிமையானது. அதிலும் அவனது
பட்டத்து யானை மிகுந்த பலம் கொண்டது. அத்தனை யுத்தங்களிலும்
அவனுக்கு வெற்றிகிட்ட அதுவே பெரும் உறுதுணையாக இருந்தது.
இப்போது அது முதுமை அடைந்துவிட்டது. மன்னனும் அதைப் போரில் ஈடுபடுத்துவதில்லை. தன் பிரியமான யானை என்பதால்,
அது விருப்பம் போல சுதந்திரமாகச் சுற்றித் திரிய மன்னன் அனுமதி அளித்திருந்தான்.

‘‘மன்னா… உங்கள் பிரியத்துக்குரிய பட்டத்து யானை புதைசேற்றில் மாட்டிக்கொண்டது’’ என்று ஒருநாள் சேவகன் செய்தி கொண்டு
வந்தான். அந்த இடத்துக்கு விரைந்து சென்ற மன்னன், யானையை
மீட்க தன் அத்தனை பரிவாரங்களோடும் பல முயற்சிகளை எடுத்தான்.
பயிற்சி பெற்ற யானைகளை வைத்து, சேற்றில் மாட்டிக்கொண்ட
பட்டத்து யானையை வெளியே இழுக்கச் செய்த முயற்சியும்
தோல்வியிலேயே முடிந்தது. புதைசேற்றில் சிக்கிய யானை,
பரிதாபமாகப் பிளிறிக்கொண்டிருந்தது.

அப்போது முதிய விவசாயி ஒருவர் வந்து, ‘‘மன்னா, இந்த யானையை என்னால் வெளியே இழுக்க முடியும்’’ என்றான். அமைச்சர்களும் பரிவாரங்களும் அந்த விவசாயியின் தோற்றத்தைப் பார்த்துச்
சிரித்தனர். மன்னன் திரும்பி அவர்களைத் தன் கடுமையான
பார்வையால் அடக்கினான். இவ்வளவு துணிச்சலாகத் தன்னிடம்
ஒருவர் கேட்கிறார் என்றால், அவரிடம் நிச்சயம் ஏதோ திட்டம்
இருக்கும் என்று மன்னனுக்குப் புரிந்தது.

யானையை மீட்க அனுமதி கொடுத்ததுடன், ‘‘இந்தக் காரியத்தைச்
செய்ய உனக்கு மேலும் எத்தனை யானைகள் வேண்டுமானாலும் கேள், தருகிறேன்’’ என்றான். அதற்கு அந்த விவசாயி, ‘‘அதெல்லாம்
வேண்டாம் மன்னா, ஒரே ஒரு போர் முரசு போதும்’’ என்று
சொல்லிவிட்டு, அதை ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தார் விவசாயி.
சேற்றில் சிக்கியிருந்த பட்டத்து யானைக்கு ‘இப்போது நாம்
யுத்தக்களத்தில் இருக்கிறோம்’ என்ற எண்ணம் வந்தது.
அதனால் அது தன் பலத்தையெல்லாம் திரட்டி ஒரே மூச்சில்
சேற்றில் சிக்கியிருந்த கால்களை இழுத்துக் கொண்டு
வெளியே வந்தது.

அந்த விவசாயி வருவதற்கு முன்னர் அந்த யானையின் உடலில்
என்ன பலம் இருந்ததோ, அதே பலம்தான் இப்போதும் இருந்தது.
மன்னன் செய்ததைப் போல அந்த விவசாயி வலுக்கட்டாயமாகப்
பட்டத்து யானையைச் சேற்றிலிருந்து இழுக்கவில்லை.
அவர் செய்த ஒரே காரியம், அதற்கு உற்சாகம் கொடுத்தது
மட்டும்தான்.

மீண்டுவந்த யானைபோல, எதற்கு அடிமையாகியிருந்தாலும் சரி,
உங்கள் பிள்ளைகளை உங்களாலும் மீட்க முடியும். வாழ்க்கையில்
அவர்கள் அடைந்த வெற்றி நிமிடங்களை, அந்த சந்தோஷத்
தருணங்களை அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள். அவர்கள்
சிக்கியிருப்பது எத்தனை சவாலான சிக்கலாக இருந்தாலும் சரி,
அதிலிருந்து அவர்களை மீட்க நீங்கள் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதெல்லாம் உற்சாகம் மட்டும்தான்.

.
…………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.